மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெய்வத்தான் ஆகாதெனினும்! - “சுரண்டப்பட்டுக்கிட்டேதான் இருப்போம் தோழர்!”

தெய்வத்தான் ஆகாதெனினும்! - “சுரண்டப்பட்டுக்கிட்டேதான் இருப்போம் தோழர்!”
பிரீமியம் ஸ்டோரி
News
தெய்வத்தான் ஆகாதெனினும்! - “சுரண்டப்பட்டுக்கிட்டேதான் இருப்போம் தோழர்!”

தமிழ்ப்பிரபா, படம்: கே.ராஜசேகரன்

“அது 1994-ம் வருஷம் தோழர். எங்க ஊர், சிவகங்கையைச் சேர்ந்த சூராணம் கிராமம். அங்கே எந்த அடிப்படை வசதியும் இல்லாததால், ஊர் மக்களே திரண்டு போராடும் முடிவுக்கு வந்தாங்க. 25 டிராக்டர்ல கிராமமே கிளம்பி கலெக்டர் ஆபீஸுக்குப் போச்சு. அந்தப் போராட்டத்துல எங்க அம்மாவும் கலந்துக்கிட்டாங்க. குண்டும் குழியுமான சாலையில டிராக்டர்ல போயிட்டிருக்கும்போது எங்க அம்மா தவறி விழுந்து பின்னந்தலையில அடிபட்டு உயிருக்குப் போராடினாங்க. அக்கம்பக்கத்துல மருத்துவமனை இல்லாததால, அவங்களைக் காப்பாத்த முடியலை. அவங்க சாகும்போது எனக்கு எட்டு வயசு தோழர்” என்று சொல்லிவிட்டு, அந்தத் துயரத்திலிருந்து மீள முடியாமல் அமைதியாகிறார் அருள்தாஸ்.

`ஊரில் அடிப்படை வசதிகளே இல்லை. விளிம்புநிலை மக்களாகிய நம்மைத்தானே இந்த அரசாங்கம் தொடர்ந்து வஞ்சிக்கிறது’ எனச் சிறுவயதிலேயே அருள்தாஸ் உணர்வதற்கு அவர் கொடுத்த விலை, அவரின் அம்மா. பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் தன் கிராமத்து மக்களுக்காக அரசாங்கத்துக்கு மனு எழுதிப் போட்டு நடக்க ஆரம்பித்த அருள்தாஸின் கால்கள் இன்று ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்காகவும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

உடல் உழைப்புத் தொழிலாளர்கள்,  கட்டடத் தொழிலாளர்கள்,  நடைபாதைத் தொழிலாளிகள்  எனத் தனித்தனியான சங்கங்கள் இருப்பதை அந்த மக்களுக்குத் தெரியப்படுத்தி, அதில் அவர்களை உறுப்பினர்களாக்கி, அவர்களுக்கான உரிமைகளை வாங்கிக்கொடுத்துவருகிறார் அருள்தாஸ். இதுமட்டுமன்றி, தமிழகத்தில் எங்கெல்லாம் கொத்தடிமைமுறை இருக்கிறது எனத் தெரிந்துகொண்டு, ஊடகங்களின் உதவியோடு அவர்களை மீட்டெடுத்த கதைகள் ஏராளம்.

தெய்வத்தான் ஆகாதெனினும்! - “சுரண்டப்பட்டுக்கிட்டேதான் இருப்போம் தோழர்!”

அருள்தாஸ்

``குறிப்பிட்ட ஒரு கல்குவாரியைச் சேர்ந்தவங்க, ரெண்டு மூணு முறை என்னைக் கொலை பண்ண முயற்சி பண்ணாங்க. எப்படியோ தப்பிச்சுட்டேன் தோழர்” என்று, ஏதோ சாக்கடையைத் தாண்டி வந்ததுபோல சிரித்துக்கொண்டே சொல்கிறார் அருள்தாஸ்.

குறிப்பிட்ட ஒரு பிரச்னைக்கு மட்டுமே போராட வேண்டும் என்கிற மனநிலைகொண்டவர் அல்லர் அருள்தாஸ். 25 இளைஞர்களுடன் குடிக்கு எதிராக கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை நடைப்பயணம், பழங்குடிகள் கிராமங்களுக்குச் சென்று அவர்களுக்கான நிலமும் பட்டாவும் வாங்கித் தருதல், உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்காக அரசாங்கத்திடமும் தனியார் அமைப்புகளிடமும்  உதவி பெற்று அவர்களுக்குத் தேவையானதைச் செய்வது, 2,000 முறைக்குமேல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பல விஷயங்களை ஆவணப்படுத்தியது, சென்னையிலிருந்து பூர்வகுடிகள் அப்புறப்படுத்தப்படுவதை எதிர்த்துத் தொடர் போராட்டம் என நீண்டுகொண்டே போகின்றன அருள்தாஸின் சாதனைகள்.

எந்தப் போராட்டத்துக்கும் அருள்தாஸ் தயக்கம் காண்பித்ததில்லை. இதுவரை ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பயணித்து மக்களிடையே அரசியல் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு பக்கபலமாக இருந்துவருகிறார்.

``போராடுறதுக்கு ஒரு குரூப் இருக்கு, அவங்க பார்த்துக்குவாங்க. நமக்கு எதுக்கு வம்புன்னு பல பேர் நினைக்கிற வரைக்கும் நாம இன்னும் சுரண்டப்பட்டுக்கிட்டேதான் இருப்போம் தோழர். ஆனா, நான் யாரையும் எதிர்பார்க்கல. விளிம்புநிலை மக்களின் பிரதிநிதியா தொடர்ந்து அதிகாரத்தின் கதவுகளைத் தட்டிக்கிட்டேதான் இருப்பேன்” என அருள்தாஸ் சொல்லி முடிக்கையில், அவர் குரலில் இருந்த உறுதியைக் கண்களிலும் காண முடிந்தது!