
குரங்கணி காட்டுத்தீ... உண்மைகளை மூடப்பார்க்கும் வனத்துறை!
குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி ட்ரெக்கிங் சென்றவர்கள் 13 பேர் உயிரிழந்து, தீக்காயங்களால் பலர் படுகாயம் அடைந்தது, தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், அங்கு காட்டூத்தீ ஏற்பட்டதற்கு யார் காரணம் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீ ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் அதன் பின்னணி குறித்து விசாரணை நடத்தப் பேரிடர் மேலாண்மைத்துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ராவைத் தமிழக அரசு நியமித்துள்ளது.
‘‘மலைப்பகுதி கிராம மக்கள்தான் தீ வைத்தனர்’’ என்ற குற்றச்சாட்டைச் சிலர் எழுப்பிய நிலையில், சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று, உண்மையில் இந்த விபத்துக்கு யார் காரணம் என்பது பற்றிய விசாரணையில் இறங்கினோம்.

மலைப்பகுதி கிராம மக்களிடம் கேட்டபோது, ‘‘இந்த வனம் எங்களை வாழவைக்கும் தாய். எங்கள் தாய்க்கு நாங்கள் எப்படித் தீ வைப்போம்?’’ என்று ஆதங்கப்பட்டனர். குரங்கணியைச் சேர்ந்த பாஸ்கர், ‘‘இந்த மலையின் மூத்த குடி நாங்கள். எத்தனையோ காட்டுத்தீ சம்பவங்களைச் சந்தித்துள்ளோம். ஆனால், இப்படி ஓர் அசம்பாவிதம் நடந்திருப்பது இதுதான் முதல்முறை. இந்தச் சம்பவத்துக்காக, மற்ற எல்லோரையும்விட நாங்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறோம். யார் பெற்ற பிள்ளைகளோ, இங்கு வந்து உயிரைவிட்டுள்ளனர். ‘காய்ந்த புற்களுக்குத் தீ வைத்தால் புதிய புற்கள் வளரும்... அதன்மூலம் கால்நடைகளுக்குத் தீவனம் கிடைக்கும் என்பதால் இப்படிச் செய்திருப்பார்கள்’ என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், யதார்த்தம் வேறு. இதற்கு, போதைப்புல் என்று பெயர். இந்தப் புல்லை ஆடு, மாடு உள்பட எந்தக் கால்நடையும் சாப்பிடாது. வீட்டுக்குக் கூரை வேய்வதற்கு மட்டுமே இது பயன்படும். குரங்கணியில் யாரும் இப்போது கூரை வேய்வதில்லை. அப்படியிருக்கும்போது, மலையில் உள்ள காய்ந்த புற்களுக்கு நாங்கள் ஏன் தீ வைக்கப்போகிறோம்? ‘மரங்களை வெட்டிக் கடத்திவிட்டு, அது வெளியே தெரியாமல் இருக்கவே தீ வைக்கப்பட்டுள்ளது’ என்று சிலர் சொல்கிறார்கள். இதுவும் தவறு. இயற்கையாகவே இப்பகுதியில் பெரிய அளவில் மரங்கள் இல்லை. எனவே, எங்கள்மீது குற்றம் சுமத்துவதில் நியாயமே இல்லை’’ என்றார் அழுத்தமாக.
கொழுக்குமலை எஸ்டேட் காரணமா?
சாலைப்பாறைக்குச் செல்லும் வழியில், தம்பிராஜ் தோட்டம் என்ற இடத்திலிருந்தே காட்டுத்தீ பரவியதாக உள்ளூர்வாசிகள் சிலர் கூறினர். அதையடுத்து, அந்த இடத்துக்குச் சென்றோம். அங்கே, உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பிகள் உள்ளன. அவற்றை மரக்கிளைகள் உரசிக்கொண்டிருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தோம். அங்கிருந்துதான் புற்கள் எரிந்து மலையில் தீ பரவியதற்கான தடயங்கள் காணப்பட்டன. இந்த மின் கம்பிகள், கொழுக்கு மலை உச்சியில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலையின் மின்தேவைக்காகச் செல்வது தெரியவந்தது. இந்த எஸ்டேட், அதிபன் போஸ் என்பவருக்குச் சொந்தமானது.
அந்த எஸ்டேட் மேனேஜர் ஜானியிடம் பேசினோம். ‘‘தொழிற்சாலைக்கு வரும் மின்கம்பிகளின் பாதைகளை முறையாகப் பராமரிக்கிறோம். நான்கு மாதங்களுக்கு முன்புகூட, மின்கம்பிகள் வரும் வழிகளைப் பராமரித்தோம். எனவே, மின்கம்பிகளால் தீப்பிடித்திருக்க வாய்ப்பில்லை’’ என்றார். போடி துணை மின்நிலைய உதவி மின் பொறியாளர் ரவிக்குமாரிடம் பேசினோம். ‘‘11 ஆயிரம் வாட் உயர் மின் அழுத்த மின்சாரக்கம்பிகள் அவை. கொழுக்குமலை எஸ்டேட்டுக்கு அதன்வழியே மின்சாரம் செல்கிறது. அதன்மீது ஒரு மரக்கிளைபட்டாலும் ட்ரிப் ஆகி, உடனே தீப்பொறி உருவாகும்’’ என்றார்.
மிக நீண்ட தொலைவுக்கு உயர் மின் அழுத்த மின்சாரக் கம்பிகள் செல்லும்போது, அவற்றை முறையாகப் பராமரிப்பது சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் பொறுப்பு. அதைக் கண்காணிப்பது மின்துறையின் கடமை. இப்படியிருக்க, ஏன் இந்த வழித்தடத்தைப் பராமரிக்கவில்லை என்ற கேள்வி எழாமல் இல்லை. தீ விபத்துக்கு எஸ்டேட் நிர்வாகம் காரணமாக இருக்கும் பட்சத்தில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.

தப்பிக்கப் பார்க்கும் அதிகாரிகள்!
காட்டுக்குள் எது நடந்தாலும் வனத்துறைக்கு தெரியாமல் நடக்காது. அதன்படி, குரங்கணி காட்டுத்தீ விபத்துக்கும் வனத்துறைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது எனலாம். ‘‘வனத்துறையின் அனுமதிபெறாமல் சட்டவிரோதமாகவே காட்டுக்குள் ட்ரெக்கிங் சென்றார்கள்’’ எனத் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் பேசினர். ட்ரெக்கிங் சென்றவர்களில், போடி அருகே இருக்கும் முந்தல் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்தும் ஒருவர். ரஞ்சித், வனத்துறை தீத்தடுப்புப்பிரிவுக் காவலராகப் பணியாற்றியவர். வனத்தைப் பற்றிய அனுபவத்தால், அந்தக் குழுவுக்கு வழிகாட்டியாகச் செயல்பட்டுள்ளார்.
காட்டுத்தீயில் தப்பிய முதல் எட்டுப் பேர் இவரால்தான் பாதுகாப்பாகக் கீழிறக்கப்பட்டனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ‘‘மார்ச் 10-ம் தேதி, ஈரோட்டைச் சேர்ந்த ட்ரெக்கிங் குழுவுக்கு வழிகாட்டியாகச் செல்ல வன ஊழியர் ஒருவர் என்னை அழைத்தார். அதனால்தான் காட்டுக்குள் சென்றேன்’’ என்று மாவட்ட கலெக்டரிடமும் வனத்துறை உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வன ஊழியரான வனவர் ஜெய்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இன்னொருபுறம் ஈரோட்டைச் சேர்ந்த பிரபு என்பவர், ‘‘நாங்கள் வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதிபெற்று ரூ. 200 கட்டணம் செலுத்தியே காட்டுக்குள் சென்றோம்’’ என போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, “அவர்களுக்கு வழங்கப்பட்டது டாப் ஸ்டேஷன் வரையிலான பாஸ் மட்டுமே. அதையும் அவர்கள் வாங்கினார்களா? அல்லது, அவர்களை அனுப்பிவைத்த கிளப் நிர்வாகம் மொத்தமாக வாங்கியதா என்று தெரியவில்லை. அப்படியே அவர்கள் டிக்கெட் வாங்கியிருந்தாலும், அதை வைத்து டாப் ஸ்டேஷனுக்கு மட்டுமே செல்ல முடியும். கொழுக்குமலைக்குச் செல்ல அனுமதி இல்லை. எனவே, பிரபு சொல்வதில் உண்மை இல்லை’’ என்றார் அவர்.
ரஞ்சித் வெளியிட்ட ஓர் உண்மைக்காக, வனவர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் அவர் பேசினால், வனத்துறை உயர் அதிகாரிகள் பலர் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. அதை மனதில் வைத்துத்தான், ரஞ்சித்தை ‘கவனிக்க’ வனத்துறையினர் முடிவு செய்திருக்கிறார்களாம். அதே நேரம், பிரபுமீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்த போலீஸார், குரங்கணி விவகாரத்தை இத்துடன் முடித்துவிடவும் திட்டமிட்டுள்ளனர்.

அரசு நடவடிக்கை எடுக்குமா?
‘‘குரங்கணி சம்பவத்தையடுத்து, தமிழகத்தில் பல பகுதிகளில் ட்ரெக்கிங் செல்வதற்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. அதைவிட முக்கியம், தமிழகத்தில் உள்ள அனைத்து ட்ரெக்கிங் இடங்களையும் ட்ரெக்கிங் செல்வதற்கான விதிமுறைகளையும் முறைப்படுத்துவது. சரியான அங்கீகாரம் உள்ள ட்ரெக்கிங் கிளப்களை வனத்துறையில் பதிவுசெய்து, அவர்களுக்கு மட்டுமே அனுமதி தர வேண்டும். ட்ரெக்கிங் செல்லும் குழுவில் மருத்துவர் ஒருவர் கட்டாயம் இடம்பெற வேண்டும். நினைத்தபடி ட்ரெக்கிங் செல்வது இனி சாத்திய மில்லாததாக மாற வேண்டும். ‘ட்ரெக்கிங் பாதைகள் எவை எவை’ என வனத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். இப்படி ட்ரெக்கிங் விஷயத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்’’ என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
- எம்.கணேஷ்
படங்கள்: வீ.சக்தி அருணகிரி
குதிக்கச் சொன்னது யார்?
காட்டுத்தீயில் சிக்கிய குழுவினர் சென்னையிலிருந்த ட்ரெக்கிங் கிளப் நிர்வாகி ஒருவருக்கு போன் செய்திருக்கின்றனர். அவர்தான், ‘‘எங்காவது பாறைகளுக்கு நடுவே பள்ளம் இருந்தால் அதில் குதித்துவிடுங்கள். காட்டுத்தீ கடந்து செல்லும்வரை பாதுகாப்பாக அங்கே இருந்துவிட்டு மேலே வந்துவிடலாம்’’ என்று யோசனை சொன்னாராம். தீயின் புகைக்கு நடுவே தடுமாறிய பலர், ஆழம் தெரியாமல் படுபாதாள பள்ளத்தில் குதித்துவிட்டனர். அதனால்தான் உயிர்ப்பலி அதிகமானது என்கிறார்கள் மீட்புப்பணிக்குச் சென்ற மலை மக்கள்.