
சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,
ஆயிமலையின் முகட்டுக்கு எயினி தலைமையில் அறுவரும் வந்து சேர்ந்தனர். குதிரையை விட்டு எயினி இறங்கினான். வீரர்கள் ஒவ்வொருவராக வந்து இறங்கிக்கொண்டிருந்தனர். `முதலில் மூவரை முகட்டின் பின்புறம் அனுப்பிவைப்போம்’ என்று அவன் நினைத்தபோது முகட்டுக்கு அப்பாலிருந்து ஏதோ ஓர் ஓசை கேட்டது. எதிரிகள் மிக அருகில்தான் இருக்கிறார்கள் என்பதைக் கணித்த எயினி, சட்டென இடுப்பில் இருந்த குறுவாளை உருவினான்.

மற்றவர்களும் ஆயுதங்களை ஏந்திப்பிடிக்க ஆயத்தமாகும்போது, முகட்டின் பின்புறமிருந்த ஓசை மிக வேகமாக நகர்ந்து வருவதுபோலிருந்தது. ‘கண நேரத்துக்குள் எப்படி இங்கே?’ என்று எயினி எண்ணிக்கொண்டிருக்கும்போதே மரத்தின் உச்சிக்கிளையில் இருந்த ஒன்று பெரும் ஊளைச் சத்தத்தோடு பாய்ந்து இறங்கியது. மனிதர்கள் வருவார்கள் என்று புதர்களுக்குள் பார்த்துக்கொண்டிருந்தவன், மரத்தின் மேலிருந்து பாய்ச்சலைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பாய்ந்த தோகைநாய், குதிரையின் பிடரியைக் கவ்வி ஓர் இழு இழுத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் எயினியின் குதிரை தடுமாறிக் கீழே சாய்ந்தது. எயினி உருவிய வாளோடு அந்த விலங்கை நோக்கிப் பாய்ந்தபோது பீறிட்ட குதிரையின் குருதி அவனது முகத்திலே பீய்ச்சியடித்தது. திகைத்துப்போனவனுக்கு என்ன நடக்கிறது எனப் புரிவதற்கு முன் அடுத்தடுத்து தோகைநாய்கள் மரத்திலிருந்து குதிரைகளை நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தன.
வீரர்களால் வில்லில் அம்பைத் தொடுக்கவே முடியவில்லை. இதுவரை கேட்டிராத ஊளைச் சத்தத்தோடு இறங்கிக்கொண்டிருக்கும் விலங்குகளை எப்படி எதிர்கொள்வது எனச் சிந்திக்கும் முன், தாக்குதல் முடிவுறும் கட்டத்தை நெருங்கியது. இடுப்பில் இருந்த குறுவாள்கொண்டு, பாயும் விலங்கின் மீது பாய எத்தனித்தனர். அப்போது குதிரைகளைச் சரிவில் இழுத்துத் தள்ளிக்கொண்டிருந்தன தோகைநாய்கள். முன்னும் பின்னுமாக வீரர்கள் அலைமோதியபோது பாய்ந்து இறங்கும் தோகைநாய்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது.
கணநேரத்துக்குள் ஏழு குதிரைகளும் குருதி வெள்ளத்தில் மிதந்துகொண்டிருந்தன. எயினிக்கு, என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பறம்புவீரன், தான் சாக நேர்ந்தாலும் குதிரையைப் பாதுகாப்பாகக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்பது பறம்பின் பழக்கம். ஆனால், ஏழு குதிரைகளின் உயிரும் கண்களுக்கு முன்னால் துடித்துக்கொண்டிருக்க எயினி முடிவெடுக்க ஓரிரு கணங்களே இருந்தன.
இருக்கன்குன்றில் இருந்தபடி எதிரில் இருந்த ஆயிமலையின் உச்சியைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் தேக்கன். திடீரென அங்கே ஓசை கேட்பதை அறிய முடிந்தது. `எதிரிகள் ஏதோ சூழ்ச்சி செய்துவிட்டனர்’ என்று அவன் எண்ணிக்கொண்டிருந்தபோது சரிவுப்பாறை ஒன்றில் குதிரை ஒன்று சரிந்து கீழே விழுவது தெரிந்தது. அதிர்ந்தான் தேக்கன். `பறம்பின் மலையில் குதிரையைச் சரித்து வீழ்த்தும் அளவுக்கு எதிரிகளுக்கு எங்கிருந்து வந்தது வீரம்? ஏதோ சூழ்ச்சியில் நம்மவர்கள் மாட்டிக்கொண்டு விட்டார்கள்’ என்று கணித்து, அருகில் இருந்த நெடுமனை அழைத்தான். ``பதினைந்து குதிரைவீரர்களை அழைத்துக் கொண்டு உடனடியாகப் போ” என்று ஆணையிட்டான்.

நெடுமன், மிகத் திறமையான வீரன். ஆபத்தான கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வீரர்களில் அவனும் ஒருவன். நெடுமனின் குதிரை கனைத்தபடி பாதை நோக்கிப் பாய்ந்தது.
வட்டாற்றில் யானைப்படையை வழிநடத்திச் சென்றுகொண்டிருந்தான் அரிஞ்சயன். அவன்தான் யானைப்படையின் தளபதி. இந்தப் படையெடுப்பே யானைப்படையை மையப்படுத்தியதுதான். பல்லாயிரம் வீரர்கள் உடன்வந்தாலும் அவர்களை யானைகளுக்கு இணை சொல்ல முடியாது. காடு, யானைகளின் களம். அடர்காட்டில் பழக்கப்படுத்தப்பட்ட போர் யானைகள் ஒவ்வொன்றும் ஒரு பெரும்படைக்குச் சமம்.
பத்து யானைகளை இணைத்து ஒரு வகைமையாகவும் பத்து வகைமைகளை இணைத்து ஒரு தொகையாகவும் பிரித்திருந்தனர். யானையின் மீது இருப்பவன் பாகன், வகைமையின் பொறுப்பாளன் வாகையன். தொகைகளின் பொறுப்பாளன் தளகர்த்தன். இந்த ஐந்து தளகர்த்தர்களும் யானைப்படைத் தளபதி அரிஞ்சயனுக்குக் கட்டுப்பட்டவர்கள். ஐந்து தொகைகளைப் போதிய இடைவெளியில் தனித்தனியாக வருவதுபோல முன்நடத்திக்கொண்டிருந்தான் அரிஞ்சயன்.
இதேபோன்று காலாட்படையும் எண்ணிக்கை வாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தது. காலாட்படையின் தளபதி கிழானடி வானவன். ``படையின் வலிமை, எண்ணிக்கையில் அன்று; அதன் கட்டுக்கோப்பான செயல்பாட்டில்தான் இருக்கிறது. வலிமையான தாக்குதலை முறையற்று நடத்துவதைவிட, எளிய தாக்குதலை முறையான ஒழுங்கோடு நடத்துவதே எதிரிகளை வீழ்த்தும்” என்பதை ஒவ்வொரு வீரனையும் உணரச்செய்தவன்.
நெடுங்காடர்கள், தம்முடைய மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனித் தலைமையைக் கொண்டிருந்தனர். மூவருக்கும் பொதுத்தலைவனாகத் துணங்கன் இருந்தான். இந்தப் பெரும்படையெடுப்புக்குச் சோழநாட்டின் தலைமைத் தளபதி உரையன்தான் தலைமையேற்பதாக இருந்தது. ஆனால், பெருஞ்செல்வத்தை நோக்கிய படையெடுப்பால் தானே தலைமையேற்றான் செங்கணச்சோழன்.
நெடுங்காடர்களின் திறமை கண்டு வியக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. காட்டில் அவர்களை வீழ்த்தவோ, வெல்லவோ முடியாது என்பதை உறுதியாக நம்பிய பிறகே செங்கணச்சோழன் போரில் பங்கெடுக்க முடிவுசெய்தான். பேரரசரே நேரில் ஈடுபடும் போரில் படைவீரர்கள் பல மடங்கு ஆற்றலுடன் செயல்படுவார்கள். வெற்றி பற்றிய எண்ணம் உச்சம்கொண்டிருக்கும். வீரர்களின் மனோபலத்தைப் பல மடங்கு அது உயர்த்தியிருக்கும். அதுமட்டுமன்று, பெருஞ்செல்வத்தைக் கைப்பற்ற நடக்கும் போர் என்பதால், வீரர்களுக்கும் அதில் பங்குண்டு. எனவே களைப்பின்றி முன்னேறுவர்.
வட்டாற்றில் திரும்பிய சிறிது நேரத்திலேயே வேந்தனின் அருகில் வந்த தளபதி உரையன் சொன்னான், ``வேற்றுநாட்டு எல்லைக்குள் நுழைந்து இத்தனை நாள்களாகியும் எந்தவிதத் தாக்குதலும் நடக்கவில்லை என்பது பலருக்கும் வியப்பாகவே இருக்கிறது. பறம்பின் வீரர்களுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பேதுமில்லை. நமது படையின் வலிமைகண்டு மிரண்டுபோயிருப்பர் என்று வீரர்கள் பேசிக்கொள்கிறார்கள்.”
குதிரையில் பயணித்தபடியே உரையனின் சொல் கேட்டு மகிழ்ந்தான் வேந்தன். சிறிது நேரத்துக்குப் பிறகு நெடுங்காடர்களின் தலைவன் துணங்கனை அழைத்துவரச் சொன்னான்.
துணங்கன் விரைந்து வந்துசேர்ந்தான். குதிரையை விட்டுக் கீழிறங்கி வேந்தனை வணங்கினான். ``எதிரிகளைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என, பேச்சைத் தொடங்கினான் செங்கணச்சோழன்.
குதிரையைப் பிடித்துக்கொண்டு நடந்தபடியே சொன்னான், ``அவர்கள் நம்மைப் பல நாள்களாகப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.”
இயல்பான குரலில் துணங்கன் சொன்னது, பெரும் அதிர்ச்சியாய் இருந்தது.
``எந்தத் திசையில்?” என வேகமாகக் கேட்டான் உரையன்.
``ஆற்றின் இரு கரைகளிலும் பத்துப்பனை உயரத்துக்குமேல்.”
``எவ்வளவு உயரத்தில் வந்தால் என்ன? மேலேயிருந்து தாக்குபவர்களின் ஆயுதங்கள் இருமடங்கு வேகம்கொள்ளும் என்றுதான் அவர்களுக்குத் தெரியும். ஆனால், அதைவிட வேகமாக நம் எறிபொறிகள், ஆயுதங்களை மேல்நோக்கி வீசக்கூடியவை என்பது அவர்களுக்குத் தெரியாதே” என்றான்.
செங்கணச்சோழன் துணங்கனைப் பார்த்தபடி கேட்டான், ``எத்தனை பேர் இருக்கிறார்கள்?”
``களையும் பறவைகள் வெகுதொலைவு செல்வதில்லை. அருகில் இருக்கும் மரங்களிலேயே உட்கார்ந்துவிடுகின்றன. எனவே, எண்ணிக்கை சில நூறுகளாகத்தான் இருக்கும்.”
எதிரிகளின் படைநகர்வைப் பறவைகளை வைத்தே கணிக்கிறான் என அறிந்தபடி ``அவர்களின் திட்டம் என்னவாக இருக்கும் எனக் கருதுகிறாய்?” எனக் கேட்டான்.
``முடிவெடுக்க முடியாத குழப்பமாக இருக்கும்?”
``ஏன்?”
`` `இந்தப் பாதையை எப்படித் தெரிவுசெய்தார்கள்? எதை நோக்கிப் போகிறார்கள்? இந்தக் கொடுங்கோடையிலும் இவ்வளவு பெரும்படைக்கு எப்படி நீராதாரத்தை உருவாக்குகிறார்கள்?’ என எல்லாமே அவர்களுக்கு விடையில்லாத கேள்விகள்தான். விடையில்லாத கேள்விகளோடு போரிடுபவனுக்கு உள்வலிமை இருக்காது. பாரி மிகச்சிறந்த வீரன். எனவே, இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டறியாமல் தாக்குதலைத் தொடங்க மாட்டான்.”
ஒரு கணம் திகைத்துப்போனான் செங்கணச்சோழன். பல்லாயிரம் படை வீரர்களோடு பறம்புக்குள் இத்தனை நாள்களாக ஊடுருவி வந்துவிட்ட நிலையிலும் தன் தளபதி ஒருவன் பாரியின் வீரத்தை வியந்து பேசுவது அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால், நெடுங்காடனைத் தன் சொந்தத் தளபதியைப் போல அணுகிவிட முடியாது. எனவே, உணர்வை வெளிக்காட்டாமல் கேட்டான், ``நீ பாரியைப் பார்த்திருக்கிறாயா?’’
``அருகில் பார்த்ததில்லை. மிகத் தொலைவில் பார்த்திருக்கிறேன்.”
``எப்போது?”
``இன்று.”
செங்கணச்சோழன் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். குதிரை கனைத்து நின்றது. ``காலையிலிருந்து இங்கேதானே இருந்தாய்! அவனை எங்கே பார்த்தாய்?”
சற்றே சிரித்தான் துணங்கன். ``நான் மேல்காடன் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.”
உரையன் விரைந்து கேட்டான், ``பத்துப்பனை உயரத்தை நம் எறிபொறிகளால் துல்லியமாகத் தாக்க முடியும். அவன் எந்தத் திசையில் வருகிறான். உடனடியாகச் சொல்.”
துணங்கன் சொன்னான், ``பத்துப்பனை உயரத்தில் வருவது அவன் படைகள் மட்டும்தான். அவன் வருவதோ மலையின் உச்சிமுகட்டில்.”
செங்கணச்சோழனும் உரையனும் சட்டென மலைமுகட்டை அண்ணாந்து பார்த்தனர். கதிரவன் ஒளி, மேல்விளிம்பில் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தது. கூசிய கண்களைச் சிமிட்டியபடி கேட்டனர், ``அங்கு வருவதை இங்கிருந்து பார்த்தாயா?”
`ஆம்’ எனத் தலையசைத்தான் துணங்கன்.
``அவன் பாரி என்று எப்படி முடிவுசெய்தாய்?”
இவ்வளவு பெரும்படையை முழுமையாகப் பார்க்கவும் கணிக்கவும் ஒருவன் எந்த உயரத்தைத் தேர்வு செய்கிறான் என்பதைவைத்தே சொல்லிவிடலாம், அவன் யாராக இருக்கும் என. நான்கு நாள்களாக அவன் மேலும் செல்லாமல் கீழும் இறங்காமல் ஒரே மட்டத்தில் வந்து கொண்டிருக்கிறான்.”
``நான்கு நாள்களாகப் பார்க்கிறாயா?”
``ஆம். அதனால்தான் இன்று முடிவுக்கு வந்தேன், அவன் பாரியாகத்தான் இருக்குமென்று.”
சோழப்படை காலையில் வட்டாற்றில் திரும்பியவுடன் இடப்புறமிருந்த பிட்டனும் வலபுறமிருந்த இரவாதனும் மிகவும் மகிழ்ந்தனர். எவ்வியூர் நோக்கி வந்தவர்கள் திசையறியாமல் மாறிவிட்டனர் என்ற முடிவுக்குப் போயினர். அதுமட்டுமன்று, வட்டாறு பெரும்பாறை அடுக்குகளை அடிநிலமாகக்கொண்டது. எனவே, இவர்களால் அதிகத் தொலைவு செல்ல முடியாது. நீராதாரம் இல்லாமல் படை தவித்து அலையும் நிலை ஏற்படும். அதுவே நமது தாக்குதலுக்கான சரியான நேரமாக இருக்கும். அதற்காகவே பாரி காத்திருக்கிறான் என நினைத்தனர்.
ஆனால், எதிரிகளின் படை வட்டாற்றில் திரும்பியதும் பாரியின் குழப்பம் மேலும் அதிகமானது. `எதிரிகள் எதை நோக்கிச் சென்றுகொண்டிருக் கின்றனர்?’ இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் விடை, பாரியை உள்ளுக்குள் உலுக்குவதாக இருந்தது.

நெடுமனின் தலைமையிலான படை இருக்கன்குன்றினைக் கடந்து ஆயிமலையின் பாதித்தொலைவுக்குப் போயிருக்கும்போது எதிர்ப்புற மரக்கிளைகளிலிருந்து தோகைநாய்கள் பாய்ந்து இறங்கின. நீள்வாய் நாய்களின் கோரப்பற்களும் பாயும் வேகமும் யாரையும் கணநேரத்தில் நிலைகுலையச் செய்பவை. உச்சிக்கிளையிலிருந்து பாய்ந்து இறங்கிய அவற்றை நோக்கி வாளை உருவியபோது நெடுமன் சரிந்து கீழே கிடந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் மரங்களின் மேலிருந்து இடைவிடாமல் அவை பாய்ந்து கொண்டிருந்தன. அவையிடும் ஊளையின் ஆவேசம் குதிரைகளை மிரளச்செய்தது. குதிரைகளின் கனைப்பொலி பாதியில் அறுபட, எழும் ஊளையின் ஓசை தேக்கன் இருக்குமிடம் வரை எதிரொலித்தது.
பொழுது மங்கிக்கொண்டிருந்தது. ஆயிமலையின் கிழக்குப்புறச் சரிவு பறம்பின் பகுதி. அதில் பாதித் தொலைவுக்கு எதிரிகள் வந்து விட்டார்கள் என்பதைத் தேக்கனால் நம்பவே முடியவில்லை. உடனடியாக முழுக் குதிரைப்படையுடன் அந்த இடம் போக ஆயத்தமானான். வீரர்கள் வேகவேகமாகக் குதிரையில் ஏறிப் புறப்படும்போது உடலெங்கும் குருதிகொட்ட அடர்காட்டுக்குள்ளிருந்து மேலேறி வந்தான் எயினி.
குதிரை புறப்படப்போகும் கணத்தில் காட்டின் அசைவுகளைக் கண்டு நிறுத்தினான் தேக்கன். உள்ளிருந்து எயினி வெளியேறி வந்த காட்சி தேக்கனை உலுக்கியது. ஓடிப்போய் அவன் சரிந்துவிடாமல் பிடித்தான். குற்றுயிராக வந்த எயினி சொன்னான், ``உடனடியாக இங்கு இருக்கும் குதிரைகளைக் காப்பாற்றுங்கள். இங்கு நிறுத்த வேண்டாம். இடப்புறச் சரிவில் இருக்கும் குகைகளில் அவற்றை அடைத்து வீரர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்துங்கள்.”
தேக்கனோடு இருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. ``போரில் ஈடுபடத்தானே குதிரைகள். அவற்றை ஏன் குகைகளில் அடைத்துக் காக்க வேண்டும்?” எனக் கேட்டான் ஒருவன்.
``பேச நேரமில்லை. புது வகையான விலங்கு ஒன்றை ஏவிவிட்டுள்ளான் சேரன். அவை கணநேரத்தில் குதிரையின் கழுத்தைக் கடித்து இழுத்துவிடுகிறது. நாம் எது செய்தும் அதைத் தடுக்க முடியாது. அது பறக்கும் ஓநாய்போல் இருக்கிறது” என்றான்.
``நீ பயங்கொள்ளாதே! நெடுமன் பதினைந்து குதிரைவீரர்களோடு போயுள்ளான். அவற்றை வெட்டிச் சாய்த்துவிடுவான்” என்று வீரன் ஒருவன் சொல்லி முடிக்கும் முன் எயினி சொன்னான், ``அவற்றில் ஒரு குதிரைகூடத் தப்பிப்பிழைக்காது. உடனடியாக மீதி இருக்கும் குதிரைகளைக் கொண்டு செல்லுங்கள்.”
எயினி சொன்னவுடன் வேறொரு வீரன் ஏதோ மறுசொல் சொல்ல முனைந்தான். ஆனால், தேக்கன் தடுத்துவிட்டான். ``எயினி இவ்வளவு அழுத்தமாகச் சொல்கிறான் என்றால், அதை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அனைத்துக் குதிரைகளையும் கீழ்ப்புறமிருக்கும் குகைப்புடைவுகளில் அடைத்துக் காவல் இருங்கள். காலாட்படை வீரர்கள் பாதிப் பேர் என்னோடு வாருங்கள். மீதிப் பேர் குதிரைவீரர்களோடு இணைந்து காவல் இருங்கள்” என்று சொல்லிவிட்டு நெடுமன் போன திசையை நோக்கி ஓடத் தொடங்கினான் தேக்கன். மற்ற வீரர்கள் அவனுடன் சேர்ந்து ஓடினர். சிலர் எயினியைத் தூக்கிக்கொண்டு மருத்துவரை நோக்கி ஓடினர். மற்றவர்கள் குதிரையைக் காக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கதிரவன் ஒளி முழுமுற்றாக மங்கியபோது குதிரைப்பாதையில் ஓடிக்கொண்டிருந்தான் தேக்கன். உருவிய வாளோடு வெறிகொண்டு ஓடினர் வீரர்கள். இருக்கன்குன்றின் அடிவாரத்தைக் கடந்து ஆயிமலையில் கால் வைக்கும்போது நெடுமன் தலைமையில் சென்ற வீரர்கள் எதிர்த்திசையில் ஓடிவந்துகொண்டிருந்தனர். பெரும்ஓசையை எழுப்பியபடி நெடுமன் வந்துகொண்டிருந்தான். அவனை நிறுத்தி என்னவென்று கேட்கவேண்டிய தேவை ஏதும் தேக்கனுக்கு இல்லை.

இப்போது அவர்களின் முன்னுரிமை குதிரைகளைக் காப்பாற்றுவது. எயினி சொன்ன ஒவ்வொரு சொல்லும் நினைவில் எதிரொலித்தபடி இருக்க, வந்த வழியிலேயே திரும்பி குகைப்புடைவை நோக்கி ஓடத்தொடங்கினான் தேக்கன். வீரர்களில் சிலர் தாக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யச் சென்றனர். மற்றவர்கள் தேக்கனோடு இணைந்து வேகம்கொண்டனர்.
ஓடிக்கொண்டிருந்த தேக்கனை எட்டிப்பிடித்து நிறுத்தினான் நெடுமன். ஏன் நிறுத்துகிறான் எனப் புரியாமல் தேக்கன் நின்றபோது கையை உயர்த்தி மரத்தின் மேலே காட்டினான் நெடுமன். தேக்கன் அண்ணாந்து பார்த்தபோது இருளுக்குள் கிளைகள் அசைவது மட்டுமே தெரிந்தது. என்னவென்று அவன் கேட்கும்முன் நெடுமன் சொன்னான், ``அவை முன்னோக்கிப் போய்விட்டன.”
அதிர்ந்து நின்றான் தேக்கன். ``என்ன சொல்கிறாய்?”
``ஆம். எயினியைத் தொடர்ந்தே பாதி போயிருக்கின்றன. இவை மறுபாதி.”
``அவற்றை வீழ்த்த என்ன வழி?”
``தெரியவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கொப்புகளின் வழியே தாவிவிடுகின்றன.”
திமிறி ஓடும் வீரர்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தி, தானும் நின்றான் தேக்கன். எல்லோரும் திகைத்து நின்றனர்.
வெகுதொலைவு உள்செல்லக்கூடிய குகைகள் மூன்று இருக்கின்றன. மூன்றிற்குள்ளேயும் குதிரைகளை அடைத்து ஆயுதங்களோடு வீரர்கள் காத்திருந்தனர். முன்வரிசையில் உருவிய வாளோடு நின்றனர் எவ்வியூர் வீரர்கள். குதிரைகளின் குருதி வாடையை உணர்ந்தபடி பெரும் ஊளையோடு மரங்களின் மேலிருந்து குகைகளை நோக்கிப் பாயத் தொடங்கின தோகைநாய்கள். வீரர்கள் எய்யும் அம்புகளும் வாள்வீச்சும் அவற்றை குகைகளுக்கு அருகில் நெருங்க முடியாமல் செய்தன. வீரர்களின் ஆவேசக் கூக்குரல் இருளை உலுக்கியது. தோகைநாய்களின் ஊளை ஓசை காடெங்கும் இருந்த பறவைகளை நடுக்குறச்செய்தது. மூன்று குகைகளையும் சுற்றிச் சுற்றி வந்து ஊளையிட்டபடி இருந்தன. குகைவாயில் களில் பந்தங்கள் எரிந்துகொண்டிருக்க, இரவில் குகைகளின் மேற்பாறைகளில் உள்நுழையக்கூடிய பிளவு ஏதாவது இருக்கிறதா என்று இங்கும் அங்குமாகத் தேடிக்கொண்டிருந்தன. நீள்வாய் கொண்டு அவை கடித்திழுக்கும் ஓசை அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
வீரர்களோடு அந்த இடமே நின்ற தேக்கன் ``என்ன செய்யலாம் என்ற தெளிவில்லாமல் குகை நோக்கி நகரவேண்டாம்’’ என்று கூறிவிட்டான். அதை எதிர் கொண்டு தாக்கியவன் நெடுமன்தான். அவனோடு சென்ற பலரும் இன்னும் வந்து சேரவில்லை. என்ன நிலையில் இருக்கின்றனர் என்றுகூடத் தெரியவில்லை. நெடுமனின் கைத்தசைகள் கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தன. உடன் இருந்த வீரன் ஒருவன் இடுப்புத்துணியால் அதைக் கட்டி, குருதி சிந்துவதை நிறுத்த முயன்றுகொண்டிருந்தான். குருதிப்போக்கு அதிகமிருந்ததால் அவனுக்குக் கண் செருகுவதுபோல் இருந்தது.
``அவை கூட்டுணர்வுள்ள விலங்குகள். முழுமுற்றாக அழிக்கும் வரை ஒரு குதிரையைக்கூட குகை விட்டு வெளியேற்ற வேண்டாம்” என்றான் நெடுமன். “சரி” எனச் சொல்லி நெடுமனை மருத்துவர்கள் இருக்குமிடம் நோக்கிக் கூட்டிச்செல்ல உத்தரவிட்டான் தேக்கன்.
நெடுமனை அனுப்பிய பிறகு சிறிது நேரம் சிந்தித்தபடி இருந்தான். எயினியும் நெடுமனும் அவற்றின் தாக்குதலை கணநேரம்கூட எதிர்கொள்ள முடியவில்லை. கூட்டுணர்வுள்ள விலங்குகள் முன்புறம் தாக்கும்போதே பின்புறக் கால்களைக் கவ்வியிழுக்கும் பழக்கம்கொண்டவை; அறிவுக்கூர்மைமிக்கவை. இந்தக் காட்டில் இல்லாத விலங்கினம் இது. இதை இருக்கன்குன்றினைத் தாண்டிப் பறம்புக்குள் செல்ல விட்டுவிடக் கூடாது. இதை முழுமுற்றாக அழித்தல் மட்டுமே முதற்பணி என்னும் முடிவுக்கு வந்தான் தேக்கன்.
அவன் ஆணையிட்டதும் கூவல்குடி வீரன் ஒருவன் மூன்றுமுறை உட்சுழித்து ஓசையை வெளியிட்டான். ஆயிமலையின் வலப்புறக் கணவாயில் நின்றிருந்த உதிரன் படையோடு திரும்பிவர வேண்டும் என்று அதற்குப் பொருள். மூன்று உட்சுழி ஓசை நான்கு பேரின் தொடர் வெளிப்பாட்டின் வழியே உதிரனை எட்டியது. ஓசையின் வழியே வந்த உத்தரவு அவனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த இரவில் படையோடு திரும்பி வரச்சொல்ல வேண்டிய தேவை என்ன என்று உதிரனுக்கு விளங்கவில்லை.
எதுவானாலும் ஆணையைச் செயல்படுத்துவதே அவனது வேலை என்பதால் மொத்தப் படையுடன் இருக்கன்குன்றின் முகடு நோக்கிப் புறப்பட்டான். இந்த இரவில் இப்படியோர் ஆணை வந்துள்ளது என்றால், ஏதோ ஓர் ஆபத்து அல்லது அவசரமான தாக்குதலாக இருக்க வேண்டும் எனக் கருதி வீரர்களை விரைவுபடுத்தி முன்னேறினான்.
நெடுமனுடன் சென்றவர்களில் இரண்டு வீரர்கள்தாம் சிறிய காயங்களோடு களத்திலே நிற்பவர்களாக இருந்தனர். அவர்களின் வாயிலாக அந்த விலங்கின் தன்மையைப் புரிந்துகொள்ள தேக்கன் முயன்றான். எவ்வளவு குறிவைத்து அம்பு எய்தாலும் கணநேரத்தில் கிளைகளினூடே தாவிச் செல்லும் ஒன்றை வீழ்த்துவதிலிருக்கும் சிக்கலைப் பற்றிப் பேசினர். ஆனாலும் அதற்கு ஒரு வழி இல்லாமலாபோகும் என்று சிந்தித்த தேக்கன், நாகர்குடியினர் இருக்கும் ஊர்களுக்கு வீரர்களை உடனே அனுப்பினான். ``எவ்வளவு விரைவாகப் பறவைநாகங்களைப் பிடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாகப் பிடிக்கச் சொல்லுங்கள். கிடைக்கக் கிடைக்க வீரர்களிடம் கொடுத்து அனுப்புங்கள்” என்றான்.
பறவைநாகங்கள் மரக்கொப்புகளில் வசிப்பவை. எதுவொன்று மரத்தின் மீது அசைகிறதோ அதை நோக்கிக் கண்ணிமைக்கும் நேரத்தில் பாய்ந்து கவ்வும் ஆற்றல்கொண்டவை. எனவே, அவற்றைப் பிடித்துவர ஏற்பாடு செய்தான். ஆனால், பறவைநாகங் களைத் தேடிக் கண்டறிவதெல்லாம் எளிய செயலன்று. அப்படியே கிடைத்தாலும் ஒன்றிரண்டுதான் கிடைக்கக்கூடும். ஆனால், இங்கு வந்துள்ள நீள்வாய்நாய்களோ எண்ணற்றவை. வேறென்ன வழிகள் இருக்கின்றன எனச் சிந்தித்தனர். பொழுது விடியச் சிறிது நேரம் இருக்கும்போது உதிரனின் படையணி வந்துசேர்ந்தது. நிலைமையை அவனுக்கு விளக்கினர்.
தாக்கும் திட்டம் ஒன்று உருவானது. பொழுது விடிந்ததும் குகைகளைக் காத்து நிற்கும் வீரர்களும் அவற்றுக்கு எதிர்ப்புறமாகக் காட்டுக்குள் நிற்கும் தேக்கன் தலைமையிலான வீரர்களும் ஒரே நேரத்தில் குகைகளைச் சுற்றி மரங்களின் மீதும் பாறைகளின் மீதும் அம்பு எய்தித் தாக்குவோம். ஐந்து வரிசையாகக் குறிப்பிட்ட நேர இடைவெளியில் வீரர்களின் அம்புகள் காற்றைக் கிழிக்கையில், நீள்வாய்நாய்கள் ஒரு கொப்பிலிருந்து மறுகொப்புக்குத் தாவினால்கூட அவற்றால் எளிதில் தப்ப முடியாது” என்றான் தேக்கன்.
திட்டம் உருவானது. குகைகளின் வாசல்களிலும் காட்டுக்குள்ளும் வீரர்கள் ஆயத்த நிலையில் இருந்தனர். பொழுது விடிந்தது. காடெங்கும் இருக்கும் பறவைகள் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தன. மரத்தின் மீதிருந்த அவை குகைக்குள் நுழைய முடியாமல் வெறிகொண்டு இங்கும் அங்கும் கொப்புகளின் மீது தாவிக் கொண்டிருந்தன.
மரக்கொப்புகளை நோக்கி அண்ணாந்து பார்த்தபடி நாணேற்றிக் காத்திருந்தனர் வீரர்கள். பாம்பின் சீற்றம் போன்ற ஓசை தேக்கனின் குரல்வளையிலிருந்து வெளிவந்தபோது காற்றெங்கும் அம்புகள் சீறிப்பாய்ந்தன. குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து எகிறிக் கொண்டிருந்தன அம்புகள். ஊளையின் ஓசை காதைத் துளைத்துக்கொண்டிருந்தது. அம்புகளை எய்து முடித்த பிறகு பார்த்தனர். எந்த நீள்வாய்நாயும் கீழே விழவில்லை. அம்பு தைக்கப்பட்டவைகூட ஓசை எழுப்பியபடியே கொப்புகளில் தாவி வெளியேறித்தான் ஓடின.
இத்தனை நூறு அம்புகளுக்கும் தப்பி அவற்றின் பாய்ச்சல் இருப்பது பேரதிர்ச்சியைக் கொடுத்தது. ஒன்றிரண்டு புதர்களில் விழுந்துகிடக்கலாம் என வீரர்கள் தேடிக்கொண்டிருக்கும்போது தேக்கனும் உதிரனும் மரக்கொப்புகளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர். தாக்குதலின்போது எழுந்த பேரூளையினூடே காடு நடுங்கியது. பறவை நாகங்கள் வந்தாலும் பெரிதாகப் பயன்கிடைக்காது போலத் தோன்றியது.
தாக்குதலின் முதல் நாளே தேக்கன் தலைமையிலான படை இருபதுக்கும் மேற்பட்ட குதிரைகளை இழந்துவிட்டது. மாபெரும் வீரர்கள் நிறைந்த படையணி இது. அப்படியிருந்தும் இந்தப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பைப் பற்றிச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். தங்களாலே நம்ப முடியாத இந்த உண்மையின் மீது நின்றுதான் அவர்கள் அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது உதிரன் சொன்னான், ``கரும்பாக் குடியின் வீரர்கள் எண்ணற்ற நாய்களைத் தங்களின் குடிலில் வைத்திருந்தனர். அவற்றுள் எதுவும் அவர்கள் கொண்டுவந்ததில்லை. எல்லாம் வந்த இடத்தில் பழக்கியவை. நாயினங்களைப் பற்றிய பல நுட்பங்கள் அவர்களுக்குத் தெரிவதாக நமது மருத்துவர்களும் சொன்னார்கள். நான் உடனடியாகப் போய் ஈங்கையனிடம் பேசிப் பார்க்கிறேன். இந்த வகை நாய்களை எப்படி வீழ்த்துவது என அவன் ஏதேனும் ஆலோசனை சொல்லக்கூடும்” என்றான்.
இப்போதைய நிலையில் இது சிறந்த ஆலோசனை யாகத் தெரிந்தது. உடனடியாக உதிரனை அனுப்பிவைத்தான் தேக்கன். போய்த் திரும்ப ஒரு வாரம்கூட ஆகலாம். ஏனென்றால், நடைபாதையின் வழியாகத்தான் அவன் சென்றாக வேண்டும். அதைத் தவிர வேறு வழியேதுமில்லை. நீள்வாய்நாய்களை அழிக்காமல் ஒரு குதிரையைக்கூட குகை விட்டு வெளியேற்ற முடியாது.

உதிரன் மூன்று வீரர்களோடு அடர்காட்டை ஊடறுத்து ஓடத் தொடங்கினான். நாகர்குடியைப் பார்க்கப்போனவர்களில் ஓரிருவராவது இன்று பறவைநாகங்களோடு வருவார்களா என்று தேக்கன் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, குகைப்பாறையின் மேல்நிலையில் நின்றிருந்த வீரர்கள் தேக்கனை நோக்கிக் கையசைத்து அழைத்தார்கள். தேக்கன் பாறையின் மீது ஏறி நின்று அவர்கள் கைகாட்டிய திசையில் பார்த்தான்.
உதிரனின் தலைமையிலான படையைத் திருப்பி அழைத்துக்கொண்டதால் பாதுகாப்பற்றி ருந்தது ஆயிமலையின் வலப்புறக் கணவாய்ப்பகுதி. அதன் விளிம்பில் பெரும்படை ஒன்று பறம்பின் காட்டுக்குள் போய்க்கொண்டிருந்தது.
இத்தனை ஆண்டுக்காலப் போர் அனுபவத்துக்குப் பிறகு சிறு எதிர்ப்புகூட இல்லாமல் பறம்புக்குள் நுழைந்தது சேரனின் படை. இரு கைகளிலும் ஏந்திய ஆயுதங்களோடு பேரோசை முழங்க முன் சென்றான் எஃகல்மாடன்.
- பறம்பின் குரல் ஒலிக்கும்...