மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஒரே கட்சியில் ரஜினி விஜயகாந்த் விஜய்?!

- ஜி.மாரியப்பன், சின்னமனூர்.

ஹாய் மதன் கேள்வி - பதில்

 சரோஜா தேவி, அஞ்சலி தேவி, பானுமதி - மூவரது நடிப்பில் யாருடைய நடிப்பு ஏ கிளாஸ்?

  ரியலிஸ நடிப்பு என்றால் பானுமதிதான். அஞ்சலி தேவிக்கு சம்பிரதாயமான ரோல்களே கிடைத்தன. இவர்களைவிட அதிகம் புகழ்பெற்றவர் சரோஜா தேவிதான். எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரோடு (ஒருவரோடு மட்டும்தான் நடிக்க வேண்டும் என்கிற பயம் எல்லாம் இல்லாமல்) ஏராளமான படங்களில் நடித்தவர் சரோஜா தேவி மட்டுமே. அந்தப் பெரும் நடிகர்களோடு அவர் இணைந்து நடித்த படங்கள், அநேகமாக அத்தனையுமே பெரும் வெற்றி பெற்றன என்பதை நினைவில்கொள்ளவும்.

- பி.சந்திரகாந்தன், ஈரோடு.

தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதா? வந்தால் அந்த ஆட்சி எப்படி இருக்கும்?

ரஜினி, விஜயகாந்த், விஜய் மூவரும் ஒன்று சேர்ந்து ஒரு புதுக் கட்சி ஆரம்பித்தால், அந்த வாய்ப்பு ஏற்படும் (மற்றபடி, ஆட்சிகள் எப்பவும் ஒரே மாதிரிதாங்க இருக்கும்)!

##~##
- என்.பாலகிருஷ்ணன், மதுரை.

பிறர் தோல்விகளை ரசிப்பவர்களைப் பற்றி?

'சாடிஸ்ட்’ என்றால் - பிறருக்குத் துன்பத்தைத் தந்து அதில் மகிழ்கிறவர்கள். நீங்கள் குறிப்பிடுபவர்களுக்கு அந்தத் தைரியமும் இருக்காது. அவர்கள் வெறுமனே மனசுக்குள் சந்தோஷப்படுபவர்கள்! அதற்கென்று வார்த்தை கூட எந்த மொழியிலும் இல்லை என்று நான் படித்திருக்கிறேன் (நீங்களே வாக்கியமாகத்தான் குறிப்பிடுகிறீர்கள்!) ஜெர்மன் மொழியில் மட்டுமே அதற்கென்று வார்த்தை உண்டு - ஷாடன்ஃப்ராய்டு (Schadenfreude). அந்தப் பரிதாபமானவர்களை உங்கள் மனதில் இருந்து அடியோடு அப்புறப்படுத்திவிடுங்கள்!

- ப.சுகவனம், சென்னை-5.

சினிமாவில் குடிக்கும் 'சீன்’களில் நடிக்கும்போது ஹீரோ நிஜமாகவே ரெண்டு லார்ஜ் போட்டுவிட்டு நடிப்பாரா?

மாட்டார்கள்! எலிசெபத் டெய்லரின் கணவர் (மறைந்த) நடிகர் ரிச்சர்ட் பர்ட்டன் செமத்தியாகத் தண்ணி அடிப்பார். அப்படியே நடிக்கவும் செய்வார். அவர் சொன்னார் 'குடித்துவிட்டுத் தள்ளாடுகிற காட்சியின்போது மட்டும் மதுவை நான் தொட்டது இல்லை. பிறகு வசனங்கள் மறந்துவிடும்!’

- தளபதி.கோபாலகிருஷ்ணன், கோவில்பட்டி.

மறுக்க முடியுமா உங்களால்? 'மதன்’ என்பது உங்கள் பெயரின் சுருக்கம்தானே! MadaBushi Krishnaswamy Govindakumar பெயரின் முதல் பகுதியின் ஐந்து எழுத்துக்கள், பின்னால் வருகிறது கடைசி எழுத்து N 'Madhan’ உருவான விதம் இப்படித்தான் என்று அடித்துச் சொல்கிறேன். தாங்கள் 'ஆமாம்’ என்று சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை! எனக்கு என்ன பரிசு?

என்னைத் திகைக்கவைத்த தளபதியே... உங்களுக்கு மன்னராக புரமோஷன் பெறும் தகுதி இருக்கிறது. முதல்முறையாக நானே இப்போதுதான் இதைக் கவனிக்கிறேன். 'டியூப்லைட்’ நான்!

ஆனால், 'மதன்’ என்ற பெயரை நான் வைத்துக்கொள்ளவில்லை. என் சீனியர் கார்ட்டூனிஸ்ட் ஸ்ரீதர் (பரணீதரன்) வைத்த பெயர் அது. அப்போது அவருக்கு என் முழுப் பெயர் தெரியாது என்பதைக் குறிப்பிட வேண்டும். வேலையில் சேர்ந்த பிறகு அவர் எதிரே போய் 'லாங் ஹேர்’ உடன், ஸ்டைலாக (அபத்தமாக) நின்றேன். அவர் என்னைக் குறும்பாக உற்றுப் பார்த்தார். அப்போதே இந்தப் புனைபெயர் அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்!

ஹாய் மதன் கேள்வி - பதில்

பரிசு எதுவும் தராவிட்டாலும் செம 'ஷார்ப்’ ஆன ஒரு வாசகனைப் பார்த்து விகடன் பெருமைப்படும். கவலைப்படாதீர்கள்!

- நித்திளா செல்வராஜ், வில்லிவாக்கம்.

குடும்பப் பெண்கள் பெரிதும் பயப்படுவது சாமியாரைக் கண்டா... மாமியாரைக் கண்டா?

சாமியாரைக் கண்டுதான்!

'உங்க மருமகள் வந்த நேரம் சரியில்லை. அதான் இவ்வளவு பிரச்னைகள்...’ என்று சாமியார், மாமியாரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போச்சு!