
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
கலங்கி நின்ற ஆதினி சொன்ன செய்தி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உதிரனும் அங்கவையும் மணவிழாவுக்கு வந்துசேரவில்லை என்பதுதான் அச்செய்தி. எவ்வியூரிலிருந்து மணவிழாவுக்கு ஒருவாரத்துக்கு முன்பே தன் தோழிகளோடு புறப்பட்டாள் அங்கவை. நான்கு நாள்களுக்கு முன்புதான் புறப்பட்டாள் ஆதினி. இரண்டு இரவும் மூன்று பகலுமெனப் பயணித்து மணநாளுக்கு முதல்நாள் வந்துசேர்ந்தாள் ஆதினி.
அவள் வந்தபொழுது விருந்தினர்களின் பெருங்கூட்டம் வேட்டுவன் பாறைக்கு வந்துசேர்ந்திருந்தது. பறம்புநாடு நானூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களைக்கொண்டது. எல்லா ஊர்களிலிருந்தும் நீலன்மயிலா திருமணத்துக்கு மக்கள் வந்துசேர்ந்திருந்தனர். தொலைவில் உள்ள ஊர்களிலிருந்து ஓரிருவரும் அருகிலுள்ள ஊர்களிலிருந்து பலரும் வந்துசேர்ந்திருந்தனர்.

தன் கூட்டத்தோடு ஆதினி வந்தபொழுது வேட்டுவன் பாறை மக்கட்கூட்டத்தால் திணறிக்கிடந்தது. எல்லோரும் ஆதினியைக்கண்டு நலங்கேட்டனர். அவளும் வந்ததிலிருந்து இங்குமங்குமாக அலைந்துகொண்டே இருந்தாள். இரண்டொருமுறை சங்கவையைப் பார்த்தாள். அங்கவையோ கண்ணிற்படவேயில்லை. இந்தப் பெருங்கூட்டத்தில் தன் தோழிகளோடு எங்காவது சுற்றிக்கொண்டிருப்பாள் என்று நினைத்தாள். ஆனால், நள்ளிரவில் தொடங்கிய குரவைக்கூத்தில் இணையர்கள் எல்லாம் களமிறங்கியபொழுது அங்கவையும் உதிரனும் ஆடும் ஆட்டத்தைப் பார்க்க மிகுந்த ஆவலோடு வந்து நின்றாள். ஆனால், அவர்கள் இருவரும் களமிறங்கவில்லை. குரவைக்கூத்தில் பங்கெடுக்காமல் எங்கே போனார்கள் என்று தேடத் தொடங்கியபொழுது எதிர்ப்பட்ட அங்கவைக்குத் தோழியிடம் கேட்டாள்.
“எவ்வியூரிலிருந்து புறப்பட்ட முதல்நாள் இரவு புலிவால்குகையில் தங்கினோம். மறுநாள் காலையில் எழுந்தபொழுது உதிரன் வந்திருந்தான். ‘நீலன்மயிலாவுக்கு அதிசிறந்த பொருளொன்றை மணவிழாவன்று தந்து மகிழ்விக்க வேண்டாமா?’ என்றான். ‘ஆமாம். என்ன தரலாம்?’ என அங்கவை கேட்டபொழுது அவன் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். ‘நாங்கள் பரிசுப்பொருளோடு வேட்டுவன் பாறைக்கு வந்துசேருகிறோம்’ என்று சொல்லிவிட்டு இருவரும் புறப்பட்டுப் போய்விட்டனர். இன்று வந்துவிடுவாள் என நினைத்திருந்தேன். இன்னும் வரவில்லையா?” எனக் கேட்டாள் அவள். உதிரன் தோழர்கள் யாருக்கும் இதுபற்றித் தெரியவில்லை.
நீலனும் மயிலாவும் புதுமனை புகுந்தவுடன் நிலைமையைப் பாரியிடம் விளக்கினாள் ஆதினி. அன்றிரவு வேட்டுவன் பாறையிலே அனைவரும் தங்கினர். பொழுது விடிந்தது. ஆனால் உதிரனைப்பற்றிய எந்தச்செய்தியும் யாரிடமுமில்லை.
அதற்காக யாரும் பதற்றங்கொள்ளவில்லை. உதிரனும் அங்கவையும் சிறுவர்களல்லர். காடறியும் பயிற்சியில் முதன்மைவீரனாக விளங்கியவன் உதிரன். பச்சைமலையின் எந்தக் காட்டிலும் எவ்வளவு நெருக்கடியான நிலையிலும் மீண்டுவர அவனால் முடியும். அங்கவையும் இணைசொல்ல முடியாத வீரமுடையவள்தான். ஆபத்தில் சிக்கி உதவிதேவைப்பட்டால் சென்றிப்புகையைப் போட்டிருப்பர்.
“மணவிழாவுக்கு வந்துள்ள அனைவரும் அவரவர் ஊர்களுக்குப் புறப்படுங்கள். ஏதாவது சிக்கலில் மாட்டியிருப்பது அறிந்தால் தக்க உதவியைச் செய்யுங்கள்” என்று சொல்லி அனைவரையும் அனுப்பிவிட்டு எவ்வியூர் நோக்கிப் புறப்பட்டான் பாரி.
மணவிழாவுக்கு ஆறு நாள்களுக்கு முன்பு, அதிகாலையில், புலிவால் குகையில் தோழிகளோடு இருந்த அங்கவையைக் கண்டு பேசினான் உதிரன். சிறந்ததொரு பரிசுப்பொருளினை நீலன்மயிலாவுக்குத் தரவேண்டும் என உதிரன் சொன்னபொழுது அங்கவை பெருமகிழ்வோடு அதனைக் கண்டடைய உடனே புறப்பட்டாள். அவளும் குதிரையேற்றம் தெரிந்தவள். தன்னுடனிருந்த இன்னொரு காவல்வீரனின் குதிரையை வாங்கி அங்கவைக்குக் கொடுத்தான் உதிரன். இருவரும் குதிரைப்பாதையில் பயணிக்கத் தொடங்கினர்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை காய்ப்பதுதான் கிளிமூக்கு மாங்காய். பச்சைமலைத்தொடரின் வியப்புறு கனிகளில் அதுவும் ஒன்று. அத்தகைய கனி பறம்பின் வடதிசையில் உள்ள கொழுமலையில் உள்ள செவ்வரிக்காட்டில் காய்த்திருப்பதாகக் காவல்வீரர்கள் சொன்ன செய்தியைக்கொண்டு அப்பக்கமாகப் பயணத்தைத் தொடங்கினான் உதிரன். கொழுமலையென்பது எவ்வியூரிலிருந்து குதிரைப்பாதையில் சென்றால் ஐந்துநாள் பயணத்தொலைவைக் கொண்டது. அவ்வளவு நெடுந்தொலைவு சென்று மணநாளுக்கு முன் திரும்ப முடியாது என நினைத்த உதிரன். மலைமுகட்டில் அமைந்துள்ள குதிரைப்பாதையிலே தொடர்ந்து செல்லாமல், சில இடங்களில் குதிரைப்பாதையையும் சில இடங்களில் குறுக்குவழியில் நடைபாதையுமாக மாறி மாறிச் சென்று குன்றுகளைக் கடந்து கொண்டிருந்தான்.
முதல் இருநாள்கள் மலைமுகட்டின் வழியிலான குதிரைப்பாதையிலே சென்றனர். அங்கவை உடனிருப்பதால் காடுகளுக்குள் தங்காமல் அருகிலுள்ள ஊர்களிலேயே தங்கினர். அவ்வூர்களிலிருந்து மணவிழாவுக்குச் செல்பவர்கள் எல்லாம் ஏற்கெனவே புறப்பட்டிருந்தனர். பின்னர் குறுக்குவழியில் மலையிடுக்குகளுக்குள் புகுந்து பயணத்தைத் தொடர்ந்தனர். மூன்றாம் நாளும் நான்காம் நாளும் நடந்தே செல்ல வேண்டியிருந்தது. உதிரன் நினைத்ததுபோலப் பயணத்தின் வேகம் இல்லை. காரணம் வழியை விட்டுத் தொலைவில் இருக்கும் ஊர்களில் இரவு தங்கவேண்டியிருந்ததால் அங்குபோய்த் திரும்ப நேரமானது.
ஆனாலும் பாதிக்கு மேற்பட்ட தொலைவு வந்தபின் திரும்ப முடியாது என்ற காரணத்தால் பயணத்தைத் தொடர்ந்தனர். கிளிமூக்கு மாங்கனியோடு நீலன்மயிலாவைக் காண்பது எவ்வளவு மகிழ்வைத்தரும் என்பதை நினைத்தபடி அவர்கள் நடந்தனர்.
தன் காதலனோடு பயணிக்கும் அங்கவையின் மனநிலை முற்றிலும் வேறாக இருந்தது. அடர்காடுகளுக்குள் உதிரனோடு நீண்ட நெடும்பயணம். அவனால் காட்டின் எந்த இண்டிடுக்குக்குள்ளும் நுழைந்து வெளியேற முடியும். அவளை எந்தவொரு ஆபத்தும் தீண்டிவிடாதபடி பாதுகாக்க முடியும். பொதினியில் மருத்துவ அறிவை ஆணுக்கு நிகராகப் பெண்களும் அறிவர். அதனால்தான் ஆதினி மூலிகைச்செடிபற்றிய பேரறிவைக்கொண்டவளாக இருந்தாள். அங்கவையையும் அவளைப்போலவே வளர்த்திருந்தாள். இப்பொழுது கபிலரின் மொழியறிவும் அவளுள் செழித்திருக்க அவள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் புதிதாய் மலரும் பூவினைப்போல் ஒளியும் மணமும் வீசியது.
இருவரின் வியப்புகளுக்குள் அடங்காமல் விரிவடைந்துகொண்டே இருந்தது காடு. நான்காம் நாள் இரவு எயினூரில் தங்கினர். வந்திருப்பது அங்கவை என அறிந்து ஊரே விருந்துசெய்து மகிழ்ந்தது. உதிரனுக்கு வேறொன்று நினைவுக்கு வந்தது, அதனை அங்கவையோடு பகிர்ந்துகொண்டான். “காடறியும் காலத்தில் இவ்வூரின் மேற்றிசையில்தான் இராவெரி மரத்தைப் பார்த்தேன்” என்றான்.

அதனைச் சொன்ன கணத்தில் அங்கவையின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. “எவ்விடத்தில் இருக்கிறது என்பது உனக்கு நினைவில் உள்ளதா?”
“நன்றாக நினைவில் உள்ளது.” “சென்று பார்ப்போமா?”
“நாம் பார்த்துத் திரும்ப, இருபகல் ஓர் இரவு ஆகுமே.”
அங்கவை சற்றே சிந்தித்தாள். உதிரன் சொன்னான், “ஏற்கெனவே அதிக நாள்களாகிவிட்டன. இனியும் நாம் காலந்தாழ்த்த வேண்டாம். இன்னொருமுறை அதனைப் பார்ப்போம்” என்றான். அங்கவையின் முகம் சற்றே வாடியது. மனக்கவலை தீர இரவில் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தான் உதிரன்.
அங்கவை தங்கிய குடிலின் மூதாட்டி, “இராவெரி மரத்தைப் பார்க்காவிட்டாலென்ன! இரிக்கிச்செடியைப் பறித்துவந்து காட்டு” என்றாள்.
மூதாட்டி என்ன சொல்லுகிறாள் என்று உதிரனுக்குப் புரியவில்லை. “இரிக்கிச் செடி என்றாள் என்ன?” எனக் கேட்டான்.
``உனக்கும் தெரியாதா?” எனக் கேட்டவள், தூரத்திலிருந்த பெண்ணை சத்தம்போட்டு அழைத்து, “இவ்விருவரையும் கூட்டிப்போய் இரிக்கிச்செடியைக் காட்டு” என்றாள்.
அப்பெண், இருவரையும் அழைத்துக்கொண்டு காட்டுக்குள் நுழைந்தாள். தேய்பிறையின் கடைசிக் காலமாதலால் மாமலை கும்மிருட்டில் மூழ்கிக்கிடந்தது. ஊரை விட்டு சற்றுத்தள்ளி உள்ளே போனவள், சந்தன மரத்தின் அடிவாரத்தில் பின்னிக்கிடந்த பெருங்கொடியைப் பிடித்துத்தூக்கினாள். அவர்கள் இருவரும் அக்கொடியையே பார்த்தனர். கொடியின் முனைப்பகுதியை மட்டும் ஒடித்தவள் அங்கவையையும் உதிரனையும் கைநீட்டச் சொன்னாள். இருவரும் கையை நீட்டினர்.
ஒடித்த கொடியிலிருந்து கசியும் நீரினை இருவரின் உள்ளங்கையிலும் ஒவ்வொரு துளி வைத்தாள். இதனை ஏன் கையில் வைக்கிறாள் என இருவரும் உள்ளங்கையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்களின் கண்கள் விரியத் தொடங்கின. அத்துளி வெண்மை நிறங்கொண்டதாக மாறியபடியிருந்தது. கெட்டியான பால்துளிபோல் அது இருப்பதைப் பார்த்தனர். வியப்பு அடுத்தகட்டத்தை அடைந்தது. இவ்விருட்டில் இவ்வெண்மை நிறம் எப்படி இவ்வளவு துல்லியமாகத் தெரிகிறது எனச் சிந்தித்தபொழுதுதான் புரியவந்தது, அத்துளிநீர் மெல்லியதாய் ஒளியை உமிழ்ந்துகொண்டிருக்கிறது என்று. மின்னுட்டான் பூச்சியின் உடலுக்குள் இருக்கும் வெண்பச்சைநிற நீர்போல்தான் இதுவும் பச்சையின்றி முழுவெண்மையில் ஒளியை உமிழ்கிறது. இருவரும் தங்களின் உள்ளங்கைக்குள் ஓர் அதிசயத்தை வைத்துக்கொண்டு நின்றனர். கைநடுக்கத்தில் காற்றில் அசையும் சுடர்போல் கையொளி அசைந்துகொண்டிருந்தது.
அழைத்துவந்தவள் நீண்டநேரத்துக்குப் பின், “இன்று இரவு முழுவதும் வைத்திருந்தாலும் ஒளிமங்காது. வாருங்கள் போவோம்” எனச் சொல்லி ஊருக்கு அழைத்துவந்தாள். வரும்பொழுது நீண்டு படர்ந்துகிடந்த அதன் கொடியைப் பறித்து வந்தான் உதிரன்.
ஊர்வந்ததும் அங்கவை தங்கும் குடிலின் உட்புறச்சுவரிலும் மேற்கூரையிலும் செடியை ஒடித்து, கசியும் நீரினைப் பொட்டுப்பொட்டாக வைத்துவிட்டு வெளியேறினான். எரிந்துகொண்டிருந்த சிறுவிளக்கினை அணைத்தாள் அங்கவை. விளக்கொளி நீங்கியதும் குடில் முழுவதும் பெருகி நிறைந்தது இருள். சிறிதுநேரத்திலே நீர்த்துளிகள் பால்நிறங்கொள்ளத் தொடங்கின. இங்குமங்குமாக இருளுக்குள்ளிருந்து வெண்ணிற மொட்டுக்கள் அவிழத்தொடங்கின. அவிழும்பொழுதே ஒளி கசிந்துபரவியது. வான்வெளியில் மஞ்சள் ஒளிசிந்தும் விண்மீன்கள் வெண்மைநிற ஒளியைச் சிந்தினால் எப்படி இருக்கும் என்பதை அங்கவை இரவு முழுவதும் பார்த்திருந்தாள். அவ்விரவு முழுவதும் அவளின் கைக்கெட்டும் தொலைவில் விண்மீன்கள் நிறைந்துகிடந்தன.
பொழுது விடிந்தது. அவர்கள் விரைந்து புறப்பட்டனர். அப்பொழுது உதிரன் செவ்வரிக்காட்டினைப் பற்றி எயினூர் மக்களிடம் கேட்டான். அவர்கள் அக்காட்டினை அடையும் திசைக்குறிப்பினைச் சொன்னார்கள். கிளிமூக்கு மாங்கனி வேண்டும் என்று சொல்லியிருந்தால், அவர்களும் உடன்வந்து பறித்துத் தந்திருப்பார்கள். ஆனால், தாமாகக் கண்டறிந்து நீலன்மயிலாவுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதால் அதனைப்பற்றிக் கேட்கவில்லை.

அவர்கள் சொன்ன குறிப்பின் அடிப்படையில் நடைவழிப்பாதையில் இருமலைகளைத் தாண்டினர். செங்குத்தான ஏற்ற இறக்கமாதலால் களைப்பு அதிகமாக இருந்தது. அன்றிரவு குகையினில் தங்கினர். அருகில் ஊரெதுவும் கிடையாது. உதிரன் கையில் இரிக்கிக்கொடியைப் பறித்து வந்திருந்தான். குகைமுழுவதும் வான்வெளியாக மாற்றி அங்கவையைத் தூங்கவைத்தான். குகைவாயிலில் இரவு முழுவதும் விழித்திருந்தான். அதிகாலை அவள் எழுந்ததும் சிறிதுநேரம் அவன் உறங்கினான்.
வெயில் ஏறத் தொடங்கியபொழுது அவர்கள் வேகவேகமாக நடந்துகொண்டிருந்தனர். செவ்வரிக்காட்டுக்குள் உச்சிப்பொழுதில் நுழைந்தனர். நீண்டுகிடக்கும் மலைமடிப்பின் இருபக்கச் சரிவிலும் பரவிக்கிடப்பதுதான் செவ்வரிக்காடு. காட்டின் நடுவில் ஊடறுத்து ஓடிக்கொண்டிருந்தது எழுவனாறு. அகலமான இவ்வாற்றில் ஒருதுளி நீரில்லை. கோடையின் வெக்கையில் மணற்துகள்கள் மின்னிக் கொண்டிருந்தன.
இருவரும் ஒவ்வொரு மரமாக உற்றுப்பார்த்தபடி நடந்துகொண்டிருந்தனர். எண்ணற்ற மாமரங்கள் இருந்தன. அவை எதிலும் கிளிமூக்கு மாங்கனி இல்லை. மரத்தைப் பார்த்தபடியே இங்குமங்குமாக நடந்தனர். கொடுங்கோடையாதலால் செடிகொடிகள் வதங்கிப்போயிருந்தன. பச்சைமலையின் அடிவாரக்குன்றுப்பகுதிகள் இவை. எனவே வெக்கையின் தாக்கம் கடுமையாகவே இருந்தது.
நன்கு படர்ந்து விரிந்திருந்த மாமரத்தின் அடிவாரத்தில் ஓய்வெடுக்கலாம் என அமர்ந்தனர். சற்றே அவன் தோள்சாய்ந்தாள் அங்கவை. சிறிது ஓய்வுக்குப்பின் உதிரன் சொன்னான், “நிழலிலே அமர்ந்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.”
அங்கவை பதிலேதும் சொல்லவில்லை.
“ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறாய்?” எனக் கேட்டான் உதிரன்.
தோளிலே சாய்ந்திருந்தவள் முகம்பார்த்துப் பேசுவதற்காக எதிரே வந்து உட்கார்ந்து சொன்னாள், “இது மகிழ்வை மட்டுமே அறியும் பருவம். இதற்கு நிழலும் பொருட்டல்ல, வெயிலும் பொருட்டல்ல.”
சொல்லியபடி புன்னகைத்த அவளை மகிழ்ந்து கவனித்துக்கொண்டிருந்த உதிரனின் முகம் சட்டெனக் கடுமையானது. ``அசையாமல் இரு” என்றான்.
என்னவென்று புரியாமல் திகைத்தபடி இருந்தாள் அங்கவை. அவளது கழுத்தின் பின்பகுதியில் அமர்ந்திருந்த பெரிய ஈ ஒன்றை நோக்கி வலக்கையை மெதுவாகக்கொண்டுபோய் சட்டென அமுக்கிப்பிடித்தான்.
பிடித்த வேகத்தில் கைகளை மூடியவன் மெல்ல விரலிடுக்குகளின் வழியாக உள்ளிருப்பதைப் பார்க்க முயன்றான். இவ்வளவு கூர்மையாக எதனைப் பார்க்கிறான் என்று அவளும் உற்றுநோக்கினாள். விரல் இடுக்குகளுக்குள்ளிருந்து அது தலையை முண்டி வெளியேற முயன்றது. அதன் தலையையும் வெளிவரமுயலும் அதன் எத்தனிப்பையும் கவனித்தபடி உதிரன் சொன்னான், “இது அடவி ஈ. மூன்றுநான்கு ஈக்கள் கடித்தால் சற்றுநேரத்திலே மனிதன் மயக்கம் அடைந்துவிடுவான். எண்ணற்ற ஈக்கள் மொய்த்துக்கொண்டு கடித்தால் மரணங்கூட ஏற்படலாம்.”
கணநேரத்தில் அங்கவையின் முகம் இறுகி உறைந்தது. அதனைக் கவனித்தபடி உதிரன் சொன்னான், “இந்த ஈ உன்னைக் கடிக்கவில்லை. அமர்ந்ததும் பிடித்துவிட்டேன். அதுமட்டுமல்ல; ஓர் ஈ கடித்ததால் ஒன்றும் ஆகிவிடாது.”
தலையை மறுத்து ஆட்டியபடி அங்கவை சொன்னாள், “உனது முதுகில் மூன்றுநான்கு ஈக்கள் இருப்பதை அப்போதே பார்த்தேன்.”
சற்றே அதிர்ந்தான் உதிரன்.
சொல்லிக்கொண்டே அவனது முதுகுப்புறமாக வந்துபார்த்தாள். மூன்று ஈக்கள் முதுகோடு ஒட்டியிருந்தன. மரத்தில் சாய்ந்திருந்ததால் மரப்பட்டை அழுத்துகிறது என நினைத்திருந்தான் உதிரன். அவள் தட்டிவிட்டதும் அவை பறந்து வெளியேறின.அவ்விடத்தில் முள்தைத்ததைப்போல் குருதி இருந்தது.
ஒன்றுக்கும் மேற்பட்ட ஈக்கள் கடித்துள்ளன என்பதை அவளின் முகம்பார்த்து உணர்ந்த உதிரன் சொன்னான், “நீ கலங்காதே! ஒருவேளை நான் மயக்கமுற்றாலும் சிலபொழுதில் எழுந்துவிடுவேன். பதற்றமடையாமல் இரு” என்றான்.

அங்கவை சற்றே படபடப்போடு இருந்தாள். ஏனென்றால் இதனைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே உதிரனின் கண்கள் செருகத் தொடங்கிவிட்டன. அதனைக் கவனித்தவள், அவனது தலையினைத் தனது மடியினில் மெல்லச் சாய்த்தாள். சிறிதுநேரத்திலேயே உதிரன் முழுமுற்றாக மயங்கினான்.
கலக்கத்தில் உடல் உதறுவதுபோல் இருந்தது, ஆனால், அடுத்தகணமே செய்ய வேண்டியதென்ன என்று சிந்தித்தாள். உடனடியாக சென்றிப்புகை போடுவோம். இப்பகுதியில் ஊரேதும் இல்லை. மலையின் பின்புறம் இருமடிப்புகள் தாண்டி எயினூர் இருக்கிறது. இங்கு புகைபோட்டால் அவ்வூரில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. இம்மலைப்பகுதியில் யாராவது இருந்தால்தான் உண்டு என்று எண்ணியபடி இங்குமங்குமாக சென்றிக்கொடியைத் தேடினாள்.
உதிரனின் இடுப்பிலிருந்த குறுவாளினை எடுத்து அருகிருந்த செடிகொடிகளை வெட்டியிழுத்தாள். வேகமாக அவற்றை உதிரனின் மீது போட்டு மீண்டும் ஈக்கள் மொய்க்காதபடி செய்தவள். சற்று விலகிப்போய் சென்றிக்கொடி தேடலாம் என்று முயன்றாள்.
அவளது தேடல் தொடர்ந்துகொண்டே இருந்தது. கீழ்ப்புறமாக எழுவனாற்றை நோக்கி இறங்கித் தேடினாள். அகன்று விரிந்து கிடந்தது எழுவனாறு. அதன் மணல் வெக்கையை உமிழ்ந்துகொண்டிருந்தது. ஆற்றினூடே குறும்பாறைகள் முளைத்துக்கிடந்தன. அவளின் கண்கள் எங்கும் ஓடித்திரும்பின. உதிரனைப் பார்க்கும் தொலைவைக் கடந்து போய்விடக்கூடாது என நினைத்துக்கொண்டே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி தேடிக் கொண்டிருந்தாள்.
எப்பொழுதும் கண்ணில் தட்டுப்படும் ஒன்று தேடும்பொழுது மட்டும் ஏன் கிடைப்பதேயில்லை என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அவளது கண்களுக்கு முன்னால் அது படர்ந்துகிடந்தது. பார்த்ததும் பெருமூச்சு விட்டாள். கையிலிருந்த குறுவாள்கொண்டு கொடியின் அடிப்புறத்தை அறுக்க எண்ணித் தரையோடு அமர்ந்தாள். ஏதோ மாறுபட்ட ஓசை ஒலிப்பதுபோல் இருந்தது. என்னவோசையிது என்று எண்ணியபடி சுற்றுமுற்றும் பார்த்தாள். ஒன்றும் பிடிபடவில்லை. ஆனால், சிறிது சிறிதாக ஓசையின் அளவு கூடிக்கொண்டேயிருப்பதுபோல் உணர்ந்தாள்.
கையிலிருந்த குறுவாளோடு கொடியினை அறுக்காமல் அப்படியே எழுந்தாள். கண்கள் திசையெங்கும் தேடித்துழாவின. பெருகுமோசை என்னவென்று புரியவில்லை. காட்டின் கீழ்ப்புறமிருந்து பறவைகள் கலைந்து பறந்தன. அத்திசையிலிருந்துதான் ஓசை வருகிறதென அறியமுடிந்தது. என்னவென்று தெரியவில்லை. மலையின் உச்சியில் ஏறிநின்று பார்ப்போமா என்று எண்ணியபொழுது, மிகத்தொலைவில் எழுவனாற்று மணல்வெளியில் உருவங்கள் தென்படத் தொடங்கின.

வேகவேகமாக அருகிருந்த மரத்தின் மீதேறி, கொப்புகளுக்குள் தலைநுழைத்துப் பார்த்தாள். முதல்கணம் அவளால் காட்சியை உள்வாங்க முடியவில்லை. அகலவிரித்த கண்களில் தென்படும் எதுவும் அறிவிற்குப் புலப்பட மறுத்தது. எண்ணிலடங்காத யானைகள் எழுவனாற்று மணல்வெளியில் நடந்து முன்னேறிக்கொண்டிருந்தன. உயர்த்தப்பட்ட ஆயுதங்களோடு அவற்றின் மீது வீரர்கள் அமர்ந்திருந்தனர். ஆற்றின் இருகரையையும் அடைத்துக்கொண்டு அப்படை வந்துகொண்டிருந்தது.
காணுங்காட்சியை அவளால் நம்ப முடியவில்லை. சிந்தனையைக் கூர்மையாக்கி மீண்டும் கண்திறந்து பார்த்தாள். வந்துகொண்டிருப்பது பெரும்படை என்பதை சிந்தனைக்குள் ஆழப்பதிந்தாள். கண்கள் காட்சியை அலசிக்கொண்டிருக்க எண்ணம் செய்யவேண்டியதைப் பற்றிச் சிந்தித்தது. கண்பார்வையின் கடைசி விளிம்பில்தான் அப்படை நகர்ந்து வந்துகொண்டிருந்தது. ஆனால் மூலப்படைக்கு முன்னால் தூசிப்படை வருமென அவளுக்குத் தெரியும். அப்படியென்றால் ஆற்றின் இருகரைகளிலும் எதிரிகள் முன்னேறி வந்துகொண்டிருப்பர். எண்ணிய கணத்தில் மரம்விட்டுச் சட்டெனக் குதித்து இறங்கி, உதிரனை நோக்கி ஓடினாள்.
கணநேரத்துக்குள் வாழ்வின் காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன. மேலே கிடந்த செடிகொடிகளை விலக்கி அவனது கன்னத்தில் அறைந்தும் மார்பில் குத்தியும் எழுப்ப முயன்றாள். உதிரன் உணர்வற்றுக் கிடந்தான். அங்கவை ஏதேதோ செய்துபார்த்தாள். கண்கள் கலங்கின. தலைமுடியைப் பிடித்து உலுக்கிப்பார்த்தாள். எந்தப் பயனுமில்லை. ஆவேசமும் குழப்பமும் கதறலுமாக மனம் கொந்தளிப்பில் அலைமோதியது. சட்டென அதே மரத்தின் மேலேறி, பொருத்தமான கிளையின் முனையில் போய்நின்று இலைகளை விலக்கிப்பார்த்தாள். மணல்தூசி அடுக்கடுக்காய் மேலேறிக் கொண்டிருந்தது. மிகத்தள்ளி அவர்கள் வந்துகொண்டிருந்தனர். ஆனால், ஆற்றின் எதிர்ப்புறச் சரிவிலிருந்து புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட பதாகையை ஒருவன் அசைத்துக் காண்பிப்பது அவளுக்குத் தெரிந்தது. வந்து கொண்டிருப்பது சோழனின் படை. அப்படியென்றால், அதே அளவுத் தொலைவில் இப்பக்கமும் தூசிப்படை முன்னேறியிருக்கும் என்பது புரிந்தது.

வெறிகொண்ட ஆவேசத்தோடு மரம் விட்டு இறங்கியவள், இங்குமங்குமாகத் தேடி, நீண்டுகிடந்த இண்டங்கொடியை இருபனை உயரத்துக்கு வெட்டியெடுத்தாள். ஒரு முனையில் உதிரனின் கால், இடுப்பு, மார்பு என அனைத்துப்பகுதியையும் மேல்நோக்கித் தூக்குவதற்கு ஏற்ப இறுகக்கட்டினாள். அவன் எவ்வித அசைவுமற்றுக் கிடந்தான்.
இண்டங்கொடியின் மறுமுனையை மரத்தின் கிளைகளுக்குள்ளே எறிந்தாள். தாழ்ந்திருந்த கிளையில் விழுந்து மறுபக்கமாகச் சரிந்தது. அதுவரை மேலே தூக்கி, பின்னர் மறுகிளை நோக்கி மேலுயர்த்துவதெல்லாம் முடியாதசெயல் எனச் சிந்தித்தவள். கொடியைக் கையில் எடுத்துக் கொண்டு சரசரவென மரத்தின் மேற்கிளையை நோக்கி ஏறினாள். பொருத்தமான இடமெனத் தென்பட்ட கவட்டைவடிவக் கிளையில் கொடியைப் போட்டு மறுபக்கமாகக் கீழே எறிந்தாள்.
மரம் விட்டு இறங்கியவள் இழுத்து மேலே தூக்க வசதியாக உதிரனை மரத்தினையொட்டி சாய்வாக உட்காரவைத்து, பின்புறமாகத் தொங்கிக்கொண்டிருக்கும் கொடியை இழுக்க ஆயத்தமானாள். இரு கைகளுக்குள்ளும் அடங்காத அளவு அகலங்கொண்டிருந்த இண்டங்கொடியைப் பிடித்து வாகாக நிற்க முயன்றாள். நகரும் படையின் ஓசை பெருக்கெடுத்து முன்னகர்ந்து வந்தது.
கையிலிருந்த கொடியை விட்டுவிட்டு ஓடிப்போய் எவ்விடம் வந்துள்ளனர் என்பதைப் பார்க்க எண்ணியவள் மறுகணம் இப்பொழுது கையிலிருக்கும் இக்கொடியை விடுவது, உதிரனின் உயிரை விட்டு அகல்வதற்கு நிகர். தூசிப்படையின் கண்களுக்கு மனிதர்கள் தெரிந்தால் வெட்டி யெறிந்துவிட்டுப் போவார்கள் எனச் சிந்தித்தபடி கொடியை இறுகப்பிடித்து வலுக்கொண்டு இழுத்தாள். உதிரன் மெல்ல அசைந்துகொடுத்தான். ஆனால், அவ்வளவு வலுமிக்க வீரனின் உடலை இழுத்து மேலேற்றுவதெல்லாம் எளிய செயலல்ல. ஆவேசங்கொண்டு முயன்றாள் அங்கவை.
அமர்ந்த நிலையிலிருக்கும் உதிரனை நின்றநிலைக்குக்கூடக் கொண்டுவர முடியவில்லை. இது தனிமனிதராகச் செய்யும் முயற்சியல்ல என்பது தெளிவாக விளங்கியது. ஆனால், இம்முயற்சியை விட்டால் உதிரனைக் காப்பாற்ற வேறு எவ்வழியுமில்லை என்பதும் உறுதியாகப் புரிந்தது. எண்ணங்களை ஒருங்கிணைத்து முழுமூச்சோடு முயன்றாள். ‘வீரமும் வலிமையும் சிந்தனையில்தான் உள்ளன. அதனால்தான் சின்னஞ்சிறியவர்களை வைத்துக்கொண்டு திரையர்களின் கூட்டத்தை நடுமலை வரை எதிர்கொண்டார் தேக்கன். அத்தனை முறை தாக்குதலுக்கு ஆளான பின்னும் தளராமல் இறுதி வரை ஓடினர் கீதானியும் அலவனும். எண்ணத்தின் உறுதி எதனையும் செய்யும் ஆற்றலைத் தரும் என்பதை உணர்ந்தபடி ஆவேசத்தோடு இண்டங்கொடியை இழுத்துப் பின்னால் நகர்த்தினாள்.
உதிரன் சற்றே மேலுயர்ந்தான். உதிரனைத் தூக்கிவிட முடியும் என்று கண்ணில் தெரிந்த நம்பிக்கை, கைகளின் வலுவை மேலும் கூட்டியது. உன்னியிழுத்துப் பின்னகர்ந்தாள். உதிரன் உயர்ந்துகொண்டிருந்தான். மூன்று, நான்கு என கைகளில் கொடியைச் சுழற்றியபடி இழுத்தாள். தாழ்ந்திருந்த கொப்பின் உயரத்தை அவன் தலை தொட்டது. கொடியை அருகிருந்த மரத்தில் இழுத்துக்கட்டிவிட்டு வேகமாக வந்து மேலேறினாள்.

இவ்வுயரத்தில் இருந்தால், மரத்துக்குக் கீழே யார் வந்தாலும் எளிதாகப் பார்த்துவிட முடியும். எனவே, மேலே உள்ள கிளைக்குக் கொண்டு போனால்தான் அவனை மறைக்க முடியும் எனத் தோன்றியதும் மீண்டும் கீழிறங்கிவந்து இழுக்க முயன்றாள். கைகளில் வலு போதவில்லை. என்ன செய்வதென்று புலப்படவில்லை. படையின் பேரோசை மலையெங்கும் அதிர்ந்து பரவியது. கைகளைத் தளர்த்தாமல் மூச்சினை இழுத்தாள். மனம் கொற்றவையை வணங்கியது. போர்த்தெய்வத்தின் ஆவேசத்தைக் கேட்டு மன்றாடினாள். மூடிய கண்களுக்குள் செம்பாதேவியின் நினைவு வந்தது. பற்களை நறநறவெனக் கடித்தபடி புலிக்கொடியைக் கிழித்து எறியும் ஆவேசங்கொண்டாள்.
``செம்பா தேவீ” என மனம் கதற, அடக்கமுடியாத ஆற்றலோடு இண்டங்கொடியை இழுத்துத் தள்ளினாள். உதிரன் மேற்கிளையில் முட்டி நின்றான். கயிற்றை மீண்டும் கட்டிவிட்டு மரமேறி உச்சிக்குப் போனாள். கிளையின் பிளவில் பொருத்தமாக அவனை உட்காரவைத்துக் கவட்டையோடு சேர்த்து அவனைக் கட்டினாள். கீழ்ப்புறமிருந்து பார்த்தால் தெரியாத அளவு கொப்புகளை ஒடித்துச் செருகி மறைத்தாள். இண்டங்கொடியை முழுமையும் மேல்நோக்கி இழுத்துக்கொண்டாள்.
படையோசை எங்கும் கேட்டது. காடெங்கும் பறவைகள் கலைந்து பறந்தன. அடர்கிளைகளை மெல்ல விலக்கினாள். கிளி ஒன்று முகத்தில் கொத்துவதுபோல் வந்தது. தலையைப் பின்புறமாக இழுத்துக்கொண்டு பார்த்தாள். அது கிளிமூக்கு மாங்கனி. மரத்தின் உச்சிக்கிளையில் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தது. ஆடுங்கனியை இடக்கையால் விலக்கிப்பார்த்தாள். தூசிப் படையினர் முன்னேறி வந்துகொண்டிருந்தனர்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...