அரசியல்
Published:Updated:

ரிலீஸ் அன்றே ‘சுடப்’பட்ட படம்! - போராடும் தயாரிப்பாளர்

ரிலீஸ் அன்றே ‘சுடப்’பட்ட படம்! - போராடும் தயாரிப்பாளர்
பிரீமியம் ஸ்டோரி
News
ரிலீஸ் அன்றே ‘சுடப்’பட்ட படம்! - போராடும் தயாரிப்பாளர்

ரிலீஸ் அன்றே ‘சுடப்’பட்ட படம்! - போராடும் தயாரிப்பாளர்

பத்தில் இருப்பவரை எப்படியும் காப்பாற்றிவிடும் ஹீரோக்களைப் பார்த்தால், ரசிகனுக்கு மகிழ்ச்சி. திருட்டு வி.சி.டி அல்லது ஆன்லைனில் தனது படம் வெளிவராமல் இருந்தால் மட்டுமே படத்தயாரிப்பாளருக்கு மகிழ்ச்சி. படத்தின் டீஸர்களே ரிலீஸ் தேதிக்கு முன்பாக, இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியாகிவிடும் காலம் இது. சில படங்களும் அப்படி ரிலீஸுக்கு முன்பே இணையத்துக்கு வந்துவிட்டன. ‘மனுசனா நீ’ என்ற படம் ரிலீஸான அடுத்த நாளே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கஸாலி, பதறிப்போனாலும் சோர்ந்துபோகவில்லை. நியாயத்துக்காக நேரடியாகக் களத்தில் இறங்கியுள்ளார்.

ரிலீஸ் அன்றே ‘சுடப்’பட்ட படம்! - போராடும் தயாரிப்பாளர்

கஸாலியைச் சந்தித்துப் பேசினோம். “நான் தயாரித்த ‘மனுசனா நீ’ திரைப்படத்தை பிப்ரவரி 16-ம் தேதி ரிலீஸ் செய்தேன். படத்தை வெளியிட்ட தியேட்டர்களில், கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில் மட்டும், ‘தியேட்டருக்குக் கூட்டம் வரவில்லை’ என்று சொல்லி மறுநாளே படத்தைத் தூக்கிவிட்டனர். அப்போதுதான், ‘தமிழ்கன்’, ‘தமிழ்கூல்’ போன்ற இணையதளங்களில், ‘மனுஷனா நீ’ படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததைப் பார்த்தேன். அதனால், மூன்று கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதை விடக்கூடாது என்று, டிஜிட்டல் சினிமா நிறுவனமான ‘கியூப் சினிமா’ உதவியை நாடினேன். அவர்கள்தான் படத்தை தியேட்டர்களுக்கு டிஜிட்டலில் திரையிட்டனர். அவர்களிடம் இருக்கும் ஃபாரன்சிக் வாட்டர்மார்க் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், எந்தத் தியேட்டரில் படம் திருடப்பட்டது என்று கண்டுபிடிக்க முடியும். அதை வைத்து, படம் ரிலீஸான 16-ம் தேதி இரவு, கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில் வைத்துத்தான் படத்தைப் பதிவுசெய்துள்ளனர் என்பதைக் கண்டுபிடித்தோம். உரிய ஆதாரத்துடன் போலீஸில் புகார் அளித்தேன். புகாரின் பேரில், பிப்ரவரி 27-ம் தேதி, வேலூர் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் தரணிபாய் நேரில் ஆய்வு நடத்தி, தியேட்டர் உரிமையாளர் முருகன், ஆபரேட்டர் துரை ஆகியோரைக் கைதுசெய்தார். தியேட்டரில் இருந்த சர்வர் மற்றும் புரொஜக்டர்களையும் பறிமுதல் செய்தார்” என்றார்.

ரிலீஸ் அன்றே ‘சுடப்’பட்ட படம்! - போராடும் தயாரிப்பாளர்

‘ஃபெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி, “படம் திருடப்பட்டதைக் கண்டுபிடித்த ‘கியூப் சினிமா’ நிறுவனமே, மறுநாள் அந்தத் தியேட்டரில், மீண்டும் படத்தை ஓட்டிக்கொள்ள, புரொஜக்டரைக் கொடுக்கிறது என்றால், இதைவிட ஏமாற்று வேலை இருக்க முடியாது. ‘எவன் எப்படிச் செத்தால் எனக்கென்ன’ என்ற அராஜக மனப்போக்கு இது. ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் மொத்த உழைப்பையும், சில மணித்துளிகளில் ஒரு கும்பல் களவாடுகிறது. ஒரு தயாரிப்பாளருக்கு, அந்தப் படம் நன்றாக ஓடுகிறதா என்பதைவிட, அது இணையத்திலோ, வேறு வடிவிலோ வெளியில் வந்துவிடுகிறதா என்று பார்ப்பதே ஒரு தனி வேலையாக இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் கஸாலிக்கு ‘ஃபெப்சி’ எப்போதும் துணை நிற்கும்’’ என்றார்.

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் பேசினோம். “தியேட்டர் உரிமையாளர்கள் சிக்கினால், ‘எங்களுக்குச் சம்பந்தமே இல்லை. படிக்கட்டில் வைத்து, தெரியாமல் ஷூட் செய்துவிடுகிறார்கள்’ ஓவர்சீஸ் ரைட்ஸ் கொடுக்காமல் இருந்தால் இப்படி யாராலும் திருட முடியாது’ என்று சொல்கிறார்கள். தியேட்டர் கேன்டீனில் விற்பனை ஆகவேண்டும் என்பதற்காகவே, வெளியிலிருந்து கொண்டுவரும் தின்பண்டங்கள் எதையும் தியேட்டர்களில் அனுமதிப்பதில்லை. இப்படிப்பட்டவர்கள், மூன்று மணி நேரத்துக்கு தியேட்டரின் படிக்கட்டில் கேமரா வைத்து, படத்தை ஷூட் செய்தால் சும்மா இருப்பார்களா? அவர்களுக்குத் தெரியாமலா இப்படிச் செய்ய முடியும்? ‘சினிமாவைத் திருடி இணையத்திலும் டி.வி.டி-யிலும் விற்கும் தியேட்டர்களுக்குப் படத்தைக் கொடுக்க மாட்டோம்’ என்று உறுதியாகச் சொல்கிற தயாரிப்பாளர்கள் இங்கு இல்லை. ‘இதுபோன்ற திருட்டுகளைத் தடுப்பதற்கு உறுதி கொடுக்கிறோம்’ என்றுதான் ‘கியூப் சினிமா’ நிறுவனம் உள்ளே வந்தது. கிருஷ்ணகிரி முருகன் தியேட்டரில் வைத்துதான் படத்தை ஷூட் செய்துள்ளனர் என்று கண்டுபிடித்த ‘கியூப்’ நிறுவனமே, அடுத்த நாள் அதே தியேட்டருக்குப் புது புரொஜக்டரையும் கொடுக்கிறது. அரசும் காவல்துறையும்தான் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்” என்றார்.

ரிலீஸ் அன்றே ‘சுடப்’பட்ட படம்! - போராடும் தயாரிப்பாளர்

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், “தியேட்டரில் கேமராவை வைத்துப் படத்தைப் பதிவுசெய்திருந்தால் அதற்கு தியேட்டர் நிர்வாகம்தான் பொறுப்பு. தயாரிப்பாளர் கவுன்சில் மூலமாக, ‘இப்படிப்பட்ட தியேட்டர் களுக்குப் படம் கொடுப்பதில்லை’ என்ற உறுதியைக் காட்டச் சொல்லுங்கள். எங்கள் அசோசியேஷன், இதுபோன்ற தியேட்டர்களின் செயல்களை ஆதரிக்கவும் செய்யாது, அனுமதிக்கவும் முடியாது” என்றார்.

நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா, “தனி ஆளாக நின்று தியேட்டர் ஓனரை அரெஸ்ட் செய்யும் அளவுக்குப் போராடியிருக்கிற கஸாலியின் போராட்டத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். இதுவரையில் அவரை யாரும் பாராட்டினதாக எனக்குத் தெரியலை. இந்த மாதிரி திருட்டுத்தனம் பண்றவங்களைக் கண்டுபிடிச்சா ஒன்றரை லட்ச ரூபாய் பரிசு தருவதாக விஷால் சொல்லியிருந்தாரு. அதைப் பத்தியும் தெரியலை. படம் ரிலீஸ் ஆகுற அன்னிக்கே திருட்டு வீடியோ வெளியே வந்திடுது. சில நேரங்கள்ல அதுக்கு முன்னதாகக்கூட ரிலீஸ் ஆகிடுது. இதுக்குத் தனியா ஃபங்ஷன் வெச்சும் கொண்டாடக்கூடிய காலம் சீக்கிரமே வரலாம். இது போதாதுன்னு ஆன்லைன் அக்கப்போரு வேற. பேசாம வீடியோ திருடன் கையிலயே மொத்த ரைட்ஸையும் கொடுத்துட்டுப் போயிட்டா, அவனா பாத்து தயாரிப்பாளருக்கு ஏதாவது கொடுத்துட்டுப் போயிடுவான். பொறுப்புல இருக்கறவங்க உட்கார்ந்து பேசித்தான் இதுக்கு நிலையான ஒரு தீர்வை எட்ட முடியும். யாரும் உட்காரவே காணோமே?” என்றார்.

வழக்கை விசாரித்து வரும் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவின் டி.எஸ்.பி-யான நீதிராஜன், “கிருஷ்ணகிரி ‘முருகன் திரையரங்கி’ன் உரிமையாளர் முருகன், ஆபரேட்டர் துரை ஆகியோரைக் கைது செய்துள்ளோம். புரொஜக்டர் கருவி கோர்ட்டில் உள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரை, கைதானவர்களுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு வந்தால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்ய சட்டத்தில் இடம் உள்ளது” என்றார்.

ரிலீஸ் அன்றே ‘சுடப்’பட்ட படம்! - போராடும் தயாரிப்பாளர்

கியூப் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு அதிகாரி சிவராமன், “அந்தத் தியேட்டருக்கும் எங்களுக்கும் இருக்கிற ஒப்பந்த அடிப்படையில்தான் நாங்கள் மறுபடியும் புரொஜக்டர் கருவியைக் கொடுக்கிறோம். ‘திருட்டுக்கு கியூப் துணை போகிறது’ என்று சொல்லப்படுவது தவறு. தயாரிப்பாளர் கஸாலி, முதலில் எங்களிடம்தான் புகார் அளித்தார். எந்தத் தியேட்டரில் அந்தப் படத்தைப் பிரதி எடுத்தார்கள் என்று தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்து நாங்கள்தான் சொன்னோம். அந்தத் தியேட்டருக்குப் படம் தருவதில்லை என்ற முடிவைத் தயாரிப்பாளர் கவுன்சிலே எடுக்கலாமே? தியேட்டரில் படத்தைத் திருட்டுத் தனமாகப் பதிவுசெய்ய முடியாதபடி எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன” என்றார்.

‘‘சினிமாத் துறையில் பொறுப்பில் உள்ளவர்கள், என்னைப் போன்ற படத் தயாரிப்பாளர்களைத் தனியாகப் போராடிக்கொள்ளும்படி விட்டுவிடக் கூடாது என்பதே என் வேண்டுகோள்’’ என்கிறார் கஸாலி. சினிமா சங்கங்கள் கூடி நின்று முடிவெடுக்க வேண்டிய விஷயம் இது.

- ந.பா.சேதுராமன்
படங்கள்: க.மணிவண்ணன்