
பட்ஜெட் 2018 ஸ்பெஷல்
கடந்த சில மாதங்களாகவே வேகமாக உயர்ந்துவந்த பங்குச் சந்தைகள், பட்ஜெட் வந்தபின் குறிப்பிடத்தகுந்த அளவுக்குச் சரிந்திருக்கிறது. பட்ஜெட்டுக்கு அடுத்த நாளே சென்செக்ஸ் 2.34% அளவுக்குச் சரிந்தது. கடந்த 2015 ஆகஸ்டில், 1624 புள்ளிகளை ஒரே நாளில் இழந்தது சென்செக்ஸ். அதன்பிறகு இதற்கு மிகப் பெரிய இறக்கத்தை இப்போதுதான் சென்செக்ஸ் (839 புள்ளிகள்) சந்தித்துள்ளது. பட்ஜெட்டுக்குப் பின் சந்தை இன்னும் உயரும், இன்னும் அதிகமாக முதலீடு செய்து பெரிய அளவில் லாபம் பார்க்கலாம் என்று ஆசையில் இருந்த பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாக அமைந்துவிட்டது.

பட்ஜெட்டுக்குப் பிறகு சந்தை இறக்கத்தை நோக்கித் திரும்பியதற்கு முக்கியக் காரணம், நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப் பட்டதுதான். அதாவது, ஒருவர் பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் சம்பாதித்த லாபம் ஓராண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் இருக்கும்பட்சத்தில், அதற்கு 10% வரி கட்ட வேண்டும் என்பதுதான் நீண்ட கால மூலதன ஆதாய வரி ஆகும். கடந்த 2004-ல் செக்யூரிட்டீஸ் டிரான்ஸாக்ஷன் டாக்ஸ் (எஸ்டிடி) கொண்டுவந்து, நீண்ட கால மூலதன ஆதாய வரி விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போது அந்த வரியை மீண்டும் கொண்டுவந்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. இது தவிர, பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் லாபத்துக்கு 10% புதிதாக வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு புதிய வரிகளும் முதலீட்டா ளர்களுக்குப் பாதகமாக அமையும் என்கிற காரணத்தினால் உள்நாட்டு முதலீட்டாளர் களும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டைத் திரும்ப எடுக்க, 2009 ஜூலைக்குப் பிறகு நடந்த மிகப் பெரிய அளவிலான இரண்டாவது இறக்கத்தைக் கண்டுள்ளது.
இந்த நிலையில், இனி பங்குச் சந்தை எப்படியிருக்கும், இந்த பட்ஜெட் சந்தைக்குச் சாதகமா, பாதகமா என சில நிபுணர்களிடம் கேட்டோம். பங்குச் சந்தை நிபுணர் ஏ.கே. பிரபாகர் சொன்னதாவது...
“பட்ஜெட்டில் பலரது எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. இந்த பட்ஜெட்டைப் புரிந்துகொள்ளவே சில நாள்கள் ஆகும். பங்குச் சந்தைக்குச் சாதகமான அறிவிப்புகள் இல்லை. விவசாயம், கிராமப்புறம் சார்ந்த திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் இந்த பட்ஜெட்டில் தரப்பட்டிருப்பதால், அவை சார்ந்த நிறுவனப் பங்குகள் மட்டும்தான் ஏற்றமடைகின்றன. மற்றபடி இந்த பட்ஜெட்டினால் யாருக்கும் பயன் இல்லை.
ரூ.250 கோடி டேர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும்தான் கார்ப்பரேட் வரியில் 5% சலுகை அதாவது, 30 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அதன் தாக்கமும் பெரிதாக இருக்காது. ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட் எனப் பல துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை. அதேநேரத்தில், பட்ஜெட்டினால் பங்குச் சந்தையில் தாக்கம் என்பது குறைவாகவும், தற்காலிகமானதாகவும்தான் இருக்கும். நிஃப்டி 10800-11200 என்ற வரம்புக்குள் வர்த்தகமாகும்” என்றார்.
புதிய பட்ஜெட் பங்குச் சந்தையில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் எனப் பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டோம்.

“நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என்றும், வருமான வரி வரம்பை உயர்த்தவில்லை என்றும் கவலை தெரிவிப்பது ஒருபக்கம். ஆனால், பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, இந்த பட்ஜெட்டைச் சாதகமான ஒன்றாகவே பார்க்கலாம். பட்ஜெட் என்பது ஒரு நாள் நிகழ்வு. நாட்டின் வரவு செலவுக் கணக்கு மட்டுமே. அடுத்த ஓராண்டுக்கான இலக்கினை இந்த ஆண்டின் முதல் ஒரு மாதத்திலேயே சந்தை அடைந்திருக்கிறது. இந்த உச்சம் நிலையற்றது என்பதால், இறக்கத்துக்கான நேரத்தை எதிர்பார்த்திருந்தது. பட்ஜெட் தாக்கல் எதிர்பார்த்தபடி இல்லாததால், அதைப் பயன்படுத்திக்கொண்டு சந்தை இறங்க ஆரம்பித்திருக்கிறது. இந்த இறக்கம் சந்தைக்கு அவசியமானது என்பதால், இதனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
பங்குச் சந்தைக்கு எதிரான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லையென்றாலும், பங்குச் சந்தையைப் பாதிக்கும் விஷயமாக இருப்பது நீண்டகால மூலதன ஆதாய வரி. இந்த வரியிலிருந்து தப்பிப்பதற்காக, தங்களுடைய நீண்ட கால மூலதன லாபத்தை மார்ச் மாதத்துக்குள் விற்று எடுத்துவிடவே எல்லோரும் நினைப்பார்கள். இதனால் சந்தை இறங்கத்தான் செய்யும். ஆனால், எப்போது சந்தை இறங்கும், முதலீடு செய்யலாம் என்று முதலீட்டாளர்கள் பலரும் காத்திருக்கிறார்கள். இறங்காமல் ஏற்றத்திலேயே இருந்தால், ஏற்றத்தில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் குறைவாகத்தானே கிடைக்கும். அவ்வப்போது இறக்கங்கள் வந்தால்தான், அப்போது முதலீடு செய்பவர்களுக்கு லாபம் அதிகமாக இருக்கும். இறக்கம் ஏற்பட்டால் நல்ல பங்குகளை வாங்கி முதலீடு செய்யலாம்.
நம் நாடு பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி கண்டுவரும் நாடு. பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீட்டில் எதிர்காலத்தில் நல்ல லாபம் வரவே நிறைய வாய்ப்புண்டு. எனவே, நல்ல அடிப்படை உள்ள பங்குகளை விலை குறையும்போது வாங்கலாம்” என்றார்.
அடுத்து, பங்குச் சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். ‘‘கடந்த ஒரு வருடமாக சந்தை அதன் தகுதியை மீறி எந்தக் காரணமும் இல்லாமல் ஏற்றமடைந்துகொண்டே இருந்தது. ஃபண்ட்மென்டல் காரணிகள் சரியில்லாத நிறுவனப் பங்குகளும்கூட இந்த ஏற்றத்தில் அதிக விலைக்கு ஏறியிருக்கின்றன. சந்தை ஏற்றம் நியாயமாக இருந்தால்தான் முதலீட்டாளர்களின் நலன் காக்கப்படும். காரணமே இல்லாமல் ஏற்றமடைந்தால், அதனால் பலரும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி வரலாம். உதாரணமாக, நிஃப்டி 11000 புள்ளிகளில் இருந்தபோது முதலீடு செய்திருந்தால், இப்போது அந்த முதலீடு நஷ்டத்தில் இருக்கும். அதாவது, விலை இறங்கிவிட்டதே என்று அவசரப்பட்டு விற்றால்தான் நஷ்டம். ஆனால், அது நல்ல பங்காக இருக்கும்பட்சத்தில் அதில் இன்னும் முதலீடு செய்ய இது ஓர் அருமையான வாய்ப்பு. எனவே, சந்தையின் தற்போதைய இறக்கமானது ஆரோக்கியமானதுதான்.
பட்ஜெட்டையொட்டி ஏற்பட்டிருக்கும் இந்த இறக்கமானது நிரந்தமானதல்ல. சந்தையின் போக்கில் இதனால் எந்த மாற்றமும் வரவில்லை. இந்த இறக்கத்தில் நல்ல செயல்பாடு உள்ள தகுதியான பங்குகள் விலை இறங்கினால் அதனை, வாங்குவதற்கான வாய்ப்பாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்தையின் போக்கு பெரும்பாலும் பங்குகளின் செயல்பாடுகளைப் பொறுத்துத்தான் இருக்கும். பட்ஜெட் போன்ற நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கம் நீடித்திருக்காது’’ என்றார்.
சந்தையின் போக்கு எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். இதுபோன்ற தற்காலிக நிகழ்வுகளால் பதற்றத்துக்குள்ளாகாமல், நிதானமாக முதலீட்டு முடிவுகளை எடுத்தால் அந்த முடிவுகள் லாபகரமானதாகவே இருக்கும் என்று நம்பலாம்.
ஜெ.சரவணன்

பட்ஜெட்... விலை உயரும், குறையும் பொருள்கள்!
சுங்க வரி உயர்த்தப் படுவதால் வெளிநாட்டி லிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் விலை உயரக்கூடும். செல்போன், சமையல் எண்ணெய், கடலை எண்ணெய், பழச்சாறு, கைக்கடிகாரம், ஆட்டோமொபைல், இறக்குமதி செய்யப்படும் காய்கறிகள், பழவகைகள், வாசனைத் திரவியங்கள், பட்டுத்துணி, காலணிகள், நாற்காலி, மேஜைகள், டிவி பேனல்கள், குழந்தைகள் விளையாடும் பொம்மை கள், சிகரெட், லைட்டர்கள், மெழுகுவத்தி விலை உயரக்கூடும். அதே நேரத்தில் வரி குறைப்பால், கச்சா முந்திரி, சோலார் பேனல் அமைக்கப் பயன்படும் கண்ணாடி, காதுகேளாதோர் பயன் படுத்தும் எந்திர உதிரி பாகங்கள் விலை குறையக்கூடும்.

ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.1.48 லட்சம் கோடி!
ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் குற்றங்களைத் தடுக்க ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப் படும் என்றும், அனைத்து ரயில்களிலும் இலவச வைஃபை வசதி செய்து தரப்படும் என்றும் பட்ஜெட்டில் சொல்லப் பட்டுள்ளன. 25,000 பேருக்கும் அதிகமாகப் பயன்படுத்தும் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் வசதி செய்து தரப்படும் எனவும், நாடு முழுக்க 18,000 கி.மீ தூரத்திற்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப் படும் என்றும், 5,000 கி.மீ தூரத்திற்கு அகல ரயில் பாதைகளாக மாற்றப்படும் என்றும் சொல்லப் பட்டுள்ளன.