
அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி
எதிர்காலத்தின் ஆசிரியர் எப்படி இருப்பார்?

இன்று ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு ஸ்மார்ட் போன் இருக்கிறது. கருவி ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொரு செல்போனும் வெவ்வேறு விதங்களில் செயல்படுகிறது. இதுதான் கான்செப்ட். செல்போன் போல ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு `செல்ஃபி’ ஆசிரியர்!’
உடனே ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் செய்த சிட்டிரோபோவைக் கற்பனை செய்யாதீர்கள். இது வேற மாதிரி. நாம் விரும்புகிற உருவத்தில் VR HEADSET போன்ற கருவியின் வழியாகவோ,
Hologram உதவியோடு தோன்றுகிற முப்பரிமாண அரூப உருவிலோ இருப்பார் இந்த மாய வாத்தியார்!
செல்போன்களின் செட்டிங்ஸை எப்படி நம் விருப்பப்படி மாற்றிக்கொள்கிறோமோ, அதேபோல் செல்ஃபி ஆசிரியரையும் வடிவமைக்கலாம். எந்தப் பாடத்தைக் கற்றுத்தருகிறவர், உருவ அமைப்பு, குரல், கண்டிப்பு லெவல், இளைஞரா முதியவரா... எதையும் மாற்றலாம்! கோட்சூட்டா, ஜீன்ஸ், டி-ஷர்ட்டா, வேட்டிசட்டையா, முண்டா பனியனா என்பதைக்கூட முடிவுபண்ணலாம்!
நம் பிள்ளைகளுக்கான ஒரு Personalised வாத்தியார்!

இந்த `செயற்கை நுண்ணறிவு’ கொண்ட வாத்தியார் அவருக்கே அவருக்கான மாணவருடன் 24மணிநேரமும் இருப்பார். `Fitbit’ மாதிரியான ஸ்மார்ட் கேட்ஜெட்கள் எப்படி நம் நடையை, தூக்கத்தை, இதயத் துடிப்பைக் கண்காணித்து ரிப்போர்ட் கொடுக்கிறதோ, அப்படி வாத்தியாரும் மாணவனைக் கண்கொட்டாமல் கவனித்து ரிப்போர்ட் தருவார்!
இந்த மாயவாத்தியார், காய்ச்சல், கல்யாணம் என்று விடுமுறை எடுக்கமாட்டார், பாடங்களைத் தயார் செய்ய நேரம் எடுக்கமாட்டார். அவருக்கு உலகில் தெரிந்த ஒரே வேலை கற்பித்தல் மட்டும்தான். ஒரு தோழனைப்போல அல்லது சகோதரனைப்போல அன்போடு கற்பிப்பார்!
எதைப்பற்றியும் மாய வாத்தியாரிடம் கேட்க முடியும். ஏதாவது தெரியாவிட்டாலும் தேடுபொறிகள் உதவியோடு உலகின் எந்த மூலையில் இருக்கிற ஆன்லைன் நூலகத்தையும் தொடர்பு கொண்டு சந்தேகம் தீர்ப்பார். மாணவனுக்கு எதில் ஆர்வம் என்பதை ஆராய்ந்து பாடங்களை வடிவமைப்பார்! சில பாடங்களை மனப்பாடம் செய்வதில் சிக்கல் இருக்கிறதா, அவரே அநிருத்போல மெட்டுப்போட்டுப் பாட்டுவடிவில் சொல்லிக்கொடுப்பார். புரியாத பாடங்களை வீடியோகேமாக மாற்றி விளையாடவைத்து விளங்கவைப்பார்.
‘எனக்குக் கோபுரங்கள் மேல் ஆர்வம் உண்டு’ என்றால் பிரமிடு வடிவக் கோபுரங்களின் வழி ஜியாமெட்ரியை விளக்குவார். திருக்குறள் புரியலையா? சாலமன் பாப்பையா உரையை நீட்டுவார். அதுவும் புரியவில்லையா? ‘திருக்குறள் கதைகள்’ வீடியோ காட்டுவார். மாணவனுக்கு அன்றைய தினம் கற்றுக்கொள்ளும் ஆர்வமில்லை என்று வைத்துக்கொள்வோம், அவனுடைய உடலை சென்சார்கள் வழி ஆராய்வார். முந்தைய நாள் இரவு சரியாகத் தூங்கவில்லை, அவனுக்கு உடல்நலமில்லை என்று தெரிந்தால் ஓய்வெடுக்க அனுமதிப்பார். மாணவருடைய குரலையும் கருவிழிகளையும் ஸ்கேன் செய்து, பையனுக்குப் பாடம் புரிகிறதா, ஆர்வமிருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வார். அதற்கு ஏற்ப பாடத்தை இன்னும் பெட்டராக்க மாற்றுவழிகளை முயற்சிசெய்வார்.
தினமும் பெற்றோர்களுக்கு ரிப்போர்ட் கொடுத்துவிடுவார். பெற்றோர்கள் எப்படியும் குறைதான் சொல்வார்கள். அதை நோட் பண்ணி வைத்துக்கொண்டு, அதை எப்படி சரிசெய்வது எனத் திட்டமிடுவார். மாணவரின் தனித்திறமை எது என்பதைத் தொடர்ந்து கவனித்து அதில் அதிக கவனம் செலுத்தவும் வலியுறுத்துவார்.
இவையெல்லாம் தொழில்நுட்பங்களின் வழி இன்றே சாத்தியம்தான். என்ன... உடனே தேவை என்றால் ஒரு மாணவனுக்கே சில நூறு கோடி செலவழிக்க வேண்டியிருக்கும்! இந்தளவுக்கு முன்னேறிய அறிவுள்ள ‘செல்ஃபி வாத்தியார்’ நம் வகுப்பறைக்கு வர எப்படியும் 15 டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும்! இப்போதுதான் அவ்வகை ஆசிரியர் பிறந்திருக்கிறார். அவரை இப்போதுதான் உலகெங்கும் பரிசோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
உலகம் ஏற்கெனவே இந்தத் தொழில்நுட்ப மாற்றத்தை நோக்கி நகரத்தொடங்கிவிட்டது. கற்பிக்கும் முறையில் தொடங்கி கற்றுக்கொடுக்கிறவர் வரை சகலமும் மாற ஆரம்பித்துவிட்டது... கல்வி இனியும் வகுப்பறைகளுக்கு உள்ளே இல்லை. மனித ஆசிரியர்களுக்கும் கல்விநிறுவனங்களுக்கும் ஆபத்து சமீபித்திருக்கிறது!
அதற்கான முதல் புள்ளி MOOC - Massive open online courses. ஆன்லைனில் கற்க முடிகிற கலக்கல் பாடத்திட்டங்கள்! இந்த கோர்ஸ்களுக்கு சர்ட்டிபிகேட்டும் கிடைக்கும். சுய விவரக்குறிப்பில் போட்டுக்கொண்டால் வேலைகூடக் கிடைக்கலாம். EdX, Udemy, Coursera மாதிரியான MOOC இணையதளங்கள் நிறைய வந்துவிட்டன. ஒவ்வொன்றிலும் லட்சக்கணக்கில் கோர்ஸ்கள் கற்கக்கிடைக்கின்றன. இவற்றில் பல கோர்ஸ்களும் முன்னணிப் பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்டவை. Udemy இணையதளத்தில் மட்டுமே 65,000 ஆன்லைன் கோர்ஸ்கள் இருக்கின்றன என்கிறார்கள். ஓய்வாக இருக்கும்போது எண்ணிப்பார்க்கவேண்டும். இன்று தொடங்கினால் படித்துமுடிக்க இன்னும் இரண்டாயிரம் வருடங்கள் ஆகிவிடும்! அத்தனையும் ஓசி படிப்பு அல்லது மலிவு விலைப் படிப்பு! போட்டோகிராபியில் தொடங்கி டேட்டா சயின்ஸ் வரை எக்கச்சக்கமாகப் படிக்கலாம். எல்லாமே துறைசார்ந்த படிப்புகள்.
முன்பு இவற்றையெல்லாம் கற்கக் கல்வி நிறுவனங்கள்தாம் நமக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பு. இல்லையென்றால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு நிறைய செலவழித்து அங்கேயே சென்று ரூம்போட்டு இரண்டுவேளை சாப்பிட்டு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வியர்வை சிந்தி, கண்ணீர் விட்டுப் படிக்க வேண்டும். அவையெல்லாம் இல்லாமல், இருந்த இடத்திலேயே இன்று படிக்க முடிகிறது! Thanks to MOOC.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் ஐஐடியிலும் மட்டுமே கிடைத்தவற்றையெல்லாம் குலசேகரன்பட்டினத்தில் இருக்கிற மீனவ இளைஞன் கடல்பார்த்துக்கொண்டே கற்க முடியும். ரகசியமான அதி உயர் படிப்பு என்றெல்லாம் எதுவுமே இல்லை, கொஞ்சம் முயற்சி செய்தால் இணையத்திலேயே படித்து ISS (International Space Station)ஐ ஹேக் பண்ணிவிடலாம்! (Dont try this at home)
உத்தரப்பிரதேசத்தில் இருக்கிற 16வயது ஹர்ஷிதா அரோரா பிட்காய்ன் மாதிரியான கிரிப்டோ கரன்ஸிகளை ட்ராக் செய்கிற செயலியை உருவாக்கியிருக்கிறார்! ஆன்லைன் மூலமாகவே MOOC வழியே Affinity Designer மென்பொருளை இயக்குவதற்குப் படித்திருக்கிறார். இன்று உலகின் டாப் பல்கலைக்கழகங்கள் ஹர்ஷிதாவைக் கற்க அழைக்கின்றன. இத்தனைக்கும் அவர் MOOC-ல் கற்றது வீட்டிற்குக்கூடத் தெரியாது. பாக்கெட் மணியில்தான் படித்திருக்கிறார். ஹர்ஷிதா மாதிரியே உலகம் முழுக்க விதவிதமான SELF LEARNERSகளை உருவாக்கித்தள்ளுகிறது இந்த MOOC கல்விப் புரட்சி!
2011-ன் கோடைக்காலத்தில் தொடங்கியது இந்தக் கல்விப்புரட்சி. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் இரண்டு விஞ்ஞானிகள் செபாஸ்டியன் த்ருண், பீட்டர் நார்விக். செபாஸ்டியன் செயற்கை நுண்ணறிவுத்துறை ஆராய்ச்சியில் உலக கில்லி. கூகுளின் தானியங்கி கார்கள் ஆராய்ச்சிக்குத் தலைமை வகிப்பவர். பீட்டர் நார்விக் 1995-ல் எழுதிய ‘Artificial intelligence : A modern approach’தான் இன்றுவரை உலகின் அத்தனை கல்லூரிப் பாடத்திட்டங்களிலும் முக்கியமான நூல்!
இப்படிப்பட்ட ‘செயற்கை நுண்ணறிவு’ பற்றி ஆன்லைனில் அறிமுக வகுப்பு எடுக்கிறோம் என்று சொன்னால் உலகம் சும்மா இருக்குமா? 190 நாடுகளைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.இவர்களுடைய பாடமெடுக்கும் முறை ‘Khan academy’ வீடியோக்கள்போல இல்லாமல் நேரடியாகவே செபாஸும் பீட்டரும் திரையில் தோன்றிப் பாடமெடுக்கத்தொடங்கினர். விர்ச்சுவல் ஆசிரியர்கள்!
அடுத்த சில மாதங்களில் MOOC-ல் பெரிய மாற்றம் தொடங்கியது. செபாஸ்டியன் த்ருண் ‘Udacity” என்கிற நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் வழி விதவிதமான சப்ஜெக்ட்களில் இலவசமாகவோ அல்லது மலிவு விலையிலோ கல்வி தருவதுதான் அவருடைய நோக்கம். அடுத்தடுத்த மாதங்களில் உலகம் முழுக்க இதே பாணியில் புதுப்புது நிறுவனங்கள் முளைத்தன. பல நூறு கோடி முதலீட்டில் Coursera-வும்,
Udemy-யும் தொடங்கப்பட்டன. பல்கலைக்கழகங்கள் ஆர்வத்தோடு இந்த நிறுவனங்களோடு இணைந்துகொண்டன. உலகில் இன்று ஆன்லைனில் கற்க முடியாதது எதுவுமே இல்லை. ஆண்டுதோறும் MOOC மார்க்கெட் 30% வளர்கிறது!
கல்வி என்பது ஒரு சிலருடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்கிற நிலையை உடைத்து, கல்வியை அனைவருக்கும் கொடுத்தது MOOC. வளரும் நாடுகளிலும் ஏழை நாடுகளிலும் அதி உயர் கல்வியை ஏழைகளுக்கும் வழங்குகிற ஒரு தீர்வாக MOOC இருக்கும் என்கிறார்கள். இது கல்விக்கொள்ளையைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்பது ஆராய்ச்சியாளர்களின் எதிர்பார்ப்பு.
இன்று MOOCகளில் மனிதர்கள்தாம் சகமனிதர்களுக்குப் பாடமெடுக் கிறார்கள். ஆனால், எதிர்காலத்தில் மாயவாத்தியார்களே பாடமெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
அதற்கு முன்னால் இந்தக் கோர்ஸ்களை மாயவாத்தியாரும் கற்பார். அவர் வெறும் சப்ஜெக்ட்டை மட்டுமே கற்றுக்கொள்ளாமல், கற்பித்தலையும் கற்பார். மனிதர்கள் பாடமெடுப்பதைப் பார்த்துப் பார்த்து அவரும் சிறப்பான ஆசிரியராகச் செயல்படுவதன் ரகசியங்கள் அறிந்துகொள்வார்!
Udemy-யின் 65,000 கோர்ஸ்களையும் ஒரு மனிதனால் கற்றுக்கொள்வது அசாத்தியம். ஆனால், ஓர் எந்திரத்திற்கு ஈஸி. டீப்மைண்டின் ‘ஆல்பாகோ’ மாதிரியான ஒரு செயற்கை மூளையைக் களத்தில் இறக்கினால் பத்து மாதங்களில் மொத்த வித்தைகளையும் கற்றுக் கொண்டு முழுமையான வாத்தியாராகத் தயாராகிவிடும்.
ஒருநாள், தமிழய்யா ராமமூர்த்தியை விடவும் சிறப்பாக எந்திர மூளைகள் பாடமெடுக்க ஆரம்பிக்கும்போதுதான் ஆசிரியர்களுக்கான ஆபத்து தொடங்கும்! Machines are learning!
ஏற்கெனவே `பாண்டிங் தேச’த்தில் ஆசிரிய எந்திரங்கள் முந்தவும் தொடங்கிவிட்டன! - காலம் கடப்போம்