மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - மகத்தான லாபம் தரும் மஞ்சள்! - 10

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! ( துரை.நாகராஜன் )

மதிப்புக் கூட்டல் தொடர் - 10

“மஞ்சளை நேரடியாக விற்பனை செய்யும்போது கிலோவுக்கு 130 ரூபாய் தான் கிடைத்தது. மதிப்புக் கூட்டல் செய்தவுடன் 250 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிகிறது” என மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பித்தார் கோவிந்தராஜ்.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள தண்டுக்காரன் பாளையத்தில் மஞ்சள் பயிரில் மதிப்புக் கூட்டல் தொழில் செய்து வருகிறார் இவர். பகுதிநேர விவசாயியாகவும், பகுதி நேரத் தொழில் முனைவோராகவும் செயல்பட்டு வரும் கோவிந்தராஜைச் சந்தித்தோம். 

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - மகத்தான லாபம் தரும் மஞ்சள்! - 10

“மூன்று தலைமுறைகளாக விவசாயம் செய்துவருகிறோம். விளைபொருள்களை அப்படியே சந்தையில் விற்பனை செய்வது தான் எங்கள் வழக்கம்.  மஞ்சளை முதலில் ஈரோடு சந்தையில்தான் விற்பனை செய்வேன். ஈரோடு சந்தையில் மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ.7,000 முதல் ரூ.7,500 வரை கிடைத்துவந்தது. நாங்கள் இயற்கை முறையில் மஞ்சள் விளைவிப்பதால்,  கேரள நிறுவனங்களும் எங்களிடம் நேரடியாக வாங்க ஆரம்பித்தன. அவர்கள் ரூ.13,000 முதல் ரூ.15,000 வரை விலை தருகிறார்கள். ஆனாலும், செலவுபோக கிடைக்கும் லாபம் குறைவாகவே இருந்தது. இதற்குச் சரியான தீர்வு மதிப்புக் கூட்டல் செய்வதுதான் எனத் தீர்மானித்தேன்” என்றவர், தன் மஞ்சள் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“மஞ்சளை மதிப்புக் கூட்டும்போது முதலில் மக்கள் வாங்குவார்களா என்ற பயம் இருந்தது. முதன்முதலாக மஞ்சளை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும்போது மக்கள் என் இடத்திற்கே வந்து வாங்கிச் சென்றனர். அதன்பிறகுதான் எனக்கு நம்பிக்கை வந்து இன்னும் முனைப்புடன் தொடர்ந்தேன். அதே நம்பிக்கையுடன் இன்றுவரை செய்து வருகிறேன்.

நான் மஞ்சளை வைகாசிப் பட்டத்தில் நடவு செய்கிறேன். விதைப்புக்கு 800 கிலோவிலிருந்து 1,000 கிலோ வரைக்கும் மஞ்சள் தேவைப்படும். அது பத்து மாசம் கழித்து, பங்குனி மாதம் அறுவடைக்கு வரும். அந்த நேரம்தான் அதிகமாக மஞ்சள் பொடி விற்பனை ஆகிறது. இதுபோக, பறித்த மஞ்சளை வறுத்து உலர வைத்து எடுத்துக்கொள்வோம். அதனைத் தேவைப்படும் போதோ அல்லது வாடிக்கையாளர்கள் அதிகமாக வாங்கும் போதோ பொடியாக்கி விற்பனை செய்வோம். இயற்கை விவசாயத்தில் விளைவித்த மஞ்சளை நானே பொடியாக்கி விற்பனை செய்துவருவது நான் ஜெயிக்கக் ஒரு காரணம். 

முதலில் மஞ்சளை அண்டாவில் வேக வைத்து இருபது  நாள்களுக்கு மேல் காய வைப்போம். மஞ்சள் காய்ந்து சுருங்கிய பின்னர் மேல் தோல் கறுப்பு நிறத்தில் இருக்கும். அதன்பின்னர், பாலீஷ் மெஷினில் போட்டு பாலிஷ் செய்வோம். பாலிஷ் செய்த மஞ்சளை மேல் தோல் நீக்கி அரைத்துப் பொடியாக்கிவிடுவோம்.

மஞ்சளை அரைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், மஞ்சளை அரைக்கும் இயந்திரத்தில் மட்டுமே அதனை அரைக்க வேண்டும். மிளகாய்ப் பொடி அரைக்கும் இயந்திரத்தில் அரைக்கக் கூடாது. அப்படி அரைத்தால்,  மஞ்சள் பொடியை முகத்திற்குப் பயன்படுத்தும்போது எரியும். இதனால் அடுத்தமுறை  நம் பொருளை மக்கள் வாங்காமல் போக வாய்ப்புண்டு. 

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - மகத்தான லாபம் தரும் மஞ்சள்! - 10

சாம்பார் பொடி, புளிக்குழம்புப் பொடி உள்ளிட்ட எந்த உணவுப் பொருள்களாக இருந்தாலும், கிருமிநாசினி கிரீம்கள், குளியல் சோப்புகள், அழகுசாதனப் பொருள்கள் என மருந்துப் பொருள்களாக இருந்தாலும், அதில் முக்கிய இடம்வகிப்பது மஞ்சள்தான். அதனால், அதற்கு எப்போதுமே சந்தையில் தேவை இருந்துகொண்டே இருக்கும்.

நான் இப்போதுவரை மஞ்சள் பொடியை ஏற்றுமதி செய்ய வில்லை. அதற்கான வாய்ப்புகளுக் காக முயற்சி எடுத்து வருகிறேன்.  உள்ளூரிலும் பக்கத்து மாவட்டங் களிலும் மட்டுமே எனது தயாரிப்பு களை விற்று வருகிறேன்.   இப்போது மஞ்சள் பொடிக்கு அதிகமான தேவை இருக்கிறது.
சந்தையில் மஞ்சளை வாங்கி,  அதனை மதிப்புக் கூட்டி விற்பவர்களைவிட, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் மஞ்சளை நேரடியாக மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் மக்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

சந்தையில் ஒரு கிலோ மஞ்சளை நேரடியாக விற்பனை செய்தால் ரூ.130 வரை கிடைக்கும்.  அதையே பவுடராக்க ரூ.40 செலவு செய்கிறேன். மதிப்புக் கூட்டப் பட்ட பவுடர் ரூ.250-க்கு விற்பனை யாகிறது. நேரடியாக விற்பனை செய்யும் மஞ்சளை விட மதிப்புக் கூட்டப்பட்ட மஞ்சளின் மூலம் (செலவு ரூ.40-யைக் கழித்தது போக) ரூ.80 லாபம் கிடைக்கிறது. மாதத்திற்கு 150 கிலோ மஞ்சள் பவுடர் விற்பனை ஆகிறது.

ஆனால், விளைபொருளை நானே விளைவிப்ப தால் அதிலிருந்து உற்பத்திச் செலவு கிலோவுக்கு ரூ.40-ம், மதிப்புக் கூட்டும் வேலைக்குச் செலவாக ரூ.40 என ரூ.80-யைக் கழித்தால் ரூ.170 லாபம் கிடைக்கிறது. மாதம் 150 கிலோவுக்கு ரூ.25,500  லாபம் கிடைக்கும். இந்த லாபம் மஞ்சள் பவுடர் அதிகமாக விற்பனையாகும் காலங்களில் இன்னும் அதிகமாகும். மஞ்சள் அதிகக் காலம் இருப்பு வைத்து விற்பனை செய்யும் பொருளானதால் எனக்கு நிலையான வருமானமாகவும் அமைகிறது.

மஞ்சள் பவுடர் தவிர்த்து, மஞ்சளில் இன்னும் அதிகமான பொருள்களை மதிப்புக் கூட்டி விற்கலாம் என்பதைக் கற்று வருகிறேன்.  எதிர் காலத்தில் இன்னும் அதிகமான பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வேன்” என்றார்.

மஞ்சளை விற்பதற்கும், அதைத் தூளாக்கி விற்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.  ஆனால், அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் மிக அதிகமாக இருக்கும். இந்த உண்மையைப் புரிந்துகொள்பவர்கள் மஞ்சளை மட்டுமல்ல, பல்வேறு விவசாய விளைபொருள்களையும் மதிப்புக் கூட்டி விற்பனை செய்து லாபம் பார்ப்பார்கள்! 

(மதிப்புக் கூடும்)

துரை.நாகராஜன்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - மகத்தான லாபம் தரும் மஞ்சள்! - 10

மஞ்சளில் இருந்து ஆயில்!

மஞ்சள் பயிரில் மதிப்புக் கூட்டல்  என்பது மஞ்சள் பொடியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மஞ்சளில் இருந்து ஆயில், மஞ்சள் பயிரின் இலையிலிருந்து ஆயில் எனப் பல பொருள்களைத்  தயாரித்து விற்கலாம். ஈரோடு மாவட்டம், வெள்ளி திருப்பூரைச் சேர்ந்த விவசாயி சுரேந்திரன், மஞ்சள் இலை ஆயில் பற்றிய மதிப்புக் கூட்டல் தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“நான் 1992-ம் ஆண்டிலிருந்து மஞ்சளிலிருந்து ஆயில் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். அதில் மஞ்சள் தாள் ஆயில் மிக முக்கியமானது. மஞ்சள் ஆயிலைச் சந்தையில் ரூ.600-க்கு  விற்பனை செய்கிறோம். டிமாண்ட் இருக்கும் நேரங்களில் கிலோ (1.1 லி) ரூ.700 வரை விற்பனையாகும். இதனைத் தயாரிக்க ரூ.500 வரை செலவாகும்.

மஞ்சள் கிழங்கை எடுத்ததுபோக மீதமுள்ள இலைகளை வேக வைத்து நீராவி மூலம் மஞ்சள் ஆயிலைத் தயாரிக்கிறோம். மஞ்சள் ஆயிலை முதலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தேன்.  இப்போது நாடு முழுக்க பல மாநிலங்களில் மஞ்சள் ஆயில் விற்பனை செய்து வருகிறேன்.

மஞ்சள் இலை ஆயிலைப் போல ஐந்து வகையான ஆயிலைத்  தயாரிக்கிறேன். இதன் மூலம் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அதில் ரூ.40 ஆயிரம் செலவு போக ரூ.60 ஆயிரம் லாபமாக நிற்கும்.

மதிப்புக் கூட்டலில் முக்கியமானது, ஒரு பொருளை மட்டும் நம்பி எப்போதும் வியாபாரத்தில் இறங்கக் கூடாது. குறைந்தது மூன்று அல்லது நான்கு பொருள்களையாவது மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால்தான் நிலையான வருமானம் கிடைக்கும்” என்றார்.