அரசியல்
Published:Updated:

அனுமதி பெறாத கிளப்புகள்... ஆபத்தான ட்ரெக்கிங்!

அனுமதி பெறாத கிளப்புகள்... ஆபத்தான ட்ரெக்கிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுமதி பெறாத கிளப்புகள்... ஆபத்தான ட்ரெக்கிங்!

அனுமதி பெறாத கிளப்புகள்... ஆபத்தான ட்ரெக்கிங்!

‘வாரம் முழுக்க பிரஷரோடு வேலை பார்த்த டென்ஷனை, பசுமையான காட்டுக்குள் ட்ரெக்கிங் சென்று ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள்’ என அழைக்கும் நிறுவனங்கள் பெருகிவிட்டன. உயரமான மேற்குத்தொடர்ச்சி மலைகள் முதல், திருச்சி அருகேயுள்ள பச்சை மலை வரை, எல்லா இடங்களிலும் ‘சூழல் சுற்றுலா’ என்ற பெயரில் ட்ரெக்கிங்கை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள். குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், தமிழகத்தில் மட்டுமன்றி கேரளாவிலும் தெலங்கானாவிலும்கூட, ட்ரெக்கிங் போகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குரங்கணி காட்டுத்தீ அணைந்தாலும், அச்சம்பவம் பற்ற வைத்த விவாதத்தீ சமூக வலைதளங்கள் எங்கும் இன்னமும் அணையாமலே இருக்கிறது. குரங்கணி பயணத்தை ஒருங்கிணைத்த சென்னை ட்ரெக்கிங் கிளப் (CTC) அமைப்புக்கு ஆதரவாகவும் எதிராகவும் இன்றுவரை தினமும் சிலர் எழுதி வருகின்றனர். CTC-யின் நிறுவனர் Peter Van Geit பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். போலீஸ் தேடுதல் வலையில் அவர் இருக்கிறார்.

குரங்கணி சம்பவம், CTC-ன் கவனக்குறைவால் நடந்ததா? நல்ல நோக்கத்துக்காக நாடுவிட்டு நாடு வந்து நம்மிடையே இயற்கைமீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தவரை போலீஸ் தேடும் அளவுக்குப் போனது சரியா?

அனுமதி பெறாத கிளப்புகள்... ஆபத்தான ட்ரெக்கிங்!

இந்த இடத்தில் CTC என்ற நிறுவனத்தை மட்டும் வைத்து யோசிக்காமல், வாராவாரம் இதுபோன்ற இயற்கைப் பயணங்களை ஒருங்கிணைக்கும் அத்தனை நிறுவனங்களையும் (பதிவு செய்யப் பட்டவை, பதிவு செய்யப்படாதவை) வைத்துதான் யோசிக்க வேண்டும்.

இந்த ட்ரெக்கிங் நிறுவனங்கள் தொடங்கும் முறையே பிரச்னைதான். சமீபத்தில் அப்படி ஆரம்பிக்கப்பட்டு, வேகமாக வளர்ந்துவரும் ஒரு நிறுவனத்தின் ஒருங்கிணைப் பாளரிடம் பேசினோம். ‘‘வாரம் முழுக்க ஐந்து நாள்கள் வேலை அதிகமா இருக்கும். ‘வெள்ளிக்கிழமை நைட் எஸ்கேப் ஆனா, திங்கள்கிழமை காலைல வரலாம். மொபைல் சிக்னல் இருக்காது’ன்னு சொல்லித்தான் என் ஃப்ரெண்டு முதல்ல என்ன அழைச்சிட்டுப் போனான். அப்புறம் எனக்குப் பிடிச்சுப்போச்சு. மாசத்துக்கு ரெண்டு வீக் எண்டு மலை ஏறிடுவேன்.

என்னைக் கூட்டிட்டுப் போற ஆர்கனைசர் ஒரு தடவை ‘ப்ளான் கேன்சல்’னு மெசேஜ் பண்ணாரு. ஏன்னு கேட்டா, ‘மூணு ஆள் குறையுது’ன்னாரு. நான் உடனே எங்க ஆபீஸ்ல இருந்தே மூணு பேரைச் சேர்த்து விட்டேன். அந்த வாரம் என்கிட்ட அவர் காசு வாங்கல. அப்புறம், நான் ஒவ்வொரு வாரமும் ஃபேஸ்புக்ல போடுற படங்களைப் பார்த்துட்டு நிறைய பேரு கேட்டாங்க. அந்த எண்ணிக்கை அதிகமானதும் நானே தனியா ட்ரெக்கிங் ஆர்கனைஸ் செய்ய ஆரம்பிச்சேன். ஏழெட்டு டென்ட் வாங்கினேன். ஏற்காடு, கேரளாவுல இருக்கிற வாகமன் மாதிரியான இடங்களைத் தேர்வு செஞ்சேன். உள்ளூர் ஆளுங்ககூட பேசி ஜீப், உணவு எல்லாம் ரெடி பண்ணிட்டேன். போன் பண்ணி ‘இத்தனை பேரு வர்றோம்’னு சொன்னா, எல்லாம் ரெடியாகிடும். வேலையை விட்டுடலாம்னு ஐடியா பண்ற அளவுக்கு இதுல வருமானம் இருக்கு’’ என்றார்.

ட்ரெக்கிங் செல்ல வனத்துறையில் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். செல்பவர்களின் முகவரி, பிளட் குரூப், உடல்நிலை உள்ளிட்ட எல்லாத் தகவல்களையும் கொடுத்து அனுமதி பெற வேண்டும். காடுகளில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே ட்ரெக்கிங் போக வேண்டும். வனத்துறைப் பணியாளர்கள் உடன் வருவார்கள். கோடையிலும், மழை நாள்களிலும், ஆபத்தான விலங்குகள் நடமாடும் இடங்களிலும் ட்ரெக்கிங் போக அனுமதி இல்லை. குழந்தைகளுக்குக் கண்டிப்பாக அனுமதியில்லை.

அனுமதி பெறாத கிளப்புகள்... ஆபத்தான ட்ரெக்கிங்!

ஆனால், ட்ரெக்கிங் அமைப்புகளை நடத்துபவர்கள் செல்லும் இடங்களில், பாதிக்கும் மேற்பட்டவை அனுமதி இல்லாத இடங்கள். அங்கே போக, அரசு அலுவலர்களுக்கோ உள்ளூர் ஆள்களுக்கோ பணம் தந்துவிடுகிறார்கள். அதிலிருக்கும் ஆபத்துகள் பற்றி ஆர்கனைஸ் செய்பவருக்கே தெரியாது என்பதுதான் நிதர்சனம். இந்த வகை ட்ரெக்கிங் ஸ்டார்ட் அப்(?)களில் CTC பெரியண்ணா. அவர்கள் குரூப்பில் 47,000 பேர் இருக்கிறார்கள். ஆயிரக் கணக்கான ட்ரெக் நடத்திய அனுபவம் அவர் களுக்கு உண்டு. ஆனால், அவர்களும் முறையான அனுமதியைப் பெற்றுத்தான் செல்கிறார்களா என்றால் ‘இல்லை’ என்பதுதான் பதில்.

CTC நடத்தும் ட்ரெக்கிங்கில் உயிரிழப்பு ஏற்படுவது இது முதல்முறை அல்ல. 2012-ம் ஆண்டு சென்னைக்கு அருகிலிருக்கும் நாகலாபுரம் என்ற இடத்துக்கு ட்ரெக்கிங் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு நீரில் இறங்கிய அந்த இளைஞருக்கு நீச்சலும் தெரியும். இருந்தும் மூழ்கிவிட்டார். காரணம், ஜீன்ஸ். அது நீரை உறிஞ்சி, எடைகூடியதால் மூழ்கிவிட்டார். ‘எங்கள் ஆர்கனைசர்கள் அனுபவமிக்கவர்கள்’ என்று சொல்கிறார்களே... அவர்களும் அப்போது சம்பவ இடத்தில்தான் இருந்தார்கள்.

அனுமதி பெறாத கிளப்புகள்... ஆபத்தான ட்ரெக்கிங்!

காட்டுக்குள் பயணம் என்பது மிகப்பெரிய விஷயம். பல நூறு ஆண்டுகளாக அங்கேயே வாழும் பழங்குடியினருக்கே தெரியாத ஆபத்துகள் அங்கு உண்டு. அந்த இடத்துக்கு நான்கு முறை சென்று வந்ததும் ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என நினைப்பது பேராபத்தைத் தரும். அதுதான் குரங்கணியில் நடந்திருக்கிறது.

ட்ரெக்கிங் என்பது வேலை டென்ஷனிலிருந்து விடுதலை தருவதாக இருக்கலாம்; உயிரைப் பறிப்பதாக இருந்துவிடக் கூடாது!

- கார்க்கி பவா