
ட்விட்டர் சர்வே - இது மோசமான பட்ஜெட்டா?
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 2018-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். இந்த பட்ஜெட் குறித்துப் பல்வேறு கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஆனாலும், இந்த பட்ஜெட்டை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பட்ஜெட்டா அல்லது மோசமான பட்ஜெட்டா என நாணயம் விகடன் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) வாசகர்களிடம் கேட்டோம். இந்த சர்வேயில் தெரியவந்துள்ள முடிவு சுவாரஸ்யமானதாக இருந்தது.

இந்த சர்வேயில் பதில் சொல்லியிருந்தவர்களில் 62% பேர், இந்த பட்ஜெட் மோசமான பட்ஜெட் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இவர்களில் பலர் மாதச் சம்பளம் பெறுபவர்களாக இருக்கலாம். மாதச் சம்பளக்காரர்களுக்கு வருமான வரி வரம்பு உயர்த்தப்படாதது குறித்து அதிருப்தி அடைந்திருக்கலாம். அல்லது தொழில் துறையின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதால், மோசமான பட்ஜெட் என்று சொல்லியிருக்கலாம்.

இந்த சர்வேயில் 24% பேர் இது தேர்தல் பட்ஜெட் என்று சொல்லியிருக்கிறார்கள். விவசாயிகளுக்கும், கிராமப்புற வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதால், அவர்களின் வாக்குகளை எதிர்பார்த்தே இப்படிச் செய்யப்பட்டிருக்கிறது என்பவர்கள் இப்படிச் சொல்லியிருக்கலாம்.

ஆனால், 14% பேர் இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று சொல்லியிருக்கிறார்கள். விவசாயம் மற்றும் கிராமப்புற மக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதன் மூலம் அடித்தட்டு மக்களிடம் அதிகம் பணம் புழங்கும். பொருளாதாரம் மீண்டும் சிறப்பாகச் செயல்பட இது உதவியாக இருக்கும் என்கிற நோக்கில் அவர்கள் இதைச் சொல்லியிருக்கலாம்.
மக்களின் கருத்து இப்படி இருந்தாலும், இந்த பட்ஜெட்டை மோசம் என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட முடியாது என்பதே சரி.
- ஏ.ஆர்.கே