
மதிப்புக் கூட்டல் தொடர் - 13
கடந்த இதழில் தேனில் அடைத் தேன், தேன் நெல்லி, சர்க்கரை நெல்லி, தேன் மெழுகுவத்தி ஆகிய பொருள்களில் மதிப்புக் கூட்டல் தொழில் குறித்துப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, தேன் நெல்லி, தேன் குல்கந்து, தேன் வில்வம், தேன் பீடா ஆகியவற்றை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது குறித்து இந்த இதழில் பார்ப்போம்.
“தேனில் பல பொருள்கள் மதிப்புக் கூட்டல் செய்து, விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இதில் முக்கியமானது தேன் நெல்லி. தேனும், நெல்லியும் தனித்தனியே சிறப்பான மருத்துவக் குணங்களைக் கொண்டது. இந்த இரண்டையும் இணைக்கும்போது அந்தப் பொருளுக்கு இன்னும் மருத்துவக் குணம் கூடும். இதனால் தேன் நெல்லி அதிக வாடிக்கையாளர் களால் விரும்பி வாங்கப்பட்டு எளிதில் விற்பனையாக நிறைய வாய்ப்புண்டு.
தேன் நெல்லிதான் எங்களுடைய முதல் மதிப்புக் கூட்டுப் பொருள். அதன் வெற்றியின் பலனாகத்தான் இப்போது அதிக பொருள்களை நாங்கள் மதிப்புக் கூட்டி விற்பனை செய்து வருகிறோம்’’ என்கிற முன்னுரையுடன் ஆரம்பிக்கிறார், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல் பட்டைச் சேர்ந்த நூர் முகம்மது. தனது தொழிற்கூடத்தில் வேலையில் இருந்தவரை நாம் சந்தித்துப் பேசினோம்.

“நான் கடந்த 15 வருடங்களாகத் தேன் நெல்லி, தேன் குல்கந்து, தேன் வில்வம் ஆகிய பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்துவருகிறேன். தேன் பீடாவைக் கடந்த சில வருடங் களாக மட்டுமே மதிப்புக் கூட்டி வருகிறேன்.
பதினைந்து வருடங்களாக இந்தத் தொழிலை நான் செய்து வந்தாலும், கடந்த ஐந்து வருடங் களாகத்தான் இந்தத் தொழில் மூலம் அதிக லாபம் கிடைத்து வருகிறது. முதன்முதலில் தேனில் மதிப்புக் கூட்டும் தொழில் பற்றித் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதன் பின்னர், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்திலும் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.
அடுத்ததாக, சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். எந்தப் பொருளாக இருந்தாலும், சந்தை வாய்ப்புகள் சரியாக இல்லாமல் இருந்தால், அந்தத் தொழிலில் லாபம் கிடைக்காது. அதனால் என் அண்ணன் செல்வம் மூலம் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன்.
மதிப்புக் கூட்டல் தொழிலில் இறங்க நினைப்பவர்கள் முறையான பயிற்சி பெற்றவுடன், உடனே தொழிலை ஆரம்பித்து விடுகிறார்கள். இது முற்றிலும் தவறான விஷயம். நாம் விற்பனை செய்ய நினைக்கும் பொருளுக்குச் சந்தை வாய்ப்புகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகுதான் அந்தத் தொழிலில் நாம் இறங்கி, முதலீடு செய்ய வேண்டும். இந்த நடைமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை. ஏதோ ஒரு தொழிலை முதலில் கற்றுக்கொண்டு, அதைச் செய்யத் தொடங்கி விடுகிறார்கள். பிற்பாடு சந்தை வாய்ப்பு இல்லை என்பதைத் தெரிந்தவுடன், ‘இந்தப் பிசினஸே வேஸ்ட்ப்பா’ என்று புலம்பத் தொடங்கிவிடுகிறார்கள்.
15 வருடங்களுக்கு முன்னர் வெறும் 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தேன் நெல்லியைத் தயாரிக்க ஆரம்பித்தேன். இன்று குறிப்பிடத்தகுந்த அளவில் என் தொழில் வளர்ந்திருக்கிறது. எனக்கான சந்தை வாய்ப்புகள் பலமாக இருக்கின்றன என்பதால், எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறேன்.

எனக்கு முதன்முதலில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது பசுமை விகடன்தான். பசுமை விகடனில் வெளியாகும் பசுமைச் சந்தைப் பகுதியில் தேன் நெல்லி பற்றிய விளம்பரத்தைக் கொடுத்துத் தொழிலை விரிவுபடுத்தினேன். அதன் பலனாக அப்போதிருந்தே எனக்குத் தமிழகம் முழுவதும் டீலர்களும், வியாபாரிகளும் கிடைக்க ஆரம்பித்துவிட்டனர்.
குறுகிய காலத்தில் நான் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வளரக் காரணம், என்னுடைய பொருள்களின் தரம்தான். தரமான நெல்லிக்காயை மரக்காணம், உளுந்தூர்பேட்டை, ஒசூர் எனப் பல்வேறு இடங்களிலிருந்து வாங்குகிறோம். நாங்கள் வாங்கும் நெல்லிக்காய் அதிகமாக நார்ச்சத்து இருந்தால், அதை ஜூஸ் எடுப்பதற்கு பயன்படுத்திக்கொள்வோம். நார்ச்சத்து இல்லாத நெல்லிக்காயை மட்டும் தேன் நெல்லி எடுக்கப் பயன்படுத்திக்கொள்வோம். பொதுவாக, நவம்பர் முதல் பிப்ரவரியிலான காலத்தில் தரமான நெல்லிக்காய் அதிக அளவில் குறைந்த விலையில் கிடைக்கும். நாங்கள் வாங்கும் நெல்லிக்காயை வேகவைத்துப் பதப்படுத்தி, எங்களுக்குத் தேவையான போது பயன்படுத்திக் கொள்வோம். ஒரு ஆண்டுக்கு 200 டன் வரை நெல்லிக்காயை நாங்கள் இப்படிப் பாதுகாக்கிறோம்.
எங்களுக்குத் தேவையான தேனை இமாசலப்பிரதேசத்திலிருந்து வாங்கு கிறோம். ‘அக்மார்க்’ விதிமுறைகள் படி, இந்தத் தேன் இருப்பதால், அங்கேயே வாங்குகிறோம். ஒரு மாதத்துக்கு 20 டன் தேன் வீதம் ஒரு ஆண்டுக்கு 240 டன் தேனை வாங்குகிறோம்.
நான் முதன்முதலில் தேன் நெல்லியைத் தயார் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தபோது எனக்குக் கிடைத்த முதல் மாத லாபம் 10 ஆயிரம் ரூபாய். அப்போது என்னிடம் இரண்டு வேலையாட்கள் இருந்தார்கள். இப்போது, என்னிடம் 20 பேர் வேலை பார்க்கிறார்கள். மாத வருமானமாக 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.

தேன் மதிப்புக் கூட்டல் பொருள் களுக்கு இவ்வளவுதான் அளவு என்று வைத்துக்கொள்ளவில்லை. 10 ரூபாய் முதல் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ என வகைவகையாகப் பிரித்து விற்பனை செய்கிறோம். இதனால் எல்லா மக்களையும் எங்கள் பொருள்கள் சென்றடைகிறது. இதுபோக, கிடைக்கும் ஆர்டருக்கு ஏற்றவாறு பெரிய பெரிய அட்டைப் பெட்டிகளிலும் அடைத்து விற்பனை செய்துவருகிறோம்.
இப்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என நான்கு மாநிலங்களிலும் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் அம்மா ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான தேன் குல்கந்து, தேன் வில்வம் ஆகியவையும் நன்றாகச் சந்தையில் விற்பனை ஆகிறது.
இதுதவிர, தேனில் நெல்லியை ஊறவைத்துக் காயவைத்த நெல்லியையும் விற்பனை செய்து வருகிறோம். எதிர்காலத்தில் சுத்தமான தேன் தனியாகவும், சூரணமாக மதிப்புக் கூட்டியும் விற்பனை செய்வதற்கான வேலை களிலும் இறங்கியுள்ளோம்.
இனிவரும் காலத்தில் தேன் தொடர்பான பொருள் களைத் தயார் செய்து விற்பனை செய்வதில் எங்களுக்குத் தனியான இடம் கிடைக்க வேண்டும் என்கிற இலக்கை நிர்ணயித்து, அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம்’’ என்று முடித்தார் நூர் முகம்மது.
இரண்டு வேலையாட்களுடன் ஆரம்பித்த இவரது தொழில் இன்று இருபது வேலையாட்கள் வரை நீண்டிருக்கிறது. கடந்த 15 வருடங்களாக மதிப்புக் கூட்டல் தொழிலைச் செய்துவரும் இவர், புதிய தொழில் முனைவோர்களுக்குச் சிறந்த உதாரணமாக இருப்பார்!
(மதிப்புக் கூடும்)
- துரை.நாகராஜன்
படங்கள்: சி.சுரேஷ்குமார்
உள்ளூர்ச் சந்தை முக்கியம்!
‘‘நான் மதிப்புக் கூட்டல் தொழிலை ஆரம்பிக்கும்போது சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் சந்தைப்படுத்தினேன். உள்ளூர்ச் சந்தைதான் பல நுட்பங்களைக் கற்றுத் தரும். பொதுவாகவே, மதிப்புக் கூட்டல் தொழில் செய்ய புதிதாக வரும் இளைஞர்கள் முதலில் தங்களுடைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய வேண்டும். தொழிலை ஆரம்பித்தவுடனே பெங்களூரு, ஹைதராபாத் என்று விற்பனை செய்யக் கிளம்பிவிடக் கூடாது.
மதிப்புக் கூட்டல் தொழிலை முதலில் ஆரம்பிக்கும்போது இரண்டு வருடங்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். அதைத் தாக்குப்பிடித்து முன்னேறிவிட்டால் தொழில்முனைவோராக எளிதில் சாதித்துவிடலாம்” என்றார் நூர் முகம்மது.
இவர் சொல்லும் யோசனைகளின்படி நடந்தால், மதிப்புக் கூட்டல் தொழிலில் ஜெயிப்பது நிச்சயம்!