மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!

மாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!

டெக்னாலஜி 25கு.கணேசன், பொதுநல மருத்துவர்

மூளை, மனித உடலின் தலைமைச் செயலகம். இதயமே இயங்கினால்கூட மூளை இறந்துவிட்டால், உயிர் இருந்தும் பயன் இல்லை என்று சொல்லும் அளவுக்கு மூளையின் செயல்பாடு நமக்கு முக்கியம். அப்படிப்பட்ட மூளையைத் தாக்குவதற்கு என்றே பல நோய்கள் வரிசையில் காத்திருக்கின்றன. அவற்றில் மூளை உறைக் காய்ச்சல் முக்கியமானது.

மாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!

நம் மூளையை மூன்று உறைகள் போர்த்திப் பாதுகாக்கின்றன. அவற்றுக்கு ‘மெனிஞ்சஸ்’ (Meninges) என்று பெயர். இவற்றை பாக்டீரியா/ வைரஸ் கிருமிகள் பாதிக்கும்போது, அழற்சி உண்டாகி, கடுமையான காய்ச்சலை ஏற்படுத்தும். அதற்கு ‘மூளை உறைக் காய்ச்சல்’ (Meningitis) என்று பெயர்.

மாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!

மெனிங்கோகாக்கல் மூளைக் காய்ச்சல்

`நைசீரியா மெனிஞ்சைடிடிஸ்' (Neisseria meningitides) எனும் பாக்டீரியா கிருமிகள் மூளை உறைகளைப் பாதிக்கின்றபோது உண்டாகிற ஒரு தொற்றுநோய் இது. இந்தக் கிருமிகள் நோயாளியின் எச்சில், சளி போன்றவற்றில் வசிக்கும். நோயாளி வாயை மூடாமல் இருமும்போது, தும்மும்போது, சளியைத் துப்பும்போது இவை சளித் திவலைகளுடன் காற்றில் கலந்து மற்றவர்களுக்குப் பரவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் இது பாதிக்கும். என்றாலும் நடைமுறையில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

அறிகுறிகள்: திடீரென்று கடுமையான காய்ச்சல் வரும். தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி உண்டாகும். அடிக்கடி குமட்டலும், அளவில்லாமல் வாந்தியும் ஏற்படும். இந்த நோய்க் கிருமிகள் மூளை உறைகளை மட்டுமன்றி மூளைத் தண்டுவடத்தையும் பாதிக்கின்றன. இதனால், தண்டுவடச்சவ்வு வீங்கிக்கொள்கிறது. இதன் விளைவாக, கழுத்துத் தசைகள் கல் போன்று இறுகிக் கொள்கின்றன. அப்போது கழுத்து வலிக்கும். கழுத்தை மேலும் கீழும் அசைக்கவோ, பக்கவாட்டில் திருப்பவோ இயலாது. இது இந்த நோயின் மிக முக்கிய அறிகுறி. இந்த நோய் உள்ளவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு  மனநோயாளிபோல் நடந்துகொள்வார்கள். இதனால், இவர்கள் அரள்வதும், மிரள்வதும், உளறுவதும் வழக்கம்.

நச்சுக்குருதிநிலை: இந்தக் காய்ச்சலால் ‘நச்சுக்குருதிநிலை' (Septicaemia) என்று சொல்லப்படும் மற்றொரு நோயும் உண்டாகும். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொடுமையான நோய். காரணம், நோய் குணமானாலும், பேச்சு நின்று போவது, பார்வையை இழப்பது, காது கேட்காமல் போவது, பக்கவாதம் ஏற்படுவது போன்ற ஊனங்கள் நிலைத்துவிடும்.

ஏற்படும் விதம்: இந்த நோய்க்கிருமிகள் சுவாசப்பாதை வழியாக ரத்தத்துக்குச் செல்கின்றன. அங்கு இவை பல்கிப்பெருகுகின்றன. அங்கிருந்து உடல் முழுவதும் பயணிக்கின்றன. முதலில், இவை ரத்தத்தை நச்சாக்கும். பிறகு, மூளைக்குச் சென்று, மூளையுறைகளைப் பாதிக்கும். அடுத்து, நுரையீரல் திசுக்கள், எலும்பு மூட்டுகள், இதயத் தசைகள் என்று பல உறுப்புகளை இவை பாதிக்கின்றன. என்றாலும், ரத்தத்தைப் பாதிக்கும்போது உண்டாகின்ற ‘நச்சுக்குருதிநிலை'தான் மிகுந்த ஆபத்தைத் தருகிறது.

மாடர்ன் மெடிசின்.காம் - 25 - மூளைக் காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை!

அறிகுறிகள்: கடுமையான காய்ச்சல், குமட்டல், வாந்தி, உடல்வலி ஆகிய அறிகுறிகள் ஏற்படும். இவற்றுடன் அரிப்புடன் கூடிய செந்நிறத் தடிப்புகள் உடல்முழுவதும் தோன்றும். என்றாலும், மார்பு, முதுகு, கால்களில் இவை அதிக அளவில் காணப்படும். முகம், கை, வாய் போன்ற உடல் பகுதிகளிலும் இவை தோன்றுவதுண்டு. இவை சில நாள்களில் கொப்புளங்களாக மாறும். இவற்றைச் சொறிந்தால் ரத்தம் வரும். தோலுக்கு அடியில் ரத்தம் உறைந்து காணப்படும்.  பிறகு, இந்தப் பகுதிகள் ரத்தம் இழந்து இறந்துவிடும். முக்கியமாக, கை, கால் விரல் பகுதிகளில் இவ்வாறு ஏற்படுவதுண்டு. அப்போது விரல்கள் இறந்துவிடும். இவை மட்டுமல்லாமல், நோயாளிக்கு ஓர் அதிர்ச்சிநிலை உருவாகி, ரத்த அழுத்தம் குறைந்து, மரணமும் ஏற்படும்.   

வைரஸ் மூளை உறைக் காய்ச்சல்

பாக்டீரியா கிருமிகளைப் போலவே சில வைரஸ் கிருமிகளும் மூளை உறைகளைத் தாக்கி மூளை உறைக் காய்ச்சலை உண்டுபண்ணும். முக்கியமாக, என்டிரோ வைரஸ் (Entero virus) கிருமிகள் இவ்வகை மூளைக் காய்ச்சலை ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கின்றன.

ஏற்கெனவே சொல்லப்பட்ட முறையில்தான் இந்த நோயும் பரவுகிறது. அறிகுறிகளும் ஏறத்தாழ அதேபோலவே இருக்கும். வைரஸ் மூளைக் காய்ச்சல் வந்தவர்களுக்குக் கண்ணுக்குப் பின்னால் கடுமையாக வலிக்கும். வெளிச்சத்தைப் பார்த்தால் பார்வைக் கூசும். கண்களை அசைத்தாலே வலி கடுமையாகும். மேலும், கழுத்தைத் திருப்ப முடியாத அளவுக்குக் கழுத்து வலியும் கொடூரமாக இருக்கும்.

என்ன பரிசோதனைகள்? மூளைக் காய்ச்சலுக்கு வழக்கமான ரத்தப் பரிசோதனைகளுடன், மூளைத் தண்டுவடத் திரவப் பரிசோதனையும், பாக்டீரியா/வைரஸ் கல்ச்சர் மற்றும் பிசிஆர் (PCR) பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். இவற்றில் காணப்படும் ரத்த அணுக்களை வைத்தும், குளுக்கோஸ் அளவை வைத்தும் தோராயமாக நோய் கணிக்கப்படும். இவற்றில் பாக்டீரியாவையோ, வைரஸ் கிருமியையோ நேரில் பார்க்க முடியாது. இதனால் சமயங்களில் நோய்க் கணிப்பு தவறாகிவிடவும் வாய்ப்புண்டு. இந்த நிலைமையைச் சரிப்படுத்த ஒரு புதிய பரிசோதனை இப்போது வந்துள்ளது.

நவீன பரிசோதனை: மூளை உறைக் காய்ச்சலைச் சரியாகக் கண்டறியும் அந்தப் புதிய பரிசோதனைக்கு ‘எக்ஸ்பெர்ட் ஈவி பரிசோதனை’ (Xpert EV Test) என்று பெயர். இது மூளைத் தண்டுவடத் திரவத்தில் வைரஸ் கிருமிகள் உள்ளனவா என்பதைக் கண்டறிந்து சொல்லிவிடுகிறது. எனவே, நோயால் பாதிக்கப்பட்டவருக்கு வைரஸ் கிருமி பாதிப்பா அல்லது பாக்டீரியா கிருமி பாதிப்பா என்று திட்டவட்டமாகக் கூறிவிட முடியும். இதன் பலனால், நோய்க் கணிப்பு மிகச் சரியாக அமைந்துவிடும். சிகிச்சையும் சரியான முறையில் தரமுடியும். நோயாளி விரைவில் உயிர் பிழைப்பார்.

என்ன நன்மைகள்? வழக்கமான மூளைத் தண்டுவடத் திரவப் பரிசோதனை, பாக்டீரியா/வைரஸ் கல்ச்சர் பரிசோதனை ஆகியவற்றின் முடிவுகள் தெரிய ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் சிலருக்கு நோய் கடுமையாகி உயிருக்கு ஆபத்து நேரலாம். மாறாக, ‘எக்ஸ்பெர்ட் ஈவி பரிசோதனை’யின் முடிவுகள் மூன்று மணி நேரத்தில் தெரிந்துவிடும். இதனால், நோய்க்கணிப்பு மிக விரைவிலும் மிகச் சரியாகவும் அமைந்துவிடும். அதனால் இம்மாதிரியான ஆபத்துகள் தவிர்க்கப்படும். அடுத்து, வைரஸ் மூளைக் காய்ச்சலுக்குத் தேவையில்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளைச் செலுத்துவதுண்டு.  மிகவும் விலை கூடிய இந்த மருந்துகளால் பக்க விளைவுகளும் ஏற்படலாம். இந்த நவீன பரிசோதனை இவற்றை எல்லாம் தடுத்துவிடுகிறது. வரவேற்போம்.

(நிறைந்தது)

குழந்தைகளைத் தாக்கும் மூளை உறைக் காய்ச்சல் (Meningitis)

குழந்தைகளுக்கு ஏற்படுகிற ஒரு கொடு மையான தொற்றுநோய் இது. ‘ஹீமோபிளஸ் இன்ஃபுளூயென்சா-பி’ (Haemophilus Influenza –Type b) எனும் பாக்டீரியாக் கிருமிகளால் இது ஏற்படுகிறது. பொதுவாக, இந்த நோய்க்கிருமிகள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. அந்த வயதில் அவர்கள் உடலில் இந்த நோய்க்கு உரிய இயற்கையான எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதால், உடனே நோய் பாதித்துவிடுகிறது.

நோய் வரும் வழி: இந்தப் பாக்டீரியாக் கிருமிகள் மூக்கு, தொண்டை, நுரையீரல் ஆகிய இடங்களில் வசித்து நோயை உண்டாக்கும்; இருமல், தும்மல், மூக்கு ஒழுகல், சளியைக் காறித் துப்புதல் ஆகியவற்றின் மூலம் சளித் திவலைகளுடன் வெளிவந்து, காற்றின் வழியாக மற்றவர்களுக்குப் பரவும்.

அறிகுறிகள்: இந்த நோய்க்கிருமிகள் மூளையை மட்டுமல்லாமல், தொண்டை, மூளை, இதயம், எலும்பு, ரத்தம் என்று பல பகுதிகளைப் பாதிக்கும். உடலில் எந்தப் பகுதியைப் பாதிக்கிறதோ அதைப் பொறுத்து நோய் தோன்றும். உதாரணமாக, மூளை உறையைப் பாதித்தால், மூளை உறைக் காய்ச்சல் வரும். நுரையீரலைப் பாதித்தால், ‘நிமோனியா’ என்ற நுரையீரல் அழற்சி நோய் வரும். இதயத்தைப் பாதித்தால், இதய அழற்சி நோய் வரும். எலும்பைப் பாதிக்குமானால், மூட்டு அழற்சி நோய் வரும். இப்படி, நோய்களுக்கு ஏற்ப அறிகுறிகளும் வேறுபடும்.

இவற்றில் மூளை உறைக் காய்ச்சல்தான் மிக முக்கியம். இதன் அறிகுறிகள் ஏற்கெனவே சொல்லப்பட்ட மாதிரிதான் இருக்கும். முக்கியமாக, கடுமையான காய்ச்சல், தலைவலி, கழுத்து வலி, வாந்தி தொல்லை படுத்தும். நோயின் இறுதியில் மனக்குழப்பம் ஏற்படும்.