பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஓவியங்கள்: செந்தில்

பிரியங்கள் வழியும் பெரும்பொழுது

பிழைப்பிற்காய்க் கடல்கடந்து
வெளிநாடேகியிருக்கும் தந்தைக்கு
மகளாய் இருத்தல்
எத்துணை துர்பாக்கியம் என்பதை
என்னிடம் கேட்டால்
எடுத்துரைக்கவே ஏராளமுண்டு.

சொல்வனம்

பகல் வெறுத்து
அப்பாவின் குரல் கேட்க
இரவுக்காய்க் காத்துக்கிடக்கும் கணங்கள்
எத்துணைக் கொடியது என்பது
என்னைப் போன்ற மகள்கள் மட்டுமே
அறிந்ததாய் இருக்கும்.

வேண்டுவனவெல்லாம்
வீட்டில் கொட்டிக்கிடந்தாலும்
விரும்பி நிறைத்துக்கொள்ள இயலாமல்
வெற்றிடமாய்க் கிடப்பதென்னவோ
அப்பாவின் வாசமே.

ஒலித்த கைப்பேசி கடத்திவரும்
அப்பாவின் பிரியங்கள் வழியும் நொடிகளே
எனக்கான பெரும்பொழுது.
நாளின் பிற மணித்துளிகளெல்லாம்
சிறுபொழுதே.

- எஸ்.ஜெயகாந்தி

சொல்வனம்

உயிர்மூச்சு

விரையும் ரயிலில்
கையேந்தும் விழியிழந்தோன்
உயிர் உருக்கப்
புல்லாங்குழல் வாசித்தவாறும்
திருவிழாக் கூட்டத்தில்
சிறார்களைத் தேடும் பலூன்காரன்
ஊதி ஊதிப் பெருக்கவைத்த
பலூன்களைச் சுமந்தவாறும்
விற்றுக்கொண்டிருக்கிறார்கள்
அவரவர் உயிர்மூச்சை.

- தி.சிவசங்கரி

சொல்வனம்

ஒற்றைக்குரல்

நகரத் தொடங்கிய
எருமையின் நிழலை மேகக்கூட்டமென நினைத்துப் பின்தொடரும் தட்டான்.

தன் தொந்தரவு தாங்காமல்
ஆடும் எருமையின் வாலை
ஊஞ்சலென நினைத்து மகிழும் ஈ.

எருமையின் குளம்படி
பதிந்ததில் தேங்கியநீரை
கிணற்று நீரென நினைத்து
நீந்தும் ஆதவன்.

இத்தனையும் காட்சியாயின
சாட்டையின் சொடுக்கிற்கு
அசையாது நிற்கும் எருமையொன்றை
என் மகளின்
‘என்ன லட்சுமி’ என்ற ஒற்றைக்குரல்
நகர்த்தத் தொடங்கியதால்.

- தமிழ்த்தென்றல்

சொல்வனம்

பிளிறல் பரிசு

குன்றொன்று அசைந்து வருவதைப் போல
குறுகலான கடைவீதியில்
அச்சமும் ஆர்வமுமான சரிபாதிக் கலவையோடு
எதிர்ப்படுவோர் ஒதுங்கி விலகும்படி
ஊர்ந்து வந்த யானை
வனந்தொலைத்த விரக்தியினை வெளிக்காட்டாமலே
அனிச்சையாய் ஆசிவழங்கிச் செல்கிறது
பாகனின் சமிக்ஞையை ஏற்று.
சாலை விரிவாக்கத்தில் படுகொலையான
மரங்களின் சுவட்டையும் அறிய மாட்டாமல்
இளந்தளிர் கிளையுடைத்து
இரைப்பை நிரப்பிய நினைவுகள் உசுப்ப
காட்சிப் பொருளாகிப்போன
துதிக்கை சுமந்து
ஏக்க நடையிடுகிறது மௌனமாய்.
கால நீட்சிக் கணமொன்றின்
ஓர் ஊரெல்லைச் சாலையில்
இருமருங்கும் கன்றுகளைப் பதியனிடும்
சிறுவர்களைப் பார்த்த உற்சாகத்தில்
ஒரு பிளிறலைப் பரிசளித்துப் போகிறது.

- பாப்பனப்பட்டு வ.முருகன்