மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 73

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

றம்பின் வலைப்பின்னல்களில் செய்திகள் பறந்துகொண்டிருந்தன. தனது கூட்டில் இரை வந்து சிக்கிய கணத்தில் தூக்கம் கலைந்தெழும் விலங்குபோல் பறம்பு எழுந்தது. சிக்கிய இரையால் இனி ஒருபோதும் தப்ப முடியாது என அதற்குத் தெரியும். தாடை கிழிவதைப்போல வாயைப் பிளந்து கொட்டாவி விட்டபடி மெள்ள இரை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது பறம்பு.

வீரயுக நாயகன் வேள்பாரி - 73

வடக்கும் தெற்குமாக நீண்டுகிடக்கும் பச்சைமலைத் தொடரில் இத்தனை நூறு ஊர்களிலும் ஒரே நேரத்தில் காரிக் கொம்பூதி யாரும் கேள்விப்பட்டதுகூட இல்லை. மலைத் தொடர் எங்கும் கொம்போசை அதிர்ந்து பரவிக்கொண்டிருந்தது.  கூவல் குடியினரின் முன்னெச்சரிக்கை ஒலிகள் எல்லை யில்லாத வேகத்தில் பாய்ந்துகொண்டிருந்தன.

`பறம்பின் மாவீரர்கள் அனைவரும் களம்நோக்கிச் சென்று விட்டால், படைகளை ஒருங்கிணைப்பது யார்?’ என்ற கேள்வி எழுந்தது. புறப்படும்போது பாரியின் உத்தரவு அதுவாகத்தான் இருந்தது. ``எவ்வியூரிலிருந்து மூன்று திசைப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வேலை வாரிக்கையனுடையது.”

பாரி தந்தையின் காலம்தொட்டு இக்காலம் வரை எண்ணற்ற தாக்குதலை நடத்தி அனுபவம் வாய்ந்த மாமனிதர் வாரிக்கையன்தான். அவர் அளவுக்கு முன்னனுபவத்தின் வழியே வழிகாட்டக்கூடிய இன்னொரு மனிதர் இல்லை. பாரி உத்தரவிட்ட  கணத்திலிருந்து வாரிக்கையன் வேலையைத் தொடங்கினார்.

கூத்துக்களத்தில் நீராட்டு முடிந்ததும் பாரி வடதிசை நோக்கிப் புறப்பட்டான். தேக்கனும் உதிரனும் தென்திசை நோக்கிப் புறப்பட்டனர். முடியனும் காலம்பனும் கீழ்த்திசை நோக்கிப் புறப்பட்டனர். மூன்று திசைகளுக்கும் தலைமை யேற்றவர்களோடு குழுவுக்கு ஆறு வீரர்களை மட்டுமே உடன் அனுப்பினார் வாரிக்கையன். எவ்வியூரில் இருக்கும் அனைத்து   வீரர்களும்   இப்போது  வாரிக்கையனுக்குத் தேவைப்பட்டனர். 

எதிரிகள் மூன்று திசைகளிலும் இருக்கின்றனர். எனவே, நிலைமைக்குத் தகுந்தபடி வழிகாட்டவும் செய்தியைப் பரிமாறவும் வாரிக்கையனுக்கு வலிமை மிகுந்த படை தேவை. அந்தப் படை, பறம்பின் அனைத்து திசைகளுக்கும் மின்னலெனப் பாய்ந்து செல்லும் படையாக இருக்க வேண்டும்; குதிரையிலும் குதிரை இல்லாமலும் விரைந்து செல்லும் படையாக இருக்க வேண்டும். அதற்கு  எவ்வியூர் வீரர்களே பொருத்தமானவர்கள். அவர்களால்தான் இந்த வேலைக்கு ஈடுகொடுக்க முடியும். போர்க்களத்தில் இணையற்ற வீரத்தை வெளிப்படுத்தக்கூடிய எவ்வியூர்க்காரர்கள் யாரையும் போர்க்களத்துக்கு அனுப்ப முன்வரவில்லை வாரிக்கையன். காட்டை ஊடறுத்து விலங்கெனப் பாயும் வேட்டைவீரர்களாக அவர்களைப் பயன்படுத்த முடிவுசெய்தார்.

களத்தில் போரிடுபவர் களுக்குத் தேவையான படைகளையும் ஆயுதங் களையும் தடையின்றி வழங்க வேண்டும். நெருக்கடியில் அவர் களுக்கான உத்தரவை வழங்க வேண்டிய பொறுப்பும் வாரிக்கையனுடையது.

உத்தரவிட்ட கணத்தில் கூத்துக்களத்திலிருந்து எல்லோரும் போர்முனை நோக்கிப் பாய்ந்து சென்ற போது, தனித்திருந்த வாரிக்கையனின் முன்னால் எண்ணிலடங்காத கேள்விகள் உருத்திரண்டு நின்றன. எதையும் செய்து முடிக்கக்கூடிய அனுபவ அறிவால் ஒவ்வொன்றுக்கும் விடைகண்டார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 73

`ஒரே நேரத்தில் பறம்பின் மூன்று முனைகளிலும் போர் நடத்திய அனுபவம் இதுவரை  யாருக்கும் இல்லை. இந்தப் பெருந் தாக்குதலை எப்படி ஒருங்கிணைப்பது? செய்திகளை விரைவாகப் பரிமாறிக்கொள்ள வழி என்ன?’ என்று சிந்தித்தபடி தனது முதல் உத்தரவை அதிகாலை பிறப்பித்தார்.

சேரன் பாடிவீடமைத்திருக்கும் போர்முனையான ஆயிமலை தொடங்கி எவ்வியூர் வரை செய்திப்பரிமாற்றப் பின்னலை உருவாக்க, கூவல்குடியினருக்கு உத்தரவிட்டார். மிகநீண்ட தொலைவைக்கொண்ட இந்தப் பரப்பில் செய்தியைப் பரிமாறுவது மிகக்கடினமான பணி. ஏனென்றால், கூவல்குடியினரின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆனாலும் அவர்கள் அதற்கு ஆயத்தமாயினர்.

மற்ற இரு முனைகளும் இந்த அளவு ஆபத்துகொண்டவை அல்ல என்பது வாரிக்கையனின் கணிப்பு. அதனால்தான் கூவல்குடி முழுமையும் ஆயிமலை நோக்கி அணிவகுக்கச் செய்தார். எவ்வியூர் பாட்டப்பிறை யிலிருந்துதான் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பறம்பில் உள்ள ஊர்களில் மிக அதிக எண்ணிக்கை தென்திசையில்தான் உள்ளன. அந்தத் திசையில் இருந்த நூற்றிருபது ஊர்களிலும் காரிக்கொம்பு ஊதப்பட்டது. தேக்கனின் சொல்லுக்காக அவ்வூரினர் காத்திருப்பர்.

கீழ்த்திசை ஊர்களில் நான்கில் ஒரு பங்கு ஊர்களை மட்டும் வேட்டுவன் பாறைக்கு வர உத்தரவிட்டான் முடியன். வடதிசைதான் மிகக் குறைவான எண்ணிக்கையில் ஊர்கள் இருக்கும் பகுதி. மொத்தம் இருப்பதே அறுபத்தேழு ஊர்கள்தாம். அந்த ஊர்களில் இருக்கும் வீரர்களைக் கொண்டுதான் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ள சோழப்படையைப் பாரி முறியடித்தாக வேண்டியிருக்கும் என மற்றவர்கள் எண்ணிக்கொண்டிருக்கும்போது, அதிலுள்ள இருபத்துநான்கு ஊர்களை மட்டும் ஆயத்தமாகும்படி செய்தி அனுப்பினான் பாரி.

எவ்வியூர் வீரர்கள், திசைதோறும் செய்திகளைக் கொண்டுசென்றனர். குதிரைப்பாதைகள் இரவுபகலாக இயங்கிக்கொண்டிருந்தன. சோழனுக்கு எதிராகப் பாரியும், பாண்டியனுக்கு எதிராக முடியனும் தீர்மானிக்கும் போர்க்களங்களை நோக்கி, தேவையான ஆயுதங்களையும் மருத்துவக்குடிகளையும் அனுப்பிவைக்க முழுவீச்சில் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. இந்த இருமுனை களிலிருந்தும் எவ்வியூருக்குச் செய்தியை ஒருங்கிணைக்கக் காரிக்கொம்பினையும் சென்றிப்பு கையையும் பயன்படுத்தலாம் என முடிவுசெய்து அதற்குத் தகுந்தபடி மலைதோறும் இடைவிடாது ஆள்கள் நிறுத்தப்பட்டனர்.

சிறுபாழி நகரிலிருந்து ஆயுதங்களைப் போர்க்களங்களை நோக்கித் தடையின்றிக் கொண்டுசெல்ல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆயுதங்கள் இடம் மாறத் தொடங்கின. எவ்வியூரின் ஆண் பெண் என்று ஒருவர்கூட மீதமில்லாமல் இரவுபகலாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பறம்பின் நடுப்பகுதியில் இருந்த 114 ஊர்களும் உத்தரவின்றித் தாக்குதலுக்குச் செல்லவேண்டாம் என்று கூறப்பட்டுவிட்டது. ஊரின் வீரர்கள் எல்லோரையும் ஆயத்தநிலையில் இருக்கச் சொன்னார் வாரிக்கையன். தேவையையொட்டி எந்தக் களத்துக்கும் அவர்கள் செல்லவேண்டியிருக்கும்.

இது ஒரு புது அனுபவம். எனவே, எல்லோரும் மகிழ்ந்தும் விரைந்தும் செய்தனர். ஊரார்கள் எல்லோரும் ஒன்றுகூடி, போர்க்களம் நோக்கி ஆயுதங்களை எல்லை பிரித்துக் கைமாற்றினர். மருத்துவக்குடிகளும் ஆயுதங்களோடு சேர்ந்து இடம்பெயர்ந்துகொண்டிருந்தன. கோடைக்காலம் ஆதலால் நீர் ஆதாரங்களைக் குறிவைத்தே பாதைகளை வகுத்துக்கொண்டனர்.

எவ்வளவு மறுத்தும் கபிலர் கேட்கவில்லை. ``தாக்குதல் நடக்கும் இடத்துக்கு வரவில்லை. அருகில் இருக்கும் ஊரில் இருந்துகொள்கிறேன்” என்று விடாப்பிடியாகச் சொல்லியதால் அவரைத்     தன்னுடன் அழைத்துச்செல்லச்   சம்மதித்தான் பாரி.

மூன்றாம் நாள் இரவு பாரியும் கபிலரும் சூளூரை அடைந்தனர். விடைப்பேறி நின்றுகொண்டிருந்தது  ஊர்.  `எழுவனாற்றில் எதிரிகளின் படை நுழைந்ததும் தாக்கும் உத்தரவை சூளூருக்கல்லவா வழங்கியிருக்க வேண்டும்?’ என ஊர் பெரியவர்கள் கோபம்கொண்டிருந்தனர். `எதிரியின் படையை யாரும் தாக்கவேண்டாம். எல்லோரும் அவரவர் ஊரிலே நிலை கொள்ள வேண்டும்’  எனப் பாரியிடமிருந்து வந்த முதற்செய்தியைச் செரிக்க முடியாமல் திணிறிக்கிடந்தன வடதிசை ஊர்கள்.

முன்னிரவு நேரத்தில் ஆறு வீரர்களோடு பாரியும் கபிலரும் வந்திறங்கியபோது வரவேற்றவர்களின் முகத்தில் சினமே நிலைகொண்டிருந்தது. ``எழுவனாற்றின் கரையில் இருக்கும் பதினோர் ஊர்களைக்கொண்டு எதிரியை அழிக்கும் உத்தரவை சூளூருக்கு ஏன் வழங்கவில்லை?” என்று கோபத்தோடு கேட்டார் ஊர் பெரியவர் பிட்டன்.

``தாக்குதல் தொடுக்கவேண்டிய உத்தியை எவ்வியூரிலிருந்து முடிவெடுப்பது பொருத்தமாக இருக்காது. அதனால்தான் நேரில் வந்தேன்” என்றான் பாரி.

பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட படையைப் பதினோர் ஊரார்களைக்கொண்டு எதிர்க்க சூளூர்க் காரர்கள் அனுமதி கேட்பதையும் அதற்குப் பாரி சொல்லும் மறுமொழியையும் கபிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

உணவருந்த அமர்ந்தனர். உண்மையில்லாத வெற்றுச்சொற்களைப் பயன்படுத்தும் பழக்கம் அறவே இல்லாதவன் பாரி. அப்படியிருக்க, பெரியவரின் கேள்விக்கு ஏன் இப்படி பதில் சொன்னான் எனக் கபிலருக்கு விளங்கவில்லை. ‘இத்தனை  பெரும்படையை அவ்வளவு எளிதாக எதிர்கொண்டுவிட முடியுமா?’ என்று சிந்தித்துக்கொண்டிருந்தார் கபிலர்.

உணவு முடிந்து ஊர் மந்தையில் கூடினர். சுற்றிலும் பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. நடுவில் இருந்த மேடையில்தான் பாரியும் கபிலரும் உட்கார்ந்திருந்தனர். இன்று வந்து சேரவேண்டிய செய்திக்காக அவர்கள் காத்திருந்தனர். பொழுது நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் கீழ்க்காட்டில் ஓசையை உணர முடிந்தது.

சிறிது நேரத்திலேயே ஆறு வீரர்களோடு இரவாதன் வந்துசேர்ந்தான். செய்தியைக் கேள்விப்பட்ட கணத்திலிருந்து சோழர்படையைப் பின்தொடர்ந்து சென்றவர்கள் இப்போது வந்துசேர்கிறார்கள்.

சாதாரண காலத்திலேயே இரவாதனைப் பார்க்கும்போது அடுத்த கணம் போரிடுவதற் கான துடிப்புடனும் தினவுடனும் நிற்பான். இப்போது அவனது வேகம் எப்படியிருக்கும் என்பதைக் காண கபிலர் காத்திருந்தார். வந்திறங்கிய அவன், நகரும் படையின் தன்மையை விளக்கத் தொடங்கினான். முன்னகரும் யானையின் எண்ணிக்கையிலிருந்து தொடங்கினான். அது ஏற்கெனவே தெரிந்த செய்தி என்பதால் கபிலருக்குப் பெரிய வியப்பேதும் இல்லை.

``முகத்தில் அடர்த்தியான மயிர்கொண்ட யானைகள். அவற்றின் தந்தங்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் மட்டுமே இருக்கின்றன. எனவே, வயது இருபதுகளைத் தாண்டாது. மோதத் துடிக்கும் வயது இது” என்று அந்த யானைகளின் தன்மைகளைப் பற்றி விளக்கினான். அதன் பிறகு கபிலரால் இரவாதனை விட்டுச் சிறிதும் கண்விலக்க முடியவில்லை. அவனது கவனிப்பு சிந்தித்துக்கூடப் பார்க்க முடியாததாக இருந்தது.

ஆற்றுமணலில் ஏழு நாள்களுக்கு மேலாக நடந்த பின்னும் காலாட்படை வீரர்கள் சோர்வடையாமல் இருக்கின்றனர். மணலில் யானைகளால் இழுத்துச்செல்லப்படும் வண்டிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர். சக்கரமற்ற அந்த வண்டிகளில் போதுமான பொருள்கள் ஏற்றப்பட்டுள்ளன. மணலின் தன்மைக்கேற்ப வண்டிகளின் பெரும் அணிவரிசை படையின் முன்புறம் தொடங்கி இறுதிவரை நகர்ந்துகொண்டிருக்கிறது. கழுதைகளின் மீதும் இதர விலங்குகளின் மீதும் பொருள்கள் ஏற்றப்பட்டு சாரைசாரையாக நடந்துகொண்டிருக்கின்றன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 73

பாரி சற்றே வியப்போடு பார்த்தான். நீர் வற்றிய ஆற்றின் வழியாகப் படையை நகர்த்த எல்லாவகையான ஆயத்தங்களோடும் வந்துள்ளான் சோழன். எவ்வியூரை அடைவதற்கு எழுவனாற்று வழியே ஏற்றது என்பது எப்படி வெளிமனிதர்களுக்குத் தெரியவந்தது என்பது புரியாத ஒன்றாக இருந்தது.

யானைகளும் காலாட்படை வீரர்களும் அணியணி யாகப் பிரிக்கப்பட்டு, முழுமையாக ஒழுங்குபடுத்தப்பட்டு முன்னேறிக்கொண்டிருந்ததை இரவாதன் விவரித்து முடித்தான்.

இவ்வளவு சிறப்புமிக்க ஒரு வரவேற்பை ஹிப்பாலஸ் எதிர்பார்க்கவில்லை. அவனது நாவாய் புகாரின் துறைமுகத்துக்குள் நுழைந்தது முதல் அரண்மனைக்குள் அவன் காலடியெடுத்துவைப்பது வரை சோழவேந்தன் அவனைத் திகைப்புறச் செய்தான்.

கால்பாவைக் கண்டு பேச, புகார் நகரத்துப் பெருவணிகர்கள் எல்லோரும் ஆயத்தநிலையில் இருந்தனர். ஆனால், பிறர் கண்டுபேசவெல்லாம் மாமன்னர் தரும் விருந்து முடிவுற்ற பிறகுதான் என்று அமைச்சர் வளவன் காரி தெரிவித்துவிட்டான். ஆனால், விருந்து என்றைக்கு முடிவுறும் என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.

இன்று வரை யவனத்துடனான வணிகத்தில் பாண்டியன், சேரன் ஆகிய இருவருக்கும் அடுத்து மூன்றாம் நிலையில்தான் சோழன் இருக்கிறான். இந்நிலையில் ஹிப்பாலஸ் போன்ற யவன தேசத்தின் மாமனிதன் புகாருக்கு வருவதைப் பெரும்வாய்ப்பாகக் கருதினர். குடகடலில் வீசும் காற்று கால்பாவின் கப்பலுக்காகவே வீசுவதாகப் பேச்சுவழக்குண்டு.

கால்பா, யவனத்தின் மாபெரும் வணிகன். அவனது வணிகச்செயற்பாட்டில் இணைந்தே பெரும்பாலான தமிழ் வணிகர்கள் இருந்தனர். ஹிப்பாலஸும் கால்பாவும் புகார்த் துறையில் வந்து இறங்கியதைப் பெரும்வாய்ப்பாகப் பலரும் கருதினர். மாமன்னன் சோழவேந்தனும் அவ்வாறே எண்ணினான்.

வந்திறங்கிய மூன்று நாள்களும் ஆட்டம் பாட்டங்கள் இடைவெளியின்றி நடந்தேறின. சோழப்பேரரசன் செங்கணச்சோழன் படை நடத்திப் போயுள்ளதால் எல்லா விருந்துகளிலும் அவன் தந்தை சோழவேலனே கலந்துகொண்டார். சுமார் 15 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்ட சோழவேலன் யவன வணிகத்தை வளப்படுத்த எண்ணிலடங்காத முயற்சிகளைச் செய்தவர். அதனால்தான் ஹிப்பாலஸும் கால்பாவும் வருகிற செய்தியை அறிந்ததிலிருந்து பெரும் உற்சாகத்தோடு விருந்துகளுக்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 73

விருந்தினூடே பறம்புக்குப் படைநடத்திச் சென்றிருக்கும் செங்கணச்சோழனைப் பற்றிப் பேசப்பட்டது. தன் மகன் வெற்றிகொண்டு திரும்பும் வரை அவர்கள் இருவரும் புகாரில் தங்கியிருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் சோழவேலன்.

தனது பயணம், கடற்காற்றை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது. எனவே, நீண்டகாலம் தங்கியிருக்க முடியாது என்று சொன்ன ஹிப்பாலஸ், ``அரசர் எந்த மாதத்துக்குள் திரும்புவார் என எதிர்பார்க்கிறீர்கள்?” எனக் கேட்டார்.

``இந்தப் போரின் கால அளவை மிகத் துல்லியமாகவே என்னால் சொல்லிவிட இயலும். ஆனால், அதுகுறித்து விருந்து மண்டபத்தில் பேச வேண்டாம். நாளை எனது மாளிகையில் விரிவாகப் பேசுவோம்” என்றார் சோழவேலன்.

மறுநாள் அதிகாலை புறப்பட்டான் பாரி. சூளூரின் மாவீரர்கள் ஆயத்தமாயினர். அவர்களை இருகூறுகளாகப் பிரித்தான். இரவாதன் தலைமையிலான ஒரு பகுதி வீரர்களை எழுவனாற்றின் வலக்கரைக்கு அனுப்பினான். பிட்டன் தலைமையிலான வீரர்களை எழுவனாற்றின் இடக்கரையில் பயணிக்க உத்தரவிட்டான். வலக்கரைப் பகுதியில் இருக்கும் பதினோர் ஊர்களை  இரவாதன் அழைத்துக்கொள்ள வேண்டும். இடக்கரையில் இருக்கும் பதின்மூன்று ஊர்களைப் பிட்டன் அழைத்துக்கொள்ள வேண்டும். எதிரிகளின் படை நகர்வுக்கு ஏற்ப இருபுறமும் மேற்புறக் காடுகளில் மறைவாக அவர்கள் வரவேண்டும்.

மலை முகடுகளில் பயணித்தபடி எதிரிப்படையின் நகர்வுகளைக் கவனித்து வருவான் பாரி. உரியநேரத்தில் அவனது உத்தரவுக்கேற்ப இருபக்கப் படைகளும் தாக்குதலைத் தொடுக்க வேண்டும் என்று விளக்கப்பட்டது. பாரியோடு எவ்வியூரிலிருந்து வந்த அறுவரும் சூளூர் வீரர்கள் அறுவருமாகப் பன்னிருவர் பயணப்பட்டனர். கபிலர், சூளூரில் தங்கவைக்கப்பட்டார்.

குதிரைப்பாதையில் வெப்புமலையின் முகடுகளில் பயணப்பட்டான் பாரி. மலையின் அடிவாரத்தில் எழுவனாற்று மணல் காலடித் தடங்களால் முழுவதும் புரண்டுகிடந்தது. அதைப் பார்த்தவண்ணம் ஆற்றுப் போக்கினிலே போய்க்கொண்டிருந்தான். அவனது மனதில் நீங்காத கேள்வி ஒன்று துருத்திக்கொண்டே யிருந்தது. ``எழுவனாற்றின் வழித்தடத்தை எப்படி அறிந்தான் இவன்?”

ஆங்காங்கே இருக்கும் ஊரார்கள் பாரியைக் கண்டு, சோழர்படையின் தன்மைகளை விளக்கியபடியிருந்தனர். எல்லாவற்றையும் கேட்டபடி அவன் பயணித்துக் கொண்டே இருந்தான். கோடைகாலம் உச்சம் தொட்டுக்கொண்டிருந்தது. காய்ந்த புற்களால் காட்டின் மேனியெங்கும் மஞ்சள் பரவிக்கிடந்தது. ஆனால், இத்தனை ஆயிரம்  பேர் உள்ள படையை நடத்திக் கொண்டு ஒருவன் நம்பிக்கையோடு முன்னேறிக் கொண்டிருக்கிறான்.

அன்று நண்பகல் முள்ளூர் பெரியவர், பாரி வரும் குதிரைப்பாதையில் காத்திருந்தார். முள்ளூரைச் சேர்ந்த வீரர்கள் எல்லோரும் பிட்டனோடு இணையப் போய் விட்டனர். ஊர் பெரியவர் மட்டும் பாரியிடம் சொல்லவேண்டிய செய்திக்காக முகட்டின் மீது காத்திருந்தார்.

மிகவும் இடுக்கான பாதையின் வழியே குதிரைகள் வந்துகொண்டிருந்தன. பாதையோரப் பாறையின் மீது அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார். தொலைவிலிருந்து பார்த்தபோது கழுகு ஒன்று பாறையின் மீது உட்கார்ந்திருப்பதுபோலத் தெரிந்தது.

பாரியைப் பார்த்ததும் பாறையின் மீதிருந்து சரிந்து இறங்கினார் கிழவர். குதிரையை விட்டு இறங்கிய பாரி, அவரை அணைத்து மகிழ்ந்தான். எப்போதும் மகிழ்வோடு இருக்கும் அவரின் முகத்தில் சிறு கவலை இருப்பதை, பாரி பார்த்த கணமே புரிந்துகொண்டான்.

இருவரும் பாறையின் பின்புற நிழலில் பேசியபடியே அமர்ந்தனர். ``படையின் எண்ணிக்கை பொருட்டல்ல; அதன் தன்மை சற்றே வியப்பூட்டுவதாக இருக்கிறது. அதை உன்னிடம் நேரில் தெரிவிக்கவே வந்தேன்” என்றார்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 73

``என்ன?” என்று கேட்டான் பாரி.

``குறும்பியூர்க் கணவாயின் வழியாக அவன் எழுவனாற்றுக்குள் நுழைந்து பத்து நாள்களுக்கும்மேல் இருக்கும். இந்தக் கொடும்கோடையிலும் இவ்வளவு பெரிய படைக்கான நீர் ஆதாரத்தை அவனால் வற்றிய இவ்வாற்றில் உருவாக்கிக்கொள்ள முடிகிறது” என்றார்.

பாரி, அவர் சொல்லவருவதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். சொல்லி முடித்த வார்த்தையைத் தொடராமல் நிறுத்திக்கொண்டார் கிழவர். சற்றே இடைவெளிக்குப் பிறகு பாரி கேட்டான், ``ஆறு காய்ந்து கிடந்தாலும் அடிமணலுக்குள் இருக்கும் ஊற்றுநீரைப் பயன்படுத்த முடியும்தானே?”

கிழவர் சொன்னார், ``இல்லை பாரி. அவர்கள் ஆற்றுமணலில் இங்கும் அங்குமாக எல்லா இடங்களிலும் குழிதோண்டி நீர் எடுக்கவில்லை. நாள்தோறும் தங்கும் இடத்தை மையப்படுத்தி முன்புறம் இரண்டு கிணறுகளும் பின்புறம் இரண்டு கிணறுகளும் வெட்டுகின்றனர். அந்த நான்கு கிணறுகள்தான் இத்தனை ஆயிரம் வீரர்களுக்கும், இத்தனை நூறு யானைகளுக்கும் நீர் தருகின்றன.”

கிழவரின் சொல், வியப்பை ஏற்படுத்தியது. ``பச்சைமலையின் மற்ற ஆறுகளைவிட எழுவனாறு நீரோட்டம் குறைந்த ஆறுதான். ஆனால், அந்த ஆற்றில் வறண்ட இந்தக் கோடையில் இத்தனை ஆயிரம் பேர் அருந்துவதற்கு ஏற்ப நீரோட்டம் உள்ள கிணறுகளை எப்படி இவர்களால் தோண்ட முடிகிறது? படை நடந்து கடந்த வழியில் குறும்பியூர்க் கணவாய் வரை போய்த் திரும்பிவிட்டேன். அவர்கள் தோண்டியுள்ள எல்லாக் கிணறுகளிலும் வற்றாமல் நீர் இன்னும் இருக்கிறது. அதுகூட வியப்பில்லை. நாள்தோறும் அவர்கள் தோண்டும் நான்கு கிணறுகளில் இரண்டு `கடுத்த நீர்’ இருக்கும் கிணறுகளாக இருக்கின்றன.”

பாரியின் முகக் குறிப்பில் சிறு மாற்றம் உருவானது. ``கடுத்த நீர் அருந்திய யானைகளுக்கு எளிதில் தாகம் ஏற்படாது” என்று கிழவர் சொன்னபோது `தெரியும்’ என்பதுபோலத் தலையசைத்தான் பாரி.

``வறண்ட ஆற்றில் இவ்வளவு துல்லியமாக நீரையும் நீரின் தன்மையையும் கண்டறிந்து பயன்படுத்தியபடி அவர்கள் முன்னேறுகின்றனர். போரிடும் அரசப்படை என்று மட்டும் இதைக் கணித்துவிட வேண்டாம். பல்வேறு ஆற்றல்கொண்டவர்கள் இதற்குள் இருக்கின்றனர்” என்றார் கிழவர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 73

பாரியின் சிந்தனை மீண்டும் முதற்புள்ளிக்கே போனது. `பெரும்படைக்குத் தேவையான நீர்வளம் இருக்கும் பாதையாகத்தான் இதைத் தேர்வுசெய்தார்களா அல்லது இதுதான் சரியான பாதை எனத் தெரிந்து தேர்வுசெய்தார்களா?’ என்று எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தபோது கிழவர் சொன்னார், ``எனது சிந்தனைப்படி நாளை இரவு இவர்கள் சுழிப்பள்ளத்தை அடைவார்கள். அங்கு எழுவனாற்றோடு வட்டாறு வந்து கலக்கிறது. அகலத்தில் எழுவனாற்றைவிட வட்டாறே பெரியது. புதிதாய்ப் பார்ப்பவர்கள் அதுதான் மூல ஆறு என்று நினைப்பார்கள். இவர்களும் அப்படி நினைத்து அத்திசையில் திரும்பிவிட்டால் எவ்வியூருக்குத் தொடர்பே இல்லாத திசையிலே பயணப்படுவார்கள். அதுமட்டுமன்று, வட்டாறு கடும்பாறை நிலங்களை வழித்தடமாகக்கொண்டது, எளிதில் இவர்களால் நீரைக் கண்டறிய முடியாது. தனது போக்கிலே இப்படை அழிவுக்குள் சிக்கிக்கொள்ளும்” என்று கிழவர் சொன்னார்.

ஆனால், பாரியின் உள்மனத்துக்குத்தான் தெரியும், அவன் எழுவனாற்றின் வழியே எவ்வியூர் நோக்கி முன்னகர்ந்தால்கூட ஆபத்தேதும் இல்லை. வட்டாற்றில் திரும்பினால்தான் ஆபத்தென்று.

மறுநாள் சோழவேலனின் விருந்து மண்டபத்தில் சந்தித்தனர். வழக்கம்போல் பரிமாறல்களில் பொங்கி வழிந்துகொண்டிருந்தது தேறல். சோழவேலன் தனது நாட்டின் சிறந்த கள்ளைக் கொடுத்தபடி பேச்சைத் தொடங்கினார். உடன் அமைச்சர் வளவன் காரி இருந்தார். கடலோடிகளின் குடிக்கு இணை சொல்ல முடியாது. உள்ளிறங்கும் நீர்மட்டம் உயரட்டும் எனக் காத்திருந்த ஹிப்பாலஸ் பொருத்தமான நேரத்தில் தொடங்கினான், ``திரையர்களை வெற்றிகொள்ள முடியாமல் சோழர்படை பாதியில் திரும்பியதாகக் கேள்வியுற்றேன். அப்படியிருக்க, இப்போது பறம்பின் மீது படையெடுத்துப் போய் எப்படி வெற்றிகொள்ள முடியும்?”

``திரையர்கள் பற்றி வெளியுலகுக்கு ஆதிகாலம்தொட்டே அதிகம் தெரியும். வெளியுலகுக்குத் தெரியாத, ஆனால் திரையர்களைவிட வலிமையான குடியினர் கிழக்குத் திசையில் உள்ள தாளமலையில் உள்ளனர். அவர்களின் பெயர் நெடுங்காடர்கள். `திரையர்களைக்கூட நெருங்க முடியும். ஆனால், நெடுங்காடர்களை நெருங்கவே முடியாது’ என்றுதான் செய்திகள் சொல்லப்பட்டன. ஆனாலும் செங்கணச்சோழன் துணிந்து தாளமலையை முற்றுகையிட்டான். பல மாதகால முற்றுகை. இயற்கையாக அமைந்த மழைவெள்ளத்தால் நெடுங்காடர்கள் குடியிருப்புப் பகுதியில் பெரும்பாறைச்சரிவு ஏற்பட்டது. அவர்கள் ஒருங்கிணைய முடியாத நிலை உருவானது. அதை சாதகமாகப் பயன்படுத்தி நெடுங்காடர்களை முழுமையாக வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உருவானதால்தான் திரையர்களை நோக்கி நகர்ந்த படைப்பிரிவின் தலைவன் திதியனைப் பின்வாங்கிவர உத்தரவிட்டோம். செங்கணச்சோழன் மொத்தப் படையையும் ஒருமுகப்படுத்தி நெடுங்காடர்களைச் சூழந்து தாக்கினான்” என்றார்.

நெடுங்காடர்களைப் பற்றி இதுவரை ஹிப்பாலஸ் கேள்விப்பட்டதில்லை. பேச்சு அதைச் சுற்றியே இருந்தது. சோழவேலன் சொன்னார், ``கீழ்நெடுங்காடர்கள், மேல்நெடுங்காடர்கள், குறுங்காடர்கள் என்று மூன்று பிரிவினர் உண்டு. நாங்கள் அறிந்தவரை காடு பற்றி இவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் இணை சொல்ல யாரும் இல்லை. மனிதனே புக முடியாத கொடிய காட்டுக்குள் இவர்கள் நுழைந்தால்கூட உணவு, நீர், வழித்தடம் ஆகிய மூன்றையும் கணநேரத்தில் உருவாக்கிவிடுவார்கள்.”

வீரயுக நாயகன் வேள்பாரி - 73

ஹிப்பாலஸ் திகைத்துப்போனான். சோழவேலன் தொடர்ந்தார், ``பத்து ஆண்டுகளுக்குமேலாகப் போர் முயற்சியில் இருக்கும் சேரனால்கூட பறம்பை ஒன்றும் செய்ய முடியவில்லை.   ஆனால், வெகுதொலைவில் இருக்கும் எங்களால் பறம்பை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை எளிதிலா ஏற்பட்டிருக்கும்?”

ஹிப்பாலஸுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. சோழவேலன் தனது நரைத்த தலைமுடியை விரல்களால் கோதியபடியே சொன்னார், ``பறம்பின் உட்காடுகள் வரை போகக்கூடிய பாதையை நன்கு அறிந்தவர்கள் நெடுங்காடர்கள். பறம்பின் எல்லைக்குள் எமது படை நுழைந்து பதினான்கு நாள்களாகிவிட்டன. நான்கு நாள்கள் இடைவெளியில் எனக்குச் செய்தி வந்துசேர்கிறது. அப்படியென்றால், பறம்புக்குள் நுழைந்து பத்து நாள்கள் வரை பாரி தாக்குதல் தொடுக்கவில்லை. இவ்வளவு பெரும்படை உள்ளே நுழைந்ததை இரு நாள்களுக்குள்ளேயே அவன் அறிந்திருப்பான். ஆனால்,  இந்தப் படையின் தன்மையை உணர்ந்த கணமே அவன் வில்லினை உயர்த்தும் ஆற்றலை இழந்திருப்பான்.”

பறம்பின் எல்லைக்குள் பத்து நாள்களுக்குமேலாகப் படை சென்றுகொண்டிருக்கிறது என்பதை ஹிப்பாலஸ்ஸால் நம்பவே முடியவில்லை. உதியஞ்சேரலால் இத்தனை ஆண்டுகளாகியும் முடியாததைச் சோழர்கள் எளிதாகச் சாதித்துக்கொண்டிருக்கின்றனர் என்று எண்ணிய ஹிப்பாலஸ், தனது வியப்பை மேலும் வெளிக்காட்டாமல் இருக்க முயன்றான். கூர்மையாகச் சிந்திப்பதைப்போல சற்றுநேரம் அமைதியாக இருந்தான்.

தனது புகழின் மீதான பெருமிதத்தை அடுத்தவன் கண்களின் வழியே பார்ப்பது அளவிட முடியாத மகிழ்வைத் தரக்கூடியது. அதுவும் கிரேக்கத்தின் பெருவணிகனும் கடல் வழித்தடத்தின் தளகர்த்தனும் இமை மூடாமல் சோழப்பேரரசின் வலிமையைத் தனது சொல்கொண்டு பார்த்திருக்க, சோழவேலனால் வார்த்தைகளை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?

``பெரும்படைகொண்டு வெற்றிகொள்ள சமதளத்தில் எண்ணற்ற நாடுகள் இருக்க, பறம்பினை நோக்கி ஏன் படையெடுத்துள்ளார் சோழப்பேரரசர்?” எனக் கேட்டான் ஹிப்பாலஸ்.

சற்றே புன்முறுவலோடு அவனது கேள்வியை எதிர்கொண்ட சோழவேலன், ஒளிவீசும் செவ்வண்ணக் கோப்பையைக் கையில் ஏந்தினார்.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...