சமூகம்
Published:Updated:

பழனி முருகனுக்கே மொட்டை! - சிக்கலாகும் சிலை விவகாரம்

பழனி முருகனுக்கே மொட்டை! - சிக்கலாகும் சிலை விவகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பழனி முருகனுக்கே மொட்டை! - சிக்கலாகும் சிலை விவகாரம்

பழனி முருகனுக்கே மொட்டை! - சிக்கலாகும் சிலை விவகாரம்

‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்பார்கள். பழனி முருகன் கோயிலில் சிலை வைப்பதில் நடந்த அத்துமீறல்களுக்குக் காரணமாக இருந்த இருவர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கைது செய்யப்பட்டிருப்பது பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனி முருகன் கோயிலில் உள்ள நவபாஷாண சிலை 5,000 வருடங்கள் பழமையானது என்பது நம்பிக்கை. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. இந்தச் சிலைக்கு இரவு நேரத்தில் சந்தனக் காப்பிட்டு, அதிகாலையில் அந்தக் காப்பை அகற்றுவார்கள். இந்தச் சந்தனம் மருத்துவ குணம் வாய்ந்தது என்பதால், இதை வாங்க பல வி.வி.ஐ.பி-க்கள் காத்திருப்பார்கள்.

பழனி முருகனுக்கே மொட்டை! - சிக்கலாகும் சிலை விவகாரம்

இந்தக் கோயிலில், 2004-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது ஆகம விதிமீறல்கள் நடந்ததாகச் சொல்லப் படுகிறது. ஆனால், 1980-ம் ஆண்டிலேயே இங்கு அத்துமீறல்கள் நடக்கத் தொடங்கிவிட்டன என்கிறார் பழனியில் உள்ள ஒரு தனியார் மடத்தைச் சேர்ந்த துறவி. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர், ‘‘பழனி, செவ்வாய் தலம். இங்கு ஆகம விதிகள் மீறப்பட்டால், அது அரசியலில் எதிரொலிக்கும். 1980-களில் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, நவ பாஷாண சிலையில் கொஞ்சம் உரசியெடுத்து அவருக்குக் கொடுத் தால் பிழைத்துக்கொள்வார் என யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதனால், அப்போது அமைச்சராக இருந்த ஒருவர், சிலையைச் சுரண்டியதாக ஒரு பேச்சு உண்டு. அப்போதிருந்து பலரும் தங்கள் இஷ்டத்துக்குச் சுரண்டி மூலவரை ஓட்டாண்டி ஆக்கிவிட்டதாகவும் பேச்சு உள்ளது. எனவே, நவபாஷாண சிலை முழுமையாக இருக்கிறதா என ஆய்வு செய்து உண்மையைச் சொல்ல வேண்டும். அப்போது தான், பக்தர்களின் சந்தேகங்கள் நீங்கும்’’ என்றார்.

பழனி முருகனுக்கே மொட்டை! - சிக்கலாகும் சிலை விவகாரம்

சில இடங்களில் சிதிலம டைந்த இந்த நவபாஷாண சிலையைச் சரிசெய்ய வேண்டும் என்றும், சிலையை மாற்ற வேண்டும் என்றும் திட்டம் தீட்டுவதும் கைவிடுவது மாகப் பல சம்பவங்கள் நடந்தேறி யுள்ளன. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இப்படி ஒரு திட்டம் முன் வைக்கப்பட்டபோது, ‘இது ஆகம விதிமீறல்’ எனச் சொல்லித் திட்டத்தைத் தடுத்தார், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர். ஜெயேந்திரரே 2003-ம் ஆண்டு, காஞ்சி மடம் சார்பில் 100 கிலோ எடையில் சிலை செய்துதருவதாக அறிவித்தார். அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பவே, ‘புதிய சிலை தருவதற்குப் பதிலாகத் தற்போது இருக்கும் நவபாஷாண சிலைக்கு 100 பவுனில் தங்கக் கவசம் அணிவிக்கப்படும்’ என்றார். அதற்கும் எதிர்ப்பு கிளம்பவே அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

அதன்பிறகுதான், 2004-ம் ஆண்டில், தற்போது பிரச்னைக்கு உள்ளாகியிருக்கும் மூன்றரை அடி உயரச் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டது. நவபாஷாண சிலையைக் காப்பாற்ற, தனியாக அபிஷேகநாதர் சிலையாக இதை நிறுவினார்கள். 220 கிலோ எடையில் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிலைக்காக, திருத்தணி கோயிலிலிருந்து 10 கிலோ தங்கம் வாங்கினார்கள். மேலும் பல நன்கொடையாளர்கள் தந்த தங்கமும் இந்தச் சிலையைச் செய்யப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப் பட்டது. இந்தச் சிலையைச் செய்ததில் மோசடி நடந்துள்ளதாக ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோயில் நிர்வாக ஆணையாளர் கே.கே.ராஜா ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பழனி முருகனுக்கே மொட்டை! - சிக்கலாகும் சிலை விவகாரம்

இதுதொடர்பாகப் பேசிய பழனி நகரைச் சேர்ந்த முருக பக்தர் ஒருவர், ‘‘2004-ம் ஆண்டிலிருந்து கோயிலில் ஆகம விதிகளை மீறத் தொடங்கி விட்டனர். ஜெயலலிதாவுக்குச் செவ்வாய் கிரகம் சாதகமாக இல்லை என்பதற்காக, ஆகம விதிகளை மீறி நவபாஷாண சிலையை மறைத்துப் புதிதாக இந்தச் சிலையை வைத்தனர். ஒரே கருவறையில் இரண்டு மூலவர் கள் இருப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது என்று சொன்னோம். ஆனால், யாரும் எதையும் கேட்கவில்லை. ஒரு சிலையை பிரதிஷ்டை செய்யும்போது, முறையாக மந்திரங்கள் சொல்லி அதை உருவேற்ற வேண்டும். ஆனால், திடீரென நடுராத்திரியில் சிலையைக் கொண்டுவந்து வைத்துவிட்டார்கள்.

சிலை பிரதிஷ்டை செய்த பிறகு, முதல்முறையாக ஜெயேந்திரர் கோயிலுக்கு வந்தார். அப்போது வின்ச், பாதி வழியில் நின்றுவிட்டது. பிறகு அது சரிசெய்யப்பட்டு ஜெயேந் திரர் மலைக்குப் போனார். அதன் பிறகு, அவருக்கும் பல பிரச்னைகள். ஜெயலலிதாவும்கூட, அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போனார். புதிதாக வைக்கப்பட்ட சிலைதான் தோல்விக்குக் காரணம் என்று சொல்லவும், அந்தச் சிலையைக் கருவறையிலிருந்து எடுத்துவிட்டார்கள். 2004-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி இந்தச் சிலையை, பாரவேல் மண்டபத்துக்குப் பக்கத்தில் உள்ள ஓர் அறையில் வைத்துப் பூட்டிவிட்டனர். இதனால், அந்த ஐம்பொன் சிலையும் கறுத்துவிட்டது. சிலையை இப்படி அறையில் அடைத்து வைத்ததால் தான் ஜெயலலிதாவுக்குச் சொத்துக் குவிப்பு வழக்கு தலைவலியாக மாறியது என ஜோதிடர்கள் சொன்னார்கள். அதனால், ஒருவேளை மட்டும் அந்தச் சிலைக்கு ரகசியமாகப் பூஜை செய்யப்பட்டு வருகிறது.

பழனி முருகனுக்கே மொட்டை! - சிக்கலாகும் சிலை விவகாரம்

சுவாமி சந்நிதியில் தங்கள் சுயநலத்துக்காகப் பலர் பல தவறு களைச் செய்திருக்கிறார்கள். தவறு செய்த சிலர் தண்டனையை அனுபவித்துவிட்டார்கள்; சிலர் அனுபவித்து வருகிறார்கள். இன்னும் இதில் பலர் சிக்குவார்கள் என்றுதான் தோன்றுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம்கேட்டு முருகன் கிளம்பிவிட்டார். முருகனின் வேல் அவர்களைச் சும்மா விடாது. இத்தனை வருடங்கள் கழித்து, குற்றவாளிகளைக் கைது செய்திருக்கும் அதிகாரியின் பெயர் பொன்.மாணிக்க‘வேல்’... புரிகிறதா?’’ என்றார் சிரித்தபடியே.

புலிப்பாணி ஆசிரமத்தைச் சேர்ந்த சிவானந்தா புலிப்பாணி பாத்திர சுவாமிகள், ‘‘இங்கே தொடர்ந்து ஆகம விதிகள் மீறப்பட்டுவருவதால், அரசியல், ராணுவம், போலீஸ் ஆகிய மூன்று துறைகளிலும் பெரிய பாதிப்புகள் ஏற்படும். 2004-ம் ஆண்டு ஆகம விதிகளை மீறி நடந்த அத்துமீறல்கள்தான் நாட்டில் நடக்கும் பல பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம். முருகனிடம் விளையாடியவர்கள் இப்போது சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த முறைகேட்டில் இன்னும் பலர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். அவர்களையும் கைது செய்ய வேண்டும். இவர்களுக்குக் கொடுக்கிற தண்டனை, இனிமேல் தமிழகத்தில் வேறு எந்தக் கோயிலிலும் தவறு நடக்காதவாறு காக்க வேண்டும்’’ என்றார்.

பழனி முருகனுக்கே மொட்டை! - சிக்கலாகும் சிலை விவகாரம்

2004-ம் ஆண்டுவாக்கில் பழனி கோயிலில் பொறுப்பிலிருந்த இன்னோர் அதிகாரியும் இப்போது போலீஸ் விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கிறார். விசாரணைக்காகப் பழனிக்கு வந்த சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேலிடம் பேசினோம். ‘‘2004-ம் ஆண்டு முதல் இங்கு பணியாற்றிய அதிகாரிகளின் பெயர் பட்டியல் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று மட்டும் சொன்னார் அவர்.

இந்தச் சிலையைச் செய்வதற்கு நிறைய பேர் தங்கத்தை நன்கொடையாகக் கொடுத்துள்ளனர். அப்படிக் கொடுத்த பலருக்கு முறையான ரசீது தரப்படவில்லை. யார் யார் தங்கம் கொடுத்தார்கள் என்ற விவரங்களைச் சேகரித்து, அவர்களிடம் போலீஸ் இப்போது விசாரணை நடத்திவருகிறது. இதைத் தொடர்ந்து இன்னும் பல அதிரடிகள் பழனியில் அரங்கேறக்கூடும்.

- ஆர்.குமரேசன்
படங்கள்: வீ.சிவக்குமார்