
புக்மார்க்
மிராசு
தஞ்சை வட்டார எழுத்தின் முன்னோடிகளில் ஒருவரான சி.எம்.முத்துவின் 850 பக்க நாவல் `மிராசு’. சுதந்திரத்துக்குப் பிறகு சமகாலம் வரை காவிரிப்படுகையில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள், வேளாண் தொழிலுக்கு நேர்ந்துள்ள பாதிப்புகள் ஆகியவற்றைக் காலக்குழப்பமும் பிரசார நெடியும் இல்லாமல் தனித்துவமான மொழியில் எழுதியிருக்கிறார் சி.எம்.முத்து. வெறும் வாழ்வியல் பேசும் நாவலாக மட்டும் இல்லாமல், ஒரு வேளாண் குடியானவனின் பார்வையிலான அரசியலையும் தமிழக ஆட்சியாளர்கள் காவிரிப்படுகை வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கங்களையும் பேசுகிறது `மிராசு’. `காவிரி வந்துவிட்டால்... வேளாண்மை செழித்துவிடும்’ என்பதைத் தாண்டி, வேளாண்மைப் பின்னடைவுக்கான வேறுபலகாரணங்களையும் நாவலின் இழையோட்டத்தினூடே சொல்லியிருப்பது இதன் தனிச்சிறப்பு.
மிராசு - அனன்யா பதிப்பகம் - விலை ரூ.780

பின்லேடனைப் பற்றி நமக்குப் பல பிம்பங்கள் இருக்கின்றன. ஆனால், அவருடைய அலமாரியில் இருந்து கைப்பற்றப்பட்ட புத்தகங்கள் பற்றித் தெரியுமா? ஒசாமா கொல்லப்பட்ட பிறகு அந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், 571 ஆவணங்கள் குறித்த தகவல்களை மட்டுமே வெளியிட்டது அமெரிக்கப் படை. அதில் 39 புத்தகங்கள் ஆங்கிலப் புத்தகங்கள். இவை எல்லாமே புத்தக வடிவில் இல்லாமல், மின்னூல்களாக இருந்தன. கைப்பற்றப்பட்டவை எல்லாம் சமூக, அரசியல், வெளியுறவுப் பிரச்னைகள், சட்டம் ஆகியவை தொடர்பான ஆழமான புத்தகங்கள்.

இதில் மிகவும் சுவாரஸ்யமான புத்தகங்களாக மூன்றைச் சொல்லலாம். முதலாவது `உலகின் பல மர்மங்களின் என்சைக்ளோபீடியா’ என்று சொல்லப்படும் ‘The secret teachings of all ages book’. இலுமினாட்டிகள் பற்றிய ‘Bloodlines of the Illuminati’ என்கிற புத்தகமும் ஒசாமாவின் `புக் லிஸ்ட்டில்’ கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது சுவாரஸ்யமானது.
`The 2030 Spike’ என்கிற புத்தகமும் பின்லேடனிடம் இருந்தது. `2030-ம் ஆண்டில் மக்கள்தொகை, வறுமை, காலநிலை மாற்றம் போன்றவை எப்படி இருக்கும்’ என்று 2003-லேயே எழுதப்பட்ட புத்தகம் இது. ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ உள்ளிட்ட அமெரிக்க அரசுக்கு எதிரான பல முக்கியமான புத்தகங்கள் லேடன்வசம் இருந்திருக்கின்றன.
Literature Across Frontiers (LAF) என்னும் அமைப்பினர், இந்திய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைப் பிற நாட்டு மொழிகளில் மொழிபெயர்த்துக்கொள்ள ஒரு புதிய வெளியை உருவாக்கியிருக்கிறார்கள். இதைப்போலவே, பிறநாட்டு எழுத்தாளர்களும் இந்திய மொழிகளில் தங்களின் படைப்புகளை மொழிபெயர்த்துக்கொள்ளப் பாலமாக இருக்கிறது இந்த அமைப்பு. இங்கிலாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்தத் தன்னார்வ அமைப்பு, இலக்கியத் திருவிழாக்கள், நூல் வெளியீட்டு விழாக்களின் வழியாக எழுத்தாளர்களை ஒன்றிணைக்கிறது. சமீபத்தில் இதுபோன்றதொரு நிகழ்ச்சியை கேரளாவில் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நடத்தியிருக்கிறது இந்த அமைப்பு.

2006-ம் ஆண்டு, ‘த்ரீ கப்ஸ் ஆஃப் டீ’ புத்தகம் வெளியான போது உலகமே அதைக் கொண்டாடியது. க்ரெக் மார்டன்சன் (Greg Mortenson) ஒரு மலையேற்ற வீரர். உலகின் இரண்டாவது பெரிய மலையான K2 மலையின் உச்சியை அடைய முயற்சித்துத் தோற்றுப்போனவர், கீழிறங்கி வரும்போது, வழிமாறித் தொலைந்து போனார். கடுமையான பனிக்காற்று... மரணத்தைத் தொடும் தருணத்தில், பாகிஸ்தானின் ‘கார்ஃபி’ (Korphe) எனும் கிராமத்தை அடைந்தார். அவரை மரணத்திலிருந்து காப்பாற்றிய, படிப்பறிவற்ற அந்தக் கிராம மக்களுக்காக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் 170 பள்ளிகளைத் தொடங்கினார். மார்டன்சன்னின் இந்த வாழ்க்கைக் கதையை அவரோடு சேர்ந்து எழுதினார் பத்திரிகையாளர் டேவிட் ஆலிவர் ரெலின்.
ஆனால் ‘மார்டன்சன் கூறும் தகவல்கள் அத்தனையும் பொய். அவர் பாதையும் மாறவில்லை, அந்தக் கிராமத்திற்கும் போகவில்லை. அதுமட்டுமல்லாமல், அவரால் தொடங்கப்பட்ட தன்னார்வ நிறுவனத்திற்காக உலகெங்கும் இருந்து வந்த நிதியைத் தன்னுடைய சொகுசு வாழ்விற்காகப் பயன்படுத்திக் கொண்டார் என்று எழுத்தாளர் ஜான் க்ராக்கவர் (Jon Krakauer) என்பவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்த சர்ச்சையினால் 2015ம் ஆண்டு தான் தொடங்கிய தன்னார்வ அமைப்பிலிருந்து விலகிவிட்டார் மார்டென்சன். மார்டென்சனோடு சேர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் ஆலிவர் ரெலினின் மரணமும் மர்மமாக இருக்கிறது.

``உனக்கு நிகழும் ஒவ்வொன்றையும் கவனி. அதை முழுமையான அனுபவமாக உள்வாங்கு. எல்லா உணர்ச்சிகளுக்கும் உன்னை முழுமையாக ஒப்புக்கொடு. தந்திரமாக வாழ்வைத் தொடாதே. கொஞ்சம் பைத்தியமாக இரு. சூதாட்டத்தின் முதல் சுற்றிலேயே உன்னைப் பணயமாக வை. சொற்களை ஆயுதம்போல் பழக்கு. ஓர் உடலைச் சுவைப்பதுபோல சொற்களைப் பருகு. அதை உன் மாம்சம் என்று அறி. கவிதை எழுத, கவிதை அல்லாத ஆயிரம் விஷயங்களை அறிந்துகொள்” - புதிதாகக் கவிதை எழுத வரும் இளம் தலைமுறையினருக்கு மனுஷ்ய புத்திரன் கொடுக்கும் டிப்ஸ் இதுதான். 30 ஆண்டுகளாக சிறுகதை, நாவல் எழுதும் எண்ணம் தனக்கு இருப்பதாகச் சொன்னவரிடம், ‘எதைப் பற்றி எழுதவிருக்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு ``யாருமே இதுவரை எழுதாத விசித்திரமான கதையாக அது இருக்கும். கவிதைகளின் மீதான என் காமம் தணிந்தவுடன் அவற்றை எழுதத் தொடங்குவேன்” என்கிறார்.