
டெக்னோ தொடர்அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி
ஏராளமாக முதலீடு போட்டுப் படிக்கவைக்கும் பெற்றோர்களின் ‘வரவு செலவு லெட்ஜரில்’

வரவுவைக்கப்படுகிற ஒரே லாப இலக்கம் மதிப்பெண்தான்! ஆனால், இந்த மதிப்பெண் எப்போதும் அவ்வளவு துல்லியமானதாகக் கிடைத்துவிடுவதில்லை. அது எப்போதுமே `சப்ஜெக்ட் டு மாஸ்டர்ஸ் ரிஸ்க்.’ மறுகூட்டல் வரலாறுகள் அப்படி!
* பர்சனல் சண்டைகள், கோபதாபங்கள்
* மாணவர் ட்யூசன் சேராமல் இருப்பது
* சம்பளம், பேட்டா பிரச்னைகள்.
* சப்ஜெக்ட் தெரியாமல் திருத்துதல்
* மாணவன் மேல் முன்விரோதம்
* உடல்நலக் குறைபாடுகள்

இப்படியே சிகப்புப் புள்ளிகள் வைத்து வைத்து எழுத ஆரம்பித்தால் காஷ்மீர் வரை போகலாம். ஆசிரியர் சமூகம் கோபித்துக்கொள்ளக் கூடாது. பெரும்பாலான ஆசிரியர்கள் திறமையானவர்கள் தாம். ஆனால், `மதிப்பெண்ணால் பாதிக்கப் பட்டோர் கைதூக்குங்கள்’ என மெரீனா லைட்ஹவுஸ் மேலிருந்து குரல்கொடுத்தால் ஒட்டுமொத்த சென்னையும் சீமான் போலவே கைகளை உயர்த்தும்!
எதிர்காலத்தில் இந்தப் பிரச்னைகள் இருக்காது, நம் பேப்பர்களை எந்திரங்கள்தாம் திருத்தப்போகின்றன. இப்போது மேலே சொன்ன காரணிகளைப் படித்துப்பாருங்கள், இவை எதுவுமே எந்திரங்களுக்குப் பிரச்னையாக இருக்காது. நிச்சயம் நியாயமான மதிப்பெண்ணை எந்திரங்களால் வழங்க முடியும். ஆனால் சாத்தியமா?
“மாணவர்கள் மனசை ஒரு மனுஷ்யகுருவாலதான் புரிஞ்சுக்க முடியும். அவன் எழுதின கட்டுரைகளோட ஆழத்தையும் அழகையும் படைப்பாற்றலையும் தெரிஞ்சு அறிஞ்சு புரிஞ்சு மார்க் போட மனித மாஸ்டரால்தான் முடியும்... ஆகவே மாணவர்களின் பேப்பர் திருத்துதலை மெஷின்களிடம் கொடுக்கிற கொடுமைக்கு முடிவுகட்டுவீர். இந்த முட்டாள்தனத்தை எதிர்த்து இன்றே விரல் கொடுப்பீர்...’’
2013-ல் அமெரிக்காவில் இருக்கிற ஆசிரியர்களும் அறிஞர்களும் சேர்ந்து ஆரம்பித்த ஆன்லைன் போராட்ட அறிவிப்பு இது. ‘முக்கியமான சில தேர்வுகளில் இனி எந்திரங்கள்தாம் பேப்பர் திருத்தப்போகின்றன’ என்று ஒரு செய்தி வெளியானது. உடனே ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து PAMS (Professionals against machine scoring) என்ற அமைப்பைத் தொடங்கினர். Machine Scoring-ஐ எதிர்த்துப் போராட்டத்தையும் அறிவித்தனர். அரசும் பணிந்தது. அந்த மதிப்பெண் எந்திரத்தை உருவாக்கியவர் ஓர் இந்தியர்.
மதிப்பெண் போடுகிற எந்திரங்களை உருவாக்குவதில் முன்னணியில் உள்ள நிறுவனம் EDx. ஆனந்த் அகர்வால் என்கிற இந்திய அமெரிக்கர்தான் இந்த நிறுவனத்தின் தலைவர். எம்ஐடி தொடங்கி ஹார்வர்டு வரை பல முன்னணிப் பல்கலைக்கழகங்களின் ஆதரவோடு இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது எட்எக்ஸ்.
எந்திர ஆசிரியர்களைக் கண்டு உலகம் அஞ்சியது அது முதல்முறை அல்ல! 1920-ல் சிட்னி.எல்.பிரஸ்லி என்கிற அறிஞர் இதே மாதிரி முயற்சிகளில் இறங்கினார். 1960-களில் பி.எஃப்.ஸ்கின்னர் ஒரு கருவியை உருவாக்கினார். அப்போதும் எதிர்க்குரல்கள் ஒலித்தன. கடைசியாக 2009-ம் ஆண்டில் இங்கிலாந்தில் இந்த முயற்சி நடந்தபோதும் எழுந்த ஆசிரியர்களின் எதிர்ப்புக்கு அரசு பணிந்தது.
இருந்தும் கடந்த முப்பது ஆண்டுகளாகவே மெஷின்கள் நமக்கெல்லாம் மார்க் போட்டுக்கொண்டுதான் இருந்தன. `கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியான விடையைத் தேர்ந்தெடு’களை மட்டும்தான் அவை திருத்திக்கொண்டிருந்தன. அவையெல்லாம் பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. கட்டுரைகள்தாம் சிக்கலே!
காரணம், கட்டுரைகளை எந்திரம் படிக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும்.. மொழியைப் புரிந்துகொள்ள வேண்டும், நகைச்சுவையோ, சோகமோ, கோபமோ அந்த உணர்வை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். எந்திரத்திற்கு இது சாத்தியமா?
ஆனால், மேலே சொன்ன சர்வ லட்சணங்களும் பொருந்திய, சிந்திக்கிற எந்திரங்கள் வந்துவிட்டன. 1920 தொடங்கி நடந்த போராட்டம் 2018-ல் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அரசு, எதிர்ப்புகளை மீறி எந்திரங்கள் கைகளில் மாணவர்களின் விடைத்தாள்களைக் கொடுத்துவிட்டது!

சிவப்புப்பேனா, எந்திரங்கள் கையில்...
ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர்வு NAPLAN (National Assessment Program – Literacy and Numeracy). இது 3,5,7,9 வயதுக் குழந்தைகளுக்கு நடத்தப்படுகிற தேர்வு. பள்ளிக் குழந்தைகள் எந்த அளவுக்கு மொழி சார்ந்தும் இலக்கணம், அறிவியல், கணிதம் தொடர்பான விஷயங்களிலும் திறன்பெற்று இருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ள நடத்தப்படுகிறது. இதில் கல்வியறிவைச் சோதிக்க, குறிப்பிட்ட டாப்பிக்கைக் கொடுத்து அதை Opinion writing மற்றும் Story telling பாணியில் கட்டுரைகள் எழுதச் சொல்கிறார்கள். இந்தக் கட்டுரைகளைத்தான் இந்த ஆண்டுமுதல் எந்திரங்கள் திருத்தப்போகின்றன!
ஏராளமான எதிர்ப்புகளை மீறி Australian Curriculum Assessment and Reporting Authority (ACARA) இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறது. எப்போதும் போல பெற்றோர்கள், ஆசிரியர்கள் தொடங்கி பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள். போராட்டக்காரர்களுக்கு ACARA-வின் பதில், “நிறைய பரிசோதனைகள் செய்துவிட்டோம். இது நன்றாகவே இயங்குகிறது. பக்காவாக மார்க் போடுகிறது, நீங்கள் கிளம்புங்கள்!’’
AES (Automated Essay Scoring), இதுதான் ஆஸியில் மதிப்பெண் போடுகிற Machine grading மென்பொருள். இது மனிதர்களைப்போலவே ஒரு கட்டுரையின் நீளம், அகலம், கட்டமைப்பு முதலானவற்றைப் புரிந்துகொண்டு மதிப்பெண் போடும். Natural language processing முறையைப் பயன்படுத்தி மொழிவளத்தையும் புரிந்துகொள்ளும்.
AES, மனிதர்களால் ஏற்கெனவே திருத்தப்பட்ட விடைத்தாள்கள்மூலம் எப்படி மதிப்பெண் போடுவது என்பதைக் கற்றுக்கொண்டிருக்கிறது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிக விடைத்தாள்களை AES திருத்துகிறதோ அந்த அளவுக்கு அது திறனுள்ளதாக மாறும்!
ஒருவேளை AESக்கு சவால் விடும்படி புத்திசாலி மாணவன் யாராவது எழுதியிருந்தால், எந்திரம் ஈகோ பார்க்காமல் ‘இவன் வேற லெவல், நீங்களே பார்த்துக்கோங்க ஜி’ என மனிதர்களுக்கே அனுப்பிவிடும். இப்போதைக்கு எந்திரங்கள் திருத்திய ஒட்டுமொத்த பேப்பர்களில் பத்து சதவிகிதத்தை மனிதர்கள்தாம் சில காலத்துக்கு செக் பண்ணுவார்கள்!
இவற்றையெல்லாம் ஒரே நாளில் ஆஸ்திரேலிய அரசு செய்துவிடவில்லை. 2013 தொடங்கி விதவிதமான கட்டுரைகளைக் கொடுத்து திருத்தச்செய்து AES-ஐ மேம்படுத்தியுள்ளனர். 2016-ம் ஆண்டில் மட்டும் விதவிதமான 12,000 மாதிரி விடைத்தாள்களைத் திருத்தியிருக்கிறார் இந்த எந்திர ஆசிரியர்.
AES திருத்தும் விதத்தைப் பரிசோதிக்க ஆங்கிலம் கற்றுத்தரும் ஆசிரியர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அவர்கள் பரிசோதித்தபோது மனிதர்களைவிடவும் கட்டுரைகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு திருத்தியிருப்பது தெரிந்தது. அனைவரும் AES-க்கு லைக்போட்டுவிட்டுக் கிளம்பிவிட்டனர்.
இந்த AES-ஆல் விரைவாக விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் தரமுடியும். முன்பு மூன்று மாதங்கள் பிடித்த வேலை இப்போது மூன்றே வாரங்களில் முடிந்துவிடும். செலவு கால்வாசியாகக் குறையும். ஆஸ்திரேலியாவில் தொடங்கியிருக்கும் இந்த இயக்கம், அடுத்தடுத்து மற்ற நாடுகளுக்கும் பரவும். இன்று ஆரம்பப் பாடசாலைக்குள் நுழைந்துவிட்ட AES கல்லூரிவரை எட்டிவிடவும் கூடும். இவையெல்லாம் இந்தியாவுக்கு வர ரொம்ப காலம் ஆகும் என எண்ண வேண்டாம்!
நம் வகுப்பறைகளுக்குள் கணினிகள் வந்துவிட்டன. `காஸ்ட்லி’ குழந்தைகள் கைகளில் சிலேட்டுக்குப் பதிலாக டேப்லெட்கள் தரத்தொடங்கிவிட்டோம். VR headset மூலம் பாடமெடுக்கிறோம். ஆர்க்மென்டட் ரியாலிட்டி உதவியோடு கற்கிறார்கள். வியாட்டிவ் என்கிற நிறுவனம் பள்ளிகளுக்கான VR பாடங்களைத் தருகிறது. Vamrr என்கிற நிறுவனம் ஆர்க்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாடம் கற்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குகின்றன. இந்தத் தொழில்நுட்பங்களை வைத்துக்கொண்டு மாணவர்கள் தவளையே இல்லாமல் விர்ச்சுவல் தவளையை வெட்டி ஆபரேஷன் செய்கிறார்கள்; இதயத்தின் குறுக்குவெட்டுத்தோற்றத்தை ஆகுமென்டட் ரியாலிட்டி வழி முப்பரிமாணத்தில் உணர்கிறார்கள்!
அதுசரி, ஆசிரியர்களின் எதிர்காலம்? பள்ளி கல்லூரிகளை மூடிவிடுவார்களா? ஒன்றும் ஆகாது. ஆசிரியர்கள் அஞ்சற்க! மனித ஆசிரியர்கள் எப்போதும் இருப்பார்கள். பள்ளிகளும் கல்லூரிகளும் நிச்சயம் இருக்கும். எந்திர ஆசிரியர்கள் இருந்தாலும் மனித ஆசிரியர்கள் இல்லாமல் அடிப்படைக் கல்வி இங்கே சாத்தியம் இல்லை. எந்திரங்களும் மனிதர்களும் இணைந்து கைகோத்துச் செயல்படுவார்கள் என்பதுதான் உலக ஃப்யூச்சரிஸ்டுகள் அத்தனை பேருடைய கணிப்பும். ஒரே வகுப்பு, இரண்டு ஆசிரியர்கள். மனித ஆசிரியரோடு வகுப்பறையைப் பங்கிட்டுக்கொள்வதில் எந்திர ஆசிரியருக்கு ஈகோ இருக்காது!
மனித ஆசிரியர் எதிர்காலத்தில் பயிற்சியாளராக (Coach) இருப்பார். ஏட்டுக்கல்வியைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வழங்கினால், நடைமுறை அறிவை மனித ஆசிரியர் தருவார். புராஜெக்டுகள் செய்வது, சக மாணவர்களோடு குழுவாகச் செயல்படுவது, இன்டர்பர்சனல் ஸ்கில்ஸ், எமோஷனல் இன்டெலிஜென்ஸ், அற விளக்கம், மானுடவியல் போன்றவற்றைக் கற்பிப்பார். மாணவர்களின் திறன்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து வளர்த்தெடுக்க முடியும். மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைச் சிறுவயதிலேயே கண்டறிந்து தீர்வுகளை வழங்கமுடியும்.
MOOC-களை அடுத்த நிலைக்கு இந்த மதிப்பெண் எந்திரங்கள் எடுத்துச்செல்லும். கற்றுக்கொடுப்பதை மட்டுமல்லாது தேர்வையும் சுலபமாக்கும்.
ஆசிரியர்கள் செய்ய வேண்டியது எல்லாம் மூன்று விஷயங்கள்தாம். Learn, Unlearn, Relearn... கற்பது, மறப்பது, புதிதாகக் கற்பது. எப்படி காலவேகத்துக்கு ஏற்ப எந்திரங்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்கிறதோ அப்படி ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவேண்டி இருக்கும். அதைச் செய்யத்தவறுகிறவர்கள் மாற்றப்புயலில் மறைந்துபோக வேண்டியதுதான்!
இப்படிக் கட்டுரைகளை வாசித்து புரிந்துகொண்டு மார்க் போட மட்டுமல்ல, கட்டுரை, கவிதை, கதை என எழுதவும் தொடங்கிவிட்டன எந்திரங்கள்.
என்றால்... கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் என்ன ஆவார்கள்?
- காலம் கடப்போம்