Published:Updated:

வின்னிங் இன்னிங்ஸ் - 2

வின்னிங் இன்னிங்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
வின்னிங் இன்னிங்ஸ் - 2

பாசிட்டிவ் பகுதிபரிசல் கிருஷ்ணா, படம்: க.பாலாஜி

ப்ளான் பண்ணிப் பண்ணணும்!

IT IS NOT THE BEAUTY OF A BUILDING YOU SHOULD LOOK AT; ITS THE CONSTRUCTION OF THE FOUNDATION THAT WILL STAND THE TEST OF TIME.    

- David Allan Coe


“20 வருடங்கள் என் வீடுபோல உணர்ந்து வேலை செய்துகொண்டிருந்த நிறுவனம். ஒரு கணத்தில், அங்கிருந்து வேலையை விட்டுச் செல்வது என்று முடிவெடுத்துவிட்டேன். அப்போது, அடுத்து என்ன செய்வது என்ற எந்த யோசனையும் இல்லை. ஆனால் எதைச் செய்தாலும், சரியான திட்டமிடலோடு தொடங்கவேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். அதனால்தான்... இதோ இங்கே இருக்கிறேன்!”

ஈக்விடாஸின் வெற்றிக்கதையை, திட்டமிட வேண்டியதன் அவசியம் குறித்த பேச்சிலிருந்துதான் தொடங்குகிறார் பி.என்.வாசுதேவன். ஈக்விடாஸ் வங்கியின் நிறுவனர். 11 வருடங்களுக்கு முன் தனி ஒருவனாகத் திட்டமிட்டு விதைத்த விதை 13 மாநிலங்களில், 13,500 ஊழியர்கள், 379 கிளைகள் என்று பரந்து விரிந்து  ஈக்விடாஸ் வங்கி என்கிற ஆலமரமாக நிமிர்ந்து நிற்கிறது.

வின்னிங் இன்னிங்ஸ் - 2

வாசுதேவன் பிறந்தது காஞ்சிபுரம் அருகேயுள்ள கள்ளக்காட்டூர். அப்பா பள்ளிக்கூட வாத்தியார். சொற்ப வருமானத்தில் குடும்பம் தத்தித் தடுமாறி ஓட, ட்யூஷன் எடுத்துதான் தன் ஐந்து மகன்களையும் படிக்கவைக்கிறார்! அப்பாவால் கோடைவிடுமுறை நாள்களில் ட்யூஷன் எடுக்க முடியாது. எனவே மகன்களுக்குப் பால்கூட வாங்கித்தர முடியாது. வீடு வறுமையின் பிடியில் இருந்தாலும் `கல்வி காப்பாற்றும்’ என்கிற நம்பிக்கையோடு ஐந்து மகன்களையும் போராடிப் படிக்க வைத்தனர் வாசுதேவனின்  பெற்றோர். அவர்களுடைய கனவுகளை நிறைவேற்றும்படி கில்லியாகப் படித்திருக்கிறார் வாசுதேவன். சென்னையில் பி.எஸ்சி இயற்பியல் முடித்தார். அண்ணனின் ஆலோசனைப்படி, ACS (Associate Company Secretary) படித்தார். தொடர்ந்து மிகப்பிரமாதமாகப் படித்துக்கொண்டிருந்தவரால் ஏசிஎஸ் படிப்பில் தேர்ச்சி பெறமுடியவில்லை. மனம் தளர்ந்துவிடாமல்,  இனி வேலை செய்துகொண்டே படிக்கவேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

ஒரு பார்மஸி கம்பெனியில் ஸ்டெனோவாக வேலைக்குச் சேர்கிறார். அங்கிருந்துகொண்டே மீண்டும் ACS படிக்க ஆரம்பிக்கிறார்.  1986 ஜனவரியில் சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் & ஃபைனான்ஸ் கம்பெனியில் மெனேஜ்மென்ட் டிரெய்னியாக வேலைக்குச் சேர்கிறார், அதே வருடம்  டிசம்பரில் ஏசிஎஸ் தேர்வெழுதி, இந்திய அளவில் 3வது டாப்பராகத் தேர்வாகிறார். கம்பெனி செகரட்டரி மெம்பர்ஷிப் கிடைத்ததும், சோழமண்டலம் இவரை வேலைக்கு எடுத்துக்கொள்கிறது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும்போது, வேலைக்குப் போகிறோம் என்பதைவிட, ஒரு வீட்டிலிருந்து கிளம்பி, இன்னொரு வீட்டுக்குப் போகிறோம் என்கிற உணர்வுடனேயே இருந்திருக்கிறார் வாசுதேவன். ஓர் ஊழியராகப் பணிக்குச்சேர்ந்து படிப்படியாக நிறுவனத்தின் உதவியுடன் வாகனக்கடன் டிவிஷனுக்குத் தலைமை தாங்குகிற அளவுக்கு உயர்கிறார். 

2005 வாசுதேவனுக்கு மிகமுக்கியமான ஆண்டு. அந்த ஆண்டில்தான் அவருக்கு பணியாற்றிய நிறுவனத்தோடு சிறுவிலகல் ஏற்பட்டது. எந்தச் சூழலிலும் எதன்பொருட்டும் அதிக மகிழ்ச்சியோ, அதீத துக்கமோ எதுவுமே தன்னைப் பாதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர் வாசுதேவன்.  எந்தச் சிக்கலுமில்லாமல் சென்றுகொண்டிருந்த 20 வருடப் பயணத்தை ஒருநாளில் முடித்துக்கொண்டார்.

20 வருட அனுபவத்தால், இவருக்கு உடனேயே  மும்பையில் ஒரு வங்கியில் வேலை கிடைக்கிறது. கன்ஸ்யூமர் பேங்கிங்கின் தலைவராகப் பணிக்குச் சேர்கிறார். மும்பை செல்லும்போது மகள் வர்ஷினிக்கு இரண்டரை வயது. மும்பையின் மாசு, மகளுக்கு ஒவ்வாமையாகிறது. சளி, காய்ச்சல், தும்மல் என்று மாறிமாறி இவரது அன்றாடத்தைப் பாதிக்கிறது. ஒவ்வொரு நாளும், வெறும் அரைமணிநேரம் மட்டுமே தூக்கம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி, மும்பையை விட்டு, ஏப்ரல் 2007-ல் சென்னைக்கு வந்துவிடுகிறார். அப்போதுதான்  ‘சிறு குறு கடன்’  என்கிற விஷயம் இந்தியாவில் வேரூன்ற ஆரம்பித்திருந்தது.  செய்திகளில் அது பற்றி நிறைய படிக்கிறார். `அந்த ஏரியாவை ஒரு கை பார்ப்போம்’ எனக் களத்தில் இறங்குகிறார். 

2007 கோடையில், இந்தியா முழுவதும் சுற்றுகிறார். டெல்லி, அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத்... மைக்ரோ ஃபைனான்ஸ் என்பதன் ஆதி முதல் அந்தம் வரை அலசுகிறார். கடன் வாங்குகிறவர்கள் யார், கொடுப்பவர்கள் யார், வங்கிகளின் நிலைப்பாடு என்ன, நிதி குறித்து அறிந்த பேராசிரியர்கள் அதுபற்றி என்ன நினைக்கிறார்கள் எல்லாம் தெரிந்துகொள்கிறார்.  ஒரு செய்தியைப் படித்தால், உடனே அதை எழுதிய பேராசிரியரைச் சந்தித்துத் தெளிவு பெறுகிறார்.  நகரம், கிராமம் என்று மூன்று மாதங்களுக்கு ஓய்வில்லாமல் அலைந்து திரிந்து கற்றுக்கொள்கிறார். தகவல்களின் அடிப்படையில் எதிர்காலத்திற்கான திட்டம் ஒன்று உருவாகத்தொடங்குகிறது!

தன்னுடைய ஆய்வுப்பயணத்தில் ஒரு விஷயத்தைக் கவனிக்கிறார். அதுதான் Financial Untouchability என்கிற பொருளாதாரத் தீண்டாமை!  பணம் இல்லாதவர்கள் ஒரு பெரிய மாலுக்கோ, ஒரு பீட்சா கடைக்கோகூடப் போக முடியாது. போகக்கூடாது என்று யாரும் சொல்வதில்லை. ஆனால் தயங்குகிறார்கள். அவர்களுடைய பொருளாதார நிலை அத்தகைய மனநிலையை உருவாக்குகிறது என்கிற உண்மை முகத்தில் அறைகிறது. 

சிறு கடன்கள் கொடுப்பதில், திருப்பி வசூலிப்பதில் இருக்கும் நடைமுறைகளை அறிந்துகொள்ள கிராமம் கிராமமாகச் சுற்றினார். கிராம மக்களை அழைத்து FGD (Focussed Group Discussion) அமைக்கிறார். அப்போது முன்வந்து பேசியவர்கள் அனைவருமே பெண்கள்தாம். ஆண்கள் ஆங்காங்கே தள்ளி நின்றுகொண்டிருக்க, பெண்கள்தாம் குடும்பத்தைச் செலுத்துவதில், சின்னச் சின்னத் தொழில்கள் மூலம் குடும்பத்தை மேம்படுத்துவதில் முனைப்பாக இருப்பதை உணர்கிறார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் தமிழகத்தில் வலுவூன்றி இருப்பதில் வாசுதேவனுக்கும் நிறையவே பங்குண்டு.

சென்னை எண்ணூரில், கிராமத்துப் பெண்களைச் சந்தித்துக் கூட்டுக்கடன் பற்றிப் பேசுகிறார். மாடு வாங்க, ஆடு வாங்க என்பதில் ஆரம்பித்து, சின்னச்சின்னக் கடன்கள் மூலம், அவர்கள் வாழ்க்கைத்தரமே மாறும் என்பதைப் புரிந்துகொண்டார். தையல் கற்றுக்கொண்ட பெண் ஒருவர், `7000 ரூபாய் தையல் மிஷின் இருந்தால் தன் தலைமுறையையே மாற்றலாம்’ என்று நினைக்கிறார். அப்போது தான், நாமே வங்கி தொடங்கலாமே என்ற எண்ணம் வாசுதேவனுக்கு உருவாகிறது. அப்படித் தொடங்கினால், இவர்களைப் போன்றவர்கள் அணுகுவதற்கு எளிமையானதாகத் தனது வங்கி இருக்கவேண்டும் என்று முடிவு செய்கிறார்.
 
இன்று ஈக்விடாஸின் ஊழியர்கள் பெரும்பாலும், எந்நேரமும் களத்தில்தான் இருக்கிறார்கள்.  கடன் விண்ணப்பித்தவர்களுடன் கிட்டத்தட்ட மூன்று நாள்கள் வரை இருந்து, அவர்களின் மைனஸ்களை ப்ளஸ் ஆக்குகிறார்கள். திருப்பிச் செலுத்தும் முறையை எளிதாக்கு கிறார்கள். அதன்பிறகே கடன் வழங்குகிறார்கள்.   

``அடிப்படை ஆவணங்கள்கூட இல்லாத வர்களை, பெரும்பாலும் பல வங்கிகள் கண்டு கொள்வதில்லை.

‘Financially Excluded’ என்று அவர்களைக் குறிப்பிடு வார்கள். அவர்களைத்தான் நாம் அணுகி சேமிப்பு குறித்தும், வங்கிகள் குறித்தும் புரிந்துணர்வை அதிகப்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதன்மூலம், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ள கடன் வாங்குவதிலும், அதற்காக வங்கிகளை அணுகுவதிலும் உள்ள தயக்கங்கள் உடையும்’’ இதுதான் வாசுதேவனின் பேங்க்கிங் ஸ்டைல்.

நிறைய பணம் இருப்பவர்களிடமிருந்து டெபாஸிட்களை வாங்கி, நல்ல வட்டி கொடுப்பது; வீடில்லா மக்களை அணுகி அவர்களுக்குக் கடன் கொடுத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது ஆகியவற்றுக்காக வங்கியின் செயல்பாடுகளை மிகவும் எளிதாக மாற்றினார்.

ஈக்விடாஸ் வங்கி வெறும் வங்கியாக மட்டுமில்லாமல் நடைபாதை வாசிகளுக்கான மறுவாழ்வையும் முன்னெடுக்கிறது.  Equitas Development Initiative Trust (EDIT) என்கிற டிரஸ்டைத் தொடங்கி 1300 பிளாட்பாரவாசிகளை வீடுகளுக்கு இடம்பெயரச் செய்து வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறது. அரசு நிர்ணயித்ததைவிடக் குறைந்த கட்டணத்தில் ஏழை மற்றும் நடுத்தரக் குழந்தைகளுக்கான எட்டுப் பள்ளிகள், திறன் பயிற்சிக்கூடங்கள், வேலை வாய்ப்பு என்று ஏராளமாகச் செய்கிறது ஈக்விடாஸின் இந்த ‘எடிட்’.

சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு  தொடங்கப்பட்ட முதல் தனியார் வங்கி ஈக்விடாஸ்தான். இந்தியாமுழுவதும் 379 கிளைகள், 13,500 ஊழியர்கள்.  30 லட்சம் வாடிக்கையாளர்கள். 5000 கோடி சந்தை மதிப்புள்ள ஈக்விடாஸின் கடன் நிலுவைத்தொகை 10,000 கோடி.  ஒரு வங்கியில் அதிகாரியாகச் சேர நினைத்தவர், இப்போது இத்தனை ஊழியர்கள் கொண்ட ஒரு வங்கியை நடத்துவதன் பின்னுள்ள ரகசியம் என்ன?

“ரொம்ப சிம்பிள். மற்ற வங்கிகள் தொடாத, சந்திக்காத வாடிக்கை யாளர்களைத்தான் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். ஒரு அக்கவுன்ட்கூட இல்லை, குடிமகன் என்பதற்கான ஒரு சான்றுகூட இல்லை என்ற நிலையில் இருப்பவர்களுக்கு அதற்கான வழிமுறை களைச் சொல்லி, கணக்கு ஆரம்பித்துக் கொடுத்து, தொழில் தொடங்கவும் வைக்கிறோம். அதன்மூலம் Financially Excluded ஆக இருப்பவர்களை,  Financially Included ஆக்குகிறோம். இது அவர்களை சமூகத்தில் அடுத்தகட்டத்துக்கு நகர்த்து வதுடன், அவர்களுக்கு இருக்கும் வங்கிகள் மீதான தயக்கத்தையும் உடைக்கிறோம்” என்கிறார் வாசுதேவன். Fun Banking என்பதைக் கொள்கையாக வைத்திருப்பதும், வெப்சைட்டிலேயே நாம் செல்ஃபி அக்கவுன்ட் ஓபன் செய்துகொள்ளலாம் என்பதையும் பார்த்தாலே இவரது வெற்றிக்கான அடிப்படை தெரிகிறது. 

திட்டமிடல் இருந்தால், எட்டமுடியாத உயரங்களையும் தொட்டுப்பிடிக்கலாம் என்பதுதான் இந்த வாரம் பி.என்.வாசுதேவன் நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம்.

வாசுதேவனின் பிசினஸ்மொழிகள்

* Leadership is Imagination. அடுத்து என்ன நடக்கும் என்று கற்பனை செய்து அதற்கேற்ப காய்நகர்த்துபவர்கள்தாம் தலைவனுக்குரிய தகுதி பெறுகிறார்கள்.

* தலைவராக இருக்கவேண்டும் என்றால், நீங்கள் நிறைய சிந்திக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு நிறைய நேரம் வேண்டும். ஆகவே எப்போதுமே ஃப்ரீயாக இருங்கள். எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்துகொண்டிருக்காதீர்கள். 

* Clarity of Thought. Honesty of Intention. Integrity of Action. எண்ணத்தில் தெளிவு. நோக்கத்தில் தூய்மை. செயலில் நேர்மை. நீங்கள் வேலை செய்பவரோ, பிசினஸ் செய்பவரோ... இந்த மூன்றும் இருந்தால் என்ன செய்தாலும் நீங்கள் வெற்றிபெறுவதைத் தடுக்க முடியாது.