
தமிழ்ப்பிரபா, படம்: பா.காளிமுத்து
``யாரையும் சாப்பாட்டுக்காக மட்டும் காக்கவைக்கவே கூடாது தம்பி!” என்றபடி பையில் இருந்த உணவுப் பொட்டலங்களைப் பிரிக்கிறார் ஜோதி. பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் அவரைச் சுற்றிக் குலாவுகின்றன. கடந்த பன்னிரண்டு வருடங்களாக திருவான்மியூர் பகுதியில் உள்ள தெருநாய்களுக்கு மதியம் மற்றும் இரவு உணவை வீட்டில்தானே தயார்செய்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வைத்து வீதிவீதியாகச் சென்று பரிமாறுகிறார் ஜோதி.
பிற்பகல் 3:30 மணிக்கு தன் வீட்டு வாசலில் தொடங்குகிறது பயணம். இவரின் வருகைக்காக நாய்கள் காத்துக்கிடக்கின்றன. பரிமாறி முடித்தவுடன் உணவுப்பொட்டலங்களுடன் வண்டிப்பயணம் தொடர்கிறது. ஜோதி ஒவ்வொரு தெருமுனையிலும் நுழைந்து வண்டி ஹாரனை அடிக்கிறார். மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் நாய்கள் ஓடோடி வந்து, இவர் கொடுக்கும் உணவை ஆர்வத்துடன் உண்ணும் காட்சியைவிட, அதைப் பார்த்து மகிழும் ஜோதியின் முகம் ஒளி மிகுந்தாக இருந்தது.
``காலையில எழுந்ததும் அரைக்கிலோ காராபூந்தியை எடுத்து காகங்களுக்குப் போட ஆரம்பிப்பேன். அப்புறம் மொட்டைமாடிக்குப் போய் புறாக்களுக்கு தானியங்களைத் தூவிட்டு அங்கே இருக்கிற சின்னச்சின்னக் கிண்ணத்துல தண்ணி ஊத்தி வெச்சுட்டு வந்துடுவேன். மதியம் முட்டைசாதம் இல்லாட்டி கோழிக்கறிசாதம் சமையல் பண்ணி, நூறு பார்சல் கட்டுவேன். வண்டி எடுத்துட்டுக் கிளம்புனேன்னா, வீட்டுக்கு வர சாயங்காலம் ஆகிடும். மறுபடியும் ராத்திரி 11 மணிக்குத் திருவான்மியூர் பீச் பக்கம் வண்டி எடுத்துட்டு பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடுக்கப் போனா, வர 12 மணி ஆகிடும்” என மூச்சுவாங்கச் சொல்லி முடித்த ஜோதியின் தினசரி வாழ்க்கை, கடந்த பன்னிரண்டு வருடங்களாக இப்படித்தான் செல்கிறது.

காகம், புறா, நாய் என அனைத்தும் ஜோதியின் வருகையைத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றன. ``யாரையும் சாப்பாட்டுக்காக மட்டும் காக்கவைக்கவே கூடாது!’’ இதுதான் ஜோதியின் மந்திரம்.
ஒரு கிலோ அரிசியில் சமையல் செய்து நாய்களுக்குப் பரிமாறத் தொடங்கியவர், இன்று தினமும் 18 கிலோ அரிசி வடிக்கிறார். வெறும் உணவு மட்டுமன்றி, தன்னுடைய வண்டியில் பிராணிகளுக்கான முதலுதவி மருந்துகளையும் வைத்து, பல நாய்களைக் காப்பாற்றிவருகிறார். ``மாசம் 50,000 ரூபாய்க்குமேல செலவு ஆகும். எங்க வீட்டுக்காரர் என்னைப் புரிஞ்சுக்கிட்டதால்தான் இதெல்லாம் சாத்தியப்படுது. எங்களுக்குப் பணம் ஒரு பொருட்டல்ல. ஒவ்வொரு தெருவுலயும் நான் வரும்போது, எத்தனை உயிர்கள் பசியோடவும் பாசத்தோடவும் எனக்காகக் காத்துட்டு இருக்காங்கன்னு பார்த்தீங்கில்ல” என்று புன்னகைக்கிறார்.
கலகலவெனப் பேசிய ஜோதி, ``நாய்கள்மீது உங்களுக்கு எதனால் இவ்ளோ பாசம் வந்தது?” என்ற கேள்வியைக் கேட்டதும் சற்று நேரம் எதையும் பேசாமல் இருந்தார்.
``நம்பிக்கை, பாசம் இதெல்லாம் மனுஷ உறவுகள்மேல வைக்கிறதைவிட நாய்கள்மீது வைக்கிறது எவ்வளவோ மேல். உண்மையான அன்புன்னா என்னனு தெரிஞ்சுக்க விரும்புறவங்க, ஒரு நாய்கிட்ட அதைச் செலுத்திப்பாருங்க” எனச் சொல்லி முடிக்கும்போது கண்களில் நீர் திரள்கிறது. சுதாரித்துக்கொண்டவர் ``சரி சரி வாங்க... க்ராஸ் பண்ணி எதிர்த் தெருவுக்குப் போகணும்” என அங்கே போய் நின்று ஹாரன் அடிக்க, நாய்கள் ஜோதியை நோக்கி ஓடிவருகின்றன. தாயுள்ளம்கொண்ட ஜோதியின் முகத்தில், மீண்டும் மகிழ்ச்சி கடல்போலச் சூழ்கிறது.