எங்கே போனது சரஸ்வதி நதி?
##~## |
சரஸ்வதி நதி என்ற ஆறு ஓடியதாக வேத காலத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதே. அந்த நதி இப்போது இல்லையே... அந்த நதி எங்கே?
காணாமல் போய்விட்டது! வேதங்களிலும் புராணங்களிலும் சரஸ்வதி நதிபற்றி வருகின்றன. அது நிஜமா என்ற சந்தேகம் இருந்தது. சிந்து நதிக்கு இணையாக 1,800 மைல் நீளத்துக்கு ஓடி, கட்ச் பகுதியில் (குஜராத் அருகே) கடலில் கலந்த பிரமாண்டமான நதி சரஸ்வதி! அதன் கிளை நதிகளில் ஒன்றுதான் சிந்து நதி என்றால் பார்த்துக்கொள்ளலாம். சரஸ்வதி நதி ஓடிய இடத்தில்தான் இன்று தார் (Thar) பாலைவனம் இருக்கிறது. ஆனால், 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, சரஸ்வதி நதிக் கரையில், சிந்துச் சமவெளி நாகரிகத்துக்கும் முந்தைய மாபெரும் நாகரிகம் தழைத்ததாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அங்கே இருந்த நகரங்களில் 'பாலும் தேனும் தெருக்களில் ஓடியதாக’ ரிக் வேதம் கூறுகிறது. நிலத்தை ஊடுருவிப் பார்க்கும் சேட்டிலைட் கேமராக்கள் மூலமாக சரஸ்வதி நதி இருந்ததைக் கண்டுபிடித்துவிட்டார்கள். சுமார் கி.மு.1900-ல் (பூகம்பம்போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.) அந்த நதி மறைந்துவிட்டது. பாண்டவர்கள் ரொம்ப நடமாடிய நதிக்கரை அது. கிருஷ்ண பகவானின் காலம் முடிந்த பிறகு, அவருடைய 16,008 மனைவிகளும் சரஸ்வதி நதியில் வீழ்ந்து உயிர்த் தியாகம் செய்ததாகப் புராணம் தெரிவிக்கிறது!
அல்லிராஜ், கோயம்புத்தூர்-15.
செயற்கை விந்து உருவாக்கும் வாய்ப்பு உண்டா?
மனிதன் உருவாக 46 'குரோமோசோம்’கள் தேவை. ஆண், அதில் பாதியை (23) சமர்ப்பிக்கிறான். அதைப் பெண்ணின் உடலுக்குள் எடுத்துச் செல்லும் 'நதி’தான் விந்து. சராசரிமனித உடல் 100 மில்லியன் மில்லியன் 'செல்’களால் ஆனது. ஒவ்வொரு 'செல்’லுக்குள் இருக்கும் 'நியூக்ளிய’ஸில்தான் 'ஜீன்ஸ்’ எனப் படும் அந்த மனிதனின் பரம்பரை பாதுகாப்பாக இருந்து, தலைமுறை தலைமுறையாகப் பயணிக்கிறது. 'பரம்பரை’ என்றால் ராஜராஜ சோழனின் அமைச்சர் ஒருவர் கணக்கில் புலி என்றால், அவருடைய பரம்பரையில் வந்த, இப்போது ஐ.ஐ.டி-யில் படிக்கும் பேரனும் கணக்கில் புலியாக இருக்கக்கூடும். இவர்களுக்கு நடுவில் யாருமே கணக்கில் கில்லாடியாக இல்லாமலே இருக்கலாம். இது இயற்கையின் விந்தை!
செயற்கையாக விந்து என்கிற (வெறும் அர்த்தம் இல்லாத!) திரவத்தை விஞ்ஞானிகள் உருவாக்கினாலும், இந்த 'பரம்பரை மேஜிக்’கை எப்படி, யாரால் அதற்குள் வைக்க முடியும்?!
ஸ்ரீமதி வெங்கடேஷ், செகந்திராபாத்.
நுணுக்கமான வேலைகளைச் செய்யும்போது (ஊசிக்குள் நூலை நுழைப்பது, வாட்ச் ரிப்பேர்) ஏன், நாக்கைப் பலர் உதட்டுக்கு வெளியே துருத்திக்கொள்கின்றனர்? உங்களுக்கு அந்தப் பழக்கம் உண்டா?
நீங்கள் வேகமாக வாக்கிங் போகும்போது தீவிரமாக எதைப்பற்றியோ சிந்திக்க ஆரம்பிக்கிறீர்கள். உடனே, என்ன நிகழ்கிறது? உங்கள் வாக்கிங் 'ஸ்லோ’வாக மாறுகிறது இல்லையா? மூளை, தன் சக்தியை உங்கள் சிந்தனைக்கு அதிகம் தர ஆரம்பிப்பதுதான் காரணம்! அதைப்போலத்தான், நுணுக்கமாக வேலை செய்யும்போது, மூளை நாக்கின் செயல்பாட்டை நிறுத்த ஆணையிடுகிறது. தலைவர் போகும்போது 'டிராஃபிக்’கை நிறுத்துவதுபோல. ஒரே வழி, நாக்கைப் பற்களால் கடித்து நிறுத்த வேண்டும். ஆனால் வலிக்கும். எனவே, நாக்கைத் துருத்திக்கொள்கிறீர்கள். நாக்கு அவ்வளவு முக்கியமா? ரொம்ப! நாக்கை விதவிதமாக இயங்கவைக்கப் பல இலாகாக்கள் மூளையில் உண்டு! (எனக்கு நாக்கைத் துருத்தும் பழக்கம் கிடையாது. ஒருவேளை நான் பாதி மூளையோடுதான் வேலை செய்கிறேனோ என்னவோ!)

சங்கமித்ரா நாகராஜன், கோயம்புத்தூர்-6.
'லாலி பாப்பு’க்கு ஏன் அப்படி ஒரு பெயர் வந்தது? (உடனே, ஒரு நடிகை லாலி பாப் சுவைக்கிற மாதிரி படம் போடாமல் விளக்குங்கள் பார்க்கலாம்!)
இது மனம் சார்ந்த பொது அறிவுக் கேள்வி?! இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் லாலி (Lolly) என்றால், நாக்கு என்று அர்த்தம். நாக்கால் வருடிச் சுவைத்துவிட்டு 'லாலி’யை, உதடுகளை மூடியவாறு, வெளியே எடுக்கும்போது 'பாப் (pop)’ என்று சத்தம் வரும். அதுதான் லாலி பாப்! மேலைநாடுகளில் பள்ளிக் குழந்தைகள் தெருவைக் கடக்கும்போது, குறுக்கே கோடுகள் போட்ட வட்டமான அட்டை ஒன்றை அவர்களை அழைத்து வரும் டீச்சர் உயர்த்திப் பிடிப்பார் - வாகனங்களை எச்சரிக்க. அவரை 'லாலிபாப்’ டீச்சர் என்று அழைப்பார்கள். (இரண்டாவதாக, நீங்கள் கேட்டதற்கு நான் பொறுப்பேற்க முடியாது!)
மு.தமிழ்ப் பாண்டியன், சென்னை-93.
ஒரு மொழியைக் கற்பதற்கு 15 ஆண்டுகள் தேவை இல்லை. இரண்டு ஆண்டுகளே போதும். நாம் எதற்கு சிறு வயது முதலே ஆங்கிலம் படிக்க வேண்டும்?
காரணம் - மூளைக்குள், மொழிகளைக் கற்றுக்கொள்ள வைக்கும் 'செல்’கள் ஒன்பது வயது வரைதான் ஏராளமாகக் கொந்தளித் துக்கொண்டு இருக்கின்றன. பிறகு, மெள்ள மெள்ளஅந்தச் செல்கள் மறையத் தொடங்குகின்றன என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது, ஒன்பது வயதுக்குள் 10 மொழிகளைக்கூட மிகச் சுலபமாகக் கற்றுக்கொள்ள முடியும். வயதானால் சிரமம்! அது ஒருபுறம் இருக்க, எந்த மொழியையும் முழுக்கக் கற்று, அதில் மேதைமை அடைய 15 ஆண்டுகள் எல்லாம் பத்தாது! ஏன்? ஒரு வாழ்நாளேகூடப் போதாது!
மா.சுந்தரமூர்த்தி, செய்யாறு.
ரஷ்ய மொழி எப்படி உருவானது? ஆங்கில எழுத்துக்கள் எப்படி அதில் கலந்தன?
ரஷ்ய மொழியைப்பற்றி விவரமாக விளக்குவது என்பது எனக்கு மிகச் சிரமமான வேலை. சுருக்கமாக,

ரஷ்ய மொழி எப்போது பிறந்தது என்பதற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் இல்லை. ஆனால், 17-ம் நூற்றாண்டுக்கு முன்பு ரஷ்யாவில் Church Slavonic என்கிற மொழிதான் எழுதப்பட்டும், பேசப்பட்டும் பிரபலமாக இருந்தது. இன்று சுமார் 20 கோடி மக்கள் ரஷ்ய மொழி பேசுகிறார்கள். ரஷ்ய மொழிக் கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஒரே தாய்தான்! - பண்டைய Indo European மொழி!
18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஜார் மன்னர் பீட்டர் தி க்ரேட் ஆண்ட போது ரஷ்ய மொழியின் எழுத்துக்கள் மாற்றப்பட்டன. ரஷ்ய மொழியின் எழுத்துக்கள் அடிப்படையில் ஆங்கி லம் அல்ல. கிரேக்க-ரோமன் மொழியில் இருந்து வந்த ஸைரிலிக் (Cyrillic Alphabet) எழுத்துக்களில் இருந்து வந்தது. (ஆங்கில எழுத் துக்களே ஆங்கிலேயர் உருவாக்கியது அல்ல!). ரஷ்ய மொழி, பேசுவதற்குச் சிக்கலானது. சென்னை, மதுரை, கோவை தமிழ் மாதிரி விதவிதமாகப் பேசலாம்!