
தம்பி... உனக்குத் தெரியாதுல்ல... ரங்கய்யா பெரிய பாகவதரு. எஸ்.பி.பி-ல் லாம் ரதிமீனாவுல டிக்கெட் போட்டு வந்து ரங்கய்யாகிட்ட பிச்சை எடுக்கணும்.
போன வாரம் மதுரையில் இருந்து போன். ரங்கய்யா காலமான தகவலைச் சொன் னார் லோகு அண்ணன். அப்போது நான் மறைமலை நகரில் இருந்து கடற்கரைக்கு மின்சார ரயிலில் போய்க்கொண்டு இருந்தேன்.

அலைபேசிவிட்டு நிமிர்ந்தபோது, ஒரு காகிதத்தை நீட்டியபடி எதிரே நின்று இருந்தார் ஒருவர். அதில், 'டியர் சார்/ மேடம்... எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு கடுமையான விஷக் காய்ச்சல் தாக்கியதால், வலது கையும் காலும் செயல் இழந்துவிட்டது. இதற்கான ஆபரேஷனுக்குத் தங்களால் முடிந்த பண உதவியைச் செய்து உதவவும்...’ என அச்சிட்டு இருந்தது. அவரது வலது கையும் காலும் உடைந்து தொங்குவதைப் போல ஆடிக்கொண்டு இருந்தது. நான் 10 ரூபாயை எடுத்து நீட்டினேன். வாங்கிக்கொண்டவர் தயக்க மாகச் சிரித்தபடி, 'சார்... நீங்க சினிமாக் காரரா?’ என்றார்.
மொபைல் உரையாடலை வைத்து யூகித்து இருக்கிறார். பதில் சொல் லாமல் பார்த்துக்கொண்டு இருந்தபோதே, தன் இடது தோளில் தொங்கிய பையில் இருந்து ஒரு நோட்டை உருவி நீட்டினார். நோட்டு முழுக்கக் கவிதைகளும் பாடல்களும். புரட்டிவிட்டு, 'நல்லாயிருக்குங்க...’ என அவரிடம் கொடுத்துவிட்டு பீச் ஸ்டேஷனில் இறங்கினால், பின்னாலேயே கெந்திக் கெந்தி வாசல் வரை வந்து விட்டார்.
''சார்... சின்ன வயசுல இருந்தே கவிதை எழுதுவேன் சார். இன்னும் நிறையப் பாட்டுங்க எழுதிவெச்சிருக்கேன் சார். நீங்க மாடர்னா கேட்டாலும் எழுதித் தருவேன் சார்!'' என்றார் பரிதவிப்பாக. அவருக்கு என் அலைபேசி எண்ணைத் தந்துவிட்டுத் திரும்பும்போது, ரங்கய்யாவின் ஞாபகம் வந்தது!
மதுரையில் நண்பர்களோடு நான் தங்கிஇருந்த மொட்டை மாடிக்கு எதிர்மொட்டை மாடியில் தங்கியிருந்தார் ரங்கய்யா. மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் அர்ச்சனைத் தட்டுக் கடை போட்டு இருந்தார். அதிகாலையில் குளித்து முடித்து, பட்டையும் கொட்டையுமாக அவர் கோயிலுக்குக் கிளம்புவதே ஜெகஜோதியாக இருக்கும். மதியங்களில் பார்க்கும்போது அறையைப் பெருக்கிக்கொண்டு, சமைத்துக் கொண்டு, துவைத்த துணிகளைக் கொடி யில் உலர்த்திக்கொண்டு இருப்பார். சாயங் காலம் மீனாட்சி அம்மன் கோயில் பக்கம் போனால், அர்ச்சனைத் தட்டுக்களோடு உட்கார்ந்தபடி, 'என்ன தம்பி... நைட் ஷிஃப்ட்டா? டீ சாப்பிடுங்க’ என்பார். இரவில் போதையில் சிவந்த கண்களோடு வந்து நின்று, 'தம்பி... பெப்பர் தூளுவெச்சி ருக்கீங்களா..?’ எனத் தினமும் எதாவது கேட்பார். இவைதான் ரங்கய்யாவைப் பற்றி நான் அறிந்த சித்திரங்கள்.

ஒரு புத்தாண்டு இரவில் குடித்துக்கொண்டு இருக்கும்போது, 'தம்பி வா... ரங்கய்யா ரூமுக்குப் போவோம். ரங்கு கச்சேரியைக் கேட்டது இல்லையே நீயி...’ என இழுத்துப்போனார் தனபால் அண்ணன். மொட்டை மாடியில் விபூதி, குங்குமம் பொட்டலம் போட்டபடி உட்கார்ந்து இருந்தார் ரங்கய்யா.
'தம்பி... உனக்குத் தெரியாதுல்ல... ரங்கய்யா பெரிய பாகவதரு. எஸ்.பி.பி-ல் லாம் ரதிமீனாவுல டிக்கெட் போட்டு வந்து ரங்கய்யாகிட்ட பிச்சை எடுக்கணும். யோவ் ரங்கு... பாடுய்யா. அந்த 'சின்னப் புறா’வப் பறக்கவிடுய்யா...’
என தனபால் கேட்க, 'அடப் போய்யா... ஒன் எழவு வேற...’ எனச் சலித்துக்கொண்டார் ரங்கய்யா. தொடர்ந்து வற்புறுத்த, சின்ன மௌனத்துக்குப் பிறகு குரலைக் கனைத்துக்கொண்டு 'சின்னப் புறா ஒன்று...’ என ரங்கய்யா பாட ஆரம்பிக்க... அதிர்ந்துவிட்டேன். சட்டென்று நெஞ்சை ஊடுருவிப் பாயும் குரல். 'ஒருவன் இதயம் உருகும் நிலையை அறியாக் குழந்தை நீ வாழ்க, உலகம் முழுதும் உறங்கும் பொழுதும் உறங்கா மனதை நீ காண்க...’ என அவர் பாடப் பாட... மனசு துள்ளியது. பாடி முடித்துவிட்டு ஆவேசமாக ரெண்டு பெக் போட்டவர், 'எழவு... இதெல்லாம் வேணாம்னு கெடந்தா... நீ வேற கௌப்பிவிட்டுட்ட...’ என்றபடி உள்ளே போய் கொஞ்சம் புகைப்படங்களை அள்ளி வந்து என் முன்னால் கொட்டினார்.
எல்லாம் இள வயதில் லோக்கல் ஆர்கெஸ்ட்ராவில் அவர் பாடுகிற போட்டோக்கள். ஸ்டுடியோ பின்புலத்தில் யேசுதாஸுடன் நிற்கிற, சந்திரபோஸுக்குக் கை குலுக்குகிற போட்டோக்கள். 'அஞ்சு வயசுலயே சங்கீதம் படிக்க ஆரம்பிச்சுட்டேன்... சாஸ்திரிய சங்கீதம் சப்ஜாடாத் தெரியும். எல்லாத்தையும் தேடித் தேடிக் கத்துக்கிட்டேன். இறைவன் இப்பிடி ஒரு குரல்வளத்தைக் குடுத்துட்டான்... பாடகர்ஆயிரணும்னுதான் அலைஞ்சேன். என்ன பண்றது... வாழ்க்கை நம்மளை அடிச்சுத் தொவைச்சு இங்க கொண்டுவந்து போட்ருச்சு. பொழப்பே பெரும்பாடாப் போயிருச்சு. இதுல என்ன கழுத பாட்டு... எல்லாத்தையும் விட்டேன். இந்த தனபாலு மாதிரி நண்பர்களுக்காகத்தான் எப்பவாவது பாடுறது...’ என்றபடி, 'தீர்த்தக் கரைதனிலே...’ பாட ஆரம்பித்தார். அதன் பிறகு பல இரவுகள் ரங்கய்யாவின் பாடல்களில் கரைந்திருக்கின்றன.
ஒரு மார்கழி சாயங்காலம், மீனாட்சிஅம்மன் கோயிலில் பாட்டுக் கச்சேரிநடந்து கொண்டு இருக்க, வெளியே இவர் அர்ச்ச னைத் தட்டு விற்றுக்கொண்டு இருந்த காட்சி இப்போது நினைவுக்கு வருகிறது!
அந்த ரங்கய்யா இப்போது காலமாகி விட்டார். அவருடைய அத்தனை அழகான குரலும் காலமாகிவிட்டது. வனத்தில் காய்ந்த நிலவாக, எங்கோ ஓர் இடுகாட்டில் எரிந்துவிட்டது அவரது குரல். மின்சார ரயிலில் கை-கால் இழுத்தபடி என்னிடம் ஒரு கவிஞன் நீட்டிய கவிதைகளும் யாரும் அறியாமல், எவரும் தீண்டாமல் மக்கி மண்ணாகிவிடக்கூடும். இப்படி எத்தனை எத்தனை முகங்கள் வீதிக்கு வராமலேயே தொலைந்துபோய் இருக்கின்றன!
நம்மைச் சுற்றி இப்படி எத்தனை 'பாடப்படாத நாயகர்கள்’ (unsung heroes) இருக்கிறார்கள்? அடையாளமும், அங்கீ காரமும், வெளிச்சமும் இல்லாமல் மகத்தான திறமைகளோடு சாமான்யர்களாக வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்? ரசிப்பதற்கும், ஸ்பரிசிப்பதற்கும், பறிப்பதற்கும், தொடுப்பதற்கும் விரல்கள் இல்லாமல் பூத்துப் பூத்து உதிர்ந்துகொண்டு இருப்பவர்கள் எவ்வளவு பேர்? அவ்வளவு அழகான குரலை வைத்துக்கொண்டு, ஒயின் ஷாப்பில் சாராயத்துக்காக யாசகம் செய்து பாடிக்கொண்டு இருப்பவர் களை, பிரமாதமான நடனக் கலையை மூட்டைகட்டி வைத்துவிட்டுக் குடும்பத்துக்காக கூரியர் பையனாக அலைபவர் களை, அற்புதமான ஓவியத் திறமையோடு சோத்துக்கும் சொற்பக் காசுக்கும் சுவரில் சின்னங்கள் வரைந்துகொண்டு இருப்பவர் களை, பெரிய எழுத்துத் திறமையை முடக்கிப் போட்டுவிட்டு, பொருளாதாரச் சுமையில் கக்கூஸ் துடைப்பானுக்கு விளம்பர வாசகங்கள் எழுதிக்கொண்டு இருப்பவர்களை, கிரிக்கெட்டில் இந்திய அணி வரைக்கும் போகிற எல்லா தகுதிகளும் இருந்தும் முடியாமல் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸுக்கு சிக்னல் போட்டுக்கொண்டு இருப்பவர்களை, இணையத் தமிழில் வியக்கவைக்கும் மென்பொருள்கள் கண்டுபிடித்துவிட்டு, வெளிப்பட முடியாமல் அலைபவர்களை, ஏராளமான நடிப்புத் திறமை இருந்தும் ஏதேதோ அலுவல்களில் குப்பை கொட்டிக்கொண்டு இருப்பவர்களை... அனுதினம் எவ்வளவு பாடாத நாயகர்களைக் கடந்துபோகிறோம் நாம்!

தஞ்சாவூரில் 'கொடிமரத்து மூலை’ என்ற ஏரியாவுக்குப் போயிருக்கிறீர்களா? தமிழக அளவில் பிரபலமான பல கரகாட்டக் குழுக்கள் இங்குதான் இருக்கின்றன. அதனாலேயே 'கரகாட்ட ஏரியா’ என இந்தப் பகுதி பிரபலம். ஒரு காலத்தில் எப்போதும் பரபரப்பாக இருந்த இந்தப் பகுதி, இப்போது திருவிழா முடிந்த நாடகக் கொட்டகை மாதிரி கிடக்கிறது. திருவிழாக்களாலும் கொடைகளாலும் நிறைந்துகிடந்த அவர்களின் பொழுதுகள் இப்போது வெறுமையிலும் வறுமையிலும் கழிகின்றன. க.சீ.சிவகுமாரின் 'சண்முகசித்தாறு’ கதையில் வரும் மனோன்மணி போன்ற பெரும் ஆடல் அழகிகள் எல்லாம் இன்று கட்டட வேலைக்குப் போகிறார்கள்.
போன முறை ஊருக்குப் போயிருந்தபோது கிட்டுவைப் பார்த்தேன். கிட்டு, அந்த கரகாட்டக் குழுக்களில் பெரியவர். ஒரு காலத்தில் பெரும் நட்சத்திரமாக வாழ்ந்தவர். வெண்ணவாசலில் வெட்டாத்தங்கரை அரை நிலவில் அவரது கண்களில் கலையும் கூத்துமாகக் கடந்து வந்த காலங் கள் நுரைத்துக்கொண்டு இருந்தன. ''எங்கே தம்பி... இப்போல்லாம் வருஷத்துக்கு அஞ்சாறு அழைப்புங்க வந்தாலே பெருசு.
எல்லாத் திருவிழாவுலயும் புதுப் படம் போட ஆரம்பிச்சுட்டான். 'மானாட மயிலாட’ புகழ்னு டான்ஸ் போடறான். எங்களை யாரு கூப்பிடுறா? எங்களுக்கும் இந்தக் கலையைவிட்டா வேற நாதி இல்ல. இதான் சோறு தண்ணினு இருந்து தொலைஞ்சாச்சு. சரி... அவனவன் புள்ளைங்களையாவது மடை மாத்திவிட்ருங்கடானு சொல்லிட்டேன். இந்தத் தெறமையை வெச்சுக்கிட்டு என்ன தம்பி பண்ண. அன்னந் தண்ணிக்கே வழி இல்லையே. என்னென்னா தம்பி... ஜொலிஜொலிப்பா இருந்துட்டு, யாரும் கண்டுக்காமக்கெடக்கறது இருக்கு பாருங்க... அதான் பெரிய கொடும!’ என்றபோது, காலத்தின் நிராகரிப்பு தந்த வலி, அவருடைய சொற்களில் சொட்டின!
இதைப்போலவேதான் பக்கத்திலேயே ரெட்டிபாளையத்தில் தப்பாட்டக் கலைஞர்கள் இருக்கிறார்கள். உலகமயமாக்கலின், பன்னாட்டு நுகர்வுக் கலாசாரத்தின் புறக்கணிப்புகளின் துயரத்தில் துரத்தப்பட்டவர்கள். உதிரம் தகிக்க, அவர்கள் அடிக்கும் பறையிசைதானே இந்த மண்ணின் அடை யாளம். அதுதானே நமது உழைப்பின்... கோபத்தின்... கொண்டாட்டத்தின் இசை. நமது ஆதி வேர்களில் கிளைத்த இலை களின் இசை நரம்புகள் இவர்களுடையது தானே. ஆனால், அந்த மண்ணின் கலைஞர்களும் இன்று திறமைக்கு வாய்ப்பு இல்லாமல் வறுமைக்குள்கிடக்கிறார்கள். இந்த தேசம் முழுவதும் 'பாடப்படாத நாயகர்களாய்’ இறைந்துகிடக்கும், மண்ணின் கலைஞர்களை மீட்க இந்த அரசும் சமூகமும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது!
சமீபத்தில் நண்பரோடு அவரது ஊர் திருக்காட்டுப்பள்ளிக்குப் போயிருந்தேன்.
'இங்கே தீவிரமான ஒரு வாசகி இருக்காங்க. எல்லா ரைட்டரையும் படிச்சுருவாங்க. விகடன்ல ஒண்ணுவிடாமப் படிச்சுருவாங்க... நீ வந்து பார்த்தின்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்க...’
என்றபடி ஒரு ஓட்டுக்கட்டு வீட்டுக்கு அழைத்துப்போனார். சமையல்கட்டில் இருந்து புடவை முந்தியில் கை துடைத்தபடியே ஓடிவந்தார் அந்தப் பெண். எங்களைப் பார்த்ததும் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். தனக்குப் பிடித்த
எழுத்துக்களைப் பற்றித் தடதடவெனப் பேசிக்கொண்டு இருந்தவர், சட்டென்று உள்ளே போய் தயக்கத்துடன் கொஞ்சம் பேப்பர்களை எடுத்து வந்தார். 'நான்கூடக் கதையெல்லாம் எழுதுவேன்... குடும்பம் குட்டினு வந்துட்ட பிறகு அப்பிடியே நிறுத்திட்டேன். எழுதினாலும் இங்கே யார்ட்டயும் காட்றது இல்லை. எதோ நீங்க வந்தீங்களேனு தந்தேன்...’ என்றபடி ஒரு சிறுகதையைக் கொடுத்தார். அதை வாங்கிப் படித்துப்பார்த்தால் ஆச்சர்யமாக இருந்தது. நிஜமாகவே நல்ல கதை அது.
'ஏங்க... ரொம்ப நல்லாருக்குங்க...’ என்றால், 'தேங்க்ஸுங்க...’ என்றார் சமையல் அறையைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி. அங்கிருந்து திரும்பிய வெகு நேரம், அவர் கண்கள் மினுங்க வாசலில் நின்ற சித்திரம் அழியவில்லை.
இன்னும் ஆயிரம் ஆயிரம் மனிதர்களிடம் இருக்கின்றன, நம்மால் வாசிக்கப்படாத ஆயிரம் ஆயிரம் கதைகள்!
(போட்டு வாங்குவோம்)
#VikatanGoodReadsChallenge

தொடர் படிச்சீங்களா... சுவாரஸ்யமாக இருந்ததா? சரி, இப்போ உங்களுக்கு அடுத்த சவால். இந்த தொடர் சம்பந்தமான #VikatanGoodReadsChallenge Quiz-ல கலந்துகிட்டு, சரியான பதில்களை சொல்லுங்க. சர்ப்ரைஸ் வெயிட்டிங்..!
Quiz-ல் கலந்துகொள்ள: http://bit.ly/homestaywithvikatan