பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

அந்த தீபம் அணையவில்லை!

அந்த தீபம் அணையவில்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
அந்த தீபம் அணையவில்லை!

பாலு சத்யா, படம்: சு.குமரேசன்

ம்ஸ்கிருதத்தில் ` ஜ்யேஷ்ட: ’ என்று ஒரு வார்த்தை உண்டு. `மிகுந்த புகழ்ச்சிக்கு உரியவர்’ என்பது அதன் பொருள். இந்த வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். ஆன்மிகப் பணிகளையும் தாண்டி சமூகப் பணிகளிலும் அக்கறை காட்டினார் என்பதே அவரின் தனித்த அடையாளம்.

அன்றைய தஞ்சை மாவட்டத்திலிருக்கும் (இப்போது திருவாரூர் மாவட்டம்) இருள்நீக்கி கிராமத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் சுப்ரமணியன். தந்தைக்கு ரயில்வேயில் வேலை. திருவிடை மருதூர் வேத பாடசாலையில் ஆறு ஆண்டுகள் வேதம் பயின்றார். வேத தர்ம சாஸ்திரத் தேர்வில் முதல் மாணவராகத் தேறினார். ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு, அப்போதே சுப்ரமணியனின் மேல் பிரியமும், தனக்கு அடுத்த பீடாதிபதியாக அவரை நியமிக்கும் எண்ணமும் ஏற்பட்டிருந்தது. அவர் விருப்பப்படி, 1954-ம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது சுப்ரமணியனுக்கு வயது 19. அன்றிலிருந்து `ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்’ என அழைக்கப்பட்டவர், பிப்ரவரி 28-ம் தேதி, காலமானார்.

உபந்யாசகரும் காஞ்சிப் பெரியவரின் சீடருமான கணேச சர்மா, ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளைப் பற்றி மனமுருகிச் சொல்கிறார்... ``சங்கர மடம் மாதிரியான அமைப்புகள்னாலே, ஆன்மிகத்துலதான் அதிக கவனமிருக்கும்னு ஒரு கருத்து இருக்கு. அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டவர் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். வேற எந்த மடத்தின் தலைவர்களும் செய்யாத அளவுக்கு சமுதாய விஷயங்களில் ஈடுபாடு காட்டினார்.

அந்த தீபம் அணையவில்லை!

எத்தனையோ ஏழைகளுக்கு உதவணும்கிறதுக்காகவே `ஜன கல்யாண்’கிற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலமாக ஆன்மிகப் பணிகள் மட்டுமில்லாம, நிறையபேருக்கு சுயதொழில் செய்றதுக்கும் உதவினார்... குறிப்பாகப் பெண்களுக்கு!

சென்னையில் இயங்கும் `சங்கர நேத்ராலயா’வும் கோவையில் இயங்கும்   `சங்கரா கண் மருத்துவமனை’யும் ஜெயேந்திரரோட முயற்சியாலதான் ஆரம்பிக்கப்பட்டது. சங்கரா கண் மருத்துவமனையில ஒரு நாளைக்கு இத்தனை கண் ஆபரேஷன் இலவசமாகச் செய்யணும்னு ஒரு கொள்கையே வகுத்துவெச்சிருக்காங்க. பல கிராமங்கள்ல இலவசக் கண் சிகிச்சை முகாம்கள் நடத்தறாங்க.

யார் என்ன தப்பு செஞ்சாலும், மனசுல வெச்சுக்க மாட்டார். உதாரணத்துக்கு, மடத்து சார்புல நடக்குற ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிற ஒருத்தர் தப்பு பண்ணிட்டார். நிறுவனத்தின் நிர்வாகி  `அவரை வேலையை விட்டு எடுக்கப்போறேன். இனிமே அவர் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவார்னு பார்ப்போம்’ என்று சொன்னார். உடனே ஜெயேந்திரர், `என்ன தண்டனை வேணும்னாலும் குடு. நான் நிர்வாகத்துல தலையிடலை. ஆனா, ஒருத்தர் வயித்துல மட்டும் அடிக்காதே’னு சொன்னார். அவ்வளவு இளகின மனசு அவருக்கு.

நிறைய குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்கணும்னு நினைச்சார். இவரோட குரு பரமாசார்யாருக்கு 1993-ம் வருஷம் நூற்றாண்டு விழா. குருவுக்குக் காணிக்கையா, குருநாதர் பேர்லயே `ஸ்ரீ  சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹாவித்யாலயா’னு ஒரு பல்கலைக்கழகத்தையே ஆரம்பிச்சுக் கொடுத்தார். அதோடு, பல இடங்கள்ல `ஸ்ரீ  சங்கர வித்யாலயா’ பள்ளிகள் உருவாகக் காரணமா இருந்தார். கல்வி, மருத்துவம் இரண்டும் பரவலாகக் கிடைக்கச்செய்தார். சென்னையில சைல்டு ட்ரஸ்ட் ஹாஸ்பிட்டல், தாம்பரத்துல இந்து மிஷன் ஹாஸ்பிட்டல் எல்லாம் அவராலதான் ஆரம்பிக்கப்பட்டது. இதுக்கெல்லாம் அவரோட அருட்கொடைதான் காரணம்’’ என்கிறார் கணேச சர்மா.

ஜெயேந்திரர் என்கிற தீபம் அணையவில்லை; சுடர்விட்டுப் பிரகாசித்து எரிந்து கொண்டிருக்கிறது கல்வி நிறுவனங்களாக, மருத்துவமனைகளாக!