கூகுள் நிறுவனத்தின் சமூக ஊடக இணையதளமான கூகுள் பிளஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக மூட்படுவதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம், இணையத்தில் தன் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்திவருகிறது. எத்தனை புதிய விஷயங்கள், நிறுவனங்கள் வந்தாலும் அவற்றை பின்னுக்குத் தள்ளி, தன் தனித்துவமான சேவைகள்மூலம் பல விதங்களில் பயனாளர்களை ஈர்த்துவருகிறது. மொபைல் பயன்படுத்துபவர்கள், ஒரு நாளுக்கு குறைந்தது 10 முறையாவது கூகுளைப் பயன்படுத்துவார்கள் என்ற அளவுக்கு அதன் ஆதிக்கம் உள்ளது. கூகுள் மேப், யூடியூப், ஜிமெயில், கூகுள் பிளஸ், கூகுள் ட்ரைவ் போன்ற பல சேவைகளை அந்நிறுவனம் செய்துவருகிறது.
இந்நிலையில், கூகுளின் சமூக ஊடக இணையதளமான கூகுள் பிளஸ், நிரந்தரமாக மூடப்படுவதாக நேற்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் பிளஸ் பயன்படுத்தும் 5,00,000 பயனர்களின் கணக்குகள் சில டெவலப்பர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், அவர்களின் பாதுகாப்பு கருதி மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இதனால் கூகுள் பிளஸில் பதிவிடப்பட்டிருந்த பயனர்களில் பெயர், இ-மெயில் ஐடி, வயது, பாலினம், தொழில் உள்ளிட்ட தகவல்கள் கசிந்துள்ளதாகவும், ஆனால் இதை யாரும் இதுவரை தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.
வாடிகையாளர்களின் தகவல் திருடப்பட்ட விவகாரம் மார்ச் மாதமே கூகுள் நிறுவனத்துக்குத் தெரிய வந்ததாகவும், அதை வெளியில் சொல்லாமல் அந்நிறுவனம் மறைத்துள்ளதாகவும் பிரபல 'தி வால் ஸ்டிரீட் ஜெர்னல்' என்ற பத்திரிகை குற்றம் சாட்டியது. தகவல் கசிந்த செய்தி வெளியில் தெரிந்தால், ஃபேஸ்புக் போன்று கடுமையான விமர்சனங்களையும், சட்டரீதியான பல சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என்ற காரணத்தினாலேயே இதை யாரும் வெளியில் தெரிவிக்கவில்லை என அந்தச் செய்தி பதிவிடப்பட்டிருந்தது.
இதையடுத்தே, கூகுள் பிளஸ் மூடப்பட்டுள்ளதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.