Published:Updated:

மெய்ப்பொருள் காண்

மெய்ப்பொருள் காண்
பிரீமியம் ஸ்டோரி
News
மெய்ப்பொருள் காண்

மெய்ப்பொருள் காண்

ஞாலம் - மகுடேசுவரன்

படம் : ரமேஷ் கந்தசாமி

லகம் என்பது தமிழ்ச்சொல்லா வடசொல்லா என்று ஒரு வழக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. லோகம் என்பதிலிருந்து உலகம் வந்தது என்பர். மாற்றாக, திருக்குறளில் பயன்படுத்தப்பட்ட எச்சொல்லும் வடசொல்லன்று என்று வலிமையான கருத்துகளை எடுத்துரைக்கும் தமிழ்த் தரப்பினரும் உள்ளனர். உலகம், உலகு ஆகியன தூய தமிழ் என்பர். ‘உல’ என்றால் வளை என்று பொருள். இப்புவிப் பெரும்பரப்பின் உருண்டைத்தன்மை வளைவாய்க் கீழிறங்குவதைக் கலம்செல்வோர் உணர்வர். அதிலிருந்து தோன்றியதே உலகம் என்னும் சொல். கலை, கலா, உலகம், லோகம் போன்ற பல சொற்கள் இரு மொழிகளிலும் ஒரு பொருளில் வழங்குவன என்கிறார் தேவநேயப் பாவாணர்.

மெய்ப்பொருள் காண்

குறளில் உள்ள வடசொல் என ஐயுறத்தக்கது ‘இந்திரனே சாலுங் கரி’ என்னும் ஈற்றடியிலுள்ள இந்திரன் என்னும் சொல், அது பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்பார் உளர். இது ஒருவாறு இருக்கட்டும். உலகம் என்பது எத்துணைப் பெரிய பொருளுக்குப் பொருளான சொல். அதற்கு நேராகவும் நிகராகவும் நம் தமிழில் சொற்கள் இருக்க வேண்டுமே, அந்தச் சொல்லானது தமிழ்த் தன்மைகளோடும் தனிச் செம்மையோடும் விளங்க வேண்டுமே…! அப்படியொரு சொல் இல்லாமல் போகுமா ? அவ்வெண்ணத்தோடு ஆழ்ந்து தேடியதில் அகப்பட்ட சொல் ‘ஞாலம்’ என்பது.

உலகம் என்ற சொல்லைவிடவும் ஞாலம் என்ற சொல் ஏற்படுத்தும் ஒலிப்பின் அதிர்வு வன்மையாக இருக்கிறது. திருக்குறளில் தேடினால் உலகத்தைக் கூறுமிடத்திலெல்லாம் ஞாலம் என்ற சொல்லைச் சிறப்பான பொருளாட்சியோடு பயன்படுத்தி மயக்குகிறார் வள்ளுவர்.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது (குறள் 102)

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமைஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். (குறள் 141)

மெய்ப்பொருள் காண்


அல்லல் அருள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி. (குறள் 245)

ஞாலங் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின் (குறள் 484)

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர் (குறள் 484)

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் (குறள் 648)


இவை மட்டுமின்றி, குறள் எண்கள் 999, 1016, 1058 ஆகியவற்றிலும் ஞாலம் என்ற சொற்பயன்பாடு உண்டு. ஞாலத்தை மேலும் சிறப்பிக்கும்பொருட்டு மாஞாலம் என்றும் கூறுகிறார். நம்மிடையே ஒரு வழக்கம் இருக்கிறது.

ஒரு சொல்லைப் பயன்படுத்தினால் அதையே தொடர்ந்து பயன்படுத்துவது. உலகம் என்று பயன்படுத்தினால் அதையே எங்கெங்கும் அள்ளி இறைப்பது. கூறியது கூறல் குற்றம் என்றால் ஒரு சொல்லைத் தொடர்ந்து ஆள்வதும் குற்றமே. உலகம் என்று சொல்ல வேண்டிய இடத்தில் ஞாலம், பார், வையகம், புவி என்று பலவாறும் பயன்படுத்தவேண்டும். தமிழில்தான் ஒரு பொருளுக்குப் பல சொற்கள். ஒரு சொல்லுக்குப் பல பொருள்கள். நோபல் பரிசு போன்ற பெரிய பரிசுகள் ஞாலப்பெரும் பரிசுகள். உலகத்தலைவர்கள் என்பதற்கு மாற்றாக ஞாலத்தலைவர்கள் எனல் வேண்டும்.

ஞாலம் ஞாலம் ஞாலம் என்று என் மனம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தது. அந்தச் சொல்லுக்கு நான் மதிமயக்குற்றேன். எங்கேனும் ஞாலம் என்று பயன்படுத்த வாய்க்குமா என்று பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஞகர உயிர்மெய்யின் மீது எனக்குத் தீராத காதல் ஏற்பட்டுவிட்டது.
எல்லா உயிர்மெய்யெழுத்துகளும் சொல்லுக்கு முதலெழுத்தாகாதவை. ட, ண, ற, ன ஆகிய உயிர்மெய் வரிசைகளில் சொற்கள் தொடங்குவதில்லை. ஞகரத்தில் சொற்கள் தொடங்கும்.

ஞகரத்தில் தொடங்கும் சொற்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவையே. ஆனால், அவை ஒவ்வொன்றும் அருஞ்சொற்கள். ஞண்டு, ஞயம், ஞெகிழ், ஞிமிர், ஞேயம் ஆகிய சொற்களை அறிவீர்களா? அவற்றின் முதலெழுத்துக்குப் போலியாக ‘ந’கரத்தைப் பயன்படுத்தி நண்டு, நயம், நெகிழ், நிமிர், நேயம் என்கிறோம். ஞாயிறு, ஞாபகம் போன்ற சில சொற்களைத்தான் ஞகரத்தில் பயன்படுத்துகிறோம்.

காலம் என்பதற்கு ஞான்றை என்று ஒரு சொல் உள்ளது. எக்காலத்திற்கும், என்றென்றும் என்பதற்கு எஞ்ஞான்றும் எனல் வேண்டும். கயிறு என்பதற்கு ஞாண் என்ற சொல் உள்ளது. அதைத்தான் அரைஞாண்(கயிறு) என்கிறோம். கழுத்தில் சுருக்கிட்டுச் சாவதைப் பேச்சு வழக்கில், ‘நாண்டுகிட்டுச் செத்தான்’ என்பார்கள். அதன் தூய தமிழ்வடிவம்  ‘ஞான்றுகொள்ளுதல்’. ஞான்றுகொண்டு செத்தான் என்பதைத்தான் அவ்வாறு சொல்கிறார்கள். எண்ணிப் பாருங்கள், நூறு நூல்களை எழுதிய ஆசிரியன் ‘ஞான்றுகொள்ளல்’ என்னும் சொல்லை ஆண்டிருப்பானா? எளியவன், பாமரன், படிப்பவறிவில்லாதவன் ஒரு சொல்லை அதன் கொச்சை வடிவத்தில் மறவாமல் வழங்கிக்கொண்டிருக்கிறான்.

ஞாலம் என்ற ஒரு சொல் என் தேடலைத் தொடக்கிவைத்து நூறு சொற்களைத் தழுவச் செய்துவிட்டது. ஞாலம் என்ற சொல்லையும் ஞகரத்திலுள்ள எல்லாச் சொற்களையும் என் வேட்கை தணியும் வரை பயன்படுத்தப்போகிறேன்.

சண்டாளன் - அழகிய பெரியவன்

மானுட நினைவுகளின் களஞ்சியம் மொழி. அதில் பல்லாயிரம் சொற்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. திருவள்ளுவர் கவிஞனை, ‘சொற்களைப் பயிரிடும் சொல்லேர் உழவன்’ என்கிறார். இது அபாரமானதோர் ஒப்புமை. ஆயினும், ஒவ்வொரு மனிதரும் எனக்குச் சொல்லேர் உழவராகவே இருக்கின்றார். அவர் விளைவிக்கும் சொற்கள் ஒவ்வொன்றும் மொழி விதைகளாகின்றன.

மானுடர் ஓயாமல் சொற்களை விதைக்கின்றனர். சொற்கள், வெளிப்படும் மனிதரையும் இடத்தையும் பொறுத்து அவை ஒவ்வொன்றும் அதிகாரம்மிக்க சொல்லாகவோ, அதிகாரமற்ற  சொல்லாகவோ மாறுகின்றன. ‘ஏழைச்சொல் அம்பலம் ஏறுவதில்லை’ என்பது எளிய மக்கள் சொல்லிவரும் அனுபவமொழி.

நாம் பயன்படுத்தும் எத்தனையோ சொற்கள் ஆண்களுக்கு வரமாகவும் பெண்களுக்குச் சாபமாகவும் ஆதிக்கம் செய்வோருக்கு வரமாகவும் ஒடுக்கப்படுவோருக்குச் சாபமாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லும் எப்போதுமே ஒரு பொருளையும் அதற்கான ஒரு வரலாற்றையும் தன்னுள்ளே ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் சொற்கள் வாழ்த்தாகவோ, வசையாகவோ மாறுகின்றன. சில நேரங்களில் சொற்கள் சருகாகவோ, ஆயுதமாகவோ மாறுகின்றன.

ஒரு சொல்லைச் சிலர் பொருள் அறிந்தும் வேண்டுமென்றே பயன்படுத்துகிறார்கள்.சிலரோ பொருள் தெரியாமலேயே, அது வழக்கத்தில் உள்ளதாலும்,

மெய்ப்பொருள் காண்

அறியாமையினாலும் பயன்படுத்துகிறார்கள். தமது விருப்பத்துக்கு ஏற்பச் சொற்களுக்குக் கருத்தியல் சாயம் பூசப்படுவதும், அரசிலயலாக்கப்படுவதும் தொடர்ந்து இங்கு நடக்கின்றன.

எனக்கு ஒரு சொல்லோடு இப்படியான தொடர் பயணம் உண்டு. அச்சொல் சண்டாளன்.  ஒருவரை இழிவுபடுத்துவதற்கும்,    அவமானப்படுத்துவதற்கும் உரிய ஒரு வசைச் சொல்லாக இச்சொல் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.குறிப்பாகத் தென்தமிழகத்தில். குறைவாக, வடதமிழகத்தில்.

ஆனால், இது ஒரு வசைச்சொல் அல்ல.இது தலித் சாதியைக் குறித்திடும் சொல்.இந்தியச் சமூகத்தில் கீழாக அழுத்தப்பட்டு, சாதிய வன்கொடுமைகளுக்கு நாள்தோறும் உள்ளாக்கப்படும் பட்டியல் இனத்தின் உட்சாதிகளுள் ஒன்றின் பெயர். தமிழ அரசு வெளியிட்டிருக்கும் பட்டியலினத்தோரின் உட்சாதிகளுள் 15-வது உட்சாதியாக இது இடம்பெற்றுள்ளது.

சாதிய விதிகளின்படி சூத்திர ஆணுக்கும் பார்ப்பனப் பெண்ணுக்கும் பிறக்கும் குழந்தைகளையே ‘சண்டாளன்’, ‘சண்டாளி’ என்று அழைக்கிறார்கள். இச்சொல்லின் வேர் மனுஸ்மிருதியில் இருக்கிறது. அந்நூலின் 10-வது அத்தியாயத்தில் 12-வது வசனத்தில் இப்படிச் சொல்லப்படுகிறது. ‘சூத்திர ஆணுடன் வைஸ்ய ஸ்திரீக்கும், சத்ரிய ஸ்திரிக்கும், பிராமண ஸ்திரீக்கும் பிறப்பவர்கள் ‘அயோகவன்’ என்றும், ‘ஷாத்தா’வென்றும், மனிதருள் தாழ்ந்த ‘சண்டாள’னென்றும் முறையே சொல்லப்படுவர்’. சண்டாளர்களை ஊரைவிட்டே ஒதுக்கிவைக்க வேண்டும் எனவும் அவர்களை மனிதர்களாகவே மதிக்கக் கூடாது எனவும் மனுஸ்மிருதி மேலும் சொல்கிறது.

மெய்ப்பொருள் காண்வன்கொடுமைச் சட்டப்படி, தலித் சாதியினரைச் சாதியின் பெயரைச் சொல்லிப் பொதுஇடங்களிலோ, தனிப்பட்ட முறையிலோ அழைப்பது தண்டனைக்குரிய குற்றம். ஆனால், இதைக் கருத்தில்கொள்ளாமல் இச்சொல் ஒருவரை இழிவு செய்திடும் நோக்கில் பயன்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நம்முடைய திரைப்படங்களில் இச்சொல் ஒருவரை இழிவு செய்திடும் நோக்கில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது.

வடிவேலு இச்சொல்லை எவ்விதக் கூச்சமுமின்றி படங்களில் பயன்படுத்துகிறார். சினேகன், ‘சண்டாளி உன் பாசத்தாலே சுண்டெலியாய் ஆனேன் புள்ள…’ என்று சகமனிதரை இழிவுபடுத்தும் சொல்லைக்கொண்டு பாட்டெழுதிப் பேர் வாங்குகிறார்.

இச்சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பாக, 2006-ம் ஆண்டு செப்டம்பர் ‘தலித் முரசு’ இதழில், அவ்விதழின் ஆசிரியர் புனிதபாண்டியன் எழுதிய தலையங்கமும் அதைத் தொடர்ந்து எழுந்த விவாதமும் இங்கு நினைவுக்கு வருகின்றன. ஈழத்தில் நடந்த இனவெறித் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், கலைஞர் வெளியிட்ட அறிக்கையிலும், அண்ணன் அறிவுமதி எழுதிய ‘தை’ இதழ் கவிதையிலும், தோழர் த.பாண்டியன் அறிக்கையிலும், சீமான் அவர்களின் ‘தம்பி’ திரைப்பட வசனங்களிலும் ‘சண்டாளன்’ என்ற சொல் இழிவான நோக்கில் பயன்படுத்தப்பட்டிருந்ததை அத்தலையங்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து அக்டோபர் ‘தலித் முரசு’ இதழில் அறிவுமதி அவர்களும் சீமான் அவர்களும் வருத்தம் தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார்கள். இருவரும் என் பெயரைக் குறிப்பிட்டு என்னோடு இச்சொல் குறித்து விவாதித்ததையும் மறக்காமல் எழுதியிருந்தார்கள். கோவையில் நடந்த பாமரனின் நூல் வெளியீட்டு விழா ஒன்றிலும்கூட மேடையில் சத்யராஜ் அவர்கள் இருக்கும்போது, இச்சொல் குறித்துப் பேசியதும் என் ஞாபகத்திலுள்ளது.

‘சண்டாளன்’ என்ற சொல், பொதுச் சமூகத்தில் அதன் வரலாற்றை அறியாமல் இழிவான நோக்கில் பயன்படுத்தப்பட்டாலும், என்னளவில் நவீன பொருளில், சமூக நீதிப் பார்வையில், விடுதலை நோக்கில் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு சொல்லாக இருக்கிறது.

பொதுவழக்குப் பொருளுக்கு மாறாக வழங்கி, வட்டார வழக்கு அடையாளத்தைப் பெறும் சொற்கள் பல.  ‘தொண்டு’ என்னும் சொல் நெடுவரலாறுடையது. பழந்தமிழ் இலக்கியத்தில் பரவலாகப் பயின்றுவரும் இச்சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. எண்ணுப்பெயரில் ஒன்பதைக் குறித்த மிகப் பழைய வடிவம் ‘தொண்டு’. இச்சொல்லுக்கு ‘அடிமை’ என்னும் பொருள் மிகுதி. ஒருகாலத்தில் அடிமைமுறை நம் சமூகத்தில் நிலவிய வரலாற்றுக்கு இச்சொல் சான்று.

பக்திகால அடியார்கள் அனைவரும் ‘தொண்டர்கள்.’ தொண்டு செய்பவர் தொண்டர். அடிமையாக இருந்து சேவைத்தொழில் புரிபவர். சுந்தரருக்கு ‘வன்தொண்டர்’ என்றே பெயருண்டு. ஒன்றின் மேல் மிகுதியான பற்றோடு பலன் எதிர்பாராமல் செய்யும் சேவையைத் தொண்டு என்று வழங்குவது பக்தி இலக்கிய காலப் பொருள் மாற்றம். பின்னர் இன்னும் பொருள் விரிவு பெற்றது. கடவுள் மேல் பற்றுடன் சேவை ஆற்றுவோர் மட்டுமல்ல, விடுதலைப் போராட்ட காலத்தில், நாட்டின் மேல் பற்றாகிச் சேவை செய்வோரும் தொண்டர்கள் எனப்பட்டார்கள். ‘தொண்டு செய்யும் அடிமை – உனக்குச் சுதந்திர நினைவோடா?’ என்பது பாரதியார் பாடல். இத்தகைய வரலாற்றை உடைய இச்சொல் கொங்கு வட்டார வழக்கில் இரண்டுவிதமாக வழங்கி வருகிறது.

மெய்ப்பொருள் காண்

கால்களை மடித்து முழங்காலைத் தரையில் ஊன்றித் தலை குனிந்திருக்கும் நிலையைத் ‘தொண்டுமுட்டி’ என்று சொல்வது வழக்கம். அடிமையாக இருக்கும் ஒருவர், தம் எஜமானர் முன்னர் மன்னிப்புக் கோரும்போது இத்தகைய ‘முட்டி’ போட்டு நிற்கும் வழக்கத்தைக் குறிக்கும் வரலாற்று எச்சமாக இச்சொல் வட்டார வழக்கில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இச்சொல் இன்று  வசைச் சொல்லாகவே பெரும்பான்மையும் வழங்கி வருகிறது.

வீடடங்கி இருக்காமல் எப்போதும் வெளியிலேயே சுற்றித் திரிவதும் பாலியல் ஒழுக்கம் அற்று இருப்பதுமாகிய ஆணை  ‘அவனா? சுத்தத் தொண்டு’ என்று இழிப்பர். இதே சொல் பெண்ணைக் குறித்து வரும்போது முற்றிலும் பாலியல் ஒழுக்கம் சார்ந்ததாகவே மாறிவிடும். ‘அவ ஒரு தொண்டு’ என்று சொன்னால், பாலியல் ஒழுக்கம் அற்றவள் என்று மட்டுமே பொருள்படும்.

மெய்ப்பொருள் காண்


‘தொண்டு சுற்றுதல்’ என்றால், வீட்டில் இல்லாமல் கண்ட இடங்களில் சுற்றிக்கொண்டிருத்தல் ஆகும். ‘உங்க வீட்டுக்காரரு எங்க?’ என்னும் வினாவுக்கு, ‘அது எங்காச்சும் தொண்டு சுத்தப் போயிருக்கும்’ என மனைவியிடமிருந்து பதில் வருவது சாதாரணம்.  ‘அடிமை’ என்னும் பொருளிலிருந்து ‘சேவை’ என்னும் பொருள் மாற்றம் பெற்ற பின்னரே, இச்சொல் வட்டார வழக்கில் வசைப்பொருளை ஏற்றிருக்கக் கூடும். குறிப்பாக, விடுதலைப் போராட்ட காலத்தில் இது நிகழ்ந்திருக்கலாம்.

அப்போது, சிறு கிராமங்களில் இருந்துகூட தேச சேவை செய்வதற்குப் பலர் முன்வந்தனர். அது,  ‘தொண்டு’ என அழைக்கப்பட்டது. ‘நாட்டுக்காகத் தொண்டு புரிந்தார்’ என இன்றைய பாடநூல்களில் எழுதப்படுவது இயல்பாக இருக்கிறது. தொண்டுபுரியும் தொண்டர்கள் வீடடங்கி இருக்க முடியாது. போராட்டம், கூட்டம், சந்திப்பு எனப் பல்வேறு அலுவல்களோடு அவர்கள் எப்போதும் வீட்டிற்கு வெளியில் இயங்குபவர்களாக இருப்பர்.

வீடடங்கி வேலை, குடும்பம் என்று இருப்பதையே இயல்பான வாழ்க்கையாக மக்கள் கருதுகின்றனர். அவ்வியல்பிலிருந்து விலகி வீடடங்காமல் இருப்பவர், குடும்பத்திற்குப் பொருத்தமற்றவர் என்னும் மக்கள் மனப்பதிவின் காரணமாகத் ‘தொண்டு’ வசைச் சொல்லாக வட்டார வழக்கில் மாற்றம் பெற்றதுபோலும்.