
ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்
முகவுரை
டிசம்பர் 2009, நியூயார்க்
நியூயார்க்கில் உள்ள பர்சேஸ் பகுதி. மாஸ்டர்கார்டு இன்டர்நேஷனல் உலகத் தலைமையகத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள தனது அலுவலக அறையில், அதன் தலைவர் விஜய் பங்கா மிகவும் படபடப்புடன் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தார்.
அதேசமயம், பல மைல் களுக்கு அப்பால் கலிஃபோர்னியா வின் ஃபாஸ்டர் நகரத்திலிருக்கும் பல பில்லியன் டாலர்கள் பணப் பட்டுவாடாவில் உலகளவில் ஜாம்பவானாகவும், மாஸ்டர் கார்டுக்கு மிகப் பெரிய போட்டி நிறுவனமாகவும் இருந்துவரும் விசா இன்டர்நேஷனல் தலைமை யகத்தில், அதன் தலைமை நிர்வாக அதிகாரியான ஜோசப் சாண்டர்ஸும் அதிர்ச்சியில் இருந்தார்.
அவர்களின் படபடப்புக்கும் கலக்கத்துக்கும் காரணம், தேசத் தலைவரின் தலைமையில் சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நடந்த ஒரு கூட்டம்தான். வழக்கமான ஒரு கூட்டமாக அது இருந்தாலும், இவர்களுடைய பிசினஸ் மாடலின் அடித்தளத் தையே அந்தக் கூட்டம் குலுக்கி எடுத்துவிடக்கூடும்.
இருவரில் விஜய் கொஞ்சம் இணங்கக்கூடியவர். அமெரிக்க கார்ப்பரேட்டுகளுக்கு யானை அளவுக்கு ஈகோ இருக்கும் என்பதை நன்கு அறிந்தவர். ஜோசப் அவரது `ஐவரி டவரி’லிருந்து வெளியேவந்து விஜயைத் தொடர்பு கொள்ளமாட்டார். எனவே, விஜய் அவருடைய கெளரவத்தைச் சற்றே கீழிறக்கி வைத்துவிட்டு, தனது செகரட்டரியைக் கூப்பிட்டார்.

அவர் விஜயின் அறைக்குள் நுழையும்போதே, ‘`ஜோசப் சாண்டர்ஸுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்….’’ என்றார் உத்தரவிடும் தொனியில். ஒரு வினாடி விஜய் மேற்கூரையைப் பார்த்துவிட்டு, ‘`நாளைக்குச் சாயந்திரம்’’ என்றார்.
‘`நாளைக்கா?” செகரட்டரிக்கு ஆச்சர்யம். ஏனெனில், சந்திப்பை உறுதிப்படுத்துவதற்கு இருக்கக்கூடிய அவகாசம் மிகவும் குறைவு என நினைத்தார்.
‘`ஆமாம்!” என விஜய் தலையசைத்தார். ‘`வாஷிங்டன் டி.சி.யில். உங்களுடைய பெயரில் ஹயாத் ரீஜென்சியில் ஒரு சூட் புக் செய்யுங்கள். இது குறித்து ஊடகங்கள் எதுவும் மோப்பம் பிடித்துவிடக் கூடாது’’ என்றார்.
அடுத்த நாள் மாலை 6.30 மணி. ஜோசப் சாண்டர்ஸ், ஹயாத் ரீஜென்சியின் மேல்தளத்தில் இருக்கும் எக்ஸிகியூட்டிவ் சூட்டுக்கு நேராகச் சென்றார்.
அங்கு, சந்தையில் போட்டி போடும் இரண்டு நிறுவனங்களின் தலைவர்களும் மிகப் பெருந் தன்மையுடன் கைகுலுக்கிக் கொண்டனர்.
‘`நான்கு பில்லியன் டாலர் என்பது மிகவும் அதிகமான பணம்...’’ என ஜோசப் பேச்சை ஆரம்பித்தார். ‘`இன்றைக்கு இதில் பெரும்பாலான தொகை நம் இரு நிறுவனங்களுக்கும்தான் வருகிறது.’’

‘`ஆமாம். இப்போது என் வருமானத்தில் 20% கேள்விக்குரிய தாக இருக்கிறது. நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.’’
‘`இதில் செய்வதற்கு எதுவுமில்லை – அவர்களை நிறுத்தியாக வேண்டும்!” என்று ஜோசப் கூற, அதை விஜய் ஏற்றுக் கொண்டார்.
கதவு மணி அடித்தது. கவலை யாக இருந்த ஜோசப் மெள்ளத் திரும்பிக் கதவிருக்கும் பக்கம் பார்த்தார்.
‘‘செனட்டர் ஜில்லியன் டானை (Gillian Tan) நான்தான் நமது இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள அழைத்தேன். யாராவது ஒருவர் அமெரிக்க அரசாங்கத்தை வற்புறுத்தவேண்டும் இல்லையா?’’ என்று சொல்லிக்கொண்டே கதவுத் துவாரத்தின் வழியாகப் பார்த்து, யாரென்று உறுதிசெய்து கொண்டபின் கதவைத் திறந்தார் விஜய். `குட் ஈவினிங், செனட்டர்!”
உயரமாக, மிகவும் அழகாக, சால்ட்-பெப்பர் தாடியுடன், அவரின் வயதைப் பொய்யாக்குவது போன்ற ஒரு தோற்றத்தில் இருந்தார். அவரின் ஆளுமை அந்த `சூட்’டைவிடப் பெரிதாக இருந்தது. இவர் மட்டும் அரசியல்வாதியாக இல்லாமலிருந்தால் ஹாலிவுட்டில் மிகப் பிரபலமான ஒரு நட்சத்திரமாக ஆகியிருப்பார்.
‘`குறுகிய அவகாசத்தில் என்னை அழைத்ததால், என்னால் 15 நிமிடங்கள் மட்டுமே இங்கு செலவிடமுடியும். எனவே, வேகமாகவும், அதே சமயம் நன்றாகவும் இந்தச் சந்திப்பு அமைய வேண்டும்’’ என்றார்.
அவருடைய குரலில் அதிகாரம் தொனித்தது. ஜோசப் ஏற்கெனவே ஜில்லியனைச் சந்தித்திருந்தாலும், விஜய்போல அடிக்கடி சந்தித்துக் கொண்டதில்லை.
‘`இரண்டு நாள்களுக்கு முன்பு டிமிட்ரி ருட்ஸ்காய்...’’ விஜய் பார்த்துக்கொண்டிருக்கும்போது டான் குறுக்கிட்டு, ‘`ரஷ்ய அதிபர்?” எனக் கேட்டார்.
‘`ஆம், நாடாளுமன்றத்தில் அவர் பேசும்போது ரஷ்ய நாட்டின் நிதி அமைச்சகத் தலைவரான சிர்கி மகாரோவிடம் (Sergei Makarov) ரஷ்ய நாட்டில் கடன் அட்டை (கிரெடிட் கார்டு) மூலம் நடைபெறும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்குமான கட்டணத்தை வசூலிக்கக்கூடிய `நேஷனல் பேமென்ட் கார்டு சிஸ்டம் அல்லது என்.பி.சி.எஸ்-ஸை (NPCS) முன்மொழியுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.’’
‘`அது ஏன் உங்களைக் கவலைக் குள்ளாக்க வேண்டும்?’’ ஜில்லியனுக்குத் தெரியும் இது எதை நோக்கிச் செல்லுமென்று. இருந்தாலும், அவர் அதை உறுதி படுத்திக்கொள்ள விரும்பினார்.

‘`ரஷ்ய மண்ணில் கடன் அட்டைகள் மூலம் செலவு செய்யப்படும் ஒவ்வொரு டாலருக்கும் சுமார் ஒரு சென்ட், கடன் அட்டை நிறுவனங்களுக்கு வரும். தற்சமயம், இது மாஸ்டர் கார்டுக்கும், விசாவுக்கும் கிடைத்து வருகிறது’’ என்று ஜோசப் இடையில் குறுக்கிட்டுச் சொன்னார்.
“அது மொத்தமாக எவ்வளவு இருக்கும்..?” என ஜில்லியன் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்.
‘`நான்கு பில்லியன் டாலர்கள். எங்களுடைய மிகப் பெரிய சந்தைகளில் ரஷ்யாவும் ஒன்று. சிர்கி, என்.பி.சி.எஸ்–யை நிறுவ முயற்சிசெய்தால் மாஸ்டர் கார்டுக்கும், விசாவுக்கும் வரக் கூடிய இந்த 1% வருமானம் நின்று போய்விடும்.
அப்படி நடந்தால், கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் நாம் ரஷ்யச் சந்தையை இழக்க வேண்டியிருக்கும். ரஷ்யாவைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் தங்களின் சொந்தப் பணப்பட்டுவாடா நெட் வொர்க்கை ஆரம்பிக்கும் பட்சத்தில், அது உலகளவிலான நமது வருமானத்தைக் `கொன்று’விடும்!”
‘`அப்படியெனில் நான் என்ன செய்யவேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?’’ என ஜுலியன் அவர்களைப் பார்த்துக் கேட்டார். ‘`எங்களுடைய வணிக நலன்களைப் பாதுகாக்கும்படி ரஷ்யாவை வற்புறுத்த வேண்டும்.’’
ஜில்லியன் யோசித்துக் கொண்டே, ‘`எனக்கு ஒரு `நோட்’ அனுப்புங்கள். நான் ஜனாதிபதி யிடம் பேசுகிறேன்’’ என்றார். பெரிய சுமையொன்றை இறக்கி வைத்த சந்தோஷத்தில் இருவரின் முகமும் மலர்ந்ததைப் பார்த்த செனட்டர், ‘`ஜென்டில்மேன், அவ்வளவுதானே?” என்று சொல்லியபடியே தான் இருந்த இடத்திலிருந்து எழுந்தார்.
டிசம்பர் 2010, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
தீங்கற்ற அமைப்பொன்று அமெரிக்க அரசாங்கத்தின் மையத்தையே குலுக்கியிருந்தது. `வீக்கிலீக்ஸ்’ என்பது ஒரு சிறிய சர்வதேச அமைப்பு. பெயர் குறிப்பிடப்படாதவர்களால் வெளியிடப்பட்ட ரகசியமான மற்றும் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களைத் தனது இணையத்தளத்தில் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், சுமார் மூன்று லட்சம் வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை வெளியிடப்போவதாகவும் பயமுறுத்தி, ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்து விக்கிலீக்ஸ். இது அமெரிக்க அரசுக்கு மிகக் கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தியது.
இதனால் கோபமடைந்த அமெரிக்க அரசாங்கம், வீக்கிலீக்ஸ் மற்றும் அதன் நிறுவனரான ஜூலியன் அசாங்சேவுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்களுடைய நடவடிக்கை சட்டவிரோதமானது என முத்திரை குத்தியது. இதைக்கண்டு அஞ்சாத வீக்கிலீக்ஸ், 2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் யு.எஸ் தூதரக கேபிள்களிலிருந்து சுமார் 2,51,287 ஆவணங்களை வெளியிட்டது. இது உலகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. 90 நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும், செய்தித்தாள்களும் இந்த கேபிள்களின் சாராம்சத்தை வெளியிட்டன.
வீக்கிலீக்ஸைப் பழிவாங்கும் நோக்கத்துடன் அதைத் தனிமைப்படுத்த, அமெரிக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. விடுதலை ஆதரவு கோட்பாட்டைப் (Libertarian) பரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட, லாப நோக்கமில் செயல்படும் வீக்கிலீக்ஸ், அதன் ஆதரவாளர்கள் தரும் நன்கொடைகளையும், நல்கையையும் (grants) நம்பித்தான் செயல்பட்டு வருகிறது.
டிசம்பர் 1... அமெரிக்காவில் வீக்கிலீக்ஸ் இணையத்தளத்தை `ஹோஸ்ட்’ செய்த அமேசான்.காம், அந்த இணையத்தளத்துக்குள் யாரும் நுழைய முடியாதபடியான நடவடிக்கையை எடுத்தது. ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என்ற காரணத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமேசானின் அதிகாரபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், ‘அமெரிக்க அரசு’தான் இது குறித்து அமேசானை அழைத்துப் பேசியதாக `உள்ளிருப்பவர்கள்’ கூறினார்கள்.
இது நடந்த ஒரு வாரத்திற்குப்பின், விஜய் பங்காவின் போன் அடித்தது. அவர் அந்த நேரத்தில் இந்தியாவில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தார்.
‘`ஹாய், விஜய்!”
‘`மார்னிங், ஜில்லியன்.”
‘`எனது அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் உங்களுடைய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது நீங்கள் விடுமுறையில் இருப்பதாகச் சொன்னார்கள்.’’
‘`ஒரு சில நாள்கள்தான்.நான் கிறிஸ்துமஸுக்குப் பிறகு திரும்பிவிடுவேன்.’’
‘`நல்லது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நம்மிடம் அந்த அளவுக்கு நேரம் கைவசமில்லை’’.
‘`நான் ஏதாவது செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா?”

‘`ஆமாம். இந்த வீக்கிலீக்ஸ் விஷயம்… எந்தவொரு அமெரிக்கக் குடிமகனும் வீக்கிலீக்ஸுக்கு நன்கொடை கொடுப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்தத் துரோகிகளுக்கு நன்கொடை வழங்கும் பொருட்டு `கேட்வே’ சேவையாக மாஸ்டர் கார்டு அல்லது விசா கார்டு செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. கார்டு வைத்திருப்பவர்கள் வீக்கிலீக்ஸுக்கு நன்கொடை கொடுக்கவிடாமல் துண்டித்துவிடுங்கள்.”
‘`ஜில்லியன், நீங்க சீரியஸாகத்தான் சொல்கிறீர்களா? நாங்கள் ஏன் அப்படிச் செய்தோம் என்று யாராவது எங்களைக் கேட்டால், என்ன சொல்வது?’’
‘`அதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். சரியா?”
‘`இப்படிச் செய்வது சரியான விஷயமில்லை, ஜில்லியன். நாங்கள் நிறைய எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிவரும்.”
‘`விஜய், அமெரிக்க அரசாங்கம் உங்களுக்காக ரஷ்ய அரசாங்கத்திடம் நிதி ஒழுங்குப் பிரச்னை குறித்து லாபி செய்யும் வேலையை இன்னும் எடுக்கவில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இது சம்பந்தமாக உங்களது கேஸை வலுப்படுத்த முன்மாதிரி வேண்டுமெனில், `பே பால்’ ஏற்கெனவே வீக்கிலீக்ஸைத் தடை செய்திருப்பதைச் சொல்லுங்கள்’’ என்றார். விஜய் பதிலெதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார்.
‘`விஜய், லைன்ல இருக்கீங்களா?’’
‘`இதை எப்போதைக்குள் செய்ய வேண்டும்?”- இந்தப் பிரச்னை தன்னை வதைக்கும் என்று விஜய் கவலைப்பட்டாலும், ஜில்லியன் சொல்வதை மறுக்கமுடியாது.
‘`30 நிமிடங்கள்..? உங்களுக்கு உதவுமென்றால் அதிகபட்சம் 45 நிமிடங்கள்.’’
‘`ஜில்லியன், குறைந்தபட்சம் நாளை வரை எனக்கு அவகாசம் கொடுங்கள்.’’ விஜய், அவருடைய சட்ட, இணக்கப் பிரிவைச் சேர்ந்தவர்களிடம், இந்தமாதிரி ஒன்றை நடைமுறைப்படுத்தினால், அதனால் ஏற்படக் கூடிய விளைவு கள் குறித்துக் கலந்தாலோசிக்க விரும்பினார்.
‘`நாம் இப்போதே செயல்பட வேண்டும் விஜய். வீக்கிலீக்ஸுக்கு எதிரான இந்த யுத்தத்தில் ஒன்று, நீங்கள் எங்களுக்கு ஆதரவாக இருங்கள். இல்லையென்றால், எதிராக இருங்கள். மூன்றாவது ஆப்ஷன் இல்லை.”
அன்று மாலை, பே பாலின் உதாரணத்தை மாஸ்டர்கார்டும், விசாவும் பின்பற்றி, வீக்கிலீக்ஸுக்கு அவர்களுடைய வாடிக்கை யாளர்கள், கார்டு மூலம் நன்கொடை கொடுப்பதை அனுமதிக்கவில்லை. வீக்கிலீக்ஸின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. வீக்கிலீக் ஸுக்குப் பணம் வரும் வழிகள் அனைத்தும் மூடப்பட்டன. அமெ ரிக்க நாட்டு சரித்திரத்திலேயே எந்தவொரு நிறுவனத்தின் நிதியும் இந்த அளவுக்கு வேகமாக முடக்கப்பட வில்லை.
வீக்கிலீக்ஸ், தனது செயல் பாட்டின் ஒரு பகுதியை நிறுத்தி விடக்கூடிய அளவுக்கு இந்த நடவடிக்கை அமைந்தது. வீக்கிலீக் ஸின் எதிர்ப்பாளர்கள் ஜூலியன் அசாங்சேவுக்கு இரங்கல் எழுதும் அளவுக்குப் போய்விட்டார்கள்.
அதன்பிறகு, ஆறு மாதங்கள் கழித்து வினோதமான ஒன்று நடந்தது. ஜூன் 15, 2011, காலை மணி 4.42. வீக்கிலீக்ஸ், தனது ட்விட்டர் மூலம் இப்படி ட்வீட் செய்தது: ‘வீக்கிலீக்ஸ், பெயர் சொல்லப்படாத `பிட்காயின்’ நன்கொடைகளை 1HB5XMLmzFVj8ALj6mfBsbifRoD4miY36v–ல் ஏற்றுக்கொள்ளும்.’

பெயர் சொல்லப்படாத, கண்டறிய முடியாத வடிவத்தில் தகவலைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்கிற கோட்பாட்டின் அடிப்படை யில் உருவாக்கப்பட்ட வீக்கிலீக்ஸ், இப்போது தனது கஜானாவை, கண்டறிய முடியாத டிஜிட்டல் கரன்சியான `பிட்காயின்’ மூலம் நிரப்ப முடிவு செய்தது.
மக்கள் தொகையில் 99.99 சதவிகிதத்தினருக்கு என்னவென்றே தெரியாத பிட்காயின்கள் எதிர்பாராதவிதமாகவும், தற்செயலாகவும் கவனத்திற்கு வரஆரம்பித்தது. இது நாடாளு மன்றத்திலிருந்து காபி கடை வரை அனைத்து இடங்களிலும் விவாதிக்கப்பட்டது. `எதிர்காலத் துக்கான கரன்சி இது’ என வர்ணிக்கப்பட்டது. சொல்லப்போனால், தங்களுடைய கார்டுகள் மூலம் வீக்கிலீக்ஸுக்கு நன்கொடை கொடுப்பதைத் தடை செய்த மாஸ்டர் கார்டு, விசா, பே பால் ஆகியவற்றால் பிட்காயின் உத்வேகமடைந்தது. அவை நிரந்தரமாக இங்கே இருக்கவும்கூடும்.
2008-ம் ஆண்டு சதோஷி நகாமோட்டோ (Satoshi Nakamoto) என்கிற அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவரால் பிட்காயின் ஆரம்பிக்கப் பட்டது. சதோஷி ஒரு `விடுதலை ஆதரவு கோட்பாட்டாளர்.’ அவரைப் பொறுத்தவரை, யாருக்கும் தெரியாமல் இருப்பதும், ஒருவனுக்கு என்ன நல்லது என்பதை அவனே முடிவு செய்வதும், அவனுடைய உரிமையாகும் எனக் கூறியவர். இவர், முதன்முதலாக மையப்படுத்தப் படாத கரன்சியாக இணையத்தில் பயன்படுத் தும்படியான பிட்காயினை உலகத்துக்கு அறிமுகம் செய்தார்.
பிட்காயினுடைய மிகப் பெரிய ஆதாயம் என்னவெனில், `மவுஸை’க் க்ளிக்கினால் எந்தவித வங்கி, நிதி நிறுவனத்தின் தலையீடும் இல்லாமல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பணம் சென்றுவிடும். இந்த கரன்சியை எந்தவொரு அரசாங்காத்தாலும் கட்டுப்படுத்த முடியாது, இதனுடைய மதிப்பு முற்றிலும் சந்தையின் இயக்கத்தால் நிர்ணயிக்கப்படுவதாகும். ஒவ்வொரு பிட்காயினின் விலையும் பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளைப்போல டிமாண்ட், சப்ளையின் அடிப்படையில் தீர்மானிக்கப் படுவதாகும்.
பிட்காயின்கள், அதை உபயோகிப்பாளர்களின் கணினியில் `டிஜிட்டல் வாலெட்’டில் வைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு பிட்காயினின் வாலெட்டும் தனித்துவமானதாகும். யாருடைய பெயரும் அல்லது முகவரியும் இதனுடன் இணைக்கப்பட்டிருக்காது. வங்கிக் கணக்கு மற்றும் மற்ற வடிவங்களிலிருக்கும் சொத்துகளுக்கு இல்லாத ஒரு `அடையாளமின்மை’யை பிட்காயின் இவர்களுக்குக் கொடுக்கும்.
ஒவ்வொரு வாலெட்டுக்கும் இரண்டு டிஜிட்டல் `கீ’கள் (குறியீடுகள்) உண்டு. ஒன்று, பொதுவெளியில் தெரியக்கூடியதும் (பப்ளிக் கீ) இன்னொன்று தனிப்பட்ட நபருக்கு மட்டும் தெரியக்கூடியதாகவும் (பிரைவேட் கீ) இருக்கும். இரண்டு `கீ’களும் 27 முதல் 34 வரையிலான `ஆல்ஃபா நியூமரிக்’ (எழுத்தும் எண்ணும் கொண்டது) வடிவத்தைக் கொண்டது. உதாரணம்: 1HB5XMLmzFVj8ALj6mfBsbifRoD4miY36v. தனிப்பட்ட நபருக்கான `கீ’ அந்த வாலெட்டின் உரிமையா ளருக்கு மட்டுமே தெரியக்கூடியதாக இருக்கும். ஆனால், பொது வெளிக்கான இன்னொரு `கீ’யை மற்றவர்களிடம் அவர் பகிர்ந்துகொள்ளலாம்.
உதாரணமாக, X என்பவர் Y என்பவருக்கு பிட்காயினைப் பரிமாற்றம் செய்ய விரும்பினால், அவர் தனது பிரைவேட் கீ-யை உபயோகித்து, தன்னுடைய பிட்காயின் வாலெட்டில் தேவையான தொகையை டெபிட் செய்துவிட்டு, அந்தத் தொகையை Y–ன் பப்ளிக் கீ-யை உபயோகித்து, அவரின் பிட்காயின் வாலெட்டில் கிரெடிட் செய்துவிடுவார்.
இணையதள ஹேக்கர்களின் கழுகுக் கண்களுக்கு இது தெரியாதவரை இந்த பிரைவேட் கீ-கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும். யாரும் ஒருவருடைய கணக்கிலிருக்கும் பிட்காயினை டிரான்ஸ்ஃபர் செய்யவோ, திருடவோ முடியாது என்பதால், உரிமையாளரின் வாலெட்டில் பிட்காயின்கள் மிகவும் பத்திரமாக இருக்கும்.
பிட்காயின் தோன்றுவதற்குமுன்பு அடையாளம் தெரியாத, எல்லைகளற்ற உலகிற்கான, ஒரு மெய்நிகர் கரன்சி கனவாகத்தான் இருந்துவந்தது. சதோஷி நகாமோட்டோ அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறார்.
சரி… இனியென்ன..?
(பித்தலாட்டம் தொடரும்)
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

நாவலாசிரியர் பற்றி...
ரவி சுப்ரமணியன்... ஆங்கிலத்தில் எழுதும் ஓர் இந்திய எழுத்தாளர். தொழில்ரீதியில் வங்கியாளர். சிட்டிபேங்க், ஹெச்.எஸ்.பி.சி, ஏ.என்.இஸட் க்ரிண்ட்லேஸ் ஆகிய பன்னாட்டு வங்கிகளில், பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தவர். ஐ.ஐ.எம் – பெங்களூரில் மேலாண்மைப் பட்டம் பெற்ற இவர், இப்போது வங்கிசாராத நிதி நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரியாக மும்பையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் தாரிணி, மகள் அனுஷ்கா. டீன் ஏஜ் பெண்ணான அனுஷ்காவும் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
அமெரிக்காவில் சட்டத்துறை பற்றி பல த்ரில்லர் நாவல்களை எழுதிய ஜான் க்ரிஷம் (John Grisham) போல, வங்கித் துறை தொடர்பான த்ரில்லர் நாவல்களை எழுதும் `ஜான் க்ரிஷ’மாக இவர் அறியப்படுகிறார். இதுவரை 10 புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அனைத்தும் `பெஸ்ட் செல்லர்ஸ்’ பட்டியலில் இடம்பெற்றவை. இவருடைய நான்கு நாவல்கள் கடந்த 2010, 2011, 2012, 2015-ம் ஆண்டுகளுக்கான `க்ராஸ்வோர்ட்’ பரிசைப் பெற்றுள்ளன. இன்னொரு நாவலுக்கு `இண்டியா ப்ளாசா குளோபல் க்வில்’ விருதும் கிடைத்துள்ளது.
சமீபத்தில் வெளியான இவரின் ஒன்பதாவது நாவல் `இன் தி நேம் ஆஃப் காட் (In The Name of God)’, பத்மநாப சுவாமி கோவிலில் இருக்கும் சேஃப்டி லாக்கர்கள் மற்றும் சிலைக் கடத்தல் சம்பவங்களைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டது. அதில் வரும் ஒரு நகை வியாபாரி பாத்திரத்துக்கு இவர் வைத்த பெயர் `நீரவ் சோக்ஷி’ (நீரவ் மோடி + மெஹுல் சோக்ஷி = நீரவ் சோக்ஷி). கற்பனையான இந்தப் பாத்திரம், இன்று பஞ்சாப் நேஷனல் பாங்க் விவகாரத்துக்குப்பிறகு அனைவராலும் அறியப்பட்ட பெயராக ஆகிவிட்டது.
இப்போது உலகெங்கும் பேசப்பட்டுவரும் `பிட்காயினை’ப் பின்னணியாகக் கொண்டு 2014-ம் ஆண்டு இவர் எழுதிய `The God is a Gamer’ என்கிற த்ரில்லர், இவருடைய ஏழாவது நாவல் ஆகும்.

பி.என்.பி கான்ட்ராக்ட்... நீட்டிப்பாரா கோலி?
பஞ்சாப் நேஷனல் பேங்க்கின் பிராண்ட் அம்பாசிடராக இருந்து வருகிறார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. பஞ்சாப் நேஷனல் பேங்க் தற்போது சர்ச்சையில் சிக்கியிருப் பதால், அந்த வங்கியின் பிராண்ட் அம்பாசிடராக தொடர்ந்து இருப்பதா, வேண்டாமா என்பது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறாராம் அவர்.
2016-ம் ஆண்டு செப்டம்பரில் பஞ்சாப் நேஷனல் பேங்கின் பிராண்ட் அம்பாசிடராக அறிவிக்கப்பட்டார் விராட் கோலி. இந்த ஆண்டு கடைசியில் இந்த கான்ட் ராக்ட் முடிவடைவதாகச் சொல்லப்படுகிறது. கான்ட் ராக்ட் முடிந்தபிறகு, அதை தொடர்ந்து நீட்டிப்பாரா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.