நடப்பு
அறிவிப்பு
Published:Updated:

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 29 - தவறை உணர்கிறேன்... தப்பிக்க என்ன வழி?

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 29 - தவறை உணர்கிறேன்... தப்பிக்க என்ன வழி?
பிரீமியம் ஸ்டோரி
News
நிம்மதி தரும் நிதித் திட்டம் - 29 - தவறை உணர்கிறேன்... தப்பிக்க என்ன வழி?

ஓவியம்: பாரதிராஜா

“என் வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் நன்கு யோசித்துச் செய்தவன் நான். ஆனால், நிதி சார்ந்த விஷயங்களிலும், முதலீடு செய்வதிலும் பல தவறுகளைச் செய்துவிட்டேன். நான் செய்த தவறுகளைத் திருத்திக்கொண்டு, எதிர்கால இலக்குகளுக்கு முதலீடு செய்ய நினைக்கிறேன். அதற்கான வழிகாட்டலைச் செய்து தாருங்கள்” என்ற கோரிக்கையுடன் பேச ஆரம்பித்தார் ரவிக்குமார்.

சென்னையில், ஐ.டி நிறுவனம் ஒன்றில் திட்ட மேலாளராகப் பணியாற்றிவரும் ரவிக்குமாருக்கு வயது 46. அவருடைய மனைவிக்கு 40 வயது. வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். ரவிக் குமாருக்கு ஒரே மகன் கெளசிக். 11 வயதாகும் கெளசிக் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். தொடர்ந்து அவர்  நம்மிடம் சொன்னதாவது...

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 29 - தவறை உணர்கிறேன்... தப்பிக்க என்ன வழி?

“நான் 2015 முதல் நாணயம் விகடனைப் படிக்கிறேன். நாணயத்தைப் படித்துத்தான் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்கினேன். என் மாத சம்பளம் ரூ.45,000. குடும்பச் செலவுகள், முதலீடுகள் அனைத்தும் சேர்த்து ரூ.56,000 ஆகிறது. பற்றாக்குறை ரூ.11,000 வருகிறது. இதனை கிரெடிட் கார்டு சுழற்சி மூலம் சமாளித்து வருகிறேன்.

எனக்குச் சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை.  நண்பர்கள் சிலர், வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கிவிடுவதால்,  வாடகை யோடு கொஞ்சம்தான் அதிகமாக இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும் என்கிறார்கள். இது குறித்து உங்கள் ஆலோசனை எனக்குத் தேவை. நிறைய எண்டோவ்மென்ட் பாலிகளை எடுத்துவிட்டேன். அவற்றை குளோஸ் செய்ய வேண்டுமா, தொடரலாமா எனக் குழப்பமாக உள்ளது.

என்னுடைய மகனின் மேற்படிப்புக்கு அடுத்த ஏழு வருடங்களில் பணம் தேவையாக இருக்கும். எவ்வளவு பணம் சேர்க்க வேண்டும் எனக் கணிக்க முடியவில்லை. என்னுடைய ஓய்வுக்காலத்துக்கு  அடுத்த  12 வருடங்களில் பணம் சேர்த்தாக வேண்டும். எவ்வளவுத் தேவையாக இருக்கும் என என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. எனக்கு அலுவலகத்தில் பி.எஃப் பணம் கிடையாது” என்றவர், தன்னுடைய வரவு செலவு மற்றும் முதலீட்டு விவரங்களை மெயில் அனுப்பி வைத்தார்.

வரவு செலவு விவரங்கள்


மாத வருமானம்     :     ரூ.45,000
இன்ஷூரன்ஸ் பிரீமியம்     :     ரூ.6,500
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி     :     ரூ.10,000
குடும்பச் செலவுகள்     :     ரூ.26,500
பள்ளிக் கட்டணம்     :     ரூ.13,000

மொத்தம்: ரூ.56,000 (பற்றாக்குறை தொகையை கிரெடிட் கார்டைக் கொண்டு சமாளிக்கிறேன்)

இனி இவருக்கான நிதித் திட்டமிடலைத் தருகிறார் நிதி ஆலோசகரும் மைஅஸெட் கன்சாலிடேஷன்.காமின் நிறுவனருமான சுரேஷ் பார்த்தசாரதி.

“நீங்கள் என்ன தவறு செய்துள்ளீர்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். ஆனால், தவறை உணர்ந்த தருணம் மிகத் தாமதமானது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நான் அடிக்கடி சொல்வதைத்தான் இப்போதும் சொல்கிறேன். இளமையில் தொடங்கப்படாத முதலீடு எதிர்கால இலக்குகளை முழுமையாகப் பூர்த்தி செய்யாது. ஆனாலும், இன்றைய நிலையில் எந்த அளவுக்கு இலக்குகளை அடைய முயற்சி செய்ய முடியும் என்று பார்ப்போம்.

உங்களிடம் முதலீட்டுக்கான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால்தான் இலக்குகளுக்கான தொகையை உங்களால் வரையறுத்துச் சொல்ல இயலவில்லை. ஆனாலும், தோராயமாக ஒரு தொகையை நிர்ணயம் செய்து திட்டமிட்டுக் கொடுத்துள்ளேன். உங்கள் மகனை இன்ஜினீயரிங் படிக்க வைப்பதாக இருந்தால், அன்றையச் சூழலில் குறைந்தபட்சம் ரூ.6.6 லட்சம் தேவையாக இருக்கும். நீங்கள் தற்போது முதலீடு செய்துவரும் ரூ.10 ஆயிரத்தில் ரூ.6,300-த்தை இதற்குப் பயன்படுத்திக் கொள்ளவும். மீதியுள்ள ரூ.3,700-யை அவசரகால நிதியாக முதலீடு செய்துவரவும்.

அடுத்து, இன்றையச் சூழலில் உங்கள் குடும்பத்துக்கான செலவு ஒரு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் தேவையெனில், உங்கள் ஓய்வுக்காலத்தில் ரூ.6.75 லட்சம் தேவை. இதற்கு கார்ப்பஸ் தொகையாக ரூ.1.48 கோடி தேவை. மியூச்சுவல் ஃபண்டுகளில் இதுவரை உள்ள தொகை ரூ.2.27 லட்சத்தை மறுமுதலீடு செய்தால், உங்கள் ஓய்வுக்காலத்தில் ரூ.8.8 லட்சம் கிடைக்கும். இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் மூலம் ரூ.14.8 லட்சம் முதிர்வுத் தொகை கிடைக்கும். மொத்தம் ரூ.23.6 லட்சம் போக, மீதம் ரூ.1.25 கோடி சேர்க்க வேண்டும். அதற்கு மாதம் ரூ.28,000 முதலீடு செய்ய வேண்டும். ஆனால், அதற்கான வாய்ப்பு தற்போது இல்லை.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 29 - தவறை உணர்கிறேன்... தப்பிக்க என்ன வழி?

உங்கள் சம்பளம் உயரும்போது, குடும்பச் செலவுகளை அதிகப் படுத்திக்கொள்ளாமல் குறைந்தபட்சம் ரூ.2,000 என்ற அளவிலாவது இதற்கான முதலீட்டைத் தொடங்க முயற்சி செய்யவும். உங்கள் மகன் பள்ளிப்படிப்பை முடித்ததும், அதற்குச் செலவாகும் தொகையையும், மேற்படிப்புக்காக முதலீடு செய்துவரும் தொகையையும் ஓய்வுக்கால முதலீட்டுக்கு ஒதுக்கிவிடவும். அப்படிச் சேர்த்தாலும், ஓய்வுக்கால முதலீட்டை முழுமையாகப் பூர்த்தி செய்ய இயலாது என்பதே உங்களது இன்றைய நிலை.

உங்களைப் போன்று ஐ.டி துறையில் இருப்பவர்கள், திறமையின் அடிப்படையில் பணி மாறும்போது பெரிய அளவில் சம்பளம் உயரவும் வாய்ப்புள்ளது. அப்படி உயரும்பட்சத்தில் ஓய்வுக்காலத் தேவையை முழுமையாக அடைய முடியும்.

நண்பர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகச் சொந்த வீட்டு முயற்சியை இப்போது செய்யாதீர்கள். மனக்கணக்கு வேறு, நிஜக் கணக்கு வேறு. சொந்த வீடு வாங்கினால், இன்றைய நிலையில் மகனது படிப்புக்கே முதலீடு செய்வதில் சிரமம் ஏற்படும்.

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 29 - தவறை உணர்கிறேன்... தப்பிக்க என்ன வழி?கிரெடிட் கார்டு சுழற்சி மூலம் சமாளிப்பது எல்லாச் சூழலிலும் சரியாக இருக்காது. சரியாகக் கையாளமல் போனால், கிரெடிட் ஸ்கோர் பாதிப்படையும். ஏதாவது ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசியைக்கூட சரண்டர் செய்துவிட்டு பற்றாக் குறையைச் சமாளிக்கப் பாருங்கள். போனஸ் தொகை ஏதாவது கிடைக்கும் நிலையில், ரூ.50 லட்சம் அளவுக்காவது டேர்ம் பாலிசி எடுத்துக் கொள்ளவும்.

முன்பே கொஞ்சம் யோசித்துச் செயல்பட்டு, டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொண்டு, மீதமுள்ள பணத்தை நல்ல முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், ரூ.5 லட்சமாவது உங்களிடம் இருந்திருக்கும். இந்த அளவுக்குச் சிக்கல் இருந்திருக்காது.

நாணயம் விகடனைப்  பார்த்து மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்துள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். ஆனால், நீங்கள் மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் மட்டுமே முதலீடு செய்துள்ளீர்கள்.  நம் தேவை, தேவைப்படும் காலம், ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்பவே ஃபண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும். லார்ஜ்கேப், மல்டிகேப் ஃபண்டுகளையும் சேர்த்து முதலீடு செய்வதே ரிஸ்க்கைக் குறைப்பதாக இருக்கும். உங்களுக்கான ஃபண்டுகளை மாற்றித் தந்துள்ளேன். அதற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளவும்.

பரிந்துரை: நீங்கள் முதலீடு செய்து வரும் ரிலையன்ஸ் ஸ்மால்கேப், ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப், சுந்தரம் ஸ்மைல் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் ஸ்மாலர் கம்பெனீஸ் போன்ற ஃபண்டுகளுக்குப் பதிலாக ஐ.சி.ஐ.சிஐ புரூ பேலன்ஸ்டு ஃபண்டில் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி கார்ப்பரேட் டெப்ட் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் ரூ.2,000 முதலீடு செய்யுங்கள். நீங்கள் முதலீடு செய்துவரும் மற்ற ஃபண்டுகளை அப்படியே தொடரவும். உங்கள் சம்பளம் உயரும்போது நிதித் திட்டமிடலை மறுஆய்வு செய்வது அவசியம்!

குறிப்பு: இந்தப் பரிந்துரைகள் எல்லோருக்குமானதல்ல. ஆண்டுக்கு ஒருமுறை முதலீடுகளை ஆய்வு செய்வது அவசியம்.

Suresh Parthasarathy (myassetsconsolidation.com) is SEBI Registered Investment advisor - Reg.no - INA200000878                      

- கா.முத்துசூரியா

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 29 - தவறை உணர்கிறேன்... தப்பிக்க என்ன வழி?

உங்களுக்கும்  நிதி ஆலோசனை வேண்டுமா?

finplan@vikatan.com என்கிற மெயில் முகவரிக்கு உங்கள் குடும்ப நிதி நிலவரங்களைக் குறிப்பிட்டு  குடும்ப புகைப்படங்களுடன் அனுப்புங்கள்.

உங்கள் செல்போன் நம்பரைத் தவறாமல் குறிப்பிடவும்.

தொடர்புக்கு:  9940415222