
பட்ஜெட் 2018 ஸ்பெஷல்சி.சரவணன்
மத்திய பட்ஜெட் 2018-19-ல் அடிப்படை வருமான வரம்பு குறைந்தது 50,000 ரூபாயாவது அதிகரிக்கப்படும் எனவும், வரிச் சலுகைக்கான முதலீட்டு வரம்பு குறைந்தது 50,000 ரூபாயாவது அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே நேரத்தில், வருமான வரிச் செலுத்தும் மூத்த குடிமக்களுக்கு வரிச் சலுகைகளை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அள்ளித் தந்திருக்கிறார்.

இந்த பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டர் எஸ்.சதீஷ்குமார் விளக்கினார்.
‘‘ஏற்கெனவே இருந்ததுபோல, அடிப்படை வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சமாக நீடிக்கிறது. அடிப்படை வரம்பை அதிகரித்தால், வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என மத்திய அரசு நினைக்கிறது. இது தவறான எண்ணம். விலைவாசி உயர்வுக்கேற்ப அடிப்படை வரம்பினை அதிகரிப்பது அவசியம். கல்வித் தீர்வை 3 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டு, அதன் பெயர் ஆரோக்கியம் மற்றும் கல்வித் தீர்வை என மாற்றப்பட்டுள்ளது.

நிலைக்கழிவு ரூ.40,000 அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், போக்குவரத்துப்படி ரூ.19,200 மற்றும் மருத்துவச் செலவு ரூ.15,000 விலக்கிக் கொள்ளப்படுகிறது. இது, வரிக்கு உட்பட்ட வருமானத்தை ரூ.5,800 மட்டுமே குறைக்கும். அந்த வகையில் இந்த அறிவிப்புகளினால் பெரிய லாபமில்லை” என்றவர் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள சலுகைகள் பற்றி விளக்கினார்.
“தற்போது வங்கிச் சேமிப்பு, ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்.டி வட்டி எல்லாம் சேர்ந்து ஓராண்டில் ரூ.10,000 வரித் தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது. மூத்த குடி மக்களுக்கு இது ரூ.50,000-ஆக அதிகரிக்க இருக்கிறது. இவர்களுக்கு டி.டி.எஸ்-ம் பிடிக்கப்பட மாட்டாது.
மூத்த குடிமக்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத் தொகையில் வரிச் சலுகை ரூ.30,000- லிருந்து ரூ.50,000-ஆக அதிகரிக்கப் படுகிறது. மிகவும் மூத்த குடிமக்களுக் கான பொதுவான மருத்துவச் செலவுகளுக்கு ஓராண்டில் ரூ. 50,000 வரிச் சலுகை அளிக்கப் படுகிறது. குறிப்பிட்ட நோய்களுக்கு மருத்துவச் செலவுக்கான தள்ளுபடி மூத்த குடிமக்கள்/ மிகவும் மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000/ரூ.80,000-லிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப் படுகிறது.
பிரதம மந்திரி பென்ஷன் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக் கான முதலீட்டு வரம்பு ரூ. 7.5 லட்சத்திலிருந்து ரூ. 15 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இந்த அதிகரிப்பால் அவர்கள் மாதந் தோறும் பெறும் பென்ஷன் தொகை ரூ.5,000-லிருந்து ரூ.10,000- ஆக அதிகரிக்கும். நிலைக்கழிவு சலுகை பென்ஷன்தாரர்களுக்கும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்தால், மூத்த குடிமக்களுக்குச் சுமார் ரூ.1.5 லட்சத்துக்கு வரித் தள்ளுபடி இருக்கிறது. இதன் மூலம் 30 சதவிகித வரி வரம்பில் வரும் ஒருவருக்கு ரூ.45,000 வரி மிச்சமாகக்கூடும். வரிச் சலுகைகளை எதிர்பார்த்த நிலையில், வரிச் சுமைகள் முதலீட்டாளர்கள்மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளன” என்றவர், அவற்றை விளக்கிச் சொன்னார்.
“கேப்பிட்டல் கெயின்ஸ் பாண்டுகளுக்கான முதிர்வுக் காலம் மூன்றாண்டுகளிலிருந்து ஐந்தாண்டுகளாக அதிகரிக்கப்படுகிறது. இது மத்திய அரசின் பணச் சுழற்சிக்கு மட்டுமே உதவும். நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாயம் ரூ.1 லட்சம் தாண்டும்போது 10% வரி விதிக்கப்பட உள்ளது. அடுத்து, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் டிவிடெண்ட் விநியோக வரி 10% விதிக்கப்பட உள்ளது. இது பங்குச் சந்தை மற்றும் அது சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. குறுகிய கால மூலதன ஆதாய வரி 15% என்கிறபோது நீண்ட கால மூலதன ஆதாய வரி 5% என்பது நியாயமானதாக இருக்கும். 10% என்பது அதிகம்” என்றார்.