
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

பொழுது விடிந்தது. ஆட்டத்தின் களைப்பை உதிர்த்தபடி ஊர் எழுந்தது. பாண்டியர்கள் படைவீடமைக்கும் செய்தியைச் சொன்ன வீரர்களை வேட்டூர் பழையன் தனியே அழைத்துக்கொண்டு போய்விட்டார். நீலனின் கண்களிற்பட்டால் அவன் உடனே புறப்பட்டுச்செல்ல முற்படுவான். கீழ்திசைக்காவல் அவன் பொறுப்பு. என்ன சொல்லியும் அவனைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே பாரி வந்து சேரும்வரை காவல்வீரர்களை நீலனின் கண்களிற்படாமல் பழையன் பார்த்துக்கொண்டார்.
பொழுதாகிக்கொண்டிருந்தது. ஆண்களெல்லாம், ஆடிய இளைஞர்களை மிச்சம் வைக்காமல் திட்டித்தீர்த்துக்கொண்டிருந்தனர். இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை. ஆனால், இவையெல்லாம் விடிந்து சிறிதுநேரம் மட்டுமே இருந்த எண்ணங்கள். இவையெல்லாம் சேர்ந்ததுதான் மணவிழாக்கொண்டாட்டம். மீண்டும் இசைக்கருவிகளின் ஓசை கேட்கத் தொடங்கியதும் மகிழ்வு மலையெங்குமிருந்து பொங்கி மேலெழுந்தது. மணவிழாவின் வேலைகளில் வேகங்கூடின. ஆனாலும் எல்லோரின் கண்களும் பாரியின் வரவை எதிர்பார்த்தே காத்திருந்தன.
மணமக்கள் குடிபுக சுடுமண் சுவரெழுப்பி புல்வேயப்பட்ட புதுக்குடிலைக் கூரைப்பூக்களைக் கொண்டு அலங்கரித்திருந்தனர். ஆதினியும் அவள் தோழிகளும் அதனைப் பார்த்துவரப் புறப்பட்டனர். அப்புதுக்குடில் நாங்கில் மரத்தை முன்நிழலாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. காரமலையின் கீழ்ப்பகுதியில் விரிந்துகிடக்கும் சமவெளி முழுவதையும் பார்ப்பதைப்போல அக்குடில் இருந்தது. குடிலுக்குள் வந்தாள் ஆதினி. தலையுயர்த்தி, வேயப்பட்ட புல்லினைப் பார்த்தாள், சற்றே ஐயங்கொண்டு வெளியில் வந்து மேற்பரப்பைப் பார்த்தாள். வியப்பு கலந்த மகிழ்வு அவளது முகத்திலே ஓடிமறைந்தது.
மற்ற பெண்களுக்கு சட்டெனப் புரியவில்லை. என்னவென்று கேட்டனர். ஆதினி சொன்னாள். ``குரம்பைப் புல்லினை அடிப்புறம் வைத்து நடுவில் மூங்கிற்புல் பரப்பி, மேலே மாந்தம்புல்லினை மேய்ந்துள்ளனர். எவ்வியூர் போல இது மலைமுகட்டு ஊரல்லவே! அடிவாரத்து ஊராதலால் வெக்கை நிறைந்த கோடைக்காலத்திலும் குளுமை நீங்காமல் இருக்க இந்த ஏற்பாடு. மாந்தம்புல் உச்சிமலையின் கரும்பாறை இடுக்குகளில் மட்டுமே வளரக்கூடியது. கடமான்கள் விரும்பி உண்ணக்கூடிய புல்வகை. அவற்றைப் போய் அறுத்து வருவது எளிய செயலல்ல, நீலன் அவனே மேலேறிச்சென்று இதனை அறுத்து வந்திருப்பான்” என்றாள்.
உடன் வந்த இன்னொரு பெண் சொன்னாள், ``அவசரப்பட்டு முடிவுக்குப் போகாதே ஆதினி. மயிலாவே அதனைச் செய்திருப்பாள். அவளைப்பற்றி உனக்குத் தெரியாது” என்றாள். எல்லோரும் சிரித்தனர். வெளியில் இசைக்கருவிகளின் ஓசையோடு ஆரவார ஓசையும் பெருகி வந்தது. பாரி வந்துவிட்டான் என்பதை உணர்ந்து ஊர்மந்தையை நோக்கி விரைந்தனர்.
மக்களின் கூட்டத்துக்கு நடுவே பாரியின் முகத்தைக் காண நீண்டநேரமானது. எல்லோரையும் நலங்கேட்டான் பாரி. பறம்பின் தென்னெல்லையில் உள்ள ஊரிலிருந்தெல்லாம் பெரியவர்கள் வந்து சேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரிடமும் பாரியின் நலங்கேட்டல் தனித்தன்மை கொண்டதாக இருந்தது. கரியனூர் பெரியாத்தா கூட்டத்தை விலக்கிக்கொண்டு பாரியை நோக்கி வந்தாள். வாஞ்சையோடு வரும் அவளைக் கண்டதும் பாரியின் மனம் பூரித்தது.
பாரியின் தந்தையை சிறுவனைப்போல் நடத்துவாள் அவள். ஆனால் பாரியை அவள் தந்தையைப் போல நடத்துவாள். ``என் அப்பன்னெடா நீ” என்றே எப்பொழுதும் சொல்லுவாள்.

“தள்ளாத வயதில் இவ்வளவு தொலைவு வரவேண்டுமா?” எனப் பாரி கேட்டதற்கு. “இனி நான் மலையேறி எவ்வியூருக்கு வந்து உன்னையப் பாக்க முடியாது. மலையடிவார ஊருக்கு எப்ப நீ வருவேன்னுதான் காத்திருந்தேன். மணநாளுக்கு வருவேன்னு எனக்குத் தெரியும். அதனாலதானப்பா எப்படியாவது ஒன்னையப் பாத்திடணும்ன்னு ஓடிவந்தேன்” என்றாள்.
பாரியின் கண்கள் கலங்கின. ``சூல்மருது எப்படி இருக்கிறது?” எனக் கேட்டான். ``இந்த மழைக்காலத்துல தப்பிச்சிருச்சு. ஆனால் இன்னும் எத்தனை காலமோ?” என்றாள். அவளின் குடிலருகே உள்ள மரமது. ஒருவகையில் அவளின் குலதெய்வமும்கூட.
பாரியின் நலங்கேட்டல்கள் எல்லாம் இப்படித்தான். மரம் செடி கொடி, விலங்குகள், மனிதர்கள் என ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தான். கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்த வேட்டூர் பழையன், ``வந்தவர்களை முதலில் உணவருந்த விடுங்கள்” என எல்லோரையும் சத்தம் போட்டு விலக்கினான்.
பாரியும் கபிலரும் காலம்பனும் அருகிருந்த குடிலுக்கு உணவருந்தப் போயினர். அவர்களுக்காகப் பொங்கம்பழப் பூந்தேன்கட்டி காத்திருந்தது. தேனீ தனது கூட்டுக்குள் முதலில் தேனைக் கட்டியாகத்தான் வைத்திருக்கும். பின்னர்தான் தேனாக்கும். மலைமக்கள் தேன்கட்டியைத்தான் எடுப்பர். தேனைப் பிழிந்தெடுக்கும் பழக்கம் அவர்களுக்கு இல்லை. அதுவும் எந்தவகைப் பூவில் இருந்து தேனெடுத்து இந்தக் கட்டியைத் தேனீ உருவாக்கியிருக்கிறது என்பதைப் பொறுத்துதான் இந்தக்கட்டியை எடுக்கலாமா வேண்டாமா என்பதனை முடிவுசெய்வர்.
அந்தப்பகுதியில், அந்தப்பருவத்தில் எந்தப் பூ அதிகம் பூத்திருக்கிறதோ அந்தப் பூவின் சுவைதான்

தேன்கட்டியிலும் இருக்கும். நாவற்பழப்பூந்தேன் துவர்க்கும், வேப்பம்பழப்பூந்தேன் கசக்கும், கள்ளிப்பூந்தேன் இனிக்கும், கோட்டைப்பழப்பூந்தேனையும் அத்திப்பூந்தேனையும் சுவைபிரித்து அறிவது மிகக்கடினம். இதில் மிகச்சிறந்த சுவைகொண்டது, எவ்வளவு சாப்பிட்டாலும் இன்னும் இன்னும் என்று கேட்டுக்கொண்டே இருக்கச் சொல்லுவது பொங்கப்பழப்பூந்தேன். அந்தத் தேன்கட்டியை எடுத்துவந்து அடுக்குவாழை இலையில் வைத்துக்கொடுத்தனர். கட்டிச்சாறு கணக்கின்றி உள்ளிறங்கியது.
உணவு முடிந்ததும் வேட்டூர் பழையன் பாரியிடம் கூறினான், ``எல்லாவற்றையும் தேக்கனிடம் சொல்லியுள்ளேன், பகற்பொழுதிலே நீ போய் நேரில் பார்த்துவிட்டு வந்துவிடு.”
சரியெனச் சொல்லிய பாரி தேக்கனையும் முடியனையும் உடனழைத்துக்கொண்டு புறப்பட்டான். கபிலர் கொற்றவைக்கூத்தில் பார்த்த பலரை அதன்பின் இப்பொழுதுதான் பார்க்கிறார். எனவே அவர் இங்கேயே இருந்து கொண்டார். காலம்பனை பல ஊர்க்காரர்கள் இன்னும் பார்க்கவேயில்லை. ஆனால் பறம்பு முழுவதும் அவனின் வீரக்கதை தெரியும். எல்லோரும் அவனைக் காண விருப்பப்படுவர். எனவே அவனையும் இருக்கவைத்துக்கொண்டார் வேட்டூர் பழையன். ஈங்கையன் பாரியைப் பார்க்க வேண்டுமென விருப்பத்தோடு இருந்தான் ஆனால், பாரி பொழுதுக்குள் போய்த் திரும்பவேண்டியிருந்ததால் வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார் பழையன்.
பாரியுடன் மற்ற இருவரும் புறப்படும்முன் பழையன் சொன்னான், ``பொழுது சாய்வதற்குள் மணப்பெண்ணை அவளது ஊரிலிருந்து அழைத்து வந்துவிடுவார்கள். அதற்குள் நீங்கள் வந்துவிட்டால் மயிலாவிடமிருந்து தப்பித்தீர்கள். இல்லையென்றால் அவ்வளவுதான்” என்று எச்சரித்து அனுப்பினார் வேட்டூர் பழையன்.
பாரி, தேக்கன், முடியன் மூவரும் குதிரையில் புறப்பட்டனர். உடன் கீழ்திசை எல்லைக் காவல்வீரர்கள் இருவரும் சென்றனர். எதிர்பார்த்திருந்த செய்தியைத்தான் பழையன் சொன்னார். ஆனாலும், அவர் சொல்லும் இரு இடங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருந்தன. குதிரைகள் காரமலையின் சரிவுப் பாதையில் தென்புறம் நோக்கி விரைந்து கொண்டிருந்தன. இரண்டாம் குன்றினைத் தாண்டியபொழுது பாரிக்கு மயிலாவின் நினைவுவந்தது. அக்குன்றின் அடிவாரத்தில்தான் அவளது ஊர்.
மயிலாவின் ஊரான செம்மனூரிலிருந்து மணமகளின் தாய்மாமன் அவளைத் தனது தோளிலே தூக்கி வருவான். வேட்டுவன் பாறையின் எல்லையில் நின்று மணமகன் அவளைத் தனது தோளுக்கு மாற்றித் தூக்கிச்செல்வான். அவ்வாறு தூக்கிச்செல்லும் நிகழ்வுதான் மிகுந்த உற்சாகமும் கொண்டாட்டமும் நிறைந்தது. கேலிப் பேச்சுகளும், குறும்புவிளையாட்டுக்களுமாக ஊரே களைகட்டியிருக்கும். சற்று அமைதியான பெண்கூட மணமகனின் தோளிலே அமர்ந்து வரும்பொழுது இல்லாத குறும்பெல்லாம் செய்வாள். மயிலாவைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவள் செய்யப்போகும் குறும்புத்தனங்களைக் காண பாரிக்கும் விருப்பமாகத்தான் இருந்தது. ஆனால், சூழல் வேறுவிதமாக அமைந்துவிட்டது.

குதிரைகள் விரைந்துகொண்டிருந்தன. உச்சிப்பொழுதுக்கு வெள்ளடிக்குன்றின் அடிவாரத்திற்கு வந்தனர். அவர்களின் எண்ணவோட்டத்துக்கு ஈடுகொடுத்து வந்து சேர்ந்தன குதிரைகள். குன்றினை விட்டு மிகவும் தள்ளி, படைகள் தங்குவதற்கான தாவாரங்கள் அடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. படைவீரர்கள் இங்குமங்குமாகப் புதர்களை அகற்றிக் கொண்டிருந்தனர். குதிரைகள் ஆங்காங்கு கட்டப்பெற்றிருந்தன. கொடியெதுவும் பறக்கவில்லை. ஆனால், பாசறையின் முன்புறத்தில் பாண்டியப்பேரரசின் இணைக்கயல் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. படைவீரர்களின் உடைகளும் தாவாரத்தின் தன்மையும் பார்த்தவுடனே தெரிந்துகொள்ளக் கூடியவையாகத்தான் இருந்தன.
குன்றின் மீது நின்றபடி மூவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ``இது வெங்கல்நாட்டின் பகுதியாயிற்றே. பறம்புக்கு எதிராகச் செயல்பட மாட்டோம் என்று வாக்களித்த குலமல்லவா அவருடையது!” என்று முடியன் சொன்னபொழுது, தேக்கன் குறுக்கிட்டார், ``வைப்பூரில் நடந்த மோதலில் அவர் மகனின் தலையை நம்மவர்கள் சீவியெறிந்து விட்டதாகவும் அதன் பொருட்டு மையூர்கிழார் வஞ்சினம் உரைத்துள்ளாதாகவும் வேட்டூர் பழையன் சொன்னார்.”
``இங்கிருக்கும் இவன் எதற்கு வைப்பூர் துறைமுகத்துக்குப் போனான்?” எனக் கேட்டான் பாரி.
“தெரியவில்லை. ‘இளவரசனின் திருமண ஏற்பாட்டிற்குப் போனவன் அப்படியே துறைமுகம் வரை போயிருப்பான்’ என்கிறார் பழையன்.”
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலைகளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான் பாரி. சற்று நேரத்துக்குப்பின் புறப்பட்டனர்.
செம்மனூர்காரர்கள் வேட்டுவன் பாறையின் எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை வரவேற்று மணப்பெண்ணைத் தூக்கிக்கொள்ள மணமகன் வீட்டார் ஆயத்தமாக இருந்தனர். நீலன் மாவீரன்தான். ஆனால், மயிலாவைத் தூக்கியபின் கீழே இறக்காமல் ஊர்மந்தைக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். அவள் செய்யப்போகும் குறும்புத்தனங்களை இவன் எப்படிச் சமாளித்துத் தூக்கிவரப்போகிறான் என்பதைக் காண எல்லோரும் ஆவலோடு இருந்தனர்.
செம்மனூர்காரர்கள் எழுப்பும் பெரும்பறையின் ஓசை காட்டையே உலுக்கியது. ஓசைகேட்டு ஆடாத காலில்லை. தாய்மாமனின் தோளில் ஆடாமல் அசையாமல் அப்படியே உட்கார்ந்து வந்தாள் மயிலா. எதிர்கொண்டு வாங்க வேட்டுவன் பாறையின் எல்லையில் தொண்டகப்பறை முழங்க மணமகனின் ஊரார் காத்திருந்தனர்.

வந்தாள் மணப்பெண். தாய்மாமனின் தோளிலிருந்து தனது தோளுக்கு மாற்ற நீலன் அருகில் சென்றான், அவளும் இடமாறி உட்கார வசதியாக அவனுக்குக் கைகொடுத்தாள். பறைமுழக்கம் பேரிசையாய் எழுந்தது. சுற்றத்தார்கள் பூக்கள் சொரிய, அளவற்ற ஆரவாரத்துக்கு நடுவே நீலனின் இடதுதோளுக்கு மாறினாள் மயிலா.
உரிமையோடு காதலியைத் தோளிலே தூக்கிச்செல்லும் ஆணுக்கு இருக்கும் ஒரு மிடுக்குநடையைக் கண்டு மகிழ்ந்தது கூட்டம். நீலனின் திறள்கொண்ட தோளில் வசதியாக உட்கார்ந்து அவனது இருகைகளையும் பற்றியிருந்தாள் மயிலா. என்ன செய்யப்போகிறாளோ என எல்லோரும் ஆவலோடு அவளையே பார்த்தபடி வந்துகொண்டிருந்தனர். உன்னி நழுவும் அவளை இறங்கவிடாமல் எப்படிச் சமாளிக்கிறான் பார்ப்போம் என்று எதிர்பார்ப்போடு கூட்டம் கூச்சலிட்டுக்கொண்டு வந்தது. தொண்டகப்பறையும் பெரும்பறையும் ஒன்றாக இசைக்க, கூட்டத்தில் பாதிக்கு மேல் ஆட்டத்தில் இருந்தது.
நீலனின் இடப்புறத் தோளிலே உட்கார்ந்த மயிலா அதன்பின் அமைதியாக வந்தாள். நீலன் சிரமமேதுமின்றித் தூக்கிவந்தான். பாதித்தொலைவுக்கு மேல் கடந்துவிட்டனர். இரு ஊராருக்கும் வியப்பு ஏறிக்கொண்டேயிருந்தது. ``சாதாரண காலத்தில் இயல்பாய் இருக்கும் பெண் மணமகனின் தோளில் உட்கார்ந்ததும் பெருங்குறும்பு செய்வதும், எந்நேரமும் குறும்புக்காரியாக இருப்பவள் மணமகனின் தோளிலே உட்கார்ந்ததும் அமைதியாய் அடங்குவதும் இயற்கைதானப்பா” என்று பேசிக்கொண்டே நடந்தனர் சிலர்.
மலைப்பாதையை மறித்தபடி கிளைபரப்பியிருக்கும் மாமரத்தினூடே நுழைந்து போய்க்கொண்டிருந்தது கூட்டம். பறையோசையில் மாமரத்திலிருந்த பறவைகள் ஒலியெழுப்பியபடி கலைந்து பறந்தன. கலையும் பறவைகளின் படபடப்புக்கும் ஓசைக்கும் ஏற்ப ஆட்டத்தின் வேகமும் கூடின. தாளத்துக்கு ஏற்ப பலரும் ஆடிக்கொண்டிருந்தனர். திடீரென மொத்தக் கூட்டமும் பேரோசையை வெளிப்படுத்தி ஆரவாரத்தால் அலைமோதியது. முன்னால் ஆடிக்கொண்டிருந்தவர்களுக்கு என்ன நடந்ததெனத் தெரியவில்லை. மணமக்களை நோக்கி வேகமாக உள்ளே ஓடிவந்து பார்த்தனர்.
சற்றே தாழ்ந்திருந்த மரக்கொப்பை எவ்விப்பிடித்து சட்டென மேலேறிக்கொண்டாள் மயிலா. நீலன் திகைத்துப்போய் அப்படியே நின்றான். கூட்டத்தின் ஆரவார ஓசை காதைக் கிழித்தது. நீலன் மரத்துக்கு மேலேறி அங்கிருந்து தோளிலே தூக்கியபடி கீழிறங்க முடியாது. மயிலாவாக மனம்மாறிக் கீழிறங்கி அவனது தோளுக்கு வந்தால்தான் உண்டு. கூட்டத்தின் கொண்டாட்டம் இருமடங்கானது. மயிலா யாரெனக் காட்டிவிட்டாள் என செம்மனூர்காரர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.
நீலனுக்குத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. மயிலாவின் மனம் இறங்கிவர என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆதியிலிருந்து நடந்துவரும் போராட்டமிது. இதில் ஒருவரையொருவர் வெல்வதைவிட ஒருவரோடு ஒருவர் இணைவதே இயற்கையின் தேவை. அதுவே இறுதியில் வெற்றியும் பெறுகிறது. ஆனால், இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் நீலன் விழித்தபொழுது மயிலா சொன்னாள். ``என் கேள்விகளுக்கு நீ விடை சொல். சரியான விடை சொன்னால் உனக்கு எறிகிடையாது. தவறான விடை சொன்னால் மாங்காயால் எறிவிழும். உனது எந்த விடை எனது மனம்தொடுகிறதோ அப்பொழுது நான் உனது தோளுக்கு இறங்குவேன்.”
கூட்டத்தின் ஓசை முன்னிலும் கூடியது. இவ்வளவு நேரம் செம்மனூர்காரர்கள், வேட்டுவன் பாறையைச் சேர்ந்தவர்கள் என இருகூறாகப் பிரிந்திருந்த கூட்டம் இப்பொழுது ஆண், பெண்ணென இருகூறானது.
மயிலாவின் சொல்லினை ஏற்பதைத் தவிர நீலனுக்கு வேறு வழியில்லை. இதிலுள்ள பெருஞ்சிக்கல் அவள் பறித்து வைத்திருக்கும் மாங்கனி ஒவ்வொன்றும் உள்ளங்கை அளவு இருக்கிறது. அதில் எறிவாங்கினால் நீலனின் நிலைமை என்னவாகும் என்று ஆளாளுக்குப் பேசிச் சிரித்தனர்.
முதல் கேள்வியைக் கேட்டாள். ``என் தாய்மாமன் உன்னைவிட வலுக்குறைந்தவன். ஆனால், அவன் என்னைப் பூப்போல தூக்கிவந்தான். நீ ஏன் இவ்வளவு அழுத்திப்பிடித்துத் தூக்கிவந்தாய்?”
கேட்டு முடிக்கும்முன் நீலன் சொன்னான், ``நீ நழுவி ஓடிவிடுவாய் அல்லவா? அதற்காகத்தான்” சொல்லி முடிக்கும்முன் சடசடவென விழுந்தது மாங்காயின் எறி. கூட்டத்தின் சிரிப்பு விண்ணைத் தொட்டது. ``நான் உன்னை விட்டு எங்கேடா போகப்போகிறேன். என்மீது நம்பிக்கை இல்லாமல்தான் அவ்வளவு இறுக்கமாகப் பிடித்திருந்தாயா?” எனக் கேட்டபடி கிளையிலிருந்த மாங்காயைப் பறித்துப் பறித்து எறிந்தாள். அவன் எறிபொறுக்கமாட்டாமல் மரத்தின் அப்பக்கமும் இப்பக்கமுமாக ஓடி மறைந்தான். அவளோ கொப்புகளின் மீது இங்குமங்குமாக ஓடியோடி எறிந்தாள்.

அவனுக்காக இரக்கப்பட்ட பெண்ணொருத்தி, ``உன்மேல இருந்த ஆசையிலதான் இறுக்கிப் பிடிச்சேன்னு சொல்லாம இப்படிச் சொல்லிட் டானே” என்று வருத்தப்பட்டுச் சொன்னபொழுது அவளுக்கும் சேர்த்துவிழுந்தது எறி.
அதன்பின் நீலன் முன்னால் வந்து நிற்கவே நீண்டநேரமானது. அவள் கடுங்கோபத்தோடு கண்ணிற்பட்டபொழுதெல்லாம் எறிந்து கொண்டேயிருந்தாள். அவன் ஓடியோடி மறைந்துகொண்டிருந்தான். பொழுதாகிக் கொண்டிருக்கிறது என்று மயிலாவை சமாதானப்படுத்தி நீலனை அழைத்துவந்து அவளின் முன்னால் நிறுத்தியது கூட்டம்.
அடுத்து என்ன கேட்கப்போகிறாளோ என்ற பதைபதைப்போடு இருந்தான் நீலன். அவளோ சற்றே கோபத்தோடு கேட்டாள், ``குழந்தை பிறந்தவுடன் எந்த மார்பில் முதலில் பால்கொடுக்க வேண்டும்?”
பெண்குழந்தையென்றால் இடதுமார்பிலும் ஆண் குழந்தையென்றால் வலதுமார்பிலும் என்று நினைவுக்கு வந்தது. வந்தவுடன் குழப்பமும் சேர்ந்துவந்தது. ‘ஆண் குழந்தைக்குத்தானே இடதுமார்பு!’என்று குழம்பியபடியே அமைதியானான்.
கூட்டத்திலிருந்த பெண்ணொருத்தி அருகிருந்தவளிடம் சொன்னாள். ``இந்தக் கேள்விக்கு என்ன விடை சொன்னாலும் எறி உறுதி.”
``ஏன்?” என்றாள் அருகிலிருந்தவள்.
``தவறாகச் சொன்னால், ‘இதுகூடத் தெரியவில்லையா?’ எனச் சொல்லி எறிவாள். சரியாகச் சொன்னால், `உனக்குத்தான் அக்கா தங்கச்சி இல்லையே; எவகிட்ட இதக் கேட்ட?’ என்று சொல்லி விடாமல் எறிவாள்” என்று சொல்லிச் சிரித்தாள்.
நீலனின் நிலைமை படுமோசமானது. எல்லோரும் எறி எப்போது தொடங்கப்போகிறது என்று உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
நீலன் சொன்னான், ``நான் பிறந்த உடனே ஆத்தாகாரி இறந்துவிட்டாள். உடன்பிறந்தவர்களும் இல்லை. அப்படியென்றால் காதலி நீதானே இதனைச் சொல்லித்தந்திருக்க வேண்டும்?”
எதிர்பாராத பதில். மயிலா ஒரு கணம் திகைத்துப்போனாள். அவன் தன் தாயின் இடத்தில் அவளைவைத்துச் சொல்லிய சொல் மயிலாவை ஏதோ செய்தது. சற்றே அமைதியானாள்.
அவளின் வேகம் மட்டுப்பட்டதை எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். அவளோ உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
``நம் குழந்தைக்குப் பாட உனக்கு எத்தனை தாலாட்டுகள் தெரியும்?”
மூணு, ஆறு, பத்து என கூட்டத்திலிருந்த பெண்களின் வாய்கள் முணுமுணுத்தன. அவளிடம் நீலன் மறுபடியும் எறிவாங்கக் கூடாது என எல்லோரின் ஆசையும் எண்ணிக்கையாய் வெளிவந்துகொண்டிருந்தது.
நீலன் சொன்னான் ``ஒரே ஒரு பாட்டு.”
முணுமுணுத்த பெண்கள் தலையில் கையைவைத்தனர். ``கூடுதலாகச் சொல்ல வேண்டியதுதானே. அவள் மீண்டும் எறியப் போறாளே” என்று பதறியபொழுது மரத்தின் மீதிருந்த மயிலா கேட்டாள், ``என்ன பாடல் அது?”
அதுவரை அண்ணாந்து மேலே பார்த்துக் கொண்டிருந்த நீலன் தலைகவிழ்ந்து மண்ணைப் பார்த்தான், கண்களை மூடினான், வைகையின் அலை கரைவந்து அடித்தது. நீரின் செந்நிறத்தை நினைவில் ஏந்தியபடி அகுதையின் பாடலைப் பாடத் தொடங்கினான்.
கூட்டத்தின் ஆரவாரம் கொஞ்சம்கொஞ்சமாக ஒடுங்கியது. எல்லோரும் அமைதியாயினர். அவன் பாடல் மட்டுமே காற்றெங்கும் ஒலித்தது. மயிலாவின் கால்கள் மரம்விட்டுக் கீழிறங்கிக் கொண்டிருந்தன. இமைமூடிய நீலனின் கண்களுக்குள் வைகையை விட்டுக் காட்டுக்குள் ஓடிய குழந்தையே தெரிந்தான். அக்குழந்தை நகரும் செம்மூதாயைத் தொட்டபொழுது தாய் அவளைத் தூக்கினாள். அவ்வரியை அவன் பாடும்பொழுது தன்னையே தூக்குவதுபோல் உணர்ந்தான். அவள் குழந்தையைத் தோளிலே ஏந்தியபடி காட்டுக்குள் நடக்கத் தொடங்கினாள். மயிலாவும் அதனையே செய்தாள். இப்பொழுது நீலனை அவளது தோளிலே தூக்கியிருந்தாள். நீலன் நினைவு மீண்டபொழுது மயிலாவின் இறுகிய கைப்பிடியிலிருந்து அவனால் தன்னை விடுவிக்க முடியவில்லை. கூட்டம் இருவரையும் வணங்கி விலகியது.
நெடுங்குன்றின் அடிவாரத்தை அடைந்தபொழுது அங்கும் அதேபோன்று தாவாரம் அடிக்கப்பட்டிருந்தது. படைவீரர்கள் புதர்களை நீக்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தனர். இணைக்கயல் சின்னம் பளிச்சிட்டது. ஆனால், வெள்ளடிக்குன்றின் எதிர்ப்புறம் இருந்தவர்களைவிட இங்கு இருப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தனர். குன்றின் மீதிருந்தபடி பாரியும் பிறரும் அதனைப் பார்த்தனர்.
வெள்ளடிக்குன்றுக்கும் நெடுங்குன்றுக்கும் இடையில் பலகாதத் தொலைவு இடைவெளி உண்டு. “ஏன் இவ்விரு இடங்களில் படைகளை நிறுத்த எண்ணுகிறான்?” என்று கேட்டான் முடியன்.
என்ன நடக்கிறது என்பதை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்த பாரி சொன்னான். “இவ்விரு இடங்களில் படைகளை நிறுத்தவில்லை. இவ்விரண்டு எல்லைக்கும் இடையில் முழுவதுமாகப் படையை நிறுத்தப்போகிறான்.”
சற்றே திகைத்த முடியன் ``இத்தனை காதத்தொலைவா?”
``ஆம். இத்தனை காதத்தொலைவிற்கு நிறுத்துமளவிற்குப் படைபலம் இருப்பதால்தான் அவன் துணிந்து வருகிறான்” என்றான் பாரி.
சிறிதுநேரம் மூவரிடம் எந்தப் பேச்சும் இல்லை. சற்றே பின்புறம் திரும்பி மலையுச்சியைப் பார்த்தான் பாரி. சித்தேறி முகட்டிலிருந்து இருகூறாகப் பிளந்து சரிந்திருந்தது மலையடிவாரம்.
அவன் சொல்லப்போவது என்னவென்று தேக்கன் கணித்தான்.
மீண்டும் சமதளத்தைப் பார்த்தபடி பாரி சொன்னான், ``இவ்வடிவாரத்தில் எத்தனை பெரியபடையைக் கொண்டுவந்து நிறுத்தினால்தான் என்ன?” என்று சொல்லியபொழுது அவனது முகத்தில் ஓடிய சிரிப்பு கணநேரத்துக்குள் இருவரின் முகத்திலும் பரவியது.
பாரி வேட்டுவன் பாறைக்குத் திரும்பும்பொழுது பந்தவெளிச்சத்தில் மலைமுழுவதும் ஒளிவீசிக்கொண்டிருந்தது. எங்கும் மனிதத்தலைகள் தெரிந்தன. மணவிழாவுக்கு வந்துசேரவேண்டிய எல்லோரும் வந்துவிட்டனர். பாரியும் தேக்கனும் முடியனும் ஊருக்குள் நுழையும்பொழுது பொழுதடைந்து விட்டதால் மயிலா கோபித்துக்கொள்வாளோ எனத் தோன்றியது. ஆனால் பெண்ணை அழைத்துக்கொண்டு வரவே பொழுதுசாய்ந்து விட்டது என்றனர். காரணம் கேட்டபொழுது மாமரத்தில் ஏறிக்கொண்ட மயிலாவின் கதையைச் சொன்னார்கள். மகிழ்ந்து சிரித்தான் பாரி.
வந்த மூவரும் உணவருந்தினர். இசையின் பெருமுழக்கம் மீண்டும் தொடங்கியது. புதுமகிழ்வில் ஊர் திளைத்தது. பாரிக்காகவே காத்திருந்த பெரியவர்கள் அடுத்தகட்ட வேலையைத் தொடங்கினர். நீலனையும் மயிலாவையும் இருதிசைகளிலிருந்து ஆட்டபாட்டத்தினூடே அழைத்துவந்தனர். மந்தையின் நடுவிலிருக்கும் செங்கடம்பு மரத்தினடிவாரத்தில் வந்துசேர்ந்தனர்.

ஊரின் நிலைமரம் அது. அதனடிவார மேடையில் நின்று மணமக்கள் மாலை சூட வேண்டும். மயிலம் மலர் மணக்கும் மாலையை அவர்கள் சூடிய பொழுது மலையெங்குமிருந்து பறித்துவந்த பூக்களை அவர்களின் மீது பொழிந்தனர் மக்கள். இசையோசையும் ஆரவாரமும் விண்ணைத்தொட, மலர்மணத்தில் மந்தையே கிறங்கியது. வந்தவரெல்லாம் வாழ்த்துச்சொல் கூறினர்.
அடுத்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனைக்கு அவர்கள் செல்லவேண்டும். நீலன் புதுமனை நோக்கி மயிலாவை அழைத்துச்சென்றான். அவனுக்குப் பின்னால் பாரியும் வேட்டூர் பழையனும் தேக்கனும் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து ஊரே வந்துகொண்டிருந்தது. நாங்கில்மரத்தின் அடிவாரமிருந்த புதுக்குடிலுக்கு வந்துசேர்ந்தனர். கூட்டத்தின் ஆரவாரமும் கேலிப்பேச்சும் பன்மடங்கு கூடியது. குலவை ஒலி பெருகிவர மயிலாவை அழைத்துக்கொண்டு மனைக்குள் நுழைந்தான் நீலன்.
எங்கும் உற்சாகப் பேரொலி. சற்று தொலைவில் பெண்களின் கூட்டத்தினூடே இருந்த ஆதினியைப் பார்த்தான் பாரி. அவளின் கண்கள் அங்குமிங்குமாக தவித்து அலைந்து கொண்டிருந்தன. வழக்கத்துக்கு மாறாக இருப்பதை உணர்ந்து அருகில் சென்றான் பாரி.
கலங்கிய அவள் கண்களில் நீர்பெருகியிருந்தது.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...