
ஓவியங்கள்: ரமணன்

வேப்பமர சாமி
வேப்பமரத்தை உதைக்கக் கூடாது
வேப்பமரத்தில்
ஊஞ்சல்கட்டி ஆடக் கூடாது
வேப்பங்கிளையைப் பிடித்துத்
தொங்கக் கூடாது
வேப்பமரத்தடியில்
மூத்திரம் போகக் கூடாது
வேப்பமரத்தின் மேல் எச்சில்
துப்பக் கூடாது
வேப்ப இலையைக் காலில்
மிதிக்கக் கூடாது
வேப்பமரத்துல சாமியிருக்கு
சாமி கண்ணைக் குத்திடும்
என்று
சொல்லிச் சொல்லி வளர்த்த
அம்மாவிடம் கேட்க
ஒன்று உள்ளது.
கடன் வாங்கி விதைச்சதெல்லாம்
மழையில்லாமக் கருகிடுச்சேன்னு
மனம் நொந்து
வேப்பமரத்தில்
தூக்கு மாட்டிக்கொண்ட அப்பாவை
ஏம்மா காப்பாத்தலை
வேப்பமர சாமி ?
- பிரபு

சாத்தானின் குரல்
சோலாப்பூர் போர்வையை விலக்கி
எழமாட்டேன் என
அடம்பிடிக்கிறது ஓர் அதிகாலை.
‘அம்மு’ என அதற்கு
செல்லமாய் வைத்த பெயரைச் சொல்லி அழைக்க
வளைந்து நெளித்து
`ம்’ என்ற குரலோடு
ஒருக்களித்து உறங்கக் கேட்கிறது
உப்புச்சப்பற்ற கதைக்கு உம் கொட்டிய இரவு
தட்டி எழுப்ப,
குனிந்த கழுத்தைக்
கட்டிக்கொண்டு உறங்க முடிகிறது
சுப்ரபாதம் பாடி எழுப்ப முடியாத எனது குல தெய்வம்
சாத்தானின் குரலாக ஒலிக்கும்
பள்ளி வாகனத்திற்கு
என்ன பதில் சொல்ல?
- பி.கே.சாமி

அடையாளம்
நகரப்பேருந்தில்
அருகில் அமர்ந்த அவன்
நிச்சயம் நம்மூர் ஆளாய்
இருந்திருக்க வாய்ப்பில்லை.
பல்லில் படிந்த காவியும்
பலநாள் அழுக்கேறிய உடையும்
கை நிறைய வண்ணக் கயிறுகளுமாய்
அவனை எனக்கு அப்படித்தான்
அடையாளப்படுத்த முடிந்தது.
காலில் படிந்திருக்கும் சேறு
அவனின் வாழ்க்கைக்கான
வேலைப்பளு என்ன என்பதை
விளக்கிக்கொண்டிருந்தது.
ஏதேனும் கேட்கலாமென
நினைத்துப் பின்வாங்கினேன்
மொழிதெரியா அவனிடத்தில்
பேசி என்னவாகப்போகிறது
சமாதானமாகிக்கொண்டேன் எனக்குள்.
எந்த உணர்வுகளையுமோ
உணர்ச்சிகளையுமோ அவனிடத்தில்
என்னால் படிக்க இயலவில்லை
மனம் என்னை
அழுத்திக்கொண்டிருக்கிறது
அடிக்கடி எனக்குவரும்
அலைபேசி அழைப்பைமட்டும்
அவன் ஆழ்ந்து கவனிப்பதும்
கோபமான என் பதில்களுக்கு
அவன் குனிந்துகொள்வதுமான
செயல்களில்...
எரிச்சலாய்
அவனிடத்தில் திரும்பி
`க்யா?’ என்றேன் எனக்கான வடமொழியில்...
`பொண்டாட்டிய ஆஸ்பத்ரில
சேத்திருக்காங்களாம்
ஒரு போன் பண்ணித்தர்றீங்களா’ என
சேறுபடிந்து கிழிந்திருந்த
காகிதத்திலிருக்கும் எண்ணைக்
காண்பித்து நீட்டிய
அவன் கையில்
`அம்முகுட்டி’ எனக் குத்தப்பட்டிருந்தது
பச்சையாய்த்
தமிழில்.
- பன்னீர்