Published:Updated:

அன்பும் அறமும் - 4

அன்பும் அறமும் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 4

சரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்

கமும் நவீன அங்காடிகளில் விற்கப்படும் நகப்பூச்சும் மாதிரி நெருக்கமான தோழிகள் அவர்கள். இருவருமே, புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்கள். கொண்டாட்டங்களை முன்னிறுத்திய வாழ்வு இருவரதும். தங்களுக்கு வயதே ஆகாதென நம்புகிற தலைமுறையைச் சேர்ந்த அவர்கள் இருவருக்கும் மிகச் சரியாக இருபத்தைந்து வயதுதான் நடக்கிறது. பண்டிகைக்காலக் கொண்டாட்டமொன்றின் இரவில் அதில் ஒரு தோழிக்கு வங்கியிலிருந்து 45,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாகக் குறுஞ்செய்தி வருகிறது. ஏ.டி.எம் கார்டை அன்றைக்கு அலுவலகத்திற்கு எடுத்து வந்தது அந்தப் பெண்ணிற்கு ஞாபகம் இருக்கிறது. வேறு யார் எடுத்திருப்பார்கள்?

மறுநாள் அலுவலகம் போன அவர் அலுவலக அனுமதியுடன் கண்காணிப்பு கேமராக்களை நோட்டம் விட்டிருக்கிறார். அவரின் தோழி அவருடைய பையிலிருந்து எதையோ எடுக்கிற காட்சி அதில் பதிவாகியிருக்கிறது. அலுவலகத்தில் அழைத்து அந்தப் பெண்ணை விசாரித்திருக்கிறார்கள். “அவ சொல்றான்னா என்னைச் சந்தேகப்படறீங்க? நான் ஹேர் பேண்டைத்தான் எடுத்தேன்” என்றிருக்கிறார் அவர். அந்தப் பெண்ணின் கண்ணைப் பார்த்தால் திருடின மாதிரி தெரியவில்லை என்று எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். அந்த விசாரணைக்குப் பின் அந்தப் பெண், அலுவலகம் தொடர்பான பிரசன்டேஷன் ஒன்றையும் எல்லோருக்கும் செய்துகாட்டியிருக்கிறார். “எடுத்திருந்தா கொஞ்சமாவது பதற்றம் இருந்திருக்கும்ல. அசால்ட்டா பிரசன்டேஷன் கொடுக்கிறாங்கன்னா கள்ளம் கபடம் இல்லைன்னுதானே அர்த்தம்” என்று எல்லோரும் நம்பியிருக்கின்றனர்.

அன்பும் அறமும் - 4

காசைத் தொலையக் கொடுத்த பெண்ணுக்கு வெறுத்துப்போய்விட்டது. வங்கியை அழைத்துக் கேட்டபோது, பணம் எடுத்த ஏ.டி.எம் முகவரியைக் கொடுத்திருக்கிறார்கள். தோழி தங்கியிருந்த பெண்கள் விடுதிக்கு அருகில் உள்ள ஏ.டி.எம் அது. அலுவலகத்தில் மறுபடியும் அழைத்துக் கேட்டபோதும் அந்தப் பெண் ஒப்புக்கொள்ளவேயில்லை. வேறு வழியில்லாமல் காவல்துறையின் உதவியை நாடிவிட்டார் காசைத் தொலையக்கொடுத்தவர். காவல் துறையில் அழைத்து, ‘பெற்றோரை வரவழைத்துச் சொல்லிவிடுவோம்’ என்று மிரட்டிய பிறகே பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் பணத்தை எடுத்த பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் திருமணம் என்கிற நிலையில்தான் இத்தனை களேபரங்களும் நடந்திருக்கின்றன. “இவ்வளவு நாள் பழகின ஃப்ரெண்டுன்னுகூடப் பார்க்கலை. ஒரு ஸாரிகூடக் கேட்கலை. இதெல்லாம் பரவாயில்லை. பணத்தை எடுத்திட்டு, கொஞ்சம்கூடப் பதற்றமே இல்லாமல், குற்றவுணர்ச்சி இல்லாமல் அவள் இருந்ததுதான் என்னமோ பண்ணிருச்சு” என்றார் பணத்தைத் தொலையக்கொடுத்த பெண். அதைத்தான் இந்த இடத்தில் முக்கியமாகப் பேச வேண்டியிருக்கிறது.

கூட்டு அறைகளில் தங்கியிருக்கும்போது, ‘பணம் காணாமல் போய்விட்டது’ என யாராவது புகார் எழுப்புவார்கள். பணத்தை நாம் எடுத்திருக்க மாட்டோம். ஆனாலும் நம்மைத் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என ஒரு பதற்றம் வந்து அடங்குமே, எடுக்காதவனுக்கே இருக்கக்கூடிய அந்தப் பதற்றத்தை, எடுத்த பெண் எதன் காரணமாகத் தொலைத்தார்? இது ஏதோ மேல்தட்டு, கீழ்த்தட்டு எனப் பிரித்துப் பார்த்துப் புரிந்துகொள்ளக்கூடிய விஷயமில்லை. எல்லாத் தட்டுகளிலும் சர்வசாதாரணமாக நடக்கக் கூடிய விஷயமே இது.

சென்னை அசோக்நகரில், கிறிஸ்துமஸ் இரவொன்றில் ஒரு வீட்டில் 25 லட்சம் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது. அந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட பையன்களை ஒருதடவை புரசைவாக்கம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குள் இருந்த விசாரணை மன்றத்தில் வைத்துப் பார்த்தேன். அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேருக்குமே 16 வயதுக்கு மேல் இருக்காது. அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு பையனின் அம்மா வந்திருந்தார். வறுமையில் முக்கியெடுத்த முகத்துடன் அந்த ஏழைத்தாய் கவலைகளுடன் நின்றிருந்தார். அந்தப் பையன்கள் வெகு சாதாரணமான முகக் குறிப்புகளுடனும் மனநிலையுடனும் அந்தக் கொள்ளைச் சம்பவத்தை விவரித்தார்கள். எனக்குத்தான் தூக்கி வாரிப்போட்டது. “திருடும்போது யாராவது வந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?” என்று கேட்டபோது, என் தோள்பட்டை உயரமே இருந்த அந்தச் சிறுவன் கண்களில் எந்தச் சலனமும் இல்லாமல், “போட்டுத் தள்ளியிருப்போம் தலை” என்றான். திருடி மாட்டிக் கொண்டோம் என்கிற எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாத ஒரு தலைமுறை இங்கே மெள்ள உருவாகிக் கொண்டிருக்கிறது.

ஐந்து வயதுக் குழந்தையை எல்லாக் காலங்களிலும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திக் கொல்கிறவர்கள் இருந்திருக்கிறார்கள். அந்தக் குற்றத்தைச் செய்துவிட்டு, குமைந்து குமைந்து செத்துப் போவார்கள் ஒரு காலத்தில். ஆனால், அதை இப்போது செய்த இளைஞன் ஒருவன், எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் சிறைக்குப் போகிறான், சிறையிலிருந்து வெளியே வருகிறான், வெளியே வந்த அடுத்த கணம் அம்மாவைக் கொல்கிறான், மறுபடி தப்பிக்கிறான், மாட்டிக் கொள்கிறான். இத்தனை துர்சம்பவங்கள் நடக்கிற இடைவெளியில் நான் அந்த இளைஞனின் முகத்தையே பல்வேறு காட்சிகளின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். இதுபோன்ற சம்பவங்களைச் செய்தவர்கள், முகத்தை மூடிக்கொண்டு வருவார்கள். அவன் நெஞ்சுரம் கொண்டு இந்தச் சமூகத்தை நேருக்கு நேர் பார்த்தபடிதான் வெளியே வருகிறான். துளிக் குற்றவுணர்வு இல்லை அதில்.

எங்கே தொலையக்கொடுத்தார்கள் அதை? பாலியல், ஒழுக்கம், அறம் என இதுவரை சொல்லிக்கொண்டிருந்தவற்றையெல்லாம் ஒரே எக்கில் தாவிக் குதித்துவிட்டார்கள் ஒரு பகுதியினர். எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் அலுவலகத்தில் ஒரு வாழ்க்கை, வீட்டில் ஒரு வாழ்க்கை என வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களையும் ஆண்களையும் பார்க்க முடிகிறது.

ஒழுக்கம் சார்ந்த அளவீட்டின்படி இந்த விவகாரங்களை அணுக விரும்பவில்லை. எது ஒழுக்கம் என்பது காலம்தோறும் மாறியபடியே இருக்கிறது. ஆனால், எல்லாவற்றிற்கும் அப்பால் கண்ணுக்குத் தெரியாத பொது ஒழுக்கம் என்பது தின்று கொழுத்த பூனைக் குட்டியைப் போல ஓர் ஓரத்தில் படுத்துக்கொண்டு இந்த ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அது வேடிக்கை பார்க்கிறதே என்கிற அச்சவுணர்வுதான் பல நேரங்களில் கடுமையான முள்களைக் கொண்ட இந்தச் சக்கரத்தைச் சுழற்றுகிறது.

தொலைக்கிறோம் என்பதே தெரியாமல் குற்றவுணர்வைத் தொலைத்தவர்களுக்கு மத்தியில் இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்கிற எத்தனம் உடையவர்களையும் பார்க்கிறேன். “மறுவாழ்வு மையத்தில அடிப்பாங்க அங்கிள். அம்மா அப்பா அடிச்சப்ப போலீஸுக்குப் போயிடுவேன்னு எல்லாம் மிரட்டியிருக்கேன். இப்ப இந்த அடிய தாங்க முடியலை. எப்படியாச்சும் இதிலிருந்து வெளில வந்திரணும். தப்புப் பண்ணிட்டோம்னு மனசு பாரமா இருக்கு” என அடங்கி ஒடுங்கிக் கெஞ்சின ஒரு பையன் என்னோடு சில வாரங்கள் தங்கியிருந்தான். அதே பையன்தான் அதற்கு முன்னர், “உங்களுக்கு இதையெல்லாம் பண்றது குற்றவுணர்வா இருக்கு. எங்களுக்கு அப்படியில்லை. இது எங்கள் வாழ்க்கை” என முகத்தில் அடித்தாற்போல ஒருசமயம் சொல்லியிருந்தான். மனம் திருந்திய மைந்தர்களாய் திரும்பிக் கூடுநோக்கி வருகிறவர்கள் எல்லாக் காலங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அன்பும் அறமும் - 4

அந்தப் பையனை அழைத்துக் கேட்டபோது அவன் சொன்ன ஒரு விஷயத்தை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். “எங்களுடைய வீட்டில் படிப்பைப் பற்றிப் பேசுவார்கள். பணத்தைப் பற்றிப் பேசுவார்கள். சொந்தக்காரர்கள் என்று பெரியளவில் யாரும் வருவதில்லை. நல்லது எது, கெட்டது எது என எங்கள் வீட்டில் உரையாடியதே இல்லை” என்று அவனுக்குத் தெரிந்த மொழியில் விளக்கிச் சொன்னான். அப்போதெல்லாம் நீதிக் கதைகள் சொல்கிற வகுப்பொன்றையே வாரம் ஒருநாள் வைத்திருந்தார்கள். அதெல்லாம் இருக்கிறதா இப்போது என்று தெரியவில்லை. ஆனால், குறைந்தபட்சம் நல்லது கெட்டதுகள் குறித்த உரையாடல்கள் வீட்டிற்குள்ளாவது நடந்திருக்க வேண்டாமா?

நட்பை இழந்தாலே நாற்பது நாள் அமர்ந்து புலம்புகிறவர்களுக்கு மத்தியில் காதலைக்கூட அடுத்தநாளே உதறுகிறவர்கள் உருவாகி விட்டார்கள். காதலிக்காக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் 30 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்த ஒருத்தரைக் கொலை செய்துவிட்டு ஓடி வந்தான் ஒரு பையன். ஒரு கட்டத்தில் காவல்துறை நெருங்கிவிட்டது தெரிந்து, அவன் தற்கொலையும் செய்துகொண்டான். அவன், தற்கொலை செய்துகொண்ட அன்றிரவு அந்தப் பையனின் காதலி இன்னொரு பையனுக்கு ‘ஐ லவ் யூ’ எனக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்ததை அந்தப் பெற்றோர்கள் எடுத்துக் காட்டினார்கள். இதையெல்லாம் சகித்துக்கொள்கிற மாதிரி சமூகம் ‘வளரவில்லை’ என்பதை அவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்வது?

ஒருபக்கம் விண்வெளியில் போய் நடமாடுகிற தைரியத்தைப் பெற்றிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் எதன்மீதும் பிடிப்பில்லாதவர்களாகவும் அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். நண்பர்களோடு கடற்கரையொன்றுக்கு ஐந்தாறு பேர் போயிருக்கிறார்கள். ஒருத்தன் மட்டும் கடற் சுழலுக்குள் மாட்டிக்கொண்டான். எல்லோரும் சேர்ந்து காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். முடியவில்லை என்றதும் கமுக்கமாய்த் திரும்பி வந்து கிரிக்கெட் விளையாடப் போய்விட்டார்கள். விசாரித்துப் பார்த்த பிறகுதான் கூட வந்த நண்பன் கடலில் மூழ்கிச் செத்து விட்ட விஷயமே தெரிய வந்திருக்கிறது. பொய்யெல்லாம் சொல்லவில்லை. எல்லாப் பத்திரிகைகளிலும் வந்த விஷயம்தான் இது. ``ஒரு வார்த்தையாவது சொல்லிருக்கலாம்ல. சொல்லிவச்ச மாதிரி அத்தனை பையன்களும் அவன் எங்க போனான்னு எங்களுக்குத் தெரியலைன்னு சொன்னாங்க. ஒருத்தன் முகத்திலகூடப் பதற்றமே இல்லை” என்றார் செத்துப்போன பையனின் தாய். நண்பன் செத்தாலும் சொல்ல மாட்டோம், திருடினாலும் சொல்ல மாட்டோம், கொள்ளையடித்தாலும் கவலையில்லை, கொன்றாலும் தப்பில்லை என இப்படி ஒரு தலைமுறை வளர்வது ஆரோக்கியமானதில்லை.

இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது. குற்றவுணர்வே கொள்ள வேண்டியதில்லை என்கிற மனநிலையை இவர்களுக்குக் கடத்தியது யார்? ஒரு குற்றம் நடந்தால் அதில் எல்லோருக்கும் பொறுப்பிருக்கிறது என்பது பாலபாடம். ஒளிந்து மறைந்து திரிந்து ஒரு தலைமுறை செய்ததை இப்போது இவர்கள் வெட்ட வெளிச்சத்தில் செய்ய ஆசைப்படுகிறார்கள். அறம் என்பது எது எனக் கேள்விகள் ஒருபக்கம் இருக்கலாம். இது ஏதோ ஒழுக்கவியல் சார்ந்த போதனைகள் இல்லை. நான் அந்தப் பக்கமும் இல்லாமல் இந்தப் பக்கமும் இல்லாமல் நடுவில் நாற்காலி போட்டுக்கொண்டு அமர்ந்து இந்த விஷயத்தை அணுக விரும்புகிறேன். ஒரு சமூகம் எதை வேண்டுமானாலும் உதறிவிடலாம். அடிப்படை அறம் சார்ந்த குற்றவுணர்வை மட்டும் உதறிவிடக் கூடாது என்று எளிமையாகப் புரிந்து கொள்கிறேன். தொகுக்கப்பட்ட குற்றவுணர்வுகளின் வழியாகத்தான் ஒரு சமூகம் தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது என்பதை அழுத்தமாக நம்புகிறேன். குற்றவுணர்வே இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்கியது நாம்தான் என்பதில் அழுத்தமான குற்றவுணர்வின் புள்ளியைத் தொட வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்களோடு அமர்ந்து உரையாட வேண்டிய தருணம் இது. இந்தச் சமூகம் எதைத் தந்ததோ அதைத் திருப்பித் தந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். வயல்களையெல்லாம் ரசாயனமாக்கி விட்டு, வளர்கிற புல் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி? குற்றவுணர்வு திரண்டு வருகிற போது அதைச் சுமக்கிற சக்தியும் அவர்களுக்கில்லை என்பதாலேயே பதறுகிறேன். ஆனால், அவையெல்லாவற்றையும் மீறி “எப்படியாவது இதிலிருந்து வெளில வந்துரணும் அங்கிள்” எனத் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு சொன்ன அந்தப் பையன், கண்ணுக்குள் ஒரு சித்திரமாய் உருவாகி, நிலவில் கால் மடக்கி நெல் குத்துகிற பாட்டிபோல உறைந்து போய் அமர்ந்திருக்கிறான். அவனைப் போன்றவர்களுக்கு இனிமேல் நாம் கதை சொல்ல வேண்டும்!

- அறம் பேசுவோம்!