Published:Updated:

பணம் பழகலாம்! - 3

பணம் பழகலாம்! - 3
பிரீமியம் ஸ்டோரி
News
பணம் பழகலாம்! - 3

சொக்கலிங்கம் பழனியப்பன்

``நுகர்வுக் கலாசாரத்தில் வாழ்கிறோம். எதையாவது விற்றுக்கொண்டேயிருக்கிறார்கள்;

பணம் பழகலாம்! - 3

வாங்கிக்கொண்டேயிருக்கிறோம். ஆடம்பரச் செலவுகள் எனக் கருதப்பட்டவையே இப்போது அத்தியாவசியச் செலவுகள் ஆகிவிட்டனவே? எதை வாங்கலாம்? எவற்றையெல்லாம் வாங்கக்கூடாது?’’ என்கிற கேள்விகள் எங்கே போனாலும் துரத்திக்கொண்டேயிருக்கின்றன.  

நுகர்வுச் சூழலைச் சமாளிக்க எளிய கணக்கு நமக்கு உதவும். முதலில், அத்தியாவசியச் செலவுகள் எவை என்பதைப் பட்டியலிட வேண்டும். வீட்டுக்கடன் இ.எம்.ஐ, கார் இ.எம்.ஐ, செல்போன் கட்டணம், எலெக்ட்ரிசிட்டி கட்டணம் என லிஸ்ட் பலருக்கும் நீண்டுகொண்டே போகலாம். இதில் வாங்கிய கடன்களுக்கான இ.எம்.ஐ தொகையைக் கட்டாமல் இருக்க முடியாது. அவைபோக, மற்ற எவற்றிற்கெல்லாம்  செலவு செய்கிறோம் என்பதைப் பட்டியலிடுங்கள். ஒருவிஷயம் ஒருமுறை மட்டுமே இருக்கவேண்டும். ஏதாவது ரிப்பீட் ஆனால் அதை வெளியே எடுங்கள்.

உதாரணத்துக்கு, நம்மில் பலரும் பர்சனலாகப் பேசுவதற்கு ஒரு போன், டேட்டாவுக்கு ஒரு போன், அலுவலகத்துக்கு ஒரு போன் என இரண்டு மூன்று போன்களை வைத்திருக்கிறோம். எந்த நிறுவனமும் எதையுமே இலவசமாகத் தருவதில்லை. இதைப் புரிந்துகொண்டு எல்லாவசதிகளும் கொண்ட ஒரே செல்போன் கனெக்‌ஷனைப் பயன்படுத்துங்கள். இரண்டு, மூன்றையெல்லாம் மறந்துவிடுங்கள்.

அதேபோல் வீட்டுக்குள் எத்தனை ஏசி வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். ஆடம்பரத்துக்காக வீட்டு வரவேற்பறையிலெல்லாம் ஏசி வேண்டுமா என்பதை யோசியுங்கள். ஏசிக்கள்தான் மின் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்துபவை. இரண்டு மாதத்துக்கு ஒருமுறை 5,000 ரூபாய் மின் கட்டணம் செலுத்தினால், வருடத்துக்கு அதுவே 30,000 ரூபாய்.

இன்றைய செலவுகளில் மிக முக்கியமானது ஹோட்டல் செலவு. மாதத்துக்கு ஒருமுறை குடும்பத்தோடு வெளியே போய்ச் சாப்பிடலாம் தவறில்லை. ஆனால், `எப்போதாவதுதான் வீட்டில் சாப்பிடுவேன்’ என்று சொல்பவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள். நான்கு பேர் கொண்ட வீடு என்றால் ஹோட்டல் செலவு அதிகபட்சம் மாதம் 1,500 அல்லது 2,000 ரூபாய்க்குள் இருக்கலாம். அதற்குமேல் செலவு செய்வது சரியன்று.

வரவைவிட அதிகமாகச் செலவு செய்பவர்கள் கிரெடிட் கார்டை வாங்காமல் இருப்பது நல்லது. அவசரச் செலவுகளைச் சமாளிக்க கிரெடிட் கார்டு கட்டாயம் தேவை என்பவர்கள், அதிகபட்சம் ஒரு கார்டு வைத்துக்கொள்ளலாம். அந்தக்  கார்டையும், கையில் பணம் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்துங்கள். கார்டு இருக்கிறதே என்பதற்காகப் பொருள்களை வாங்காதீர்கள்.  

பணம் பழகலாம்! - 3

கார் வாங்குவது இன்று பலரின் கனவு. கார் வாங்குவது மட்டுமன்று, அத்துடன் கூடவே வருபவை பெட்ரோல் செலவு, இன்ஷூரன்ஸ் செலவு, பராமரிப்புச் செலவு என அடுக்கிக் கொண்டே போகலாம். இன்னும் சிலருக்கு, பார்க்கிங் செய்வதற்கு மாதாந்திர வாடகைச் செலவும் உள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, ஓலா அல்லது ஊபர் சிறந்தது. நீங்கள் காரில் எப்போதாவதுதான் செல்பவரென்றால், சொந்தமாக கார் வாங்காமல் இருப்பதே நல்லது.

பியூட்டி பார்லர்களில் அதிகமாகச் செலவு செய்வது இப்போது அதிகரித்திருக்கிறது. பெண்கள், ஆண்கள் என இதில் எந்த வித்தியாசமும் இல்லை. உங்களை நீங்களே அழகுபடுத்திக்கொள்வதற்கு அதிகமாகச் செலவு செய்ய வேண்டுமா அல்லது அதில் ஒரு பகுதியைச் சேமித்து உங்களின் ஓய்வுக்கால வாழ்க்கைக்கு முதலீடு செய்ய வேண்டுமா என்று சிந்தியுங்கள். எது முக்கியம், எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று உங்களுக்கே புரியும்.

பொருட்களை வாங்கத் தூண்டும் தேவையில்லாத தொலைபேசி அழைப்புகளைத் தவிர்ப்பதற்கு நமது டெலிகாம் ரெகுலேட்டர் வசதி செய்துகொடுத்துள்ளது. http://ndnc.in/ என்ற வலைதளத்தில் விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்களது செல்போன் நம்பரை அங்கு பதிவு செய்துவிட்டால், தேவையில்லாத அழைப்புகள் வராது.

ஒருமுறைக்கு இருமுறை யோசித்து, வாழ்க்கைத்துணை, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து, எது முக்கியம், எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று சிந்தித்துச் செயல்பட்டால்\தேவையே இல்லாமல் அந்த நேரத்தூண்டுதலில் செய்யும் பல செலவுகளைக் குறைக்கலாம். தேவையற்றவற்றை ஒதுக்கும்போது, தேவையானது சுலபமாகக் கிடைத்துவிடும்!

-வரவு வைப்போம்...