Published:Updated:

அன்பும் அறமும் - 6

அன்பும் அறமும் - 6
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பும் அறமும் - 6

சரவணன் சந்திரன், ஓவியம்: ஹாசிப்கான்

கூண்டுப் புறாக்கள்!

ல்லாயிரக்கணக்கான இறால்களின் மீசைகள் ஊசியெனக் குத்தும் குளிர்காலத்தின் அதிகாலையில், மரக்காணம் பக்கத்தில் இருக்கும் இறால் பண்ணை ஒன்றில் அமர்ந்து என்னோடு பேசிக் கொண்டிருந்தார் சூசையண்ணன்.  கடல்புற மாவட்டம் ஒன்றைச் சேர்ந்தவர். அந்த இடத்தில் தஞ்சமடைந்து பதுங்கியிருந்தார். அவர் முன்செய்த வினைகளுக்கான எதிர்வினையாக அரிவாள்கள் அவரைத் துரத்திக்கொண்டிருந்தன. அதற்குப் பயந்து  தன்னை எல்லா வகைகளிலும் உருமாற்றிக்கொண்டிருந்தார். தன்னை அடையாளம் காட்டும் அவரது மீசையை, இதன் காரணமாகவே மழித்திருந்தார் சூசையண்ணன்.

சூசையண்ணனுக்கு அழகே அவருடைய மீசைதான். இறால்கள், மீசை இல்லாமல் பார்க்கச் சகிக்காது. விதவிதமான மீசையில்தான் அவரது வீரம் அடங்கியிருந்தது. பயம், அவருடைய கண்களைச் சுற்றி மீன்பிடி வலைபோலிருந்தது.

அன்பும் அறமும் - 6

எட்டுப் பேர்கொண்ட குடும்பத்தின் கடைக்குட்டி அவர். மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர். அந்தப் பகுதியில் அவரின் அப்பா மிகச் சிறந்த யோக்கியவாதி.  ``கடைக்குட்டிய மட்டும் பூசை போடுற படிப்பு படிக்கவெச்சுடணும்” என அவரின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டே இருப்பாராம். சூசையண்ணனுக்குக்கூட ஃபாதருக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. சிரித்துக்கொண்டே, ``சிலுவைய ஏந்துற தரத்துல என்னை வெச்சுப் பார்க்க நினைச்சாங்க. நான் கத்தியத்  தூக்கிட்டுச் சுத்துற  மாதிரி வாழ்க்கைஎன்னை வளைச்சுப் போட்டுருச்சு” என்றார்.

90-களின் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் பற்றி எரிந்த சாதிச் சண்டைகள் மூட்டிய தீயில், அவர் தன் வாழ்க்கையை எரித்துக்கொண்டதை விவரிக்க ஆரம்பித்தார். சாதிக்காக ஆதாயச் சம்பவங்களைச் செய்கிற குழுவில் மாட்டிக்கொண்டார். “நம்மளையும் நாலு பேர் திரும்பிப் பாக்கணும்ங்கற தெனவு. அந்தத் தெனவு எப்படியிருக்கும் பாத்துக்கோங்க. யானை மாதிரி நம்மளை நினைச்சுக்கச் சொல்லும்” என்றார். பல வழக்குகள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. கொலை, கொலை முயற்சி என சகல பாவங்களையும் செய்ததற்கான வழக்குகள் அவை. `நான் நல்லவன்’ என எதையும் அவர் நியாயப்படுத்தவில்லை. ``பாவியாயிட்டு பாதிரியார் மாதிரி பேசிக்கிட்டிருக்கேன்னு மட்டும் நினைச்சுக்காதீங்க. இப்ப புதுசா இதுக்குள்ள வர்ற பயலுக இதையெல்லாம் தெரிஞ்சுக்கிடட்டும். நாடி தளர்ந்திருச்சுன்னா மீசையை மழிச்சுத்தான் ஆகணும்” என்றார். ``சாதிக்காகத்தான் அதைச் செய்தேன்’’ என்பதை மட்டும் அழுத்தம்திருத்தமாக மறுபடி மறுபடி பல்வேறு சந்தர்ப்பங்களில் சொல்லிக்கொண்டே இருந்தார். மரணம் தனக்குக் கிட்டத்தில் வந்துவிட்டது என, போகிறபோக்கில் ஒருதடவை சொன்னார்.

சூசையண்ணன், இப்போது சாதிய ஆதாயத் தொழில்களுக்குச் செல்வதில்லை; திருமணமும் செய்துகொள்ளவில்லை. கல்லூரியில் படித்தபோது ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார். ரௌடித் தொழிலுக்கு வந்த பிறகு, அந்தக் காதலும் விலகிவிட்டது. நிறைய சம்பாதித்திருக்கிறார். அனைத்தையும் நகைநட்டுகளாக மாற்றி, கழுத்திலும் கைகளிலும் போட்டுக்கொள்வது அவரது ‘தொழில்’ முதலீட்டு நடவடிக்கைகளில் ஒன்று.

எப்போதாவது மறைந்து ஒளிந்து ஊருக்குப் போகும்போது, அந்தக் காதலியின் மகனுக்குக் கொஞ்சம் சங்கிலிகளைக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வருவார். `` `இந்தா பாரு தம்பி, எனக்கு எந்தக் கெட்ட நோக்கமும் இல்லை’ன்னு அவளோட வீட்டுக்காரன்கிட்ட தெளிவா ஒருநாள் கூப்ட்டு சொல்லிட்டேன். அவனும் ரொம்ப நல்லவன். புரிஞ்சுக்கிட்டான்” என்றார். சூசையண்ணனின் அப்பா தவறிவிட்டார். அம்மா அதற்கு முன்னரே அடக்கமாகிவிட்டார். பெற்றோரின் சமாதிகளைப் போய்ப் பார்ப்பதற்காகவே ஊருக்குப் போவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அவர் ஏன் இப்போது வன்முறையின் பக்கம் போகவில்லை என்று அவரிடம் கேட்டபோது, தன்னைத் திருப்பிப் போட்ட அந்தச் சம்பவத்தைச் சொன்னார்.

பணம் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தமான தகராறு ஒன்றுக்கு, பஞ்சாயத்துப் பேசப் போயிருக்கிறார். கொடுத்தவரும் இவருடைய சாதி. கொடுக்க வேண்டியவரும் இவருடைய சாதி. பஞ்சாயத்துப் பேசப் போன மற்றவர்களை வெளியே போகச் சொல்லிவிட்டு, `சூசையண்ணனிடம் தனியாகப் பேச வேண்டும்’ எனச் சொல்லியிருக்கிறார்.  ``அவரு எல்லோரையும் போகச் சொல்றப்பயே கண்ணுல இருந்து தண்ணி கொட்டுறதுக்கு ரெடியாகிட்டிருந்ததை நான் பார்த்தேன். வேற என்னவோ சொல்லப்போறாருனு நினைச்சேன். ஆனா, கடைசியில என் கண்ணுல தண்ணியக் காட்டிட்டாரு” என்றார்.

``எந்திரிச்சு நின்னு கையைப் பிடிச்சுக்கிட்டு, கேவிக் கேவி அழுறார். ‘உங்கப்பா ஊருக்கே சோறு போட்டிருக்கார். கஷ்டகாலத்துல அங்க போயி சாப்பிட்டிருக்கேன். அவரு பிள்ளை நீ, இப்படி வந்து நிக்கிறியே’னு அழுறாரு. ``ஊருக்கே சோறு போட்ட மனுஷனோட பிள்ளை, இப்ப இப்படிப் பாவச்சோறு திங்கிறியே!’’னு கேட்டதும், நான் ஆடிப்போயிட்டேன்.”

எப்படியும் தன் பாவக்கணக்கை நடுரோட்டில் ரத்தம் சிந்தவைத்து யாராவது முடித்துவிடுவார்கள் என்கிற தெளிவு அவருக்குக் கூடிவந்துவிட்டது. சூசையண்ணன் அந்த இடத்திலிருந்து அடுத்த இடத்துக்குத் தஞ்சம் புகக் கிளம்பும்போது என்னிடம் ``இப்ப உள்ள பயலுக எங்களைவிட ஃபோர்ஸா இருக்காங்க. அவங்களைவிட ஃபோர்ஸா இருந்த ஒருத்தன் இப்ப உயிரைக் கையில பிடிச்சு நாய் மாதிரி ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கேன்னு அவங்ககிட்ட சொல்லுங்க. நெஞ்சுல பாவம் ஏறிடுச்சுன்னா, யானைகூடக் குப்புறக் கவுந்துடும்” என்றார்.

இந்தச் சாதி, அந்தச் சாதி என்றில்லை. இன்றைய நிலையில் எல்லாச் சாதிகளிலுமே இப்படிப்பட்ட ஆள்கள் கிளம்பிவிட்டார்கள். மூளைச்சலவை செய்து இவர்களை இது மாதிரியான களத்துக்குள் இறக்குவதைச் சாதிச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு வேலைத் திட்டமாகவே வைத்துச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சூசையண்ணனாவது, மிச்சமிருக்கிற காலத்தில் போய்த் தங்கி வாழ்க்கையை ஓட்டுவதற்குக் கொஞ்சம் காசு சேர்த்து வைத்திருக்கிறார். எனக்குத் தெரிந்த ஓர் அண்ணன், சென்னையில் கட்டட வேலையில் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கும் தொடர்ச்சியான பதற்றங்கள், அது சார்ந்த குடியின் காரணமாக உடல் தளர்ந்து விட்டது. அதைவிட முக்கியமானது என்னவெனில், இவர்களுக்கெல்லாம் சீக்கிரமே மனதும் தளர்ந்துவிடுகிறது. `பாவத்தொழில் பார்க்கிறோம்’ என்ற பதற்றம் குடிகொண்டுவிட்டால், அது தேராகவே இருந்தாலும் நிலை சாய்ந்துவிடும். கட்டட வேலை பார்த்துக்கொண்டிருந்த அண்ணன் என்னை நோக்கி வந்தபோது, எனக்குள் பழைய அச்சம் எட்டிப்பார்த்தது. சின்ன வயதில் அவர் பற்றிய கதைகளைக் கேட்டிருக்கிறேன். ஊரே பயந்து நடுங்கும். இப்போதோ ``ஊர்ல போயி யார்கிட்டயும் சொல்லிடாதடே...” என்றார் கைகளைப் பிடித்துக்கொண்டு.

விதவிதமான நிறங்கள்கொண்ட ரிப்பன்களை நெற்றியில் கட்டிக்கொண்டு சாதி சார்ந்த கலவரங்களுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் அவர்களுடைய காதுகளில் சூசையண்ணனின் குரல் விழுமா? இவர்களை எல்லாம் கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்தவர்கள் யார்? விவரமானவர்கள், நூல் பிடித்து அரசியலில் மேலேறிவிட்டார்கள். உடல் மதமதப்பை அடக்கத் தெரியாதவர்கள், அங்குசத்தைத் தவறவிட்ட முதிய யானைகளாக மாறி வாழ்க்கையிடம் கால்மடக்கிக் கையேந்திக்கொண்டிருக்கிறார்கள். இது மாதிரி சில அண்ணன்களைத் தேடிப் போய்ச் சந்தித்திருக்கிறேன். எல்லோருமே விடைபெறும்போது அந்த ஒற்றை வார்த்தையைத்தான் அழுத்திச் சொல்கிறார்கள்.

அடுத்த தலைமுறையும் இதில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதே அது. ``வேண்டாம்னு விட்டுறச் சொல்லுங்கடே!” என்றார் கடைசியாகப் பார்த்த அண்ணனும். அவர்களை விடச்சொல்வதைவிட அவர்களைப் பயன்படுத்திக்கொள்பவர்களிடம்தான் விடச்சொல்லி மன்றாடவேண்டியிருக்கிறது. அனுபவசாலிகளின் வார்த்தைகள் எப்போதும் பொய்க்காது. அதுவும் எதிர்மறை வாழ்விலிருந்து மீண்டெழுந்தவர்களின் அனுபவங்களுக்கு எதைக் காட்டிலும் சக்தி அதிகம்.

இடையில் பழைய வழக்கு ஒன்றுக்காக உள்ளே போன சூசையண்ணன் , சிறையிலிருந்து என்னைத் தொலைபேசி வழியே அழைத்தார். சிறைகளில் சகலமும் கிடைக்கும்போது செல்போன் கிடைக்காதா என்ன? தவிர, அங்கு இருப்பதுதான் அவருக்குப் பாதுகாப்பு என எனக்கு உடனடியாகத் தோன்றியது. அதைவிடக் கொடுமை ஒன்றிருக்கிறது தெரியுமா? பாளையங்கோட்டைச் சிறையிலேயே ஒவ்வொரு சாதிக்கெனத் தனித்தனி பிளாக்குகள் இருக்கின்றன. அந்தத் தொலைபேசி உரையாடலைத் தொடங்கும்போதே குரலில் பதற்றத்தோடு, ``எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? நான் உள்ளே வர்றதுக்கு முன்னாடி, தங்கியிருந்த இடத்துல புறா ஒண்ணு அடிபட்டு, குத்துயிரும் கொலையுயிருமா இருந்துச்சு. அது பொழச்சிருச்சான்னு போய்ப் பார்த்துட்டு வந்து சொல்ல முடியுமா?” என்றார். கூண்டுகள் வைத்துப் புறாக்களை வளர்த்த சின்ன வயது சூசையண்ணன், என் கண் முன்னால் வந்து போனார். என்றாவது ஒருநாள் மனுப்போட்டுப் போய் அண்ணனிடம் `புறா பிழைத்துவிட்டது’ எனப் பொய் சொல்ல வேண்டும். வாழ்க்கையைத் தொலைத்த அந்தக் கடலோரத்துச் சின்னப் புறாவுக்கு ஏதோ நம்மால் முடிந்த ஆசுவாசத்தைக் கொடுத்துவிட வேண்டும்.

- அறம் பேசுவோம்!