
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

உப்பறைக்குச் சென்ற மூவரும் எவ்வியூர் வந்துசேர்ந்தனர். அவர்கள் வந்தபொழுது குலநாகினிகளைத்தவிர ஊரில் யாருமில்லை. எல்லோரும் நீலன், மயிலா மணவிழாவிற்காக வேட்டுவன் பாறைக்குச் சென்றுவிட்டனர். ஒருநாள் ஓய்விற்குப்பின் மூவரின் குதிரைகளும் எவ்வியூரிலிருந்து வேட்டுவன் பாறையை நோக்கிப் புறப்பட்டன. நீலன், மயிலா மணவிழா மகிழ்வு, பயணத்தின் வேகத்தைக் கூட்டியபடியே இருந்தது.
வேட்டுவன் பாறையில் ஆட்கள் நிரம்பி வழிந்தனர். மணவிழா உற்சாகம் களைகட்டியிருந்தது. எவ்வியூர் முழுமையாக வந்துசேர்ந்திருந்தது. பல ஊர்களிலிருந்தும் ஊர்ப்பெரியவர்கள் வந்திருந்தனர். கள்ளும் கனியுமாக மணவிருந்து தொடங்கிவிட்டது. மான்தசையைச் சுட்டுக்கருக்கும் வாசம் காடெங்கும் வீசிக்கொண்டிருந்தது. வெற்றிலைகள் வகைபிரித்து வரிசை வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.
புனுகு மணமும் நாகப்பூ மணமும் மணவிழாவுக்கே உரியன. புன்னைப்பூவும் பாதிரிப்பூவும் ஆலம்பனையின் ஓலைக்கொட்டானில் குவிந்துகிடக்க வந்தவர்கள் எல்லாம் மனம்மயங்கி, கனியுண்டு கள்ளருந்தினர். மான்தசையைக் கடித்திழுத்து உண்டுவிட்டு அதனைச் செமித்து முடிக்க வெற்றிலை தின்றனர். மலைமக்களின் மணவிழா என்பது எல்லையில்லாத இன்பத்தை உணரவும் உணர்த்தவுமான விழா. உணவின் வகைகளும் ஆட்டபாட்டத்தின் வகைகளும் சொல்லிமாளாது.
மலையெங்குமிருந்து சாரிசாரியாக ஆட்கள் வந்துகொண்டிருந்தனர். வெவ்வேறு வகையான இசைக்கருவிகளின் ஓசைகள் அவர்களுடன் வந்துகொண்டிருந்தன. இசைக்கப்படும் ஓசையை வைத்தே வருவது எந்த ஊர்க்காரர்கள் எனப் பெரியவர்கள் சொன்னார்கள். சிறுவர்களின் கொண்டாட்டம் தனித்திருந்தது. காலம்பனின் மூத்த மகன் கொற்றன். அவன்தான் எவ்வியூர் சிறுவர்களின் கூட்டத்துக்குத் தலைவனாக இருந்தான். அவன் எவ்வியூர் வந்த புதிதில் மற்ற சிறுவர்கள் அவனோடு பழகத் தயங்கினர். ஏனெனில் அவனது உருவ அமைப்பு அவனைச் சிறுவனென்று ஏற்றுக்கொள்ள முடியாத தன்மையைக் கொண்டிருந்தது. நாளடைவில் எல்லாம் சரியானது. விளையாட்டில் அவனை யாரும் வெல்ல முடியாதது மட்டுமல்ல; எவ்வியூர் சிறுவர்களுக்குத் தெரியாத புதுவிளையாட்டுகள் நிறைய அவனுக்குத் தெரிந்திருந்தன. காட்டெருமை விளையாட்டினை அவன்தான் எல்லோருக்கும் கற்றுக்கொடுத்தான். ஆட்டபாட்டத்திலும் இணையற்றவனாக இருந்தான். எனவே எவ்வியூர் சிறுவர்கள் எந்நேரமும் அவனுடனே இருந்தனர்.
அலவன், முடிநாகன், குறுங்கட்டி, அவுதி, மடுவன், உளியன், வண்டன் ஆகிய எல்லோரும் இப்பொழுது சிறுவர்களாவும் இல்லாமல் இளைஞர்களோடும் சேரமுடியாமல் நடுவில் நின்று விழித்துக்கொண்டிருந்தனர். இளைஞர்கள் எல்லாம் தங்களின் இணையைப்பற்றிப் பேசிச்சிரித்து மகிழ்ந்துகொண்டிருந்தனர். இவர்கள் அருகிற்போனால் சிறுவர்களோடு விளையாடச்சொல்லி விரட்டிவிடுகிறார்கள். சிறுவர்களிடம் போனால் அவர்கள் எல்லாம் கொற்றனின் தலைமையில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். யாரும் இவர்களுடன் நின்று பேசக்கூட ஆயத்தமாக இல்லை. விளையாட்டுகள் அவ்வளவு மும்முரமாகப் போய்க்கொண்டிருந்தன.

சங்கவை, சிறுமிகளின் கூட்டத்தைக் கூட்டிக்கொண்டு தென்புறச்சரிவில் மூங்கிற்குச்சியில் நார்ப்பந்துகளைச்செருகி அடித்து விளையாடிக்கொண்டிருந்தாள். பெண்களும் பெரியவர்களும் மணவிழா வேலையில் மூழ்கிப்போயிருந்தனர். யார்யார் எங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.
பொழுதுமங்கி இருள்கவியத் தொடங்கியது. ஊரெங்கும் தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. மந்தையில் அமர்ந்திருந்த பெரியவர்கள் ஒவ்வொருவரிடமும் சிறுபிள்ளைகள் வந்து வெற்றிலை கொடுத்தனர். இருப்பதிலே மிகமூத்தவர் வாரிக்கையன்தான். ஆனால் அவருக்கு வெற்றிலை கொடுக்காமல் மற்றவர்களுக்காகப் பிள்ளைகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். கொடுத்து விடுபவர்கள் சொல்வதைத்தானே பிள்ளைகள் கேட்பர். காலையிலிருந்து இளைஞர்களை விரட்டி விரட்டி வேலைவாங்கியதால் தம்மீது கோபமாக இருக்கிறார்கள் என்று வாரிக்கையனுக்குத் தோன்றியது. ‘சரி, என்னதான் நடக்கிறது பார்ப்போம்’ என்று வாரிக்கையன் பொறுத்திருந்தார்.
எல்லோருக்கும் கொடுத்தபின் ஒரு சிறுமி வந்து வாரிக்கையனுக்குக் கொடுத்தாள். சற்றே கோபத்தோடு அதனை வாங்கினார். ஆனால் மற்றவர்களுக்குக் கொடுத்ததைவிட இருமடங்கு வெற்றிலை அதில் இருந்ததால் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. உடனடியாக வெற்றிலையை மெல்லத்தொடங்கினார்.
மேற்புறமிருந்து காற்றுவீச மந்தையை ஒட்டியிருந்த பந்தத்தீ பாம்பைப்போலச் சீறி அடங்கியது. எல்லோரும் சீற்றத்தின் ஓசையை கவனிக்க, ஒரு பெரியவர் மட்டும் காற்றோடு மிதந்து வந்த மணத்தை மோந்தபடி “இது குளவிப்பூவின் வாசமாயிற்றே இப்பக்கம் குளவிக்கொடி இருக்கிறதா என்ன?” என்று கேட்டார்.
தேக்கனுக்குத் தெரியவில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த வாரிக்கையனிடம் கேட்போம் என்று சத்தம்போட்டுக் கேட்டார். எங்கும் பேச்சுக்குரல் கேட்டதால் தேக்கனின் குரல் காதில் விழவில்லை. எழுந்து மந்தையின் முன்பக்கமாக வந்தார் வாரிக்கையன். நொங்கு தின்ற குரங்குபோல அவரின் இருபக்கத் தாடைகளும் உப்பி இருந்தன. உள்ளுக்குள் வெற்றிலையை அடைத்து வைத்திருந்தார். அருகில் வந்துநிற்கும் வாரிக்கையனிடம் குளவிப்பூ பற்றி மீண்டும் கேட்டார் தேக்கன். வெற்றிலையைப் பக்குவமாய் அணைத்துக்கொடுத்துப் பேசக்கூடியவர் வாரிக்கையன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரும் பக்குவமாய் நாவால் ஒதுக்கிப் பேசத் தொடங்கும்பொழுது திடீரென ஏதோவொன்று உச்சிமண்டைக்குள் ‘கிர்’ரென ஏறியது. என்னவென்று புரிந்துகொள்ளும்முன் பெருந்தும்மலாக வெடித்து வெளியில் வந்தது. யானையின் துதிக்கைக்குள்ளிருந்து சீறிப்பாய்வதைப் போல மந்தையிலிருந்த எல்லோரின் மீதும் வெற்றிலை எச்சில் தெறித்துச் சிதறியது. உட்கார்ந்திருப்பவர்கள் விழித்துக்கொள்வதற்குள் ஒன்று, இரண்டு, மூன்று என்று விடாமல் தும்மினார் வாரிக்கையன்.
கீழ்ப்புறமிருந்து எதிர்காற்று அடுத்தடுத்து வீசியதுபோல் இருந்தது. பலத்த காற்றோடு சேர்ந்து நீரும்

வந்ததால் மந்தையை ஒட்டியிருந்த தீப்பந்தம் முழுமுற்றாக அணைந்தது. மந்தையில் ஓராள்கூட மிச்சமில்லை. நடக்கமுடியாத பெருசுகள்கூட தாவிக்குதித்து வெளியேறியதாகச் சொன்னார்கள். விடாது தும்மிய வாரிக்கையனை அவருக்கு உற்ற தோழர்கள் இருவர் பக்குவமாய் வெளியில் கூட்டிப்போனார்கள்.
மணவிழாக்கொண்டாட்டம் களைகட்டியது. கையில் துடைப்பத்தோடு மந்தைக்கு வந்த பெண்கள் வசவுச் சொல்லை வாரி இறைத்தபடி மந்தையைப் பெருக்கித் தூய்மைப்படுத்தினர். மீசைமுடியிலும் தலைமுடியிலும் ஒட்டிய வெற்றிலையெச்சிலை எப்படி நீக்குவதெனத் தெரியாமல் பெருசுகள் இங்குமங்குமாக அலைந்துகொண்டிருந்தனர்.
மணவிழாவுக்காகத் தொடர்ந்து மூன்றுநாள்கள் விருந்து நடக்கும். விலங்கின் இறைச்சியை வெட்டியெடுக்கும் இடத்திலிருந்து துர்நாற்றம் வந்துவிடக்கூடாது என்பதற்காக குளவிப்பூவின் கொடிகளைக் கொண்டுவந்து அப்பக்கம் போட்டிருந்தனர். அந்த மணத்தை அறிந்துதான் குளவிப்பூ வாசம் இங்கே எப்படி என்று பெரியவர் கேட்டார். அதுதான் இவ்வளவுக்கும் காரணமானது. இப்பொழுது குளவிப்பூக்கொடியை இருவர் கைநிறைய அள்ளிவந்து மந்தையில் போட்டனர். அப்படியும் துப்பிய நாற்றம் போகவில்லை.
வாரிக்கையனை அழைத்துக்கொண்டு போன அவர் தோழர்கள் தனியே ஓரிடத்தில் அவரை உட்காரவைத்தனர். தும்மல் கொஞ்சங்கொஞ்சமாக நின்று அமைதியடைந்தார். கண்ணிலும் மூக்கிலும் நீர்கொட்டி நின்றது. “எப்படி திடீரென இவ்வளவு தும்மல் வந்தது?” எனக் கேட்டார்.
உடனிருந்த பெரியவர்கள் இருவரும் “தும்மலுக்கெல்லாமா காரணம் சொல்ல முடியும்?” என்றனர்.
வாரிக்கையன் ஏற்கவில்லை. இடுப்புத்துணியால் முகத்தை முழுவதுமாகத் துடைத்தபடி “ஏதோ நடந்திருக்கிறது!” என்றார். உடனிருந்த பெரியவர்கள் இருவரும், “இதில் என்ன நடந்திருக்கும்?” என்றனர். வாரிக்கையன் இதனை அப்படியே விட விரும்பவில்லை.
எங்கும் வாரிக்கையன் பேச்சுதான் பேசப்பட்டுக்கொண்டிருந்தது. “மான்கறி, மிளாக்கறி என எவ்வளவு சுவையாகச் சமைத்துப்போட்டாலும் இந்த மணவிழாவின் பேச்சு வெற்றிலையைப் பற்றித்தான்” என அவரிடமே வந்து கேலி பேசிவிட்டுப் போயினர். அதற்கெல்லாம் அவர் கவலைப்படவில்லை. என்ன நடந்திருக்கும் என்பதைப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தவர் இறுதியில் அதனைக் கண்டறிந்தார்.
இளசுகளை மிகவும் கடிந்துகொண்டு, ஓயாமல் வேலைவாங்கினார். நீலனின் உற்றதோழன் புங்கனை மந்தையில் வைத்து காலையில் திட்டினார். அதனால் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து வாரிக்கையனை அதே மந்தையில் வைத்து வாரிவிடத் திட்டந்தீட்டினர்.
தும்மி இலையைப் பறித்துவந்து இவருக்குக் கொடுக்கப்பட்ட வெற்றிலைக்குள் வைத்துக்கொடுத்துள்ளனர். தும்மி இலையையோ, தும்மிப்பூண்டையோ சாப்பிட்டால் உடனடியாகத் தும்மல் வரும். கட்டுப்படுத்த முடியாதபடி வந்துகொண்டே இருக்கும். அதனால்தான் வாரிக்கையன் இந்தப் பாடுபட்டுள்ளார்.
நடந்ததைக் கண்டுபிடித்த வாரிக்கையன் தன்னுடைய வேலையைக்காட்ட முடிவுசெய்தார். மந்தைப்பக்கமே போகாமல் ஊருக்குள் நுழைந்தார். பாவை விளையாட்டும் பந்து விளையாட்டும் விளையாண்டபடி சிறுவர், சிறுமியர் எங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். தாழ்வான மரக்கிளைதோறும் ஊஞ்சல்கட்டி பலரும் ஆடினர். வாரிக்கையனின் கண்கள் தேடின. வட்டாட்டத்தையும் கழங்காட்டத்தையும் தாய்மார்களின் துணையோடு குழந்தைகள் ஆடினர். அவ்விடத்தைக் கடந்து போகையில்தான் ஓங்கூர் மருத்துவன் கண்ணிற்பட்டான். அவனை சத்தம்போட்டுக் கூப்பிட்டார் வாரிக்கையன். அவன் அருகில் வந்தான்.
தனக்கு வேண்டியதைக் கேட்டார். மருத்துவர் அதிர்ச்சியடைந்தான். ‘இதை ஏன் இவர் கேட்கிறார்?’ என்பது அவருக்குப் புரியவில்லை. வாரிக்கையன் கேட்கும்பொழுது கொடுக்காமல் இருக்க முடியாது. “சரி ஏற்பாடு செய்துதருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.

‘இனி மந்தைப்பக்கம் போவோம்’ என நடையைக்கட்டினார். மந்தைவெளி இரவு நடைபெறும் ஆட்டத்துக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. வந்துள்ளதில் மணமுடித்தவர்களும் மணமுடிக்காதவர்களும் தங்கள் இணையோடு சேர்ந்து ஆடும் குரவைக்கூத்துதான் மணவிழா நிகழ்வின் உச்சம். இந்த ஆட்டத்தில் பங்கெடுக்கவும் இந்தக் காதற்கொண்டாட்டத்தைக் காணவுந்தான் எல்லோரும் ஆர்வமாக இருப்பர். அதற்கான தொடக்க ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.
வாரிக்கையன் கூட்டத்தின் ஓரமாகவே நடந்து மந்தையை நோக்கி வந்துகொண்டிருந்தார். இசைக்கலைஞர்கள் இரவு ஆட்டத்துக்குத் தங்களை ஆயத்தம் செய்துகொண்டிருந்தனர். பகலில் இசைத்தது முக்கியமல்ல; இரவில் இசைக்கப்போவதுதான் முக்கியம். ஏனென்றால், இது ஆணும் பெண்ணும் இருகூறாகப் பிரிந்து தங்கள் இணையோடு ஆடும் போட்டியாட்டம். தழுவித்துள்ளும் காதலுக்கு இசையே அடிப்படையாக அமையவேண்டும். நள்ளிரவு நெருங்க நெருங்க ஆட்டத்தின் வேகத்துக்கு இசைக்கலைஞன் ஈடுகொடுத்தாக வேண்டும். அதற்கான ஆயத்தங்களில் அவர்கள் தீவிரமாயினர்.
வாரிக்கையன் மந்தை முழுவதையும் சுற்றிப்பார்த்தார். கபிலர் மந்தையின் வடபுறமிருந்த மேட்டிலே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். என்ன நடக்கிறது என்பதை அவரால் கண்டறிய முடியாது. எனவே அவரால் ஆபத்து ஏதுமில்லை என முடிவுசெய்த வாரிக்கையன் மந்தையின் முன்புறத் திண்ணையில் தேக்கன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தார். தூக்கிவாரிப் போட்டது.
‘தேக்கனை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது. எதையும் கண்டறிவதில் கெட்டிக்காரன். எனவே இவனை மந்தையை விட்டு வெளியேற்ற என்ன வழி?’ என்று சிந்தித்தார். அப்பொழுது அவரது கண்ணில் கட்டையர்கள் இருவர் தென்பட்டனர்.
ஆதிமலையின் வடகோடி அடிவாரத்தில் வாழ்பவர்கள் கட்டையர்கள். இருப்பதிலே மிகக்குள்ளமானவர்கள். ஆனால் மகாதிறமைசாலிகள். வீரத்தால் புகழ்பெற முடியாது என உணர்ந்த அவர்கள் வித்தைகளைக் கற்றுப் பெரும்புகழடைந்தனர். அவர்கள் ஊர்த்தலைவர்கள் இருவர் மட்டும் வந்துள்ளனர். பார்த்ததும் வாரிக்கையன் அவர்களைத் தனியே அழைத்து. “திகைப்பூச்சி இருக்கிறதா? எங்கிருந்தாவது பிடிக்கமுடியுமா?” எனக் கேட்டார்.
இருவரில் மூத்தவர் சொன்னார், “இருட்டிவிட்டதே, இனி எங்கு போய்த் தேடுவது?”
இளையவன் சொன்னான், “வருகிறபொழுது அருகிருந்த குளத்தில் அது கத்தும் ஓசையைக் கேட்டேன். தீப்பந்தத்தோடு இருவரை அனுப்புங்கள் பிடித்துவருகிறோம்” என்றான். பந்தத்தோடு இரண்டு இளைஞர்களை உடனனுப்பினார் வாரிக்கையன்.
வேட்டுவன் குன்றின் பின்புறச் சரிவில் சிறுகுட்டை ஒன்று இருந்தது. கோடைக்காலமாதலால் நீர் மிகக்குறைவாகவே இருந்தது. அதை நோக்கித்தான் அவர்கள் நால்வரும் போனார்கள். திகைப்பூச்சி நண்டுவலைக்குள்தான் இருக்கும். சிறுசிலந்தியைப்போல சிறிய உடலமைப்பும் நீண்ட கால்களையும்கொண்டது. பார்த்தால் சட்டெனத் தெரியாது. ஆனால் அது ஓசையைத் தெறித்துக்கொண்டேயிருக்கும். தொலைவிலிருந்தும் கேட்கலாம்.
கட்டையர்கள் குட்டையின் அருகிற்போய் நின்றார்கள். திகைப்பூச்சியின் ஓசை வருகிறதா என உற்றுக்கேட்டார்கள். ஓசையை அறிந்து அவ்விடம் போய்க் குத்தவைத்து உட்கார்ந்தனர். குறிப்பிட்ட நண்டுவலைக்குள்ளிருந்து அவ்வோசை வந்தது. பந்த வெளிச்சத்தை நன்றாகக் காண்பிக்கச் சொன்னார்கள். குளக்கரையோரம் சிறுநண்டு ஒன்று ஓடியது. அதனைப் பிடித்து முதுகோடு ஒரு நார்க்கயிற்றைக் கட்டினர். பந்தமேந்தியவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்று உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தனர். பிடிபட்ட நண்டினை ஓசைவந்த வலையின் அருகே விட்டனர். அது சொளவுக்குள் குடுகுடுவென ஓடியது. சிறிதுநேரத்திலே நார்க்கயிற்றை மேலே இழுத்தனர். இரண்டுமூன்று திகைப்பூச்சிகளைக் கவ்விய கால்களோடு நண்டு மேலே வந்தது. அதனைப் பக்குவமாய் எடுத்து இடுப்பிலே இருந்த பைத்துணிக்குள் போட்டு முடிச்சிட்டுக்கொண்டனர்.
நேரமாகிக்கொண்டிருந்தது. கட்டையர்களை இன்னும் காணவில்லை என்ற பதற்றத்தில் இருந்தார் வாரிக்கையன். ஓங்கூர் மருத்துவன் அவர் கேட்டதைக் கொண்டுவந்துவிட்டான். பெருமகிழ்ச்சி. உடனிருந்த இரு பெரியவர்களையும் அழைத்து அடுத்து செய்யவேண்டிய வேலையைச் சொல்லிமுடித்தார். கட்டையர்கள் இன்னும் வந்துசேரவில்லை. சற்றே பதற்றத்தோடு மந்தையில் போய் தேக்கனுக்கு அருகில் உட்கார்ந்தார் வாரிக்கையன்.
மந்தைவெளி முழுக்க ஆட்டத்தைக்காண, பெருவட்டத்தில் மக்கள் உட்கார்ந்தனர். புங்கனின் தலைமையில் இளைஞர்கள் கூட்டமாய் களத்தை நோக்கி வந்தனர். இணையர்கள் எல்லாம் களத்துக்கு வரத் தொடங்கினர். ஆட்டம் நள்ளிரவு வரை நடக்கும். நேரமாக ஆகத்தான் வேகம் கூடும். ஆண்சுற்றில் வேகங்கூடுதலாக இருக்கும், பெண்சுற்றில் குழைவு கூடுதலாக இருக்கும். இறுதிச்சுற்றில் இணையைப் பொறுத்து ஒவ்வொன்றும் ஒவ்வொருமாதிரி இருக்கும். தழுவியாடும் ஆட்டமாதலால் எதையும் முன்கணிக்க முடியாது.
குரவைக்கூத்து என்பது மலைமக்களின் ஆதிநடனம். ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தொற்றி ஆடுவதால் “தொற்றியாடல்” என்றும் தழுவி ஆடுவதால் “தழுவியாடல்” என்றும் இதற்குப் பெயருண்டு. இணையர்கள் எல்லாம் களத்துக்குள் நுழைந்தனர். பார்வையாளர்கள் வழக்கம்போல் ஆண், பெண் என இருகூறாகப் பிரிந்து ஆட்டத்தினை ஆதரித்து ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். முதுபெண்களும் வேறு சிலரும் மணவிழா வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தனர். மணமகள் அவளது ஊரிலிருந்து இன்னும் அழைத்துவரப் படவில்லை. எனவே மணமகன் ஆட்டத்தைக் காணக்கூடாது.
கோடை வெக்கைக்கு தாகம் கடுமையாக இருக்கும். அதுவும் ஆடுபவர்களுக்கு விடாமல் வேர்த்துக்கொட்டும். எனவே ஆட்டக் காரர்களுக்காக ஆண்கள் பக்கமும் பெண்கள் பக்கமும் தனித்தனியாகப் பழச்சாறு கலந்து வைக்கப்பட்டிருந்தது. இசைக்கலைஞர்கள் ஒருமுகப்பறையையும் இரட்டை முகமுடைய இணைமுகப்பறையையும் முழங்கத் தொடங்கினர். கூட்டத்தினரின் ஆர்ப்பரிப்பு எழுச்சிகொண்டது. இளைஞர்கள் ஒருபக்கமும் இளைஞிகள் ஒருபக்கமுமாகக் களமிறங்கினர். புங்கனின் முகத்தில் மகிழ்வின் ஒளிவீசியது.

மற்ற ஆட்டத்தைப்போல மெதுவாகத் தொடங்கி சீறான வேகங்கொள்ளும் ஆட்டமல்ல இது. இணையரின் வேகத்தைப் பொறுத்து சட்டென வேகங்கூடும். ஓர் இணை நெருங்கி ஆடிவிட்டால் போதும் மற்றவர்களும் நெருங்குவதற்காக ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டுவர். கால்களும் கைகளும் வேகங்கொள்ள பறையிசைப்பவனின் வேகம் அதற்கு முன்னே சென்றாக வேண்டும். முதற்சுற்று எவ்வளவு வேகமாக ஆடினாலும் அது தொடக்கம்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். வாரிக்கையன் கைகளால் உத்தரவுகொடுத்து, வேலையைத் தொடங்கச்சொன்னார். ஒரு பெரியவர் ஆண்கள் குடிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த பெரும் பானைக்குள் எதையோ போட்டுவிட்டு நகர்ந்து இப்பக்கம் வந்துவிட்டார்.
எல்லோரின் கவனமும் ஆட்டக்களத்தின் மீதே இருந்தது. உள்ளே போடவேண்டியதைப் போட்டாகிவிட்டது என்பது வாரிக்கையனுக்கு மகிழ்ச்சிதான். ஆனாலும் கட்டையர்கள் வந்துசேராதது கவலையைத் தந்தது. தேக்கன் விழிப்போடிருந்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்ற பதற்றத்தில் இருந்தார். முதற்சுற்று ஆட்டம் முடிந்தது. ஆடியவர்கள் பானைகளில் இருந்த பழச்சாற்றை அருந்தினர்.
ஆண்களின் பக்கமிருந்த பழச்சாற்றில் வாரிக்கையன் கலக்கச்சொன்னது காமஞ்சுருக்கியை. அது இச்சையைச் சட்டென வற்றிப்போகச்செய்யும். உடலை வேகமாகக் களைப்புறச்செய்து தூக்கத்துக்குக் கொண்டு செல்லும். காமஞ்சுருக்கி கலக்கப்பட்ட பழச்சாற்றை ஆண்கள் நான்கைந்து குவளை குடித்துவிட்டு அடுத்த சுற்றுக்கு ஆயத்தமாயினர்.
இரண்டாஞ்சுற்று ஆண் இறங்கி ஆடவேண்டும். இசைக்கலைஞர்கள் ஆயத்தமானார்கள். புங்கனை நடுவில் நிறுத்திக் கைகோத்து வட்டங்கொண்டது ஆண்களின் அணி. ‘நீங்கள் ஆடி வாருங்கள், பார்ப்போம்’ என்று எதிர்பார்த்தி ருந்தனர் பெண்கள். கூட்டம் பெருமாரவாரத்தைச் செய்துகொண்டிருந்தது. அப்போதுதான் கட்டையர்கள் உள்ளே வந்தார்கள். அவர்களைப் பார்த்த பின்தான் வாரிக்கையன் முகத்திலே மகிழ்ச்சி வந்தது. அவர்களைக் கையசைத்து மந்தைப்பக்கமாக வரச் சொன்னார். அவர்களும் அப்பக்கமாக வந்து யாரும் அறியாத வகையில் திகைப்பூச்சி இருக்கும் சுருக்குப்பையை வாரிக்கையனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு நகர்ந்தனர்.
பெருமாரவாரத்தோடு தொடங்கிய இரண்டாஞ்சுற்று நேரம் செல்லச்செல்ல வேகங்கூடுவதற்கு பதில் மந்தநிலை கொள்ளத் தொடங்கியது. மந்தையில் தேக்கனுக்கு சற்று பின்னால் உட்கார்ந்திருந்த வாரிக்கையன் ஆட்டத்தைக்கண்டு அகமகிழத் தொடங்கினார். இசைக்கலைஞர்களுக்கு சற்றே குழப்பமானது. ஏன் ஆண்கள் வேகங்கொள்ள மறுக்கின்றனர் என்று சிந்தித்தபடியே இசையின் வேகத்தைக் கூட்ட முயன்றனர்.
தேக்கனுக்குப் பின்னால் இருந்த வாரிக்கையன் சுருக்குப்பையைத் தேக்கனின் முதுக்குப் பின்புறமாக

வைத்து அவிழ்த்தார். உள்ளே இருந்த திகைப்பூச்சி தேக்கனின் முதுக்குப்புறமாக மேலே ஏறியது. கண்ணுக்குத்தெரியாத அளவுள்ள அதன் கால்கள் மேலேறுவதை மனிதனால் உணரமுடியாது. மேலேறிய அது கடித்துவிட்டு சிறிதுநேரத்தில் செத்துப்போகும். திகைப் பூச்சியால் கடிக்கப்பட்டவர்கள் சிறிதுநேரத்திலேயே திகைத்துப்போய்விடுவர். அவரால் வழக்கம்போல் செயலாற்ற முடியாது. எண்ணியதைப் பேசமுடியாது, மறுமொழி சொல்லமுடியாது. ஒருவித மந்தநிலையில் திகைப்பு மாறாமல் அவ்வப்பொழுது சிரித்தபடி தலையாட்டிக் கொண்டிருப்பர். வேறெதுவும் செய்யமாட்டார்கள். முதுகில் கடித்தவுடன் திகைப்பூச்சி சரிந்து விழுந்ததை உற்றுப்பார்த்த வாரிக்கையன் இனி சிக்கலேதுமில்லை என்ற முடிவுக்குப் போனார்.
கூட்டத்தின் ஆரவாரம் பலமடங்கு அதிகரித்தது. அதற்குக் காரணம் இளைஞர்களிடம் வேகம் போதாததால் சுற்றியுள்ள ஆண்கள் பெருங்குரலெடுத்துக் கத்தி அவர்களை உற்சாகப்படுத்த முயன்றனர். அப்பொழுது இன்னொரு பெரியவருக்குக் கையசைத்து உத்தரவு கொடுத்தார் வாரிக்கையன். அப்பெரியவர் நேராக பெண்களுக்கான பழச்சாறு கலக்கப்பட்டுள்ள பானையில் எதனையோ போட்டுவிட்டு ஒதுங்கி வந்தார். ஆண்களின் ஆட்டத்தைக்காணும் யாருக்கும் கோபம் வரும், அந்த அளவு மோசமாக ஆடிக்கொண்டிருந்தனர். இசைக்கலைஞர்கள் முடிந்த அளவு வேகத்தைக் கூட்டிப் பார்த்தனர். ஒன்றும் நடக்கவில்லை. வழக்கமாக ஆண்களின் சுற்றில் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பெண்கள் சிலர் தள்ளாடிவிழுவதும் உட்கார்ந்துவிடுவதும் நடக்கும். இன்று அது எதுவும் நடக்கவில்லை. இவ்வளவு மெதுவாக எவ்வளவு நேரந்தான் ஆடுவது என்று சலித்துப்போய் நிறுத்தினான் இசைக்கலைஞன். வழக்கமாக இசையை எப்பொழுது நிறுத்தினாலும் “நிறுத்தாதே!” என்றுதான் குரல் வரும். ஆனால், இன்று விட்டால்போதும் என்ற நிலையில்தான் ஆடும் இளைஞர்கள் இருந்தனர்.
இளைஞர்கள் ஏன் இவ்வளவு களைப்பாக ஆடுகின்றனர் என்பது யாருக்கும் விளங்கவில்லை. இளைஞிகளுமே சற்று குழப்பத்துக்கு ஆளானார்கள். ‘என்னாச்சு இவனுகளுக்கு? வழக்கமாக இருக்கும் வேகத்தில் பாதிகூட இல்லையே!’ என்று சிந்தித்தபடியே இரண்டாஞ்சுற்றினை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
ஆடுபவர்கள் மீண்டும் பழச்சாறு குடிக்கப்போனார்கள். இளைஞர்களின் பக்கம் பெருங்கூட்டம். “நல்லா குடிச்சிட்டு தெம்பா ஆடுங்கப்பா” என ஆளாளுக்கு முகந்து கொடுத்தனர். சிலர் புங்கனை வசைபாடத் தொடங்கினர். இளைஞிகளின் பக்கமும் நிறைய முகந்து குடித்தனர். இசைக்கலைஞன் மறுசுற்றுக்கு ஆயத்தமானான். ஆனால் நடுத்தர ஆண்கள் சிலர் தலையிட்டு, “கொஞ்சம் நேரமாகட்டும்பா, ஆடுறவங்க மிகக் களைப்பாக இருக்காங்க” என்று சொல்லி ஆட்டத்தைக் காலந்தாழ்த்தினர். வாரிக்கையன் இதனைப் பார்த்து அகமகிழ்ந்துகொண்டிருந்தார். அவரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த தேக்கன் அவ்வப்பொழுது சிரிக்கத் தொடங்கினார்.
``நல்லா ஆடுங்கடா! தேக்கன் உங்களப் பாத்து சிரிச்சுக்கிட்டு இருக்காரு” என்று சொல்லி மூன்றாஞ்சுற்றுக்கு இளைஞர்களை இறக்கினர் நடுத்தர ஆண்கள். இளைஞர்களைத் தொடர்ந்து இளைஞிகள் உள்ளிறங்கினர். இச்சுற்று பெண்கள் ஏறிப்பாடி ஆடும் சுற்று. களைகட்டும் கூத்து. காண்போரை ஆட்டத்தின் வழியே கிறக்கத்தை உருவாக்குவார்கள் இணையர்கள். இன்று அதே வேகத்தோடு அல்ல, வழக்கத்தைவிடப் பலமடங்கு வேகத்தோடு உள்ளிறங்கியது இளைஞிகள் கூட்டம். ஏனென்றால், அவர்கள் குடித்த பழச்சாற்றிலே வாரிக்கையன் கலக்கச்சொன்னது காமமூட்டியை. அதனை நீரில் கலந்து ஒரு குவளை குடித்தாலே காதலுணர்ச்சி உச்சத்தை அடைந்து படாத பாடுபடுத்தும். முதற்சுற்று ஆடிய களைப்பில் இளைஞிகள் ஒவ்வொருவரும் மூன்று நான்கு குவளையைக் குடித்துவிட்டு உள்ளே இறங்கியுள்ளனர். எதிர்ப்புறமோ இளைஞர்கள் முழுவதும் காமஞ்சுருக்கியை எண்ணற்ற குவளை குடித்துவிட்டு வந்து நின்றனர்.
ஆட்டம் தொடங்கியது. பறம்பு நாட்டில் எந்த ஒரு மணவிழாவிலும் நடக்காத கூத்தாக இந்தக் குரவைக்கூத்து நிகழ்ந்தது. இளைஞிகள் தங்கள் இணைமீது தீராக்காதலோடு களமாடினர். இளைஞர்களின் பாடு பெரும்பாடானது. எவனும் எவளுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. துவளுங்கொடியாக ஆணும் நிமிரும் சுடராகப் பெண்ணும் இருந்தனர். “என்னடா ஆச்சு உனக்கு?” என்று ஒவ்வொருத்தியும் தங்கள் இணையின் காதிலே கடிந்து கேட்டனர். என்ன கேட்டும் எதுவும் நடக்கவில்லை. இசைஞன் அடுத்தடுத்து வேகத்தைக் கூட்டிக்கொண்டிருந்தான்.
கைகோத்து, நடுவிரல் பற்றி, அணிவிரல் சேர்த்து ஆடவேண்டிய ஆட்டத்தை ஆட எவனுக்கும் தெம்பில்லை. ஆனால், எவளும் வேகத்தைக் குறைத்துக்கொள்ள முயலவில்லை. காதலையும் காமத்தையும் உயிர்கொல்லும் உச்சத்துக்குக் கொண்டுசெல்லும் தெய்வமகளாம் `அணங்கு’ இறங்கி ஆடும் கடைசிக்கட்டம் தொடங்கியது. ஆண்களில் எவனாலும் களத்தில் நின்றாட முடியவில்லை. புங்கன்தான் முதலில் சரிந்தான். பெண்களின் ஆர்ப்பரிப்பு விண்ணைத் தொட்டது. பார்த்துக்கொண்டிருந்த ஆண்கள் தலைகவிழ்ந்தனர். மந்தையில் உட்கார்ந்து விண்ணதிரச் சிரித்துக்கொண்டிருந்தார் வாரிக்கையன். தேக்கனோ அவ்வப்பொழுது சிரித்துக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் இறுதிக்கட்டம் வந்தபொழுது ஈடுகொடுக்க முடியாத தம் இணையை, தோளிலே தூக்கி ஆடினர் பெண்கள்.

“இது மயிலாவின் மணவிழா. அப்படித்தான் இருக்கும். தூக்கிச் சுத்துங்கடி இவனுகள” என்று, பார்த்திருந்த பெண்கள் கத்த, சுற்றிய சுற்றில் சுருண்டு வதங்கினர் இளைஞர்கள்.
ஆட்டம் முடிந்ததும் விருந்து தொடங்கியது. எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தபொழுது, தொலைவில் இருளில் குதிரைகள் வந்து நின்றன. விருந்து ஏற்பாட்டிலிருந்த வேட்டூர் பழையன் குதிரையின் குளம்படி கேட்டுத் திரும்பினார்.
வந்திறங்கிய குதிரை வீரர்களை நோக்கி இருளுக்குள் நடந்து போனார் வேட்டூர் பழையன். அவர்கள் கீழ்த்திசை எல்லைக்காவலர்கள். வேட்டூர் பழையனை வணங்கிவிட்டுச் சொன்னார்கள், “நெடுங்குன்றின் அடிவாரம் பாண்டிய நாட்டு வீரர்கள் படை தங்குவதற்கான பாடிவீட்டினை அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.”
- பறம்பின் குரல் ஒலிக்கும்...