Published:Updated:

தமிழில் தேர்வெழுதப் போராடும் மாணவர்கள்... நிஜ `பரியேறும் பெருமாள்'கள்!

தமிழில் தேர்வெழுதப் போராடும் மாணவர்கள்... நிஜ `பரியேறும் பெருமாள்'கள்!

ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதை எதிர்த்து மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். 

Published:Updated:

தமிழில் தேர்வெழுதப் போராடும் மாணவர்கள்... நிஜ `பரியேறும் பெருமாள்'கள்!

ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதை எதிர்த்து மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். 

தமிழில் தேர்வெழுதப் போராடும் மாணவர்கள்... நிஜ `பரியேறும் பெருமாள்'கள்!

சாதிப் பிரச்னையை மையமாகவைத்து சமீபத்தில் வெளிவந்த படம், `பரியேறும் பெருமாள்'. மாரி செல்வராஜ் இயக்கிய இந்தப் படத்தில், திருநெல்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் சாதியச் சமூக மனநிலையும், கல்விக்காகப் போராடும் உண்மை நிலையும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக, அந்தப் படத்தில் வரும் கதாநாயகன் ஆங்கிலம் புரியாமலும், அதே மொழியில் தேர்வெழுதவும் தவிப்பார். இதேபோன்றதொரு நிலைதான் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

திருநெல்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்களின் கல்வி முன்னேற்றத்துக்காக 1990-ம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் சமீபத்தில், அந்தப் பல்கலைக்கழகத்தின் நடைமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டுவந்தது. 74 சதவிகிதத்துக்குக் குறைவாக இருக்கும் மாணவர்களின் வருகைப்பதிவுக்கு அபராதத்தொகை உயர்த்தப்பட்டதுடன், தமிழில் தேர்வு எழுதலாம் என்றிருந்த நடைமுறையும் நீக்கப்பட்டது. அதாவது, இதுவரை ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களும் தேர்வுகளை, தமிழிலேயே எழுதலாம் என்றிருந்த நடைமுறையை, இனித் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் மட்டுமே தேர்வுகளைத் தமிழில் எழுத முடியும் என்று அறிவித்தது. இதனால் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். இதை எதிர்த்து மாணவர்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். 

இந்தப் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காகக் காவல் துறையினர் தடியடியும் நடத்தினர். இதனால், திருநெல்வேலி பகுதியைச் சார்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்களும் அந்தந்த கல்லூரி வளாகங்களுக்குள் உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தினர்.  அதேபோல், திருநெல்வேலி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமூக நீதி வழக்குரைஞர் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

ஆனால், நகைமுரணாக, தமிழ் மொழியில் தேர்வு எழுத வழங்கி வந்த அனுமதியை நிறுத்திக்கொண்ட இதே பல்கலைக்கழகம்தான், கடந்த ஜூன் மாதம் `மாணவர்கள், ஆங்கில வழியில்தான் முதுகலை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். தமிழ் வழியில் முதுகலை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது. எனவே, 2018 - 2019-ம் கல்வியாண்டிலிருந்து தமிழ் வழி முதுகலைப் படிப்புகள் இலவசமாக வழங்கப்படும்' என்கிற அறிவிப்பையும் வெளியிட்டது. 

இதுகுறித்து `பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், ``இந்தப் பிரச்னைகளுக்கு முக்கியமான காரணம், அரசு தன்னுடைய மொழிக்கொள்கையைத் தெளிவாக அறிவிக்காததுதான். ஆங்கிலம் என்ற மொழியை வெறும் 45 நிமிட வகுப்புகளில் கற்றுக்கொள்ள முடியாது. ஆங்கிலம்தான் இனி என் வாழ்க்கை முழுவதும் தொடரப்போகிறது என்பதைப் பள்ளிப்படிப்பை முடிக்கும்வரை யாரும் சொல்லவேயில்லை. இந்தச் சூழலில், என்னால் அழகான என் தாய்மொழியைக்கூடக் கற்க முடியவில்லை. அரசுப் பள்ளிகளில் சரியான முறையில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கப்படுவதுமில்லை. பல்வேறு சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை ஒரே தரத்தில் எண்ணி அவர்கள் அனைவரையும் ஆங்கிலத்தில் தேர்வு எழுத வேண்டும் எனச் சொல்வது கிராமப்புற மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும். அந்த மாணவர்களுக்குத் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மைதான் வரும். இதற்கான தீர்வுகளை நோக்கி நகர வேண்டுமானால், அரசுப் பள்ளிகளில் முதலில் மொழியியல் பாடங்களை முறையாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும்" என்றார், மிகத் தெளிவாக.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், ``இந்திய அளவில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது, இதற்கான காரணம் கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதுதான். கல்லூரி மாணவர்களுக்குத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தேர்வு எழுதலாம் என்ற சலுகை இங்கு வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் மாணவர்கள் தமிழ்வழியில்தான் கல்வி பயில்கின்றனர். அவர்களைப் பட்ட வகுப்பில் ஆங்கிலத்தில் தேர்வு எழுத நிர்பந்தித்தால் அது நியாயமாக இருக்காது. இந்தப் பிரச்னைக்கு அடிப்படையான காரணம் மாணவர்களின் மொழித்திறன் குறைந்து காணப்படுவதுதான். ஆங்கிலத்தில் மட்டுமல்ல, தமிழிலும் கூட நமது மாணவர்களுக்குப் போதுமான மொழித்திறன் இல்லையென்பதே உண்மை . 

துணை வேந்தரின் கருத்திலும் நியாயம் உள்ளது. தமிழ் மொழியில் தேர்வு எழுதி சான்றிதழில் பயிற்று மொழி தமிழ் என வாங்கிக்கொள்ளலாம் என அவர் சொல்கிறார். ஆனால், ஏற்கெனவே பொறியியல் படிப்புகளைத் தமிழில் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் மோசமாக உள்ளதால் தமிழ் வழியில் படித்தவர்கள் எனச் சான்று அளிப்பது வேலை வாய்ப்பைப் பாதிக்கும் என மாணவர்கள் அஞ்சுகிறார்கள். இது மாதிரியான மாற்றங்களை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டுவரும் போதுதான் சிக்கல் எழுகிறது. இதற்கான அடித்தளத்தை முதலில் பள்ளிக்கல்வித்துறையில் அமைக்க வேண்டும், பள்ளி மாணவர்களின் மொழித்திறனை வளர்க்க சிறப்புப் பயிற்சிகள் அளிக்க வேண்டும். ஆனால், இந்தச் சூழலில் ஆங்கிலத்தை முழுமையாகப் புறக்கணிப்பது என்பது மிக மோசமான சூழ்நிலைக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும். 

கல்லூரி மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை வளர்க்கத் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிதாக வேலைக்குச் செல்பவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி முறையைப் பின்பற்றி ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும். இவற்றையெல்லாம் செய்யாமல் ஆங்கிலத்தில் தேர்வு எழுதும் நடைமுறையைக் கொண்டுவருவது கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வியையும் அவர்களின் முன்னேற்றத்தையும் பாதிக்கும் "என்றார், மிகவும் நிதானமாக. 

மாணவர்களின் நலனை, அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.