மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்

தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்

தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்

மார்ச் 16 – இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிப்பதற்குமுன் இந்த நாளைப்பற்றி எடுவர்டோ கலியானோ என்ன எழுதியிருக்கிறார் என ‘சில்ட்ரென் ஆஃப் தெ டேஸ்’ நூலைப் புரட்டினேன். கொலம்பியாவின் அராரகுவாரா பகுதியைச் சேர்ந்த ஹுய்டோடோ மக்கள் எப்படித் தோன்றினார்கள் என்பதைப் பற்றி ரஃபூமா தாத்தா கூறியதை அவர் எழுதியிருந்தார். அவர்களது தோற்றம் குறித்த கதையின் சொற்களிலிருந்து அவர்கள் பிறந்தார்களாம். ஒவ்வொருமுறை அந்தக் கதையை அவர் சொல்லும்போதும் ஹுய்டோடோ மக்கள் பிறந்துகொண்டே இருந்தார்களாம்.

அந்தப் புத்தகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு கலியானோ இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்குமுன் 2013-ல் வெளியானது. ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை ஒரு நாட்குறிப்பு எழுதுவதுபோல எழுதப்பட்டிருக்கும் வித்தியாசமான நூல் அது. அதனால்தான் அதற்கு ‘மனிதகுல வரலாற்றின் ஒரு நாட்காட்டி’ என அவர் துணை தலைப்பிட்டிருந்தார். அதை ஒரு நாட்குறிப்பாகவும் படிக்கலாம், நாவலாகவும் படிக்கலாம், வரலாறாகவும் கருதலாம். அது எழுதப்பட்டுள்ள விதத்தில் ஒவ்வொரு நாளைப் பற்றிய குறிப்பையும் ஒரு கவிதையாகவும் அனுபவிக்கலாம். கலியானோவின் படைப்புகள் அனைத்திலும் உள்ள பொதுத்தன்மை இது. அவற்றை எந்தவொரு வகைப்பாட்டுக்குள்ளும் அடக்க முடியாது.

தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்

‘தொடுதிரைக் காலம்’ இது. சாலையில் நடந்து போகும்போது கைபேசியின் திரையில் ஒருசில வாக்கியங்களை வாசித்தாலே போதும் நமக்கு, அனைத்தும் தெரிந்துவிட்ட திருப்தி ஏற்பட்டுவிடுகிறது. அதனால்தானோ என்னவோ இப்போது லத்தீன் அமெரிக்கப் படைப்புகளைப் பற்றிய ஆர்வம் நம்மிடையே குறைந்துபோயிருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் காப்ரியல் கார்ஸியா மார்க்யெஸும், மரியோ வர்கஸ் லோசாவும், இஸபெல் அலெண்டெவும், கொர்த்தஸாரும் இன்னும் பல லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களும் நமது சக எழுத்தாளர்கள்போலக் கருதப்பட்டு விவாதிக்கப்பட்டனர். இங்கு கோலோச்சிக்கொண்டிருந்த பல எழுத்தாளர்களுக்குத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவர்களது படைப்புகள் நெருக்கடியை ஏற்படுத்தின. அந்த நேரத்திலும் அதிகமாகப் பேசப்படாத பெயர் எடுவர்டோ கலியானோ. மற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுக்குக் கிடைத்ததுபோல அவருக்கு நல்ல ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் உடனே கிடைக்காதது அதற்கொரு காரணமாக இருந்திருக்கலாம்.

உருகுவே நாட்டில்  மான்ட்டிவிடியோ என்ற இடத்தில் கத்தோலிக்க சமயப் பற்றுகொண்டவொரு மத்தியதரக் குடும்பத்தில் 1940-ம் ஆண்டு பிறந்தவர் கலியானோ. ‘மேதாவிக் குழந்தையாக’ இருந்த அவர், தனது பதினாறாவது வயதோடு படிப்பை நிறுத்திவிட்டார். கலியானோவுக்கு 14 வயதிருக்கையில் அவர் வரைந்த அரசியல் கார்ட்டூன் சோஷலிசக் கட்சியின் வார ஏடான ‘எல் சோல்’ என்ற பத்திரிகையில் வெளியானது. அதே வருடத்தில் அவரது கட்டுரை ஒன்றும் பிரசுரமானது. படிப்பதற்கான வயதில் அவர் பல்வேறு வேலைகளைப் பார்த்தார். ஆலைத் தொழிலாளி, பில் கலெக்டர், விளம்பர போர்டு வரையும் பெயின்டர், டைப்பிஸ்ட், வங்கி ஊழியர், அலுவலக உதவியாளர் இப்படிப் பல அவதாரங்களை அவர் எடுத்தார். உருகுவேயிலிருந்த பலரைப்போலவும் எடுவர்டோ கலியானோவும் கால்பந்தாட்ட வீரராக வர வேண்டுமென்று ஆசைப்பட்டவர்தான். பாதிரியார் ஆகிவிட வேண்டும் என்ற விருப்பமும் அவருக்கு இருந்தது. ஆனால், மிக மோசமான  ‘பாவங்களை’ச் செய்யக்கூடிய ஒருவராக அவர் ஆகிப்போனார். ‘நான் ஒருவரையும் கொலை செய்ததில்லை. அது உண்மைதான். எனக்கு அதைச் செய்வதற்குத் துணிச்சலில்லை என்பதுதான் அதற்குக் காரணமே தவிர, விருப்பமில்லை என்பதல்ல’.

தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்எடுவர்டோ கலியானோ 20வயதில் ஒரு பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். உருகுவேயில் வெளிவந்துகொண்டிருந்த வாரப் பத்திரிகைகளில் மிகவும் மதிப்புவாய்ந்த ‘மார்ச்சா’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் ஆனார். மரியோ வர்கஸ் லோசா, ரோபர்ட்டோ ஃபெர்னாண்டஸ் ரெட்டமார் முதலான புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள்  அதில் பத்தி எழுதிக்கொண்டிருந்தனர். அதன்பிறகு ‘எபோச்சா’ என்ற நாளிதழின் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் வேலைசெய்தார். உருகுவே பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறையில் முதன்மை ஆசிரியராக எட்டு ஆண்டுகள் இருந்தார். 1973-ம் ஆண்டு உருகுவேயில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது. அப்போது கலியானோ கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டார். அங்கிருந்து அர்ஜென்டினாவில் வந்து தஞ்சம் புகுந்த கலியானோ அங்கு ‘க்ரைசிஸ்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். அதைப் படிப்பதற்காகவே உருகுவேயிலிருந்து அர்ஜென்டினாவுக்கு எழுத்தாளர்கள் பலர் வருவார்களாம்.

1976-ம் ஆண்டு அர்ஜென்டினாவிலும் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. அதன் கொலைப்பட்டியலில் கலியானோவின் பெயரும் இருந்தது. எனவே, அங்கிருந்து வெளியேறி அவர் ஸ்பெயினுக்குப் போனார்.

1970-களில் லத்தீன் அமெரிக்காவில் நிலவிய சூழலைச் சிலி நாட்டின் பின்னணியில்வைத்து இசபெல் அலெண்டெ இவ்வாறு வர்ணிக்கிறார்: ‘1970-களின் தொடக்க ஆண்டுகள். வரலாறு லத்தீன் அமெரிக்காவைச் சூறாவளியால் மூழ்கடித்துக்கொண்டிருந்த காலம் அது. சிலி என்பது அதில் ஒரு தீவு. லத்தீன் அமெரிக்கா உலக வரைபடத்தில் நொந்துபோன ஓர் இதயத்தைப்போன்று காட்சியளிக்கும் ஒரு கண்டம். நாங்கள் சால்வடார் அலெண்டெயின் சோஷலிச ஆட்சியில் வாழ்ந்துகொண்டிருந்தோம். ஜனநாயக வழியிலான தேர்தலின்மூலம் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மார்க்சிஸ்ட் அவர்தான். அவர் சமத்துவம், சுதந்திரம் ஆகியவை குறித்த கனவோடு இருந்த மனிதர். அந்தக் கனவை நனவாக்க வேண்டும் என்ற வேட்கையோடு இருந்தவர். ஆனால், சால்வடார் அலெண்டெயின் ஆட்சி வெகுகாலம் நீடிக்கவில்லை. அது பனிப்போர் காலம். ஹென்றி கிசிங்கரால் ‘அமெரிக்காவின் கொல்லைப்புறம்’ என வர்ணிக்கப்பட்ட எந்தவொரு நாட்டிலும் இடதுசாரிப் பரிசோதனைகள் எதையும் அமெரிக்கா அனுமதிக்காத காலம். ‘க்யூபப் புரட்சியே போதும், அதற்குமேல் எந்தவொரு சோஷலிச அரசையும் சகித்துக்கொள்ள முடியாது. அது ஜனநாயக வழியிலான தேர்தலின்மூலம் உருவாக்கப்பட்டிருந்தாலும்கூட’.

1973 செப்டம்பர் 11, ராணுவப் புரட்சி, சிலி நாட்டிலிருந்த ஒரு நூற்றாண்டு வரலாறுகொண்ட ஜனநாயகப் பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. அப்போது தொடங்கியதுதான் ஜெனரல் அகஸ்டோ பினோசேவின் பயங்கர ஆட்சி. அதுபோன்ற ராணுவக் கவிழ்ப்புகள் லத்தீன் அமெரிக்காவிலும் மேலும் சில நாடுகளிலும் தொடர்ந்தன. அந்தக் கண்டத்தின் அரைவாசி மக்கள் பயத்தின் பிடியில் வாழ்ந்தனர். அது அமெரிக்காவால் திட்டமிடப்பட்டு, வலதுசாரி அரசியல் பொருளாதாரச் சக்திகளால் லத்தீன் அமெரிக்கா மீது திணிக்கப்பட்ட ஒரு தந்திரம். சலுகைபெற்ற ஒரு சிறு குழுவின் கூலிப்படையாக ராணுவம் செயல்பட்டு வந்தது. ஒடுக்குமுறை என்பது பெருமளவில் கட்டவிழ்த்துவிடப்பட்டது. சித்ரவதைகள், வதைமுகாம்கள், தணிக்கைகள், விசாரணையற்ற கைதுகள், கேள்வி முறையற்ற படுகொலைகள் என்பவை பொதுவான நடைமுறைகளாகியிருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போனார்கள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பல்லாயிரக்கணக்கானவர்கள் நாட்டைவிட்டு ஓடிப் பல்வேறு நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தார்கள். பழைய தழும்புகளின்மீது புதிய புண்கள் சேர்ந்தன.’ என்று கூறும் இசபெல் அலெண்டெ, இந்த நிகழ்வுகளையெல்லாம் எடுவர்டோ கலியானோவின் ‘ஓப்பன் வெயின்ஸ் ஆஃப் லத்தீன் அமெரிக்கா’ என்ற புத்தகம்முன்அனுமானித்திருந்தது என்கிறார். ‘அந்த மஞ்சள் நிற அட்டை போட்ட புத்தகம் இந்தப் பிராந்தியத்தில் பாதுகாப்பான தீவுகள் எதுவும் இல்லையென்பதை நிரூபணம் செய்தது. நாமெல்லாம் 500 ஆண்டுகாலச் சுரண்டலை, காலனி ஆதிக்கத்தைப் பகிர்ந்துகொண்டவர்கள். நாம் அனைவரும் பொதுவான தலைவிதியால் இணைக்கப்பட்டவர்கள். நாம் அனைவரும் ஒடுக்கப்பட்ட ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப் புத்தகத்தின் வாக்கியங்களுக்கிடையில் என்னால் வாசிக்க முடிந்திருந்தால், சால்வடார் அலெண்டெயின் அரசாங்கம் தொடக்கம் முதலே அழிவை எதிர்கொண்டிருந்தது என்பதைப் புரிந்துகொண்டிருக்க முடியும்’ என்கிறார் அவர்.

தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்

அந்தப் புத்தகத்தைக் கலியானோ மூன்றே மாதங்களில் எழுதி முடித்தார். 1970-ம் ஆண்டின் கடைசி 90 இரவுகளில் அதை எழுதினார். பகல் நேரத்தில் பல்கலைக்கழகத்தில் புத்தகங்களை, பத்திரிகைகளை, செய்தி மடல்களை எடிட் செய்வது, இரவு எழுதுவது. ‘உருகுவே நாட்டின் மிக மோசமான காலம் அது. இருபது வயதிலேயே கிழடுதட்டிப்போக வைக்கும், கம்பளி அல்லது இறைச்சியைவிட வன்முறையை அதிகம் உற்பத்திசெய்யும் ஒரு நாட்டின் வறுமையிலிருந்தும் அசட்டுத் தனத்திலிருந்தும் தப்பித்து ஓடும் இளம் வயதினரால் நிரப்பப்பட்ட கப்பல்களும் விமானங்களும் இருந்த காலம். ஒரு நூற்றாண்டு வரை நீண்ட சூரியக்கிரகணத்துக்குப் பிறகு கொரில்லாக்களோடு போரிடுகிறோம் என்ற பெயரில் ராணுவம் வீதிகளில் நுழைந்தது. அவர்கள் சுதந்திரத்துக்கான வெளியைத் தியாகம்செய்து அதில் அதிகாரத்தைப் பெற்றார்கள்.’

‘அந்தப் புத்தகம் அதுவரை எழுதப்பட்டு வந்த வரலாற்று நூல்களைப்போல் எழுதப்படவில்லை. மக்களோடு ஓர் உரையாடலை நிகழ்த்துவதற்கென அது எழுதப்பட்டது. அதிகாரபூர்வ வரலாற்றால், வென்றவர்களின் வரலாற்றால் மறைக்கப்பட்ட, பொய்யாகப் புனையப்பட்டவற்றுக்கு அப்பால் சில உண்மைகளைச் சொல்வதற்காக நிபுணத்துவமில்லாத ஒருவரால் நிபுணர்களல்லாத மக்களுக்கென எழுதப்பட்டது.’ என்று கலியானோ அதைப் பற்றிச் சொல்கிறார். அது பேருந்துகளில் பயணிகளிடையே உரத்துப் படிக்கப்பட்டது, சிலியில் நடந்த ராணுவக் கவிழ்ப்புக்குப் பிறகு அங்கிருந்து தப்பிச்சென்ற பெண் ஒருவர் அதைத் தனது குழந்தையின் ஆடைகளில் வைத்து மறைத்து எடுத்துச் சென்றார். இப்படி லத்தீன் அமெரிக்கா முழுவதும் உணர்வுகளைக் கிளறிவிடும் ஆற்றல் வாய்ந்ததாக அந்தப் புத்தகம் இருந்தது. அதற்கான விமர்சனங்கள் எழுதப்படுவதற்கு முன்பே அந்தப் புத்தகம் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டது. உருகுவே, சிலி, அர்ஜென்டினா எனப் பல்வேறு ராணுவ அரசுகளும் அந்தப் புத்தகத்தை வெறுப்போடு பார்த்தன.

தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்


அர்ஜென்டினாவிலிருந்து அரசியல் தஞ்சம் தேடித் தனது மனைவி செலினா வில்லாக்ராவுடன் ஸ்பெயினுக்குச் சென்ற கலியானோ அங்கு அற்புதமான நினைவுக் குறிப்புகளைக்கொண்ட ‘டேஸ் அண்டு நைட்ஸ் ஆஃப் லவ் அண்டு வார்’ என்ற நூலை எழுதினார். கலியானோவின் தனித்துவம் மிக்க எழுத்துமுறைக்கு அந்த நூல் ஒரு சிறந்த உதாரணம். அதை இன்னவகையான நூலென்று வகைப்படுத்த முடியாது. வரலாற்றை இலக்கியமாக வடிப்பதற்கான புதிய உத்தியைக் கலியானோ கண்டறிந்திருக்கிறார். கடுமையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எழுதப்படுகிற வரலாற்று நூல்கள் பெரும்பாலும் படிப்பதற்கு சுவாரஸ்யமற்றவையாக இருக்கும். ஆனால், கலியானோவின் எழுத்தோ படிக்கும்போது நம்மை உற்சாகம்கொள்ளவைக்கும். அதைத்தான் சேண்ட்ராஸ் சிஸ்னெரோஸ் இப்படிக் கூறுகிறார்: “நான் உங்களது படைப்பை வாசிக்கும்போது நான் வாசிப்பது இன்னதென வகைப்படுத்த முடியாத எனது இயலாமையைக் கண்டுகொள்கிறேன். இது வரலாறா, அப்படியானால் வரலாற்று நூல்களின் மிகச்சிறந்த வடிவம் இதுவென்பேன். முழுக்க முழுக்க வதந்திகள், முழுக்க முழுக்கக் கதைகள். உங்களது புத்தகங்கள் கட்டுக்கதைகளாக இருக்கின்றன, தேவதைகள் பற்றிய புனைவுகளாக இருக்கின்றன. புராணங்களாக, கவிதையாக, நாட்குறிப்பாக, பதிவுகளாக இருக்கின்றன. நிச்சயம் அவை சோகைபிடித்த வரலாற்று நூலின் தன்மையைக்கொண்டிருக்கவில்லை. நான் இதையும் புரிந்துகொண்டேன், நீங்கள் ஒரு வித்தைக்காரர், எடுவர்டோ நீங்கள் ஒரு கதைசொல்லி’’ என்று அவர் அந்த எழுத்தைக் கொண்டாடுகிறார்.

‘டேஸ் அண்டு நைட்ஸ்’ நூலுக்குப் பிறகு லத்தீன் அமெரிக்க வரலாறு குறித்த முக்கியமான சில நூல்களை அவர் எழுதினார். லத்தீன் அமெரிக்க வரலாற்றைக் கொலம்பியாவுக்கு முன்பிருந்து நவீன காலம் வரை விவரிக்கும் நூல்கள் அவை. ‘‘அமெரிக்காவை ஒரு பெண்ணாகவும், அந்தப் பெண் என் காதில் சில ரகசியங்களைச் சொல்வதாகவும், அந்தப் பெண்ணை உருவாக்கிய நேசம் மற்றும் சீரழிவுகளை அவள் என்னிடம் சொல்வது போலவும், நான் கற்பனை செய்துகொண்டேன்.’’ என அந்தப் புத்தகங்களை எழுதியது பற்றிய தனது அனுபவத்தை கலியானோ விவரிக்கிறார்.

1985-ம் ஆண்டில் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் உருகுவே நாட்டிலிருந்த ராணுவ சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தது. கலியானோ தன்னுடைய நாட்டுக்குத் திரும்புகிற வாய்ப்பைப் பெற்றார். அவர் 11 ஆண்டுகள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருந்தார். அப்போதும்கூட யாருக்கும் புலப்படாமல் பதுங்கிக்கொள்வது எப்படி என்று அவர் சிந்திக்கவில்லை. அவரது சொந்த ஊரான மான்ட்டிவிடியோவில் காலெடுத்து வைத்ததுமே அந்த நாட்டிலிருக்கும் ஜனநாயகத்தின் பொலபொலத்தத் தன்மையை அவர் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார். அதிகாரத்துக்கு அவர் எப்போதுமே பணிந்து போனதில்லை. தன்னுடைய உயிரையும் அதற்காகப் பணயம் வைத்தவர் அவர்.

எடுவர்டோ கலியானோ கதைகளையும், கவிதைகளையும் வெளியிட்டிருக்கிறார். எண்ணற்ற கட்டுரைகளை, பேட்டிகளை எழுதியிருக்கிறார். ஏராளமான உரைகளை நிகழ்த்தியிருக்கிறார். அவர் பல விருதுகளைப் பெற்றவர். கௌரவப் பட்டங்களைப் பெற்றவர். தன்னுடைய இலக்கியத் திறமைக்காகவும், அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றவர். லத்தீன் அமெரிக்காவில் தோன்றிய அற்புதமான எழுத்தாளர்களில் ஒருவர் அவர். அவருடைய படைப்புகள் துல்லியமான விவரணைகளையும், அரசியல் கடப்பாட்டையும், கவித்துவத்தையும்
கொண்ட ஓர் அபூர்வக் கலைவையாகும்.

தொடுதிரையில் புலப்படாத எழுத்து - எடுவர்டோ கலியானோ (1940 -2015) - ரவிக்குமார்

கலியானோ லத்தீன் அமெரிக்கா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் சென்றிருக்கிறார். ஒடுக்கப்பட்ட ஏழை மக்களின் குரல்களைக் கேட்டிருக்கிறார். தலைவர்களோடு, அறிவுஜீவிகளோடு பழகியிருக்கிறார். பூர்வீக இந்தியர்களோடும், விவசாயிகளோடும், ராணுவ வீரர்களோடும், கொரில்லாக்களோடும், கலைஞர்களோடும், சட்டவிரோதமானவர்களோடும் வாழ்ந்திருக்கிறார். ஜனாதிபதிகளோடு, சர்வாதிகாரிகளோடு, தியாகிகளோடு, பாதிரியார்களோடு, கதாநாயகர்களோடு, கொள்ளைக்காரர்களோடு, நிராதரவரான தாய்மார்களோடு, விபச்சாரிகளோடு அவர் பேசியிருக்கிறார். கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். காடுகளில் திரிந்திருக்கிறார். மாரடைப்பு வந்து தப்பிப் பிழைத்திருக்கிறார். அவர் கொடுங்கோன்மை அரசுகளால் வேட்டையாடப்பட்டிருக்கிறார். வெறிபிடித்த பயங்கரவாதிகள் அவரை விரட்டியிருக்கிறார்கள். அவர் ராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்தார். அனைத்துவிதமான சுரண்டல்களையும் அநீதிகளையும் எதிர்த்தார். மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, நினைத்தே பார்க்க முடியாத  ‘ரிஸ்க்’குகளை எடுத்திருக்கிறார். வேறு எவரைவிடவும் லத்தீன் அமெரிக்காவைப் பற்றி நேரடியான அனுபவம் உள்ளவர் அவர்தான். அந்த அனுபவத்தை அவர், அந்த மக்களின் கனவுகளை, நிராசைகளை, நம்பிக்கைகளை, தோல்விகளை உலகுக்கு எடுத்துச் சொல்வதற்காகப் பயன்படுத்தினார். எழுத்துத் திறமைகொண்ட ஒரு சாகசக்காரர் அவர். அவருடைய இதயம் சக மனிதர்களுக்காக இரங்குவது. அவருக்கு மெலிதான நகைச்சுவை உணர்வும் உண்டு. ‘‘வாழ்பவர்களைவிடச் செத்துப்போனவர்களை நன்றாகப் பராமரிக்கும் உலகத்தில் நாம் வாழ்கிறோம். உயிரோடு இருக்கும் நாம் கேள்விகளைக் கேட்கிறோம். பதில்களைத் தருகிறோம். பணத்தைப்போலவே மரணமும் மக்களை மேம்படுத்தும் என்று நம்புகிற ஓர் அமைப்பில் நாம் வாழ்கிறோம்” என்றார் அவர்.

கலியானோ இடதுசாரியாக அறியப்பட்டாலும் மார்க்ஸியத்தின் பெயரால் நடத்தப்பட்ட கொடுங்கோன்மைகளைக் கண்டிக்கத் தவறியதில்லை. குறிப்பாக ஸ்டாலின் காலத்து ரஷ்யாவில் நடந்த அநீதியான விசாரணைகளை அவர் கேலி ததும்பத் தனது நூலில் (மிர்ரர்ஸ்) விமர்சிக்கிறார்: ‘ஐசாக் பேபெல் தடைவிதிக்கப்பட்ட ஒரு எழுத்தாளர். அவர் தானொரு புதிய இலக்கிய வகையைக் கண்டுபிடித்திருப்பதாகக் கூறினார்- ‘மௌனம்’தான் அது. 1939-ம் ஆண்டு அவர் கைதுசெய்யப்பட்டார். விசாரணை இருபதே நிமிடங்களில் முடிந்துவிட்டது. அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார், புரட்சிகர யதார்த்தத்தைச் சிதைக்கும் குட்டி பூர்ஷ்வா கண்ணோட்டத்தோடு புத்தகங்களை எழுதியதாக அவர் ஒப்புக்கொண்டார். சோவியத் அரசுக்கு எதிராகக் குற்றமிழைத்ததாக, அந்நிய நாட்டு உளவாளிகளுடன் பேசியதாக, அயல்நாடுகளுக்குச் சென்றபோது ட்ராட்ஸ்கியவாதிகளோடு தொடர்பு கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டார். தோழர் ஸ்டாலினைக் கொலைசெய்வதற்காக நடத்தப்பட்ட சதி தனக்குத் தெரிந்திருந்தும் போலீஸிடம் அதைச் சொல்லாமல் மறைத்ததாக அவர் ஒப்புக்கொண்டார். தந்தையர் நாட்டின் எதிரிகளைத் தான் நேசிப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். தனது ஒப்புதல் வாக்குமூலம் எல்லாமே பொய் என்று அவர் ஒப்புக்கொண்டார். அவரை அன்றிரவே அவர்கள் சுட்டுக்கொன்றார்கள். பேபெலின் மனைவி அதை 15 வருடங்கள் கழித்துத்தான் தெரிந்துகொண்டார்’.

அவருடைய கட்டுரைகள் எளிய தர்க்கங்களை வெகுளித்தனத்தின் சாயல் மங்காமல் முன்வைக்கின்றன. ‘‘ஈராக்கில் ஜார்ஜ் புஷ் மீது ஷூவை விட்டெறிந்தவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை. அவருக்கு மெடல் அல்லவா கொடுத்திருக்க வேண்டும்?’’ என்று கேட்கும் கலியானோ, ‘‘யார் பயங்கரவாதி ஷூவை வீசியவரா, அல்லது அதனால் அடிக்கப்பட்டவரா..? பொய்யைச் சொல்லி ஈராக் யுத்தத்தை நடத்தியவர், தொடர்கொலைகளைச் செய்தவர், எண்ணற்றவர்களைச் சித்ரவதை செய்தவர், அநீதியைச் சட்டபூர்வமாக்கியவர் -அவரல்லவா பயங்கரவாதி?” என்று கோபம் பொங்கக்கேட்டார்.

2009-ம் ஆண்டு, உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட மாநாடு ஒன்றில் வெனிசுவேலாவின் அதிபராக இருந்த ஹ்யூகோ சாவேஸ், எடுவர்டோ கலியானோ எழுதிய ‘ஒப்பன் வெயின்ஸ் ஆஃப் லத்தின் அமெரிக்கா’ நூலின் பிரதி ஒன்றை அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவின் கையில் அளித்தது பெரும் விவாதங்களை எழுப்பியது. அது கலியானோவின் புகழை உலகெங்கும் கொண்டுசென்றது. அதையொட்டி அவரது நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் உலகின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கின. அந்த நேரத்தில்தான் திடீரென மரணம் அவரைக் கவர்ந்துசென்றுவிட்டது. தனது 74-வது வயதில் நுரையீரல் புற்றுநோய்க்கு அவர் பலியானார். அவர் மறைந்த ஏப்ரல் 13-ம் தேதிக்கு என்ன குறிப்பை அவர் எழுதிவைத்திருக்கிறார் எனப் பார்த்தேன். 2009 ஏப்ரல் 13-ம் தேதி நடந்த ஒரு நிகழ்வைப் பற்றிய குறிப்பு அது. மாயன் இன மக்களின் சுதேசிப் பண்பாட்டுக்கு ஊறு விளைவித்ததற்காக ‘ஃப்ரான்சிஸ்கன் பிரதர்ஸ்’ 42 பேர் ஒன்றுகூடி புனிதசபை ஒன்றில் மன்னிப்புகோரும் சடங்கு ஒன்றைச் செய்தனர். ஆனால், 450 ஆண்டுகளுக்கு முன்னர் அதே இடத்தில்தான் இன்னொரு ‘ஃப்ரான்சிஸ்கன் பிரதரான’ டீகோ டி லாண்டா என்பவர் மாயன் இன மக்களின் நூல்களை எரித்தார். அவற்றோடு சேர்ந்து எட்டு நூற்றாண்டுகளின் ஒட்டுமொத்த நினைவுகளும் எரிந்துபோயின” என கலியானோ எழுதியுள்ளார். அந்தக் குறிப்புக்கு அவர் இட்டுள்ள தலைப்பு ‘உங்களைப் பார்ப்பது எப்படியென்பது எங்களுக்குத் தெரியாது’. கலியானோவின் எழுத்துகளுக்கும்கூட அந்தத் தலைப்பு பொருத்தமாகவே இருக்கிறது. ‘கலியானோ! உங்களை வாசிப்பது எப்படியென்பது இன்னும் எங்களுக்குத் தெரியவே இல்லை.

(கட்டுரையாளர் ரவிக்குமார், எடுவர்டோ கலியானோ எழுதிய நூல்கள் பலவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து ‘வரலாறு என்னும் கதை’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கிறார். 2010-ம் ஆண்டு வெளியான அந்த நூலின் மறுபதிப்பு இப்போது வெளிவந்துள்ளது.)