மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு : வெ.நீலகண்டன்

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு : வெ.நீலகண்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு : வெ.நீலகண்டன்

இங்கேயும்... இப்போதும்...

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு : வெ.நீலகண்டன்

தங்க.செங்கதிர்

“சாதி உமிழும் கொடும் கங்குகளின் வெம்மை, மனதுக்குள் வெந்து பழுத்துக்கிடக்கிறது. அதன் எதிர்வினையாய் உள்ளிருந்து எழும் கோபத் தெறிப்பே என்னளவில் எழுத்து. வெகுசமூகத்தின் பார்வையில் அது புலம்பலாகப் படலாம். ஆயின், என்போல் வெந்து தணிவோரின் இதயத்தில் அதற்கோர் ஆசனம்

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு : வெ.நீலகண்டன்

உண்டு. மொழி, என் உயிர்க்குறியீடு. அதுவே என் மரபின் அடையாளம். அதன் மேனியில் சிறு கீறலும் ஆகக் கூடாது என்கிற பொறுப்புணர்வுடனே என் எழுத்து உயிர்க்கிறது. என் தாத்தனுக்கும் பாட்டனுக்கும் கிடைக்காத பெருவெளி எனக்கு வாய்த்திருக்கிறது. அதில் நான் என் இருத்தலுக்கான காரணத்தை அழுத்தமாக விதைத்துவிட்டுச் செல்வேன், என் எழுத்தின் வழி.”

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகிலுள்ள புலியூரைச் சேர்ந்த தங்க.செங்கதிர், மேலநெட்டூர் ஆதிதிராவிடர் விடுதியில்  ‘ஆசிரியர் காப்பாளரா’கப் பணிபுரிகிறார். ‘கற்பி’, ‘மாற்றத்தின் குரல்’ ஆகிய 2 கட்டுரை நூல்கள் வெளிவந்துள்ளன. முதுகுளத்தூரில் நடந்த கலவரத்தை முன்னிறுத்தி ‘1957’ என்ற பெயரில் இவர் எழுதியுள்ள கட்டுரை நூல் விரைவில் வெளிவரவிருக்கிறது. நண்பர்களோடு இணைந்து ‘மானுடம்’ என்ற சிற்றிதழையும் நடத்திவருகிறார். இயற்பெயர் செந்தில்குமார்.

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு : வெ.நீலகண்டன்

கயல்

“எழுத்து என்பது ஆளுமையின் சொல்வடிவம். மௌன உள்ளறையின் பெருங்கதவுகளை இசை நயத்தோடு திறக்கும் காற்றென, எனக்குள் நான் நிகழ்த்தும் உரையாடல்களைப் புறத்தே பகிரும் வகையிலானவை என் கவிதைகள். படிம அலங்காரங்கள் நிறைந்த வார்த்தைத் தேராய் வலம் வருவதில்லை அவை, அறத் தீப்பந்தம் ஏந்தி மானுடத்தின் விடியலுக்காகப் போரிடும் கைகளின் பெருந்தழலாகும். இந்தத் தேசத்தில் சிதைவுற்றுக்கிடக்கும் மானுடத்தை அதன் நேர்த்தன்மை குலையாமல் மீண்டும் கட்டியெழுப்பும் பொருள்களில் என் கவிதைகளும் உண்டு.”

வேலூரைச் சேர்ந்த கயல், அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியலில் இரு முனைவர் பட்டங்களைப் பெற்றவர். ‘கல்லூஞ்சல்’, ‘மழைக்குருவி’ ஆகிய இரு கவிதை நூல்களை எழுதியுள்ளார். ‘ஆரண்யம்’ எனும் அடுத்த கவிதைத் தொகுப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது.

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு : வெ.நீலகண்டன்

சந்தியூர் கோவிந்தன்

“வரலாற்றின் சிதைவுகளுக்கு மத்தியில்தான் எங்கள் மரபின் வேர்கள் புதைந்திருக்கின்றன. அவற்றைத் தேடி நெடுநடை நடந்த என் மூதாதைகளின் பாதையே என் பாதை. நான் என் சுயத்தை வரலாற்றின் வழி தேடுகிறேன். அந்தப் பயணம் பல தரிசனங்களை விரிக்கிறது. தினம், தினம் நான் அதன் வழி புத்துயிர் பெறுகிறேன். வரலாறு என்பது என் தேசத்தின் அகவட்டங்களைச் சார்ந்தேயிருக்கிறது. அதன் புறவெளிகள் வலிந்து மறுக்கப்பட்டுள்ளன. புதைந்துபோன என் வரலாற்றை, தேடியெடுத்து என் எழுத்தால் காலத்தின் மேனியில் கீறலிடத் துடிக்கிறேன். என் வாழ்வு எனக்குத் தரும் இன்னல்களை எழுத்தின் மீதான என் தாகம் துடைத்தெடுத்து என் பாதையை வழிநடத்துகிறது.”

சேலம் அருகேயுள்ள சந்தியூரைச் சேர்ந்த கோவிந்தன், மாரமங்கலத்துப்பட்டி என்ற ஊரில் கிளை அஞ்சலக அலுவலராகப் பணிபுரிகிறார். ‘கல் சொல்லும் கதைகள்’ என்ற தொல்லியல் ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். மயிலை சீனி.வேங்கடசாமியின் ‘பண்டைக்காலக் குகைத்தளக் கல்வெட்டுகள்’ என்ற நூலைப் பதிப்பித்திருக்கிறார். ‘சேலம் சிற்றரசர்கள்’ என்ற வரலாற்று நூலும், ‘அம்மாசி சொன்ன கதை’ என்ற சிறுகதை நூலும் விரைவில் வெளிவரவிருக்கிறது. ‘தூறல்’ என்ற காலாண்டிதழை 13 ஆண்டுகளாக  நடத்திவருகிறார்.

எழுத்துக்கு அப்பால் - தொகுப்பு : வெ.நீலகண்டன்

ஆர்.நீலா

“களமாடி வென்ற, தோற்ற கதைகள்தான் என் எழுத்துகளின் ஆதாரம். வென்றால் சரித்திரம். தோற்றால் அனுபவம். பொழுதுபோக்கோ, புனைவோ இல்லாதபடி என் சுற்றம் தன் ஜீவன் தந்து என் எழுத்தின் ஜீவனைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. என் எழுத்துக்குப்பின், சாகசம் நிரம்பிய அவர்களின் வாழ்க்கைப்பாடுகள் காட்சியாகப் பொதிந்திருக்கின்றன. அதுதான் என் படைப்புக்கான அடையாளம், வாழ்க்கைக்கும்.”

புதுக்கோட்டை மாவட்டம், மங்களபுரத்தைச் சேர்ந்த ஆர்.நீலா, சென்னை - நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு சிறுதானியத் தின்பண்டங்கள் தயாரிப்பு மையத்தில் பணிபுரிகிறார். ‘அலையும் குரல்கள்’. ‘வீணையல்ல நானுனக்கு’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ‘பாமர தரிசனம்’, ‘கற்றது சிறையளவு’ ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் ‘சக்கரவாகப் பறவைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. தற்போது குடிநோயாளிகளை மையமாகவைத்து ஒரு நாவலை எழுதி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவராகவும் இயங்கிவருகிறார்.