பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

புக்மார்க்

புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
News
புக்மார்க்

புக்மார்க்

வைகோ, `பைந்தமிழ் மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் ஓர் இலக்கியவாதிக்குப் பொற்கிழியுடன் விருது வழங்கி கௌரவிப்பது என முடிவுசெய்திருக்கிறார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான `இயற்றமிழ் வித்தகர்’ விருதை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவித்திருக்கின்றனர். ``ஆண்டுதோறும் நல்ல படைப்பாளிகள் நிச்சயம் கௌரவிக்கப்படுவார்கள். அதன் முதல் அடையாளமாக இதை நினைக்கிறேன்” எனச் சொல்லியிருக்கிறார் வைகோ. இதற்கான விழா, மார்ச் 16-ம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.

புக்மார்க்
புக்மார்க்

24-ம் நூற்றாண்டின் களத்தை, 1953-ம் ஆண்டில் பேசிய புத்தகம் `ஃபாரென்ஹீட் 451.’ தடை விதிக்கப்பட்ட புத்தகங்களைப் படிப்பவர்களின் உடைமைகளை எரிப்பவர்தான் `ஃபாரென்ஹீட் 451’ன் கதை நாயகன் மோன்டேக். மேஜிக் ரியலிச கதாபாத்திரங்களுடன் இந்தப் புத்தகத்தை எழுதியவர் ரே பிராட்பரி. எல்லோரும் எல்லாமும் கண்காணிப்புக்கு உள்ளாகும் வாழ்க்கையைப் பற்றிய இந்தப் புத்தகமுமே தடைசெய்யப்பட்டது என்பதுதான் வினோத வரலாறு. பயன்படுத்தப்பட்ட  வார்த்தைகளுக்காக இந்தப் புத்தகம் தடைசெய்யப்பட்டாலும், தடை நீக்கப்பட்டு வந்த மறுபதிப்புகளில் எல்லா வார்த்தைகளும் சேர்க்கப்பட்டு விட்டன. தணிக்கை அரசியல், தொழில்நுட்ப வளர்ச்சி, வாசிப்பின் அவசியம் எனத் தவிர்க்க முடியாத அம்சங்களைக் கொண்ட இந்தப் புத்தகம், வானொலி நாடகங்களாக, குழந்தைகளுக்கான கேலிச்சித்திரங்களாக, தியேட்டர் நாடகங்களாக, திரைப்படமாக, கம்ப்யூட்டர் கேம்களாக வடிவெடுத்தன. சில ஆண்டு களுக்கு முன்பு தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

புக்மார்க்

`ஓர் அரசன் தனக்குக் குழந்தைவேண்டி வேள்வி நடத்துகிறான். அவனுக்கு மகன் பிறக்க வேண்டும் என ஆசை. அரசி, மகள் பிறந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறாள். அவர்களுக்கு மகன் பிறந்து மகளாக வளர்கிறான்...’ - தனது அடுத்த நாவலான `மாம்சம்’ பற்றி பிரபஞ்சன் கூறிய சிறு குறிப்புதான் இது. மனித மனத்தின் நுண்ணுணர்வுகளை, கருணையைத் தனது எழுத்துகளில் கடத்திய பிரபஞ்சன், `மூன்றாம் பாலினம்’ பற்றி தனது அடுத்த நாவலை எழுதிவருகிறார். நாவல் மட்டுமன்றி, பாரீஸில் மூன்று ஆண்டுகள் தங்கி, தமிழ் இலக்கியம் சார்ந்த ஆய்வு ஒன்றைச் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

புக்மார்க்

சகசக்கும் பின்வேனிற்காலப் பகலில், நீர் ஊற்றிய தரையில் கிடுகுப் பந்தலின் கீழ் நிற்கும் குளுமையுடன் வந்திருக்கிறது கலாப்ரியாவின் புதிய நாவல் `வேனல்’. காலத்தை எடுத்து உதறும்போது சிதறும் நினைவுகளைக்கொண்டு எழுதப்பட்டதாக வந்துள்ளது இந்த நாவல். குறிப்பிட்ட கால நெல்லை நகர வாழ்க்கையை மிக நுணுக்கமாகப் பதிவுசெய்துள்ள கலாப்ரியா, பெரியாரின் தி.க, பிறகு தி.மு.க போன்ற அமைப்புகளை அந்த நகரம் எப்படி எதிர்கொண்டது என்பதையும் கதையோட்டத்தில் பதிவுசெய்துள்ளார். வாழ்ந்த குடும்பத்தின் வீழ்ச்சியும் மீட்சியுமாகத் தவழும் கதை, பரணி ஆற்றுக் குளுமையான நெல்லைத் தமிழில் சொல்லப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 49 ஆண்டுகளாகக் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருக்கும் கலாப்ரியாவின் முதல் நாவல் `வேனல்’ என்பது குறிப்பிடத்தக்கது.

வேனல் - கலாப்ரியா

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

புக்மார்க்

படம்: தே.சிலம்பரசன்

``கதை சொல்ற ஆர்வம் எனக்கு எங்க அம்மாகிட்ட இருந்து வந்தது. `கிழிந்த பாயில் படுத்துக்கொண்டு, பறக்கும் கம்பளங்களைப் பற்றிய கதைகளைச் சொன்னாள் என் அம்மா’னு கவிஞர் கங்கைகொண்டானின் கவிதை வரி ஒன்று உண்டு. எங்க அம்மாவும் அப்படித்தான். கதைகள் மூலமா வாழ்வின் மகத்துவத்தைப் புரியவைத்தார். அதைத்தான் நான் செய்ய முயல்கிறேன்” என்கிற எழுத்தாளர் பவா செல்லதுரை, கதை சொல்வதைத் தொடர் நிகழ்வாக நடத்திவருகிறார். தன் சொந்த ஊரான திருவண்ணாமலையில் `கதை கேட்கலாம் வாங்க’ என்ற பெயரில் இவர் நடத்திவரும் நிகழ்வுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பார்வையாளர்கள் வருகைபுரிகிறார்கள்.