சமூகம்
Published:Updated:

“கரப்பான் பூச்சியாகப் பிறந்திருந்தால்கூட குருவாயூர் கோயிலுக்குள் போயிருப்பேன்!”

“கரப்பான் பூச்சியாகப் பிறந்திருந்தால்கூட குருவாயூர் கோயிலுக்குள் போயிருப்பேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கரப்பான் பூச்சியாகப் பிறந்திருந்தால்கூட குருவாயூர் கோயிலுக்குள் போயிருப்பேன்!”

உருகித் தவிக்கும் யேசுதாஸ்

‘குருவாயூர் அம்பல நடையில் ஒரு திவசம் ஞான் போகும் கோபுர வாதில் திறக்கும் ஞான் கோபகுமாரனைக் காணும்...’ என்ற பாடல் வரிகளைப் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதங்கத்துடன் உருகிப் பாடியவர் கே.ஜே.யேசுதாஸ். கேரள மாநிலத்தின் குருவாயூர் கோயிலுக்குள் செல்ல வேண்டும், கண்குளிர கிருஷ்ணரைத் தரிசிக்க வேண்டும் என்பது யேசுதாஸின் தணியாத ஆசை. குருவாயூர் கிருஷ்ணரின் நாமங்கள் நாவில் நர்த்தனமாடும் யேசுதாஸை, அந்தக் கோயிலுக்குள் செல்லவிடாமல் முட்டுக்கட்டை போடுவது கேரள அரசின் கோயில் ஆசார விதிமுறை!

‘இந்து மதத்தினரைத் தவிர பிற மதத்தினர் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை’ என்று கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் போர்டு வைத்திருப்பார்கள். இறை நம்பிக்கை உடையவர்கள், வேறு மதத்தினராக இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் கோயிலுக்குள் சென்று விடுவார்கள். ஆனால், யேசுதாஸ் பிரபலமானவர் என்பதால், அவர் இந்து கோயிலுக்குச் சென்றால் அனைவருக்கும் தெரிந்துவிடும். இதை மனதில் கொண்டுதான், சமீபத்தில் தனது ஆதங்கத்தை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார் யேசுதாஸ்.

“கரப்பான் பூச்சியாகப் பிறந்திருந்தால்கூட குருவாயூர் கோயிலுக்குள் போயிருப்பேன்!”

கடந்த வாரம் கேரள மாநிலம் திருப்பூணித்துறை ஸ்ரீபூர்ண பிறையீச சங்கீத சபாவில், தன் தந்தை அகஸ்டின் ஜோசப் பெயரில் விருதுகளை வழங்கிய யேசுதாஸ், ‘‘குருவாயூர் கோயிலில் பிராணிகள் கூட சுதந்திரமாகச் சென்றுவருகின்றன. ஆனால், எனக்குப் போக வாய்ப்பு கிடைக்க வில்லை. ஒருவேளை நான் கரப்பான் பூச்சி யாகவோ, ஈயாகவோ பிறந்திருந்தால்கூட, கோயிலுக்குள் போயிருந்திருக்கலாம்’’ என்று மனம் வெதும்பியுள்ளார்.

நாடு முழுவதும் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், யேசுதாஸ் பாடிய ஹரிவராசனம் இசைக்கப்பட்ட பிறகுதான், நடை சாத்தப்படுகிறது.அந்தப் பாடலைக் கேட்டபிறகு தான் இறைவனே துயில்கொள்வார் என்ற நம்பிக்கை இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. ‘இறைவனை இசைபாடி துயில்கொள்ளச் செய்யும் பாடகருக்கு, குருவாயூர் இறை சன்னிதானத்தில் இடமில்லையா?’ என்ற கேள்வி யேசுதாஸ் ரசிகர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

‘‘கேரள மாநிலத்தில் பல கோயில்களில் ‘இந்து மதத்தில் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே கோயிலுக்குள் அனுமதி’ என்ற நிலை இப்போதும் தொடருகிறது. அதிலும், குருவாயூர் கோயிலில் ஆசாரத்தைக் கடுமையாகக் கடைப்பிடிக்கிறார்கள். தன் குருவான செம்பை வைத்தியநாத பாகவதருக்கு மரியாதை செலுத்தும்விதமாக நடைபெறும் செம்பை இசைவிழாவில் ஆண்டுதோறும் யேசுதாஸ் பாடுவார். குருவாயூர் கோயிலுக்கு வெளியில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்தாலும், கோயிலுக்குள் நுழைய முடியாத நிலை.

2007-ம் ஆண்டு, அன்றைய வெளிநாடுவாழ் இந்திய விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவியின் பேரக்குழந்தைக்குச் சோறு ஊட்டும் நிகழ்ச்சி, குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. வயலார் ரவியின் மனைவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், குழந்தைக்குச் சோறு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததும், சர்ச்சை கிளம்பியது. அதனால், குருவாயூர் கோயிலில், மஹா புண்யாகமம் என்ற பரிகாரபூஜை நடத்தப்பட்டது. அந்தப் பூஜையால் சர்ச்சை அதிகமானது தனிக்கதை. எனவே, முறைப்படி கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெற்றே குருவாயூர் கோயில் செல்ல வேண்டும் என்பது யேசுதாஸின் விருப்பம்’’ என்கிறார்கள் கோயில் குறித்து விவரம் அறிந்தவர்கள்.

2008-ம் ஆண்டு, மலப்புரத்தில் உள்ள கடம்புழா தேவி ஆலயத்தில் யேசுதாஸுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ‘‘பூனைகளும் எலிகளும்கூட தெய்வத்தின் அருகில் நடமாடும்போது, யேசுதாஸுக்கு ஏன் தடை?’’ என அப்போதும் அவர் வேதனைப்பட்டார். 

இந்நிலையில், குருவாயூர் தேவசம் போர்டு சேர்மன் கே.பி.மோகன்தாஸ், ‘‘யேசுதாஸ் போன்ற இறை விசுவாசிகள்தான் கோயிலுக்குத் தேவை. அடுத்த போர்டு மீட்டிங்கில் ஜேசுதாஸை குருவாயூர் கோயிலுக்குள் அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்படும். இதற்காக, கோயில் விதிகளில் மாற்றம் கொண்டுவர அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும்’’ என்று உறுதிளித்திருக்கிறார். இது யேசுதாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “கடந்த ஆண்டு, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோயில் நிர்வாகத்துக்கு யேசுதாஸ் கடிதம் எழுதியிருந்தார். 

‘‘கிறிஸ்தவராகப் பிறந்திருந்தாலும் தன் பிறந்த தினத்தில், கர்நாடக மாநிலத்தின் கொல்லூர் மூகாம்பிகா கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டி ருப்பவர் யேசுதாஸ். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தன் மனைவியையும் அழைத்துச்சென்று தரிசனம் செய்திருக்கிறார். 2017-ம் ஆண்டு, யேசுதாஸின் வேண்டுகோளை ஏற்று, திருவனந்த புரம் பத்மநாப சுவாமி கோயிலில் வழிபாடு செய்ய அவருக்கு அனுமதி அளித்தது கோயில் நிர்வாகம். அதுபோல, குருவாயூர் கோயிலிலும் யேசுதாஸ் வழிபடுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும்’’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் யேசுதாஸ் ரசிகர்கள்.

‘யேசுதாஸ் குருவாயூர் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று கேரள மாநில இந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பும் ஆதரவுக் குரல் கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள ‘இந்து முன்னணி’யைப் போன்ற அமைப்புதான் இது. எனவே, அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் ஜேசுதாஸின் நீண்டகால ஆசை விரைவில் நிறைவேறவிருக்கிறது!

- ஆர்.சிந்து