
ஹெல்த்
மதியச் சாப்பாட்டுக்குப் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போடுவது பலருக்குப் பழக்கம். வேலை செய்யுமிடங்களில், வகுப்பறையில்கூடச் சிலர் லேசாகக் கண்ணயர்வார்கள். குட்டித் தூக்கத்தில் நான்கு வகைகள் இருக்கின்றன. அவை தரும் பலன்கள்...

10 முதல் 20 நிமிடத் தூக்கம். அசந்து தூங்கிவிடாத, எப்போதும் டக்கென விழித்துக்கொள்ளலாம் என்கிற அலர்ட்டுடன்கூடிய உறக்கம் இது. உடலுக்குச் சக்தி தரும்.
10 முதல் 20 நிமிடங்கள் தூக்கம் என்பதால், இது ஆழ்ந்த உறக்கமாக இருக்காது; கண்கள் மூடியிருந்தாலும், அசைவுகளிருக்கும். எனவே, தூக்கத்திலிருந்து விழித்தவுடனேயே பழையபடி உற்சாகத்தோடு வேலைகளைத் தொடரமுடியும்.

30 நிமிடத் தூக்கம். விழித்ததும், சின்னதாக ஒரு சோர்வை உணரச் செய்யும்.
பெரும்பாலும் 30 நிமிடங்களுக்காவது இந்த அரைத் தூக்க நிலை தொடரும். அதன் பிறகுதான் இயல்பான விழிப்போடு நம் வேலைகளைச் செய்யமுடியும்.

60 நிமிடத் தூக்கம். நம் ஞாபகசக்தியை மீட்டெடுக்கவும், பல விஷயங்களை நினைவுகூரவும் உதவும்.
60 நிமிடங்களில் மிதமான தூக்கத்தை அனுபவித்திருப்பீர்கள். இதுவும் ஒருவகையில் ஆழ்நிலைத் தூக்கமே. ஆனால், விழித்துக்கொள்ளும்போது சற்றுத் தளர்ந்துபோயிருப்போம்.

90 நிமிடத் தூக்கம். உறங்கி எழுந்ததும் எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்யமுடியும். தளர்ந்துபோனது போன்ற உணர்வு நீங்கியிருக்கும். 90 நிமிடங்கள், `ரேப்பிட் ஐ மூவ்மென்ட் ஸ்லீப்’ (REM- Rapid Eye Movement Sleep) என்ற அனுபவம் கிடைப்பதற்கான வாய்ப்பாக அமையும். இந்தத் தூக்கம் கனவுகளைத் தரும். அதனாலேயே இது, `முழு சுழற்சி தரும் தூக்கம்’ எனப்படுகிறது. இந்தத் தூக்கம் படைப்பாற்றல், செயல்திறன், நினைவாற்றலை மேம்படுத்தும்.
- ச.கலைச்செல்வன்