சமூகம்
Published:Updated:

தமிழக போலீஸுக்கு என்னாச்சு?

தமிழக போலீஸுக்கு என்னாச்சு?
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழக போலீஸுக்கு என்னாச்சு?

தொடரும் தற்கொலைகள்... அதிகரிக்கும் ராஜினாமாக்கள்...

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த ஆர்டர்லி விவகாரம், தமிழக காவல்துறையின் அவலமான மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் எழுதியிருக்கும் ஒரு கடிதம், பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அனைத்து ஏ.டி.ஜி.பி-க்கள், கமிஷனர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி-க்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆர்டர்லி விவகாரத்தையும் தாண்டி சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார் டி.ஜி.பி.

தமிழக போலீஸுக்கு என்னாச்சு?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழக காவல்துறைப் பணியிலிருந்து 8,158 பேர் விலகியிருக்கிறார்கள். 2017-ம் ஆண்டில் மட்டும் ‘இந்த வேலையே வேண்டாம்’ எனப் போனவர்கள் 1,039 பேர். ஆயுதப்படைக் காவலர் அருண்ராஜ், அயனாவரம் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும், டி.ஜி.பி அலுவலகம் எதிரே ரகு, கணேஷ் என்ற ஆயுதப்படைக் காவலர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவமும் காவல்துறைக்குள் புரையோடிக் கிடக்கும் பிரச்னைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்துள்ள தகவல்படி, கடந்த ஆண்டு மட்டும் 43 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழகத்தில், சராசரியாக ஆண்டுக்கு 27 காவலர்கள் தற்கொலை செய்துகொள்வதாக தேசிய குற்றப்பதிவு ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது.

அதிகாரமும் வருமானமும் உள்ள பதவி எனக் கருதப்படும் காக்கிச் சீருடைப் பணியை ஏன் வெறுத்து விலகுகிறார்கள்? ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?

இந்தக் கேள்விகளைத்தான் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் எழுப்பியுள்ளார். ‘குறிப்பிட்ட பணி நேரம் என்று இல்லாமல், நேரம் காலமின்றி வேலை செய்வதாலும், நீண்ட காலம் குடும்பத்தைப் பிரிந்திருப்பதாலும் ஏற்படும் எரிச்சலும் மன அழுத்தமும் காவலர்களைப் பாதிக்கின்ற னவா? இதனால்தான் காவல் துறையில் வன்முறையும் ஊழலும் அதிகமாகினவா? பலரும் பணியிலிருந்து விலகுவதற்கும், சிலரின் தற்கொலைகளுக்கும் இதுதான் காரணமா?’ என்று அவர் கேட்டிருக்கிறார்.

இந்தக் கேள்விகளுக்கு, காவல் உயரதிகாரிகள் என்ன பதில் தருவார்கள் என்பது தெரியவில்லை. போராட்டக் களங்கள், விபத்து, கொலை, கொள்ளை, திருட்டு என அசாதாரணமான சூழல் நிலவும் இடங்கள்தான் காவல்துறையினரின் பணிக்களம். எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை என இயல்பான வாழ்க்கைமுறை காவலர்களுக்கு வாய்ப்பதில்லை. பதற்றம், அலைச்சல், மேல் அதிகாரிகள் மீதான அச்சம், நிம்மதியான தூக்கமின்மை ஆகியவை காரணமாகப் பெரும் மன அழுத்தத்தைச் சுமந்துகொண்டே பெரும்பாலான போலீஸார் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான், சமீபத்திய சம்பவங்கள்.

தமிழக போலீஸுக்கு என்னாச்சு?

இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திலகவதியிடம் பேசினோம். “சில உயர் அதிகாரிகள், தனிப்பட்ட காழ்ப்பு உணர்ச்சியால் கீழ்நிலை அதிகாரிகளைத் தண்டிக்கும் நிலை இருப்பது உண்மைதான். பல நேரங்களில், கீழ்நிலை காவலர்களுக்குக் கருத்து சொல்லக்கூட வாய்ப்புக் கொடுப்பதில்லை. இதனால், காவல் துறையிலேயே சில அதிகாரிகளுக்கு ‘பனிஷ்மென்ட் அதிகாரிகள்’ என்ற பெயரும் இருக்கிறது. ஓர் அதிகாரியின் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மற்றொரு காவல் அதிகாரியிடமே முறையிட வேண்டிய நிலை இருக்கிறது. அதனால், பலருக்கு நியாயம் கிடைப்பதில்லை. உயர் அதிகாரிகளைத் தவிர, பிறருக்கு குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட வாய்ப்பு கிடைப்பதில்லை. அந்தக் குமுறல், கட்டுப்பாட்டை இழக்கும் போது, தற்கொலையே அவர்களுக்குத் தீர்வாக இருக்கிறது.

காவலர்களும் மனிதர்கள் என்ற உண்மையைச் சமூகமும், அரசும், முடிவெடுக்கும் நிலையில் உள்ள அதிகாரிகளும் உணர வேண்டும். காவலர்களின் குறைகளைத் தீர்க்க ஆணையம் அமைக்க வேண்டும். காவலர்களின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும். பெண் காவலர் களுக்கு ஆண்களைவிட சிரமங்கள் அதிகம். பணிச்சுமை, இரவுப்பணி உள்பட பல காரணங்களால் மிகுந்த மனஉளைச்சலில் தவிக்கிறார்கள். பல மணி நேரம் நின்றுகொண்டே இருக்க வேண்டும். பொதுவிடங்களில் சிறுநீர் கழிக்கக்கூட வாய்ப்பிருக்காது. மாத விலக்கு நேரங்களில் பெண்கள் படும் பாடு சொல்லிமாளாது. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டுதான் வேலைசெய்ய வேண்டியிருக்கிறது. சில மேலதிகாரிகள், குற்றவுணர்வே இல்லாமல் பாலியல் தொந்தரவும் தருகிறார்கள். அதுபற்றி புகார்கூட செய்ய முடியாது. குடும்பத்திலும் வீண் சந்தேகங்கள் எழுகின்றன. இரண்டு பக்கங்களிலும் சோதனைகளைச் சந்திக்கும் பெண் காவலர்கள் மன அழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள்” என்றார்.

‘‘காவல்துறையில் அரசியல் தலையீடு அதிகரித்து விட்டது. காவலர்கள் தவிர்க்கமுடியாமல் ஏதேனும் ஒரு சார்புத்தன்மையுடன் செயல்பட வேண்டியிருக்கிறது. அரசியல்வாதி களுடன் சமரசங்கள் செய்யவேண்டி யிருக்கிறது. அது, கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. நிர்வாக ரீதியாக காவல்துறை சீரமைக்கப்பட வேண்டும். தங்களது சம்பளத்தை, நினைத்த நேரத்தில் பல மடங்கு உயர்த்திக்கொள்ளும் அரசியல்வாதிகள், காவல்துறைக்கென சங்கம் அமைக்க அனுமதிப்பதில்லை. காவல்துறையைச் சுயமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகள், தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டும்” என்கிறார் சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான ம.செயபிரகாசு நாராயணன்.

தமிழக போலீஸுக்கு என்னாச்சு?

காவல்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இது குறித்துப் பேசிய தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் முன்னாள் முதல்வர் வி.சித்தண்ணன், “1980-களில் அப்போதிருந்த மக்கள்தொகை அடிப்படையில் ஏ, பி, சி என கிரேடு பிரித்து, காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்தார்கள். அப்போதைய கணக்குப்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் காவலர்கள் பணியாற்றினார்கள். அந்தச் சமயத்தில் தமிழ கத்தின் மொத்த மக்கள்தொகை மூன்றரை கோடி. இப்போது, மக்கள்தொகை ஏழு கோடிக்கும் அதிகம். அதன்படி பார்த்தால், குறைந்தபட்சம் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் காவலர்களாவது இருக்க வேண்டும். ஆனால், 1980 நிலவரப்படியே 19,800 காவல் பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஒரு காவல்நிலையத்தில் 60 காவலர்கள் இருந்தால், ரைட்டர், டிரைவர், கோர்ட் ஆர்டர்லி, பாரா காவலர், பந்தோபஸ்து என்றெல்லாம் ஒதுக்கியது போக, ஒரு ஷிப்டுக்கு ஐந்து பேர் காவல் பணிக்குக் கிடைத்தால் பெரிய விஷயம். ஒரு ஸ்டேஷன் எல்லைக்குள் 200 முதல் 500 தெருக்கள் வருகின்றன. ஐந்து காவலர்களை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? அமெரிக்காவில் 1,000 பேருக்கு 13 போலீஸ் இருக்கிறார்கள். லண்டனில் 12.5 போலீஸ். இந்தியாவில் 1,000 பேருக்கு 2.2 போலீஸ்தான். அதிலும் தமிழகத்தில் 1.3 போலீஸ்தான்.

சராசரியாக ஒரு நாளைக்கு 14 - 18 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. காவல் சட்டத்தின்படி, 24 மணிநேரத்தில் எப்போது அழைத்தாலும் பணிக்கு வரவேண்டும். ஒரு மனிதன் எட்டு மணி நேரம் வேலை செய்தால் மட்டுமே அவனது உடலும் மனமும் ஒத்துழைக்கும். முழுமையான திறனுடன் வேலையைச் செய்ய முடியும். இல்லாவிட்டால், இயல்பாகவே வேலைத்திறன் குறைந்து போவதுடன். கோபம், வேலையின்மீது எரிச்சல், வாழ்க்கையின்மீது விரக்தி ஏற்படும். தென்னிந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் காவலர்களுக்கு மிகக் குறைவான சம்பளம் தரப்படுகிறது. ஓய்வற்ற பணிச் சூழல், குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாதது போன்ற காரணங்கள்தான் காவலர்களைத் தற்கொலை வரை கொண்டு செல்கின்றன. மேலதிகாரிகளுக்கு ஏற்படும் நெருக்கடியைக் கீழ் மட்டத்தில் உள்ள காவலர் களுக்குக் கடத்துகிறார்கள்’’ என்றார்.

தமிழக போலீஸுக்கு என்னாச்சு?

‘‘காவல்துறையினருக்கு எதையும் தாங்கும் இதயம் இருக்கும் எனப் பலரும் நினைக்கின்றனர். அவர் களும் சராசரி மனிதர்கள் தான். எந்த நேரமும் அலெர்ட்டாக இருக்க வேண்டும் என்பதால், அதிக மன உளைச்சல் உள்ள வேலைதான் காவல்துறை வேலை.  நண்பர்களுடன் இணைந்திருத்தல், பொழுது போக்கு, சமூகத்தொடர்பு எனச் சராசரி குடிமக்கள் அனுபவிக்கும் உரிமைகள் காவலர்களுக்கு மறுக்கப்படுகின்றன. பெரும்பாலான காவலர்கள் பதற்றம், சந்தேகம், குழப்பம் என எதிர்மறையான உணர்ச்சிகளில் உழல்கின்றனர். உயர் அதிகாரிகளால் இழைக்கப்படும் அவமானங்களும் அவர்களைப் பாதிக்கின்றன. அதன் உச்சபட்சம் தான் தற்கொலை. பணிச்சூழலால் ஏற்படும் விரக்தி, வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாத நிலைக்குக் காவலர்களைத் தள்ளுகிறது” என்கிறார் மனநல மருத்துவர் அசோகன்.

காவல் துறையின் இந்த எல்லாப் பிரச்னை களுக்கும் தீர்வு தேட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. 

- ஜி.லட்சுமணன்