மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 72

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 72

மூன்றாம் நாள் நள்ளிரவில் உதிரனும் அங்கவையும் எயினூருக்குள் நுழைந்தனர். நாய்களின் குரைப்பொலியைக் கேட்டு ஊரே விழித்துக்கொண்டது. உடலும் மனமும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் இருந்தன. எழுவனாற்றின் மணல்வெளியைக் கடக்க முடியவில்லை. எத்தனை காலடித் தடங்கள், யானையினுடையவை எத்தனை, வில் வீரர்களுடையவை எத்தனை, கொன்றழிக்க வேண்டிய எதிரிகளின் எண்ணிக்கைதான் எத்தனை எத்தனை!

பார்த்த காட்சியை மற்றவர்களிடம் சொல்ல, கொந்தளிக்கும் உணர்வு இடம் தரவில்லை. எயினூரிலிருந்து மிகத் தள்ளி குன்றுகள் பலவற்றைத் தாண்டி ஓடும் எழுவனாறு, எதிர்ப்புறமாகத் திரும்பிச் செல்கிறது. எனவே, எயினூர் மக்கள் யாரும் படையைப் பார்த்தறியவில்லை. வந்ததும் அங்கவையை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு வீரர்கள் இருவரை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாகப் புறப்பட்டான் உதிரன்.

மலைப்பாதையில் செங்குத்தான வழித்தடத்தில் கோழியனூரை நோக்கி மேலேறினர். இரவில் இந்தப் பாதையில் செல்வது ஆபத்து என ஊரார் தடுத்தபோதும் கேட்கும் நிலையில் உதிரன் இல்லை. கோழியனூரை அடைந்துவிட்டால் அங்கு காவல் வீரர்களிடம் விட்டுவிட்டு வந்த `குதிரையில் எவ்வியூர் விரைய வேண்டும். எதிரியின் படைகள் பறம்புக்குள் நுழைந்துள்ள செய்தியை மிக விரைவாக பாரியிடம் கொண்டு சேர்க்க வேண்டும். எழுவனாற்றின் வழித்தடத்தை யொட்டிய மலைப்பகுதியில் ஊர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. நாளையோ, நாளை மறுநாளோ படை வந்து கொண்டிருப்பதை மக்கள் பார்த்து விடுவர். வந்துகொண்டிருப்பது, இதுவரை பார்த்திராத அளவு எண்ணிக்கைகொண்ட பெரும்படை. எனவே, ஆங்காங்கே உள்ள மக்கள் தாக்குதலைத் தொடங்கிவிடக் கூடாது. நன்கு ஒருங்கிணைந்த தாக்குதலாக இருக்க வேண்டும். செய்தியை மிக விரைவாகக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியம்.’

நன்றாக வழி தெரிந்த இருவரோடு தான் மலையேற்றத்தைத் தொடங்கினான் உதிரன். செங்குத்தான பெரும்பாறைகளில் துணிந்து முன்னேறிச் சென்றனர். காலடியில் உருளும் கற்கள் கீழே போய் விழும் ஓசையைக்கூடக் கேட்க முடியவில்லை. மலைச்சரிவு அவ்வளவு ஆழமுடையதாக இருந்தது. பல இடங்களில் வேர்களையும் கொடிகளையும் பிடித்து மேலேற வேண்டியிருந்தது. வீரர்கள் இருவரும் உதிரனை அழைத்துச் செல்வதில் மிகக் கவனமாகச் செயல்பட்டனர்.

ஆனால், உதிரன் வெறிகொண்டபடி மேலேறிக் கொண்டிருந்தான். எந்த ஆபத்தையும் பொருட்படுத்த அவன் ஆயத்தமாய் இல்லை. அங்கவையின் செயல் அவனை உலுக்கியது. `எவ்வளவு இக்கட்டான நிலையில் தனியொருத்தியாக இருந்து என்னைக் காப்பாற்றியுள்ளாள். கடைசி வரை நம்பிக்கை இழக்காமல் செயல்பட்ட அவளின் துணிவு இணையற்றது. கால்களுக்குக் கீழே எண்ணிலடங்காத எதிரிகள் நகர்ந்து போய்க்கொண்டிருக்கும்போது பகலும் இரவும் கவனமாகத் தன்னையும் காத்து என்னையும் காத்துள்ளாள். இந்த உறுதிப்பாட்டுக்கும் துணிவுக்கும் முன்னால் நம் செயல்கள் எல்லாம் பொருட்டே அல்ல’ என்று அவனுக்குத் தோன்றியது. எயினூர் வீரர்கள் சற்றே தயக்கத்தோடு கடக்கும் இடங்களைப் பாய்ந்து கடந்துகொண்டிருந்தான் உதிரன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 72

அதிகாலை கோழியனூர் வந்து சேர்ந்ததும் காவல் வீரர்களிடம் குதிரையை வாங்கிக்கொண்டு எவ்வியூர் நோக்கி விரைந்தான். பாய்ந்து செல்லும் குதிரையால் அவனது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. `மூன்று ஊர்களில் குதிரையை மாற்றி, பயணத்தை நிற்காமல் தொடரவேண்டும்’ என்று எண்ணியபடி பகல் இரவு பாராமல் விரைந்துகொண்டிருந்தான்.    

ங்கவை சொல்லிய ஒவ்வொரு சொல்லும் அவனால் நம்பவே முடியாததாக இருந்தது. அவன் விழிப்புற்றபோது பெரும்பான்மையான படைகள் கடந்துவிட்டன. பொழுது நீங்கி நீண்டநேரத்துக்குப் பிறகுதான் அவன் மயக்கம் தெளிந்தான். மரத்தின் உச்சிக்கிளையில் உட்கார்ந்த நிலையில் கயிற்றால் கட்டப்பட்டிருப்பது ஏனென்று அவனுக்கு நீண்டநேரம் புரியவில்லை. அவன் பேசத் தொடங்கியதும் ``அதிர்ந்து பேசாதே!’’ என எச்சரித்தாள் அங்கவை. பொழுது மங்கி இருள் சூழ்ந்ததால் அவனால் நடப்பதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. நீண்டநேரத்துக்குப் பிறகு மிக மெதுவான குரலில் நகரும் படையைப் பற்றிக் கூறினாள். அப்போதும் அவனது கட்டை அவள் கழற்றவில்லை. நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிமேலிட அவன் எதுவும் செய்துவிடக் கூடாது என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். பறம்புக்குள் எதிரிகள் நுழைந்ததை அறிந்த பிறகும் ஒரு காவல் வீரன், கதை கேட்டுக்கொண்டிருக்க மாட்டான் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், இப்போது நிலைமை வேறுவிதமாக இருக்கிறது.

அவன் மயக்கம் நீங்கிய பொழுதிலிருந்து அதிர்ச்சிமேல் அதிர்ச்சிகளை அவள் சொல்லிக்கொண்டே இருந்தாள். ஆற்றின் மேலே நல்ல உயரத்திலிருந்து பார்த்ததாலும், எண்ணறிவில் தேர்ந்தவளாக இருந்ததாலும் நகரும் படையைப் பற்றிய துல்லியமான கணக்கை அவளால் சொல்ல முடிந்தது.

சொல்லிக்கொண்டேயிருந்த அவளின் குரல் காதை விட்டு அகல மறுக்கிறது. ``பறம்புவீரனாக இந்தப் படையைத் தடுப்பது தான் எனது முதல் வேலை. அருகில் இருக்கும் ஊர்களைத் திரட்டி இந்த இரவிலேயே தாக்குதலைத் தொடங்க முடியும். எதிரிகளை இந்த இடம் விட்டுத் துளியும் நகரவிடாமல் என்னால் செய்ய முடியும்” என ஆத்திரம்கொண்டு உரைத்தபோது, மிகவும் அமைதியாக ஆனால் உறுதியான குரலில் அவனது எண்ணத்தை மறுத்தாள் அங்கவை.

``தந்தை, தேக்கன், முடியன் என யாரும் சிந்தித்திராத ஒரு திசை வழியில் பறம்புக்குள் பெரும்படை நுழைந்துள்ளது. அப்படியென்றால், இதற்குப் பின்னால் விரிவான திட்டமிடல் இருக்க வேண்டும். சேரனும் பாண்டியனும் படையெடுப்பார்கள் என எதிர்நோக்கி இருக்கும்போது இவ்வளவு பெரும்படையோடு சோழன் ஏன் உள்ளே நுழைகிறான்? அதுவும் எழுவனாற்றின் வழியினூடே எங்கே போகிறான்? இதெல்லாம் விரிவான தன்மையோடு எதிர்கொள்ள வேண்டிய ஒன்று. எனவே, செய்தியை உடனடியாக எவ்வியூருக்குக் கொண்டு செல்லும் வேலையை மட்டும் செய்.”

எதிரியைக் கண்டு குருதி கொப்புளிக்கச் சினந்தெழுந்த உதிரனை மடக்கிப் பிடித்து எவ்வியூர் நோக்கி அனுப்பினாள் அங்கவை. ``செய்தி சொல்ல மற்றவர்களைக்கூட அனுப்பலாம். நான் எதிரிகளைத் தொடர்ந்து செல்வதுதான் சரி” என உதிரன் மீண்டும் வாதிட்டபோது அங்கவை சொன்னாள், ``எதிர்பாராத திசையிலிருந்தே இவ்வளவு பெரும்படை உள்ளே நுழைந்திருக்கிறது என்றால், மற்ற திசைகளிலிருந்து எவ்வளவு படைகள் உள்ளே நுழைந்துள்ளதோ! அவற்றை எதிர்கொள்ள யார் யார் எங்கெங்கே செல்வது என்பதெல்லாம் பறம்பின் தலைவன் எடுக்க வேண்டிய முடிவு. நீ போரிடவேண்டிய இடம் எது என்பதை எவ்வியூருக்குப் போய் கேட்டுத் தெரிந்துகொள்” எனத் திடம்கொண்ட குரலில் கூறினாள் அங்கவை. ஈட்டி ஏந்திய பல்லாயிரம் எதிரிகள் கீழே போய்க்கொண்டிருப்பதை அறிந்தபோதும் நடுங்காத அவளின் கால்களைவிட உறுதிமிக்கதாக இருந்தன அவளுடைய சொற்கள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 72

பொழுது மங்கிக்கொண்டிருக்கும் மாலை வேளையில் நாகப்பச்சை வேலியைத் தாண்டிப் பாய்ந்தது உதிரனின் குதிரை. மேல்மாடத்தில் பாரி, தேக்கன், முடியன், காலம்பன் ஆகியோர், தென் திசையிலிருந்து கூழையன் அனுப்பிய செய்தியைப் பற்றித் தீவிரமாகக் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர். தொலைவிலேயே பாரியின் கண்களுக்கு உதிரனின் பாய்ச்சல் தெரிந்தது. அங்கவையின்றித் தனியே வருபவனின் வேகம் ஆபத்து ஒன்றை முன்னுணரச்செய்தது. மாடத்திலிருந்து விரைந்து கீழிறங்கினர்.

இரண்டு நாள்களாக உணவேதுமின்றி அவ்வப்போது குதிரையை மட்டும் மாற்றி விரைந்து வந்து சேர்ந்தான் உதிரன். கிறங்கியபடி வந்தவனை சற்றே இளைப்பாறவைக்க முயன்றார் தேக்கன்.  ஆனால், கொந்தளிக்கும் உணர்வோடு இருந்த உதிரனால் அவர்கள் கொடுக்கும் நீராகாரத்தை வாங்கிக் குடிக்க முடியவில்லை. பேச்சு ஒழுங்கோடு வெளிவர மறுத்தது. முன்னும் பின்னுமாகத் திணறினான். அங்கவை இல்லாமல் உதிரன் மட்டும் வந்த செய்தி ஆதினியை எட்டியபோது இதுவரை இல்லாத அச்சத்தை அடைந்தாள்.

மாளிகையை நோக்கி ஓடோடி வந்தாள். அவள் உள்ளே நுழைந்தபோது அங்கவையின் கண்களின் வழியே நகர்ந்து செல்லும் யானைப்படையின் எண்ணிக்கையைச் சொல்லிக்கொண்டிருந்தான் உதிரன். காலாட்படையின் தன்மை வேறுபாடுகளைச் சொன்னான். குதிரைப்படை ஏதுமில்லை. படைகளை ஒழுங்கமைக்கவும் தளபதிகளின் பயன்பாட்டுக்காகவும் மட்டுமே குதிரைகள் வந்துள்ளன. வீரர்களின் முகங்களில் களைப்பேதும் இல்லை. தூசிப்படையினர் காதுகளின் மேல்மடல்களில் மூன்று ஓட்டையிட்டிருந்தனர் என்பதுவரை அங்கவை சொல்லி அனுப்பியிருந்தாள்.

ஏறக்குறைய அனைவரும் திகைத்துப்போயினர். `சோழன் ஏன் படையெடுத்து வருகிறான்? எழுவனாற்றினூடே பறம்புக்குள் நுழையும் வழி எப்படி அவனுக்குத் தெரிந்தது? அவனது படையின் வலிமை யானைகளை நம்பியதாக இருக்கிறது. அது மிகச்சரியான உத்தியே. இவ்வளவு தெளிவான திட்டமிடலோடு புறப்பட்டு வரும் நோக்கம் என்ன?’ என, ஒவ்வொருவருக்குள்ளும் கேள்விகள் உருண்டுகொண்டிருந்தன.

அவை அமைதிகொண்டது. ஆதினி பெருமூச்சு விட்டாள். அங்கவைக்கு ஆபத்து ஏதும் நிகழவில்லை. அதுபோதும். பறம்புக்குள் எவ்வளவு பெரியபடை வந்தாலும் அச்சம்கொள்ள ஒன்றுமில்லை. எனவே, அவை விட்டு அகன்றாள்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 72

முந்தைய நாள் நள்ளிரவு, கூழையன் செய்தி அனுப்பியிருந்தான். `குடநாடும் குட்டநாடும் படையை ஒருமுகப்படுத்தியிருக்கின்றன. ஆயிமலையின் பின்புறம் இருநாட்டுப் படைகளும் ஒன்றுசேர்ந்து பாசறை அமைத்துள்ளன. ஆயிமலையின் கணவாய் வழியாக இன்னும் சில நாள்களில் அவர்கள் பறம்புக்குள் நுழைய உள்ளனர்’ என்பதுதான் கூழையன் அனுப்பியுள்ள செய்தி. வழக்கத்துக்கு மாறான தன்மையுடன் சேரர்களின் நடவடிக்கை உள்ளது. இருவரும் தனித்தனியே போரிடுவதற்கான ஏற்பாட்டுடன் இருந்ததாகத்தான் ஏற்கெனவே கூழையன் செய்தி அனுப்பி யிருந்தான். திடீரென எப்படி இரு படைகளும் ஒருங்கிணைந்தன? ஆயிமலை கணவாய்ப் பகுதியின் வழியே பறம்புக்குள் நுழையும் துணிவு எப்படி இவனுக்கு வந்தது? கிழக்குப்புறத்தில் பாண்டியன் படை அணி திரண்டுகொண்டிருப்பதற்கும், சேரனின் நடவடிக்கைக்கும் இருக்கும் உறவுகள் என்ன என்பதைப் பற்றிதான் அவையில் ஆய்ந்துகொண்டிருந்தனர்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும்மேலாக சேரர்களின் தாக்குதல் எத்தனையோ முறை நிகழ்ந்துள்ளது. ஆனால், இந்த முறை உதியஞ்சேரலின் நடவடிக்கைகளில் நிறைய வேறுபாடு தெரிகிறது. அவன் மிகக் கவனமாகப் பல வேலைகளைச் செய்கிறான். பறம்புக்குள் வழி அமைக்க தொடர்ந்து அவன் முயன்றுள்ளான். ஆனால், அவன் முயன்ற எந்தப் பகுதியிலும் இல்லாமல் ஆயிமலையில் கொண்டுவந்து இப்போது படையை நிறுத்திவைத்துள்ளான். அவனது திட்டமிடலின் ஒரு பகுதியாக நமது எண்ணங்களைக் குழப்பும் உத்தி இடம்பெற்றுள்ளது. இதை எதிர்கொள்ள, செய்யவேண்டியது என்ன எனச் சிந்தித்துக்கொண்டிருந்தவர்களிடம்தான் சோழப்படை உள்நுழைந்ததைப் பற்றிச் சொன்னான் உதிரன்.

உதிரன் சொன்ன செய்தி, எல்லோருக்குள்ளும் குழப்பத்தையே உருவாக்கியது. இந்தப் படையெடுப்பின் நோக்கத்தையும் தன்மையையும் புரிந்துகொள்ள முடியவில்லை. இத்தனை ஆயிரம் எதிரிகள் இதுவரை பறம்புக்குள் நுழைந்ததில்லை. அங்கவை சொல்லியுள்ள கணக்குப்படி காலாட்படையின் எண்ணிக்கை ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக இருக்கிறது. யானைகளின் எண்ணிக்கை ஐந்நூறு.

`எதிரியின் படையைப் பற்றி பாரி வேறென்ன கேட்கப் போகிறான்?’ என்று உதிரன் எதிர்பார்த்திருந்தபோது பாரி கேட்டான், ``நீ கண் விழித்தது எப்போது?”

``மறுநாள் மாலையில்.”

``போதிய உணவின்றிப் பல நாள்களாக இருக்கிறாய். முதலில் உணவருந்திவிட்டு வா. பின்னர் பேசுவோம்” என்றான்.

உதிரனுக்கு எழுந்து செல்ல மனமில்லை. தயங்கியபடியே வீரர்களோடு அவையை விட்டு வெளியேறினான்.

துவளாத அவனது நடையைப் பார்த்தபடியே பாரி சொன்னான், ``நாகக்குடி என்பதால் மறுநாள் கண்விழித்திருக்கிறான். ஒன்றுக்கும் மேற்பட்ட அடவி ஈ கடித்திருந்தால் மற்ற யாராக இருந்தாலும் மரணித்திருப்பர்.”
தேக்கன் `ஆம்’ எனத் தலையசைத்தான். உதிரன் வரும் வரை பேச்சு நீண்டது.

புதிய சூழலுக்கு ஏற்ப தனது கருத்தைக் கூறினான் முடியன். ``ஆயிமலையின் கணவாய்ப் பகுதி மிகக் குறுகியது. அதனுள்ளே நுழைந்து வந்தாலும் அடர் காடுகளைக் கொண்டது. எனவே, அந்தப் பகுதியில் சேரனால் படை நடத்தி உள்நுழைய முடியாது. அவன் வேறு ஏதோ திசை வழியில் இருந்தே உள்ளே வரத் திட்டமிட்டுள்ளான். நமது கவனத்தைத் திருப்பவே இந்த ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறான்.”

``அடர்காட்டை எவ்வளவு தொலைவு ஊடறுக்க முடியும்? பெரும்படைகள் நகர்வதற்கான நில அமைப்பை அவனால் எப்படி உருவாக்கிக்கொள்ள முடியும்?” எனக் கேட்டார் வாரிக்கையன்.

``எந்தவித முன்னனுபவமும் இல்லாமல் சோழன் உள்நுழைந்துள்ளான். பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட படை இருக்கும் மமதையில்தான் மூடத்தனமான முடிவை எடுத்துள்ளான். ஆனால், உதியஞ்சேரலை அப்படிச் சொல்லிவிட முடியாது. நம்மால் கணிக்க முடியாத ஓர் ஆட்டத்தை ஆடிப்பார்க்க எண்ணுகிறான்” என்றார் தேக்கன்.

உரையாடலைக் கேட்டபடி அமைதிகொண்டிருந்த பாரி இப்போது சொன்னான், ``தென்புறத்துக் காவல் வீரர்கள் பயன்படுத்தும் குதிரைப்பாதை ஒன்று ஆயிமலையின் வழியே செல்கிறதல்லவா, அதை அடிப்படையாகக்கொண்டு உதியஞ்சேரல் திட்டம் தீட்டியிருப்பான்.”

யாரும் சிந்திக்காத கருத்தாக அது இருந்தது. ``ஆனால், குதிரைப்பாதையில் பெரும்படை ஒன்று எப்படி நகர்ந்து வர முடியும்?” எனக் கேட்டான் முடியன்.

``அதுவன்று கேள்வி, அந்தக் குதிரைப்பாதையை அவன் எப்படி அறிந்தான் என்பதுதான் கேள்வி. அந்தத் திசை செல்லும் நமது காவல் வீரர்களை அவர்கள் தொடர்ந்து கவனித்ததன் மூலம் அறிந்துள்ளனர். அப்படியென்றால், அந்தப் பாதையின் வழியிலான ஒரு முயற்சிக்கு அவர்கள் ஆயத்தமாகியுள்ளனர்” என்றார் வாரிக்கையன்.

மற்றவர்களின் சிந்தனை அதை நோக்கிப்போனது. ``சாலமலை, கழுவாரிக்காடு, நரிமுகடு ஆகிய மூன்று பகுதிகளில்தான் சேரன் படைநடத்தி உள்ளே வர முடியும். ஆனால், எந்தவிதக் காரணமும் இல்லாமல் ஆயிமலையின் பின்புறம் படையை நிறுத்தியுள்ளது எதனால்?” எனக் கேட்டான் முடியன்.

அமைதி நீடித்தது. ``அவர்களின் திட்டம் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். மூவரும் நமது கைக்கு அருகே வந்துவிட்டனர். நாம் செய்ய வேண்டியதைப் பற்றி முடிவெடுப்போம்” என்றான் தேக்கன்.
சிறிது நேரம் அமைதி நீடித்தது. அச்சமோ அவசரமோ யாரிடமு மில்லை. சப்பணமிட்டு அமர்ந்திருந்த பாரி எழுந்தபடி கூறினான், ``நீராட்டுக்காகக் கொற்றவையின் கூத்துக்களத்தில் கூடுவோம்.”

கொற்றவையின் கூத்துக் களத்தைக் காவல்வீரர்கள் வேகவேகமாகத் தூய்மைப்படுத்தி பந்தங்களை ஏற்றிவைத்தனர். உதிரன்தான் முதலில் வந்தான். அவன் சொல்லித்தான் வீரர்களுக்குத் தெரியும். நீராட்டுச் சடங்கு எவ்வளவு உக்கிரமேறியது என்பதை அனைவரும் அறிவர்.

தேக்கன், வாரிக்கையன், முடியன் ஆகிய மூவரும் அடுத்ததாக வந்து சேர்ந்தனர். சற்றுநேரத்தில் பாரியும் காலம்பனும் வந்தனர். அவர்களுக்குப் பின்னே ஆதினி இரு பெண்களுடன் வர, இறுதியில் குலநாகினிகள் கூட்டமாக வந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 72

பந்தங்கள், எங்கும் ஏற்றப் பட்டிருந்தன. வெளிச்சம் கண்டு பறவைகள் படபடத்து ஓசை யெழுப்பின. குலநாகினிகளில் மூவர் உடுக்கையைக் கையில் கொண்டிருந்தனர். ஆதினியுடன் வந்த இரு பெண்களில் இளம்பெண் ஒருத்தி நீர் நிறைந்த பச்சைமண் குடத்தைத் தூக்கி வந்தாள். நீர்க்குடத்துக்குள் முன்னோர்களின் எலும்புகள் இருந்தன. இன்னொருத்தி சூல்வயிற்றுக்காரி. அவளோ பனங்கருக்கைக் கலயத்துள் செருகி, தலையில் ஏந்திவந்தாள்.

போர் என்பது கொற்றவையின் திருவிழா. ஆதிகாலம்தொட்டு அவள் மனம் குளிரும் நிலம் போர்க்களம்தான். சிதைவுண்ட உடல்களும் சரிந்து தொங்கும் குடல்களும் தாடை வெட்டுப்பட்டுப் பிளந்துகிடக்கும் முகங்களும்தான் அவளுக்கான படையல்.

குலுங்கும் முலைகளில் குருதி பெருக்கி தன் மக்களை அவள் பாலூட்டி வளர்ப்பதே, போர்க்களத்தில் இக்கைமாற்றை அவர்கள் செய்வார்கள் என்பதால்தான், செம்பாறையில் தலைகள் உருண்டு தெறிக்கும் ஓசையினையே உடுக்கையின் ஓசையாக்கிக்கொண்டவள். எதிரிகளின் குருதி, நிலமெங்கும் வழிந்தோடும். செவ்வீரமண்ணைப் பிசைந்து அவளுக்கு ஊட்டப்போகும் நற்செய்தியைச் சொல்லவே குலநாகினிகள் வந்துள்ளனர்.

பாரி, தேக்கன், முடியன், வாரிக்கையன், காலம்பன் ஆகிய ஐவரும் குலநாகினிகளுக்கு சற்றுப் பின்னே நின்று கொண்டிருந்தனர். அவர்களை விட்டு விலகி மற்ற வீரர்களோடு நின்றுகொண்டிருந்தான் உதிரன். `போரைத் தொடக்க ஆயத்தநிலையில் உள்ள சேரன், படை நடத்திப் பறம்புக்குள்ளே வந்துள்ள சோழன், பறம்பின் எல்லையில் படையை நிலைகொள்ளச் செய்யும் பாண்டியன் என மூன்று பெரும் எதிரிகள் சூழ்ந்த நிலையில் நமது தாக்குதலைத் தொடங்க பாரி சொல்லப்போகும் உத்தரவு என்ன? யார் யார் எந்தத் திசையில் களம் புகவேண்டும்? பறம்பின் தலைவன் சொல்லப்போகும் ஆணை என்ன?’ என்பதறிய உதிரனின் மனம் துடித்துக்கொண்டிருந்தது.

கூட்டத்தின் ஓசையையும் பந்தங்களின் வெளிச்சத்தையும் கண்டு தேவவாக்கு விலங்கு குரலெழுப்பி, அவர்களுக்கான உத்தரவைக் கொடுத்தது. குலநாகினிகளும் ஆதினியும் சடங்குகளை வேகப்படுத்தினர். பனை ஓலைக் கூடையில் கனிகளையும் இதர பொருள்களையும் கொண்டுவந்த குலநாகினி ஒருத்தி, அவற்றை எடுத்துக் கீழே வைக்கத் தொடங்கினாள். உடல் முழுவதும் இறகு உதிர்த்த நீர்ச்சேவல் ஒன்று கால் கட்டப்பட்ட நிலையில் அதில் இருந்தது.

யானைமுடியும் புலிமயிரும் கொண்டு பின்னப்பட்ட கயிற்றால் நூழிக்கிழங்கைக் கட்டியிருந்தனர். சாம்பற் புழுதியில் குருதி பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணற்ற உருண்டைகளை உருட்டியிருந்தனர். கூத்துக்களத்தின் இடப்புறமிருந்து தேவவாக்கு விலங்கின் வழக்கத்துக்கு மாறான குரல் கேட்டதும் உடுக்கை எடுத்து அடிக்கத் தொடங்கினாள் குலநாகினி ஒருத்தி. மற்றவர்களோ குலவையிடத் தொடங்கினர்.

உடுக்கை ஓசையும் குலவை ஓசையும் கூடின. குலநாகினிகள், நடுவில் நின்றிருந்த ஆதினியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவளோ, முடிச்சிட்ட தலைமுடி அவிழ மெள்ளச் சிரித்துத் தோள் குலுக்கி ஆடத் தொடங்கினாள். உடுக்கையின் ஓசைக்கு ஏற்ப ஆட்டத்தின் வேகம் கூடியது. மிக விரைவாக அது வெறியாட்டமாக மாறியது. நள்ளிரவில் உடலெல்லாம் கொதிப்புற்றுத் துடிக்க ஆதினியின் ஆட்டம் குலநாகினிகளையே நடுக்குறச்செய்வதாக இருந்தது.

குலவை ஓசை மேலும் கூடியது. உடுக்கையின் ஓசை வெடிப்புற்றுத் தெறித்தது. குலநாகினிகள் மூவரும் ஆதினியின் முன் மண்டியிட்டு உடுக்கை அடித்தனர். அவர்களின் கண்களில் நீர் தாரைதாரையாக இறங்கிக்கொண்டிருந்தது. ஆதினியின் ஆவேசம் மேலும் கூடத்தொடங்கியது. உடுக்கையின் ஒலி, நரம்புகளை முறுக்கிச் சுழற்றியது. மற்ற குலநாகினிகள் அவளின் தோள்களைப் பிடித்து அமுக்கி உட்காரவைக்க முயன்றனர். குலவை ஓசைக்கு ஏற்ப குலநாகினிகளின் சடங்கு தீவிரமடைந்தபடியிருந்தது. பற்களை நறநறவெனக் கடித்தபடி பிடித்திருப் போரை உலுக்கியெடுத்தாள் ஆதினி. நெருங்க முடியாப் பறம்பின் தலைவியைக் குலநாகினிகள் மொத்தமாக இணைந்து தோள்களைப் பிடித்து அழுத்தினர்.

உடுக்கையின் ஒலியும் குலவை ஓசையும் பறவைகளின் கத்தல்களும் இணைய கூத்துக்களம் உருமாறிக் கொண்டிருந்தபோது பெருங் குரலெடுத்து ஆதினி கத்தினாள். அதுவரை சாய்ந்துகிடந்த நீர்ச்சேவல், எழுந்து நின்று தலை சிலுப்பிக் கூவியது. அதைக் கண்டவுடன் பாய்ந்து சென்ற மூத்த குலநாகினி, இறகு உதிர்த்த நீர்ச்சேவலை எடுத்து ஆவேசமாகக் கத்தியபடி அதன் தலையை முறுக்கி அத்தெடுத்தாள். குலவை ஓசை உச்சிக்குச் சென்றது.

வலக்கையில் இருந்த நீர்ச்சேவலின் தலையை இடப்புறமாகவும், இடக்கையில் இருந்த நீர்ச்சேவலின் உடலை வலப்புறமாகவும் வீசி எறிந்தாள். குலவை ஓசையும் உடுக்கையின் ஓசையும் காட்டை மிரட்டின. மற்ற குலநாகினிகள் நூழிக்கிழங்கையும் குருதி உருண்டைகளையும் எல்லா திசைகளிலும் வீசியெறிந்தனர். குலவை ஒலியோடு தேவவாக்கு விலங்கின் ஒலியும் இணைந்து இருளை உலுக்கின.
இளம்பெண் சுமந்துவந்த பச்சைமண் குடத்து நீரை, அமர்ந்திருந்த ஆதினியின் தலையில் ஊற்றினர். முன்னோர் களின் எலும்புகள் மேலெங்கும் நழுவி இறங்கின. இறங்கும் எலும்பை இரு கைகளிலும் ஏந்தினாள் ஆதினி.

ஆயிரம் அணங்குகள் காடெங்கும் இருந்து இறங்கி வந்து ஆதினிக்குள் அடங்க, எண்ணிலடங்கா முன்னோர்களின் விலா எலும்பை இரு கைகளிலும் ஏந்தினாள் ஆதினி. அதைக் கண்டதும் ஆவேசம்கொண்ட பாரி, அவளை நோக்கி வந்தான். மற்றவர்களும் தொடர்ந்து வந்தனர். ஆதினியின் கையில் இருந்த எலும்பு ஒன்றை எடுத்தான் பாரி. உடுக்கை அடிப்பவர்கள் பாரியைச் சுற்றி ஒலியெழுப்பினர். குலவை ஒலி மேலிட எடுத்த எலும்பு கொண்டு மார்பிலே கீறினான் வேள்பாரி. கொப்புளித்துப் பெருகியது பாரியின் குருதி. உடுக்கை அடிப்பவர்களின் ஆவேசம் மொத்தக் காட்டையும் உலுக்கியது. மற்ற நால்வரும் அதேபோல முன்னோர்களின் எலும்பு எடுத்து மார்பிலே கிழித்தனர்.

திக்கெட்டுமிருந்து தேவவாக்கு விலங்குகளின் குரல் எதிரொலித்துக்கொண்டிருக்க, சூல்வயிற்றுக்காரி தலையில் சுமந்துவந்த கலயத்தோடு பாரியின் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தாள். குடத்துக்குள் இருந்த பனங்கருக்கினை எடுத்த பாரி, கீறிய மார்பின் மீது உரக்கத் தேய்த்தெடுத்தான். மேற்சதையைப் பிய்த்துக்கொண்டு வந்தது பனங்கருக்கு. குலவை ஓசையும் உடுக்கை ஓசையும் பறவைகளின் கத்தலும் விலங்கின் கதறலும் இணைய ஐவரின் மார்புக் குருதியை பனங்கருக்குகள் வாங்கிக்கொண்டன.

குருதி தோய்ந்த பனங்கருக்கினை ஆதினியின் கைகள் ஏந்திப்பிடிக்க, சூல்வயிற்றுக்காரி மேடையின் மீது ஏறி அமர்ந்தாள். குலநாகினிகள் ஆளுக்கு ஒரு திசை பார்த்து ஆவேசமாய் ஆடினர். கொற்றவையின் பசியடக்கி, தாகம் தீர்க்க எதிரிகளை மலைமலையாய்க் கொன்றழிப்போம் என ஐவரும் மார்புக் குருதிகொண்டு உறுதி அளித்ததால் ஆதினிக்குள் இருந்த கொற்றவை அகமகிழ்ந்தாள். வாய் அகன்று காடதிரச் சிரித்தாள்.

ஆனால், மேடையில் அமர்ந்திருந்த சூல்வயிற்றுக்காரி சிரிக்கவில்லை. ஆவேசம் தணியவில்லை. விரித்த விழிகளில் இமையாடவில்லை. பெருங்குரலெடுத்து ``வா... ஏங்கிட்ட வா...” எனப் பேய்க்கூச்சலிட்டாள்.
தலையை மறுத்து மறுத்து ஆட்டி, ``விழப்போகும் எதிரிகளின் எண்ணிலடங்காத உடல்களைத் தின்று முடித்துவிட்டு வருகிறேன். உருவிய குடல்களால் குன்றுகள் மறைந்து கிடக்க, காடெங்கும் பெருகியோடும் குருதியைக் குடித்துவிட்டு வருகிறேன். அதற்குள் ஏன் அழைக்கிறாய்?” என மறுத்துக் கத்தினாள் கொற்றவை. ஆனால், சூல்வயிற்றுக்காரி விடவில்லை. அதைவிடப் பெருங்குரலெடுத்துக் கத்தினாள். ``காலம் தாழ்த்தாதே, எனக்கான வாக்கை அளித்துவிட்டு நீ பசியாறிக்கொள்.”

கொற்றவை நகரவில்லை. ``என் மக்கள் கொன்றளித்துள்ள பிணங்களைப் புசித்து முடிக்கும் வரை பொறுத்திரு” எனக் கூறி, பற்களை நறநறவெனக் கடித்து, காட்டையே இரு கூறுகளாகப் பிளந்துகொண்டிருந்தாள்.

குலநாகினிகள் ஒன்றுசேர்ந்து கொற்றவையை, சூல்வயிற்றுக்காரியை நோக்கி இழுத்துச் செல்ல முயன்றனர். ஆனால் யாராலும் அவளை அசைக்க முடியவில்லை. ஆயிரம் அணங்குகள் ஒன்றாய் இறங்கி ஆடிக்கொண்டிருந்தனர். குலவையின் பேரொலி பல மடங்கு அதிகரித்தது. உடுக்கை ஓசையில் இலைகள் நடுங்கின. குலநாகினிகள் எல்லோரும் சேர்ந்து பெரும் ஆவேசத்தோடு உட்கார்ந்திருந்தவளைத் தூக்கி மேடையின் மீதிருந்த சூல்வயிற்றுக்காரியை நோக்கி நகர்த்திச் சென்றனர்.

சூல்வயிற்றுக்காரியின் கண்ணில் நீர் வழிந்துகொண்டிருந்தது. ஆனால், கொற்றவை தன்னை நோக்கி வரத் தொடங்கியதும் அவளின் முகத்தில் சிரிப்பு படரத் தொடங்கியது. குலநாகினிகள் வலுக்கொண்ட மட்டும் நகர்த்தினர். அமர்ந்திருந்தவள் ஆதினியல்லள், கொற்றவை. அவ்வளவு எளிதாக நகர்த்திவிட முடியாது.

மேலும் மேலும் ஓசையெழுப்பி, உடுக்கையடித்து, பெருங்குரலில் கதறியபடி கொற்றவையை முன்னகர்த்தினர். மலையெனக் குவியும் பிணங்களின் குருதி வாடையை உள்மூக்கில் நுகர்ந்தபடி சற்றே அகமகிழ்ந்து எழுந்தாள். எழுந்த கணம் குலநாகினிகள் முழு ஆவேசத்தோடு மேடையை நோக்கி நகர்த்தினர். அருகில் சென்று, அமர்ந்திருந்தவளின் நிறைசூலில் கை வைத்தாள் கொற்றவை. காடு நடுங்கும் ஓசை இருளெங்கும் கேட்டது. `நிறைசூலுக்குள் இருக்கும் புது உயிருக்கு இந்த மண்ணைக் காத்தளிப்பேன்’ எனக் கொற்றவை அளித்த வாக்கு, காட்டுயிரின் காதுகளிலெல்லாம் எதிரொலித்தது.

எதிரிகளைக் கொன்றழிக்க நிகழும் சூளுரையும் குருதி குடிக்கத் துடித்தெழும் ஆவேசமுமே இந்தச் சடங்கின் உச்சம். ஆந்தைகளின் வட்டவிழி நடுக்குற்ற அந்தக் கணத்தில், இருளும் மலையும் ஒருசேர உணரும்படி காடதிரக் கத்தினான் வேள்பாரி. ``கொற்றவையின் பசி தீர்க்க எதிரிகளின் பிணங்களை மலையெனக் குவிப்போம்! பறம்பெங்கும் வேந்தர்படை சிந்தும் குருதி விட்டு ஈக்கள் அகலாது நிலைகொள்ளட்டும். சேரனின் படையை அழித்தொழிக்கும் வேலையைத் தேக்கனும் கூழையனும் உதிரனும் செய்யட்டும். கிழக்குத் திசையில் நிலைகொள்ளும் பாண்டியப்படையின் கருவறுக்கும் வேலையை முடியனும் காலம்பனும் நீலனும் செய்யட்டும். எழுவனாற்றின் மணலுக்குள் சோழப்படையைப் புதைத்தொழிக்க நான் புறப்படுகிறேன். கொற்றவையின் பெரும்பசிக்கு திசையெங்கும் விருந்தளிப்போம்.”

- பறம்பின் குரல் ஒலிக்கும்...