
வைகோ உருக்கம்
‘‘ஆரம்பத்துலருந்து ம.தி.மு.க-வுல இருக்கார். வைகோ மீது அவருக்கு ரொம்பப் பிரியம். சிவகாசியில பிரின்டிங் ஆர்டர் எடுத்துக் கொடுக்கிற தொழில் செய்தார். அதுலதான் குடும்பம் ஓடுச்சு. பெருசா எதையும் சேர்த்து வைக்கல. இப்படி ஒரு முடிவை எடுப்பார்னு நாங்க நெனச்சே பார்க்கல. அவர் இல்லாம, அந்தக் குடும்பம் என்ன செய்யப்போகுதுன்னு தெரியல. ரெண்டு பசங்களைப் படிக்க வைக்கறதா வைகோ சொல்லியிருக்கார்’’ என்று கண்கலங்கியவாறு நம்மிடம் பேசினார் முருகன். நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகத் தீக்குளித்து உயிரிழந்த ரவியின் சகோதரர்.
தேனி மாவட்டத்தில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிரான விழிப்பு உணர்வு நடைப்பயணத்தை மார்ச் 31-ம் தேதி மதுரையில் தொடங்கினார், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பேசி முடிக்க மதியம் 1.30 மணி ஆகிவிட்ட நிலையில், சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க இளைஞரணி நிர்வாகியான ரவி, திடீரெனத் தன் உடலில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துக்கொண்டார். உடனடியாக மருத்துவமனை யில் சேர்க்கப்பட்ட ரவி, ஏப்ரல் 2-ம் தேதி உயிரிழந்தார். உசிலம்பட்டியில் நடைப்பயணத்தில் இருந்த வைகோவுக்கு இந்தத் தகவல் சொல்லப்பட, உடனே அவர் மதுரைக்குக் கிளம்பிவந்து அஞ்சலி செலுத்தினார்.

ரவியைப் பற்றிய பல தகவல்களை, சிவகாசி ம.தி.மு.க-வினர் நம்மிடம் சோகத்துடன் பகிர்ந்துகொண்டனர். “வைகோ மீது வெறித்தனமான பற்றுகொண்டவர். வருடா வருடம் வைகோ படம் இடம்பெற்ற புதிய காலண்டர், டைரியுடன் வைகோ வைச் சந்திக்கச் செல்வார். ம.தி.மு.க-வின் கூட்டங்கள், போராட்டங்கள் எங்கு நடந்தாலும் முதல் ஆளா கலந்துகொள்வார். ரவியின் மனைவி முத்துலட்சுமி. கல்லூரியில் படிக்கும் ஜெயபிரகாஷ், ப்ளஸ் ஒன் படிக்கும் யுதுஷ்டன் என இரண்டு மகன்கள் உள்ளனர். பொருளாதாரரீதியாக மிகவும் கஷ்டப்படும் குடும்பம்” என்றனர்.
மதுரை மருத்துவமனையில் ரவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ, “நடைப்பயணம் தொடங்கு வதற்கு முன்பாக, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றிக்கொண்டு ரவி தீக்குளித் துள்ளார். தொண்டர்கள் தீயை அணைத்தனர். ‘தமிழக மக்களை மோடி ஏமாற்றிவிட்டார். நியூட்ரினோ திட்டம் தேவையில்லை. அதற்காகத் தான் தீக்குளித்தேன்’ என்று சொன்னார். மருத்துவமனைக்கு நான் சென்று பார்த்தபோது, ‘என்னப்பா, பைத்தியக்காரத்தனமா இப்படி முடிவெடுத்திட்டியே’ என்று கேட்டேன். ‘காலமெல்லாம் நீங்கள் மக்களுக்காகப் போராடுறீங்க. என்னால் முடிஞ்ச தியாகத்தைச் செஞ்சேன்’ என்றார். ‘நான் உயிரோடுதானே இருக்கிறேன். நீ உன் உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்கலாமா?’ என்றேன். அவரின் செயலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் இனி யாரும் ஈடுபட வேண்டாம்’’ என்று கண்கலங்கினார்.
ரவியின் உடல் சிவகாசிக்குக் கொண்டுசெல்லப்பட்ட வாகனத்திலேயே வைகோவும் சென்றார். சிவகாசியில் ரவியின் இறுதிச்சடங்கு முடிந்தபிறகு அங்கிருந்து அவர் கிளம்பினார்.
- செ.சல்மான்
படம்: ஈ.ஜெ.நந்தகுமார்