மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 77

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

றுநாள் பொழுது விடிந்தது. நக்கவாரத் தீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் ஆயிமலையின் உச்சியிலிருந்து இருக்கன்குன்றையே பார்த்தபடி இருந்தனர். கடந்த சில நாள்களாக, குன்றின் மேற்குகையைச் சுற்றியே தோகைநாய்கள் ஊளையிட்டுக்கொண்டிருந்தன. நேற்று நள்ளிரவுக்குப் பிறகு ஊளைச்சத்தம் சற்றே அதிகமாகியது. ஆனால், அதிகாலை தொடங்கி இப்போது வரை அந்தச் சத்தம் பிரிந்து காடெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. தீவுமனிதர்கள் குழம்பிப்போய் இருந்தனர்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 77

செய்தி உதியஞ்சேரலுக்குச் சொல்லப்பட்டவுடன் அவனும், அமைச்சன் நாகரையரும் ஆயிமலைக்கு மேலேறி வந்தனர். குழப்பத்தில் நின்றிருந்த தீவுமனிதர்களிடம், ``என்ன நிலைமை?” என்று கேட்டான் அமைச்சன். 

``எதிரிகள் தோகைநாய்களை ஏதோ செய்துவிட்டார்கள். அவை அனைத்தும் காடுகளுக்குள் சிதறி ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றைவிடக் கொடிய வேட்டை விலங்கு ஒன்றை ஏவி விட்டுள்ளனர். அதனால்தான் அவை இப்படிச் சிதறி ஓடுகின்றன. இனி அவற்றால் பலன் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது.”

பதில் கேட்டு உதியஞ்சேரல் உறைந்து நின்றான். ``அப்படியென்றால், எதிரிகள் குகைகளுக்குள் இருக்கும் குதிரைகளை வெளியில் கொண்டுவந்துவிடுவார்களா? முழு வேகத்தோடு அவர்களின் தாக்குதல் தொடங்கிவிடுமா?”

தீவுமனிதர்கள் மறுமொழியின்றி நின்றனர்.

``எஃகல்மாடன் பறம்புக்குள் நுழைந்து ஐந்து நாள்கள் ஆகிவிட்டன. நமது திட்டப்படி வலதுபுறக் கணவாயின் வழியாகத் துடும்பனின் தலைமையிலான படை வந்து சேரும் என்ற நம்பிக்கையில் போய்க்கொண்டிருக்கிறான்.”

நாகரையரின் வார்த்தை காதில் விழுந்துகொண்டிருந்தது. ஆனால், அதைக் கவனிக்கும் நிலையில் உதியஞ்சேரல் இல்லை. பறம்பின் உட்காடுகளுக்குள் தனித்துவிடப்பட்ட எஃகல்மாடனின் படை என்னவாகப்போகிறது என்பது அவனது மனக்கண்ணில் தெரிந்துகொண்டிருந்தது. 
 
இரண்டாம் நாள் மாலை நேரம் நெருங்கியபோது குளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது சோழனின் யானைப்படை. அதன் தளபதி அரிஞ்சயன் அளவற்ற மகிழ்வில் இருந்தான். வட்டாற்றில் திரும்பியதிலிருந்து யானைகளுக்குப் போதுமான நீர் கிடைக்கவில்லை. நிலைமையை எப்படிச்  சமாளிக்கப்போகிறோம் எனத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்தபோதுதான் குளம் இருப்பது பற்றிய செய்தி வந்தது. அதன் பிறகு நெடுங்காடர்கள் தளபதி சிவியன் நேரில் போய்ப் பார்த்தான். குளத்துநீரில் நஞ்சேதும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகுதான், அதை நோக்கி யானைகளைச் செலுத்த அரிஞ்சயன் அனுமதியளித்தான்.

இந்தப் படையெடுப்பே யானைப்படையை மையப்படுத்தியதுதான். அடர்காடுகளில் காட்டுமனிதர்களை எதிர்கொள்ள, யானைப்படையை மையப்படுத்திய போர் உத்திதான் வெற்றியைத் தேடித்தரும். அதுவும் அரிஞ்சயன் போன்ற அனுபவமேறியவர்களின்கீழ் இயங்கும் யானைப்படை, வெற்றியை எளிதில் ஈட்டும்.

சோழர்களின் படைத்தொகுப்பில் இருந்த மொத்த யானைகளில் சரிபாதிக்கும் குறைவான யானைகளைத்தான் இந்தப் படையெடுப்புக்குத் தேர்வுசெய்தான் அரிஞ்சயன். சிறந்ததொரு போர்யானை, தந்தங்களைக்கொண்டு பதினான்கு முறைகளில் தாக்கும் பயிற்சியைப் பெற்றிருக்கும்.

முகத்துக்கு நேராகத் தந்தத்தைக் குத்திச் செருகுவது, குறுக்காகக் கொடுத்துக் குத்தித் தூக்குவது, இரு பக்கங்களிலும் இரு தந்தங்களால் குத்துவது, எதிர் யானையின் தந்தவட்ட உதடு நோக்கிக் குத்துவது, பக்கவாட்டில் சாய்த்துக் குத்துவது, பக்கங்களில் நேராகக் குத்துவது, கண்ணிமைக்கும் நேரத்தில் துதிக்கையின் நடுவில் குத்தித் தூக்குவது, எதிர் யானையின் தலையைக் குறுக்கே பிடித்து ஒரு தந்தத்தால் குத்துவது, கோபத்தோடு எதிர் யானையின் திட்டாணியில் அடித்திழுத்து தந்தத்தைச் செருகுவது, உடலைப் பின்சுற்றிப் பின்பாய்ந்து குத்துவது ஆகியன உள்ளிட்ட பதினான்கு வகையான தந்தத் தாக்குதலில் தேர்ந்த யானைகளை மட்டுமே இந்தப் படையெடுப்பில் பங்கேற்கச் செய்தான் அரிஞ்சயன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 77

`அவ்வளவு சிறந்த போர்ப் பயிற்சியுடைய யானைகளை, கொடும்வெக்கையில் போதிய நீரின்றித் தொடர்ந்து நடக்கவைத்துக்கொண்டிருக்கிறோமே!’ என்று கவலைகொண்டிருந்தவன், குளம் கண்டு கவலை நீங்கினான். முதலில், ஐந்து வகைமையர்களின் தலைமையிலுள்ள ஐம்பது யானைகளை நீர் அருந்த அனுப்பினான். நீர் உறிஞ்சும் ஓசையிலே அவற்றின் தாகத்தை அறிய முடிந்தது. அதேபோன்று ஐந்து ஐந்து வகைமையரின் தலைமையில் குளம் நோக்கி ஐம்பது ஐம்பது யானைகளாக அனுப்பினான் அரிஞ்சயன்.

பொழுது மங்கி இருள் கூடும் வரை யானைகள் அணிவகுத்துப் போய் நீர் அருந்தித் திரும்பிக்கொண்டிருந்தன. ஏற்கெனவே வகுக்கப்பட்ட ஒழுங்கின் அடிப்படையில் அவை வட்டாற்றில் நிலைகொண்டன.

நான்கு காதத்தொலைவுக்கு நீண்டு கிடக்கும் இந்தப் பெரும்படையின் இரு பக்கங்களும் மலைக்குமேல் பறம்புவீரர்கள் தாக்குதலுக்கு ஆயத்தநிலையில் இருந்தனர். பறம்பின் வடதிசை ஊர்கள் அறுபத்தேழிலிருந்தும் வீரர்கள் திரட்டப்பட்டுவிட்டனர். அவர்களுக்கான ஆயுதங்களும் வந்துசேர்ந்துவிட்டன. ஆற்றின் இருபுறங்களும் சரியான இடைவெளியில் தாக்குதலுக்கான துல்லியமான உத்தி வகுக்கப்பட்டிருந்தது. இவ்வளவு பெருந்தாக்குதலை இதுவரை பறம்புமக்கள் நடத்தியதில்லை.  இரவாதன், இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான்; பாரியின் உத்தரவு கிடைத்த கணம் வட்டாற்றில் பெருக்கெடுக்கப்போகும் குருதி வெள்ளத்தைக் காணத் துடித்துக்கொண்டிருந்தான்.

பிட்டனின் குழப்பம், இந்தக் கணம் வரை நீங்கவில்லை. `சோழப்படையின் கரையோரப் பகுதிகளில் நிற்பவர்கள் நெடுங்காடர்கள் என்பது பாரிக்கும் பிட்டனுக்கும் மட்டுமே தெரியும். நாம் எறியும் அம்பும் ஈட்டியும் சரிபாதிதான் அவர்களைக் கடந்துபோய்த் தாக்கக்கூடியதாக இருக்கும். அப்படியிருந்தும் தாக்குதலுக்குப் பாரி ஆயத்தமாகியுள்ளான் என்றால், தெளிவான உத்தியை வகுத்துவிட்டான் எனப் பொருள். அந்த உத்தி, குளத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. என்ன அது?’ என்று விடை தெரியாத கேள்வியோடு உத்தரவுக்காகக் காத்து நின்றான் பிட்டன். ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மரங்கள் தம்முடைய கிளைகளில் எண்ணிலடங்கா வீரர்களைச் சுமந்தபடி சிலிர்த்து நின்றன. 

ஆறாவது முறை ஐந்து வகைமையரின் தலைமையில் ஐம்பது யானைகளை அனுப்பியபோது, குளத்துநீர் ஏறக்குறைய வற்றி, தரை தொட்டுக்கிடந்தது. ஆனாலும் யானைகளின் துதிக்கைகள் உறிஞ்சியெடுத்தன. எல்லா யானைகளும் நீர் அருந்தி முடிக்கும் வரை அரிஞ்சயன் குளக்கரையிலே நின்றிருந்தான். கடைசி வரிசையில் வந்த யானைகளும் குளம் விட்டு அகன்றன. அரிஞ்சயன், அளவற்ற மகிழ்வடைந்தான். இனி பிரச்னையேதும் இருக்காது. சமாளித்துவிட முடியும் என்ற நம்பிக்கை உறுதியானவுடன் அதை வேந்தனிடம் தெரிவிக்க, குதிரையில் விரைந்தான்.

படை அணிவகுப்பில் யானைப்படையைக் கடந்து காலாட்படை தொடங்கும் இடத்தில் செங்கனச்சோழனுக்கான கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கூடாரத்தைக் கவசவீரர்கள் காத்து நின்றனர். உள்ளே வேந்தனுக்கு உணவு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது. கூடாரம் வந்த அரிஞ்சயன், உணவு முடியட்டும் எனக் காத்து நின்றான். 

அணிவரிசையின் முன்புறம் நின்றிருந்த யானைகளிடமிருந்து சற்றே வேறுபட்ட ஒலி எழுவதைக் கேட்க முடிந்தது. `போதுமான அளவு நீர் குடித்த தெளிச்சியில் எழுப்பப்படும் ஒலியிது’ என எண்ணியபடி வேந்தனுக்காகக் காத்திருந்தான் அரிஞ்சயன். இதைவிடப் பேரொலிகொண்ட யானைப் பிளிறலை எதிர்பார்த்து மலையின் மேல் காத்திருந்தான் பாரி. அவனைச் சுற்றி நின்றிருந்த பன்னிரு வீரர்களும் அவன் சொல்லப்போகும் உத்தரவை, பிட்டனின் தலைமையிலான இடதுபுறப் படைக்கும் இரவாதனின் தலைமையிலான வலதுபுறப் படைக்கும் தெரிவிக்கக் காத்துக்கொண்டிருந்தனர்.

நிலவற்ற வானில் இருள் அப்பிக்கிடக்கும் இந்தப் பொழுதில், ஒலியின் மூலம் மட்டுமே ஆற்றின் எதிர்த்திசையில் இருக்கும் இரவாதனுக்கு மறைகுறிப்பைக் கடத்த முடியும். பிட்டனும் பாரியும் ஒரே திசையில்தான் மேலும் கீழும் நிற்கின்றனர். எனவே, இவர்களுக்கு ஓசையின் மூலம் மறை குறிப்பைக் கடத்திவிடலாம். எல்லா ஏற்பாடுகளும் ஆயத்தநிலையில் இருந்தன. பாரியோ, வட்டாற்றில் நிறுத்தப்பட்டிருக்கும் யானைப்படையின் பிளிறல் ஓசையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

இவ்வளவு சிறந்ததொரு வாய்ப்பு கிடைக்கும் எனப் பாரி எதிர்பார்க்கவில்லை. இன்னும் சில நாள் பயணத்துக்குப் பிறகுதான் அவன் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தான். சிறுகானத்தைக் கடந்து உப்பறைக்குப் போகும்வழி மிகக் குறுகிய கணவாய் அமைப்பைக்கொண்டது. அந்த இடம், நெடுங்காடர்களால் தடுப்பரணையோ, வலைப்பின்னலையோ உருவாக்க முடியாது. முழுமையான பாறைப் பிளவு அது. பிளவின் மேலிருந்து தாக்குதல் தொடுத்தால் படையின் முன்புற அணியை மிகக் குறுகிய நேரத்தில் முழுமுற்றாக அழிக்க முடியும். எதிர்பாராத அந்தத் தாக்குதல் அவர்களின் கட்டுக்கோப்பை எளிதில் சிதறடிக்கலாம்.

நெடுங்காடர்களுக்குத்தான் காடு பற்றிய அச்சமிருக்காது. ஆனால், சோழப்படையினர் அனைவருக்கும் காட்டில் பார்க்கும் ஒவ்வொரு காட்சியும் அச்சத்தை உருவாக்கும். `எங்கெங்குமிருந்து மேலெழும் அம்புகளாலும் ஓசைகளாலும் முழக்கங்களாலும் அவர்களின் உறுதியை முற்றிலுமாகச் சிதைக்கலாம். அதன் பிறகு பறம்புவீரர்கள் சூறையாடலைத் தொடங்கலாம்’ என்றுதான் திட்டமிட்டிருந்தான் பாரி. ஆனால், பிட்டன் நீர்வற்றாக் குளம் ஒன்று இருப்பதைப் பற்றிய செய்தியைச் சொன்னவுடன் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 77

நீர்ப்பசை இருக்கும் பாறைப் பிளவுகளிலும் மரச் செதில்களிலும் சங்கு அட்டைகள் இருக்கும். மற்ற அட்டைப்பூச்சிகளுக்கு, குருதியை உறிஞ்சும் வாய்ப்பகுதி ஒன்றுதான் உண்டு. ஆனால், சங்கு அட்டைப்பூசியானது விரிசங்கு வடிவிலானது. அதன் எல்லா முனைகளிலும் குருதி உறிஞ்சும் வாய்கள் உண்டு. மிக அரிதான உயிரினமான இது, மறையாற்றின் பகுதிகளில் உள்ள மர இடுக்குகளிலும் பாறை இடுக்குகளிலும் அதிகம் இருக்கும். அதனாலேயே மக்கள் அந்தக் காட்டுக்குள் போக மாட்டார்கள். ஆனால், இப்போது சங்கு அட்டைகள்தான் மிக அதிகமாகத் தேவைப்பட்டன.

குளம் பற்றிய செய்தியை அறிந்தவுடன் மறையாற்றின் பகுதியில் இருக்கும் சங்கு அட்டையைச் சேகரிக்க, கட்டையர்களுக்குக் கமுக்கமாக உத்தரவிட்டான் பாரி. ஆறு ஊர்க் கட்டையர்களும் மறையாற்றின் அடர்காட்டுக்குள் இறங்கினர். எண்ணற்ற சுரைக்குடுக்கையில் சங்கு அட்டையை நாள் முழுவதும் சேகரித்தனர். மருத்துவர்கள் தந்த செவ்வெண்ணெயைக் கைகளில் தேய்த்துக்கொண்டுதான் அவற்றைப் பிடித்தனர். அப்படியும் பிடித்தவர்களின் கைகள் எங்கும் குருதி கொட்டியபடியே இருந்தது.

அன்று இரவே குடுவையில் இருந்த சங்கு அட்டைகள் முழுவதையும் அந்தக் குளத்துக்குப் போய்ச் சேர்த்தனர். குளம் முழுக்க, எல்லாப் பகுதிகளிலும் பரவுமாறு சங்கு அட்டைகளைக் கொட்டிவிட்டுச் சுரக்குடுக்கையை எடுத்துவந்துவிட்டனர். சங்கு அட்டைகள் நீரின் அடிவாரப் பாறைகளிலும் மண்ணோடும் நீர்மீது மிதக்கும் செத்தைகளிலும் அப்பிக்கிடந்தன. சோழர்களின் தூசிப்படை மருத்துவர்களும் குறுங்காடர்களும் குளத்துநீரில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதா எனச் சோதித்துப் பார்த்துவிட்டு, ``நஞ்சு ஏதும் கலக்கவில்லை. யானைகள் நீர் அருந்தலாம்’’ என்று கூறினர்.

அதைத் தொடர்ந்து யானைகள் குளத்தடிக்கு வந்து நீள்துதிக்கையால் நீரை உறிஞ்சின. நீரின் மேற்புறமும் அடிவாரத்திலும் இருந்த சங்கு அட்டைகள், உறிஞ்சப்படும் நீரினூடே துதிக்கைக்குள் போய்விட்டன. முதலில் வந்து நீர் குடித்த யானைகளின் துதிக்கைக்குள் ஓரிரு அட்டைகள் உள்ளே போயின. அடுத்தடுத்து யானைகள் வந்து நீரை உறிஞ்சியதும் அடிவாரத்தில் ஒட்டிக்கிடந்த அட்டைகள் கணக்கில்லாத எண்ணிக்கையில் துதிக்கைகளுக்குள் போயின.

உள்ளே போய்த் துதிக்கையின் சதைக்குள் ஒட்டிய சங்கு அட்டைகள், குருதியை உறிஞ்சத் தொடங்கியபோதுதான் விளைவு வெளிப்படத் தொடங்கியது. கூடாரத்துக்குள் உணவு உண்டு முடித்த செங்கனச்சோழனிடம் ``யானைகள் அனைத்தும் நன்றாக நீர் அருந்திவிட்டன. இனி நமக்குக் கவலைவேண்டாம்’’ என்று அரிஞ்சயன் சொல்லிக் கொண்டிருந்தபோது யானைகளின் பிளிறல் தொடங்கியது. ஒன்று மாற்றி ஒன்றாக இருளின் திசைக்குள்ளிருந்து பிளிறல் ஓசை மேலேறி வந்தது. அரிஞ்சயன் கூடாரத்துக்குள்ளிருந்து வேகமாக வெளியில் வந்தான். ஒவ்வொரு சங்கு அட்டைக்கும் ஆறு முனைகளில் ஆறு வாய்ப்பகுதிகள் உண்டு. ஆறும் ஒருசேரக் குருதியை உறிஞ்சும்போது அந்த இடத்தில் சதையே பிய்த்துக்கொண்டு வருவதுபோல இருந்தது. அதுவும் துதிக்கைக்குள் இந்தக் குடைச்சல் தொடங்கியதும் யானைகள் தலையை மறுத்து மறுத்து ஆட்டி, துதிக்கையை இங்குமங்குமாக வீசிச் சுழற்றின.

சிறுசிறு சலசலப்புகள் யானைப்படைக்குள் உருவாகத் தொடங்கியபோது பாகன்கள் எல்லோரும் யானைகளை அமைதிப் படுத்தி, நின்ற நிலையிலிருந்து உட்காரும் நிலைக்கு அமர்த்திவைக்க முயன்றனர். அப்போதுதான் இடது மூலையில் இருந்த யானை ஒன்று பெரும்பிளிறலோடு துதிக்கையைத் தூக்கி இரு பக்கங்களும் அடித்தது. பக்கத்தில் இருந்த யானைகள் மிரண்டு விலகின. உடனே அதன் பாகன் அதன் அருகே சென்று அதை அடக்க முற்பட்டபோது சற்றும் எதிர்பாராமல் சுழற்றி வீசப்பட்டான். 

யானைகளுக்கு என்ன நடக்கிறது என்ற கவனம் சில கணம்தான் இருந்தது. அதற்குள் பிளிறலின் ஓசை அங்குமிங்குமாகப் பல இடங் களிலிருந்து மேலெழுந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. பாகன்கள் எல்லோரும் யானைகளின் மீதேறி அவற்றைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். அங்குசத்தால் அடித்தும் தலையில் ஊன்றிக் குத்தியும் மத்தகத்தில் வைத்து இழுத்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால், அவையெல்லாம் சிறிது நேரம்தான் நடந்தன.

வேந்தனின் கூடாரத்திலிருந்து படையின் முன்வரிசை நோக்கிக் குதிரையில் விரைந்து கொண்டி ருந்தான் அரிஞ்சயன். ஏதோ ஒரு யானைக்கு மதம்பிடித்துவிட்டது என்றுதான் அவன் நினைத்தான். ``அந்த மதயானையை அப்புறப் படுத்துங்கள். முடியவில்லை என்றால், போர்வாள் கொண்டும் தந்த ஈட்டிகொண்டும் குத்திச் சரியுங்கள்” என்று ஓசையெழுப்பிய படி விரைந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் இருளுக்குள்ளிருந்து வீசப்பட்ட பாகன் ஒருவன் அரிஞ்சயனின் குதிரைமீது வந்து விழுந்த வேகத்தில் அடியோடு சரிந்தான் அரிஞ்சயன்.

யானைகள் உள்மூக்கில் ஏற்படும் அரிப்பும் எரிச்சலும் தாள முடியாமல் துதிக்கையை முன்னும் பின்னுமாக வெறிகொண்டு வீசித் தாக்கத் தொடங்கிய கணத்தில் கட்டுக்கோப்புகள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. நிலைமையின் விபரீதத்தை உணரும் முன்பே நூற்றுக்கணக்கான யானைப்பாகன்கள் அடித்து, மிதித்து, நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். வீரமுண்ட வாத்தியமும் பேரிகையும் முழங்கி நிலைமையைக் கட்டுப்படுத்த, படைக்காவல்வீரர்கள் சிலர் முயன்றனர். ஆனால், யானைகளின் பிளிறலுக்கு நடுவே இந்தக் கருவிகளின் ஓசையேதும் மேலேறவில்லை. கீழே விழுந்த அரிஞ்சயன் எழுந்தபோது முன்புறப் படையின் கட்டுக்கோப்பு மொத்தமும் சிதைந்திருந்தது.

என்ன நடந்தது என்பதைச் சிந்திக்க கணநேரம்கூட யாருக்கும் இல்லை. மூன்று தளகர்த்தர்தர்களின்  உத்தரவின் கீழிருக்கும் முந்நூறு யானை களைக்கொண்ட இந்தப் படையில், ஒரே நேரத்தில் முப்பது யானைகள் கட்டுப்பாட்டை இழந்தாலே மொத்தப் படையும் சிதறிப்போய்விடும். ஆனால், இப்போதோ எல்லா யானைகளும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டன. துதிக்கையைத் தூக்கி வீசி அடித்துத் தாக்கும் அதன் வேகத்தில்தான் வேறுபாடு இருந்தது. சங்கு அட்டைகள் ஒன்றோ இரண்டோ யானைகள் சிலவற்றின் துதிக்கைக்குள் ஏறி அடிப்பகுதிக்குப் போகாமல் முன்பகுதியிலேயே இருந்தன. அந்த யானைகள் மட்டுமே சற்று கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள முயன்றன. மற்ற யானைகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பது யாருக்கும் புரியவில்லை. காடே அதிர்வதுபோலிருந்த பிளிறல் ஓசையால் பின்புறம் நின்றிருந்த காலாட்படை வீரர்கள் நடுங்கினர். கூடாரத்தில் இருந்த வேந்தனைப் பாதுகாக்க, தக்க ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். நெடுங்காடர்களுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. அவர்கள் தலைவன் சிவியன் காலாட்படையின் பின்பகுதியில் நின்றுகொண்டிருந்தான். நிலைமையை அறிந்துவர முன்னோக்கிச் செல்ல முயலும்போது பெரும்கூச்சலோடு படையெங்கும் குழப்பம் பரவியிருந்தது.

செங்கனச்சோழனைக் கூடாரத்திலிருந்து வெளியேற்றி, வேந்தனுக்குரிய யானையின் மீதேற்ற முயன்றுகொண்டிருந்தான் உறையன். அப்போது அந்த இடத்துக்கு வந்த காலாட்படைத் தளபதி கிழானடிவானவன், வேந்தனை யானையின் மீதேற்றிப் பின்புறம் கொண்டுசெல்வதை ஏற்கவில்லை. ``இதைப் பார்க்கும் காலாட்படையின் அனைத்து வீரர்களும் நம்பிக்கை இழப்பர். கணப்பொழுதுக்குள் எல்லோருக்குள்ளும் அச்சம் பரவிவிடும். எனவே, குதிரையின் மீதேற்றிப் பின்புறம் விரைவோம்” என்றான்.

ஆனால் உறையனோ, ``யானைப்படையின் முன்பகுதியில் ஏதோ கடினமான பிரச்னை உருவாகியுள்ளது. சில யானைகளைப் பாகன்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என நினைக்கிறேன். இந்நிலையில், வேந்தன் குதிரையில் பயணிப்பது நல்லதன்று. வெகுண்டெழும் ஒற்றை யானையின் பிளிறல்கூடக் குதிரையை நிலைகுலையச் செய்துவிடும். எனவே, வேந்தனுக்குரிய யானையின் மீது ஏற்றுங்கள்” என்று வாதிட்டான்.

வேந்தனின் யானை வீரர்களுக்குத் தோண்டப்படும் கிணற்றில் நீர் அருந்தியிருந்தது. எனவே, இதற்குப் பிரச்னை ஏதுமில்லை. பாகன் அதைக் கொண்டுவந்து கூடாரத்தின் ஓரம் நிறுத்தியிருந்தான். ஆனால், உள்ளே உறையனும் கிழானடிவானவனும் கடுமையாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

அந்த உரையாடல்களை அருகில் இருந்தவர்கூடக் கேட்க முடியாத நிலையில் பிளிறலின் ஓசை பன்மடங்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. படையின் முன்வரிசையில் இருந்த யானைகள் பாகன்களைச் சுழற்றி எறிந்தபடி வட்டாற்றின் முன்புறம் நோக்கி ஓடத் தொடங்கின.

இந்தக் கணத்துக்காகவே காத்திருந்த பாரி, தனது உத்தரவைப் பிறப்பித்தான். குளக்கரையெங்கும் பதுங்கி இருந்த பறம்புவீரர்கள் ஆற்றின் முன்பகுதியை நோக்கி எரியம்புகளை வீசத் தொடங்கினர். இருளைக் கிழித்தபடி ஆற்றின் இரு திசைகளிலிருந்தும் மணலுக்குள் எரியம்புகள் வந்து செருகின. முன்புறமாக ஓடத் தொடங்கிய யானைகள் நெருப்புமழைபோல் விடாதுபொழியும் எரியம்புகளைக் கண்டு, வந்த திசை நோக்கிப் பின்புறமாகத் திரும்பின.

பிளிறலும் அலறலும் இருளை உலுக்கின. வெறிகொண்ட யானைகள் வட்டாற்றில் வந்த திசை நோக்கித்  திரும்பி முறுக்கியபடி மணல் நெளிய ஓடிவந்தன. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. வெறி கொண்டு முன்னேறும் யானைகளால் மொத்த யானைப் படையும் சிதறத் தொடங்கியது. ஆவேசம்கொண்ட யானைகள், பின்னிலையில் நின்ற காலாட் படைக்குள் புகுந்தன. அதகளம் தொடங்கியது. சங்கு அட்டைகள் உச்சி மூக்கில் குருதியை உறிஞ்சிய ஒவ்வொரு முறையும் துதிக்கையை ஓராயிரம் முறை சுழற்றியடித்தன யானைகள். தந்தங்களின் கூர்முனை இரு பக்கங்களிலும் குத்திக் கிழித்தன.

இருளெங்கும் பேரோலம் மேலெழுந்தபோது வட்டாற்றின் மணலெங்கும் குருதி ஊற்றெனப் பீச்சியடிக்கத் தொடங்கியது. படைவீரர்கள் செய்வதறியாது எங்கும் சிதறினர். குடிநீருக்காகத் தோண்டப்பட்ட எண்ணற்ற கிணறுகளில் நூற்றுக்கணக் கானவர்களை மிதித்துப் புதைத்தபடி யானைகள் முன்னேறிக் கொண்டிருந்தன. படையின் கட்டுக்கோப்பு குலையும் கணத்தில் பேரழிவு தொடங்கும். ஆனால், இங்கு தொடங்கிய கணத்திலேயே பேரழிவு முடிவுறும் நிலையை நெருங்கியது.

யானைப்படைத் தளபதி அரிஞ்சயன் ஆற்றுமணலுக்குள் ஆழப் புதைந்து கொண்டிருந்தான். மணற்துகள்களைப்போல எலும்புகள் நொறுங்கிக்கொண்டிருந்தன. இடைவெளியின்றி மிதித்து நகர்ந்தன எண்ணிலா யானைகள்.

தலைமைத் தளபதி உறையன் எது செய்தாவது காலாட்படையின் ஒரு பகுதி வீரர்களையாவது காக்க முடியுமா எனச் சிந்திக்கும்போது, எல்லாம் கைமீறிப்போயிருந்தன. படைவீரர்களோ யானைகளோ ஆற்றின் கரைகளில் எங்கெல்லாம் மேலேறுகிறார்களோ, அங்கெல்லாம் எரியம்புகள் பாய்ந்து கீழிறங்கின. நெருப்பின் பொறிபட்ட கணத்தில் கரையோரச் செடிகொடிகள் பற்றி எரிந்தன. மேலேறிய யானைகள் வெக்கை தாக்கிய வேகத்தில் பிளிறியபடி, சிக்கியவர்களை எல்லாம் அடித்து நசுக்கிக்கொண்டு மீண்டும் ஆற்றுக்குள் ஓடின.

வீரயுக நாயகன் வேள்பாரி - 77

பற்றிய நெருப்பு காட்டுக்குள் பரவாமல், தகுந்த முன்னெச்சரிக்கையோடு பறம்புவீரர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒற்றை அம்பைக்கூட சோழப்படையின் வீரர்களை நோக்கி எய்யவில்லை. பிளிறியபடி மேலேறும் யானைப்படையை ஆற்றை நோக்கிக் கீழிறக்கும் வேலையை மட்டுமே அவர்கள் செய்தனர். எந்த ஆற்றைப் பாழிநகருக்கான வழியாக செங்கனச்சோழன் தீர்மானித்து முன்னகர்ந்தானோ, அதே ஆற்றை மரணத்தின் பெரும்பாதையாக மாற்றினான் பாரி. எதிரிகள் நிலைகொண்டிருந்த நான்கு காதத்தொலைவுக்கும் மலைக்குமேல் தகுந்த இடைவெளியில் பறம்புவீரர்கள் நிலைகொண்டிருந்ததால் எல்லாவற்றையும் துல்லியமாகச் செயல்படுத்தினர். இருளை நகர்த்திச் செல்வதைப்போல வெறிகொண்ட யானைக் கூட்டத்தைக் கரையோடு கரையாக நகர்த்திக்கொண்டிருந்தனர்.

வட்டாறெங்கும் பல்லாயிரக்கணக்கான வீரர்களை நசுக்கியபடி யானைகள் ஓடிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவின் பிற்பகுதியில், அழிவின் உச்சகட்டம் தொடங்கியது. `முதல்நிலைப் படையினர் தாக்குதலுக்கு ஆளாகிவிட்டனர்’ என்ற செய்தி, ஒருநாள் இடைவெளியில் வந்துகொண்டிருந்த இரண்டாம் நிலைப் படையின் தளபதிகளுக்கு எட்டியது. நெடுங்காடர்களின் தளபதி துணங்கன் துடித்தெழுந்தான். யானைப்படையின் தளபதி கச்சனும் காலாட்படையின் தளபதி ஆழிமார் பனும் வெகுண்டனர். தாக்கப்பட்டவர்களுக்கு உதவ உடனடியாகப் புறப்பட்டனர். இரவோடு இரவாக யானைகளை எவ்வளவு வேகமாக விரட்ட முடியுமோ, அவ்வளவு வேகமாக விரட்டிச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து காலாட்படையினரும் விரைந்து வந்தனர்.

போர் என்பது, கட்டுக்கோப்பான தாக்குதல். அதன் வெற்றி, தாக்கும் திறனில் மட்டுமன்று, அதன் ஒழுங்கமைப்பின் வடிவிலும் இருக்கிறது. வேந்தனின் படைகள், இந்தக் கருத்துக்கு நன்கு பழக்கப்படுத்தப்பட்டவை. ஆனால், அடர்காட்டுக்குள் முன்னிலைப்படை தாக்கப்பட்ட செய்தி தெரிந்த பிறகு விரைந்து சென்று சேர்வதுதான் முதல் வேலை. அதில் எவ்வளவு வேகத்தில் விரைய வேண்டுமோ அவ்வளவு வேகத்தில் விரைவதே முக்கியம் என உணர்ந்து ஆழிமார்பனும் கச்சனும் விரைந்துகொண்டிருந்தனர். துணங்கனோ நெடுங்காடர்களைத் திரட்டி யானைகளை முந்திக்கொண்டு ஓடினான்.

பின்னிரவு சரிந்து கீழ்வானில் மெல்லிய ஒளிக்கீற்றுகள் மேலெழத் தொடங்கியபோது வட்டாறு இதுவரை சந்தித்திராத பேரழிவைச் சந்திக்க ஆயத்தமானது. இரண்டாம் நிலையில் இருந்த யானைப்படை கச்சனின் தலைமையில் விரைந்து முன்னேறிக்கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்த் திசையிலிருந்து பிளிறிக்கொண்டு வந்தது முதல்நிலை யானைப்படை. எந்த யானையின் மீதும் பாகன்கள் யாரும் இல்லை. வந்து கொண்டிருப்பது நமது படைதானா என்பதைக்கூட இருளுக்குள் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

தந்தத்தின் உள்மூக்குக்குள் துருவிக் கொண்டிருக்கும் குடைச்சல் தாங்க முடியாமல் துதிக்கையைச் சுருட்டி, திருகி, முறுக்கி வீசியபடி பிளிறிக்கொண்டு வந்த யானைகளை, எதிர் நிலையில் சந்தித்தது கச்சனின் யானைப்படை.

ஒரு யானையின் குருதி, பல நூறு வீரர்களின் குருதிக்குச் சமம். தந்தங்களைக்கொண்டு பதினான்கு விதங்களில் தாக்குவதற்குப் பயின்ற யானைகள், இருள் முடியும் கணத்தில் ஒன்றுடனொன்று நேர்கொண்டு மோதின. இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத பேரழிவு நிகழத் தொடங்கியது. உச்சிமண்டைக்குள் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் சங்கு அட்டைகளால் ஏற்படும் வேதனை தாங்காமல் துதிக்கைகொண்டு தமது தலையின் கும்பங்களையே நொறுக்குவதுபோல் அடிக்கும் யானைகள் எதிரில் சிக்கும் யானைகளை விட்டுவிடவா செய்யும்! சுழற்றியடித்துத் தந்தத்தால் குத்தித் தூக்கின.

மணிக்கட்டிலும் மார்பிலும் கமுக்கட்டையிலும் விலாப்புற மடிப்பிலும் வயிற்றிலும் குத்தித் தள்ளப்பட்ட எண்ணிலடங்கா யானைகள் எழுப்பிய ஓலம் காட்டை உறையச்செய்தது. வட்டாற்றுக் கொதிமணல் குடித்து முடியாத கருங்குருதி, விழுந்து கிடந்த யானைகளுக்கு நடுவில் வீரர்களின் உடலை இழுத்து நகர்த்தியது. குருதி குடித்த வட்டாற்று மணற்பரப்பு மணிக்கற்களைப்போல ஒளி வீசியது.

வீரயுக நாயகன் வேள்பாரி - 77

தோகைநாய்களை அழித்த பறம்புவீரர்கள் காட்டை ஊடறுத்துக் குறுக்குவழியில் குதிரைகளில் பறந்தனர். எஃகல்மாடன் தலைமையில் நடுக்காட்டுக்குள் ஊர்ந்துகொண்டிருந்த சேரப்படையை இரவில் நாற்புறமும் சூழ்ந்தனர். உள்ளங்கைக்குள் சிக்கிய இரையை அவர்களின் ஆசைக்கேற்ப அடித்திழுக்கும் வேட்டை தொடங்கியது. பறம்புவீரன் ஒவ்வொருவனும் எண்ணற்ற தோகைநாய்களாக உருமாறியிருந்தான். எந்தவொரு தாக்குதலையும் இவ்வளவு கொடும் ஆவேசத்தோடு பறம்புவீரர்கள் தொடங்கிய தில்லை. இருபதுக்கும் மேற்பட்ட குதிரைகளை இழந்தவர்களின் வெறி, வீசப்பட்ட ஒவ்வோர் அம்பிலும் இருந்தது. உள்ளங்கைக்குள் வைத்துக் கழுத்தைத் திருகி எடுப்பதைப்போல எதிரிகளின் படையை உயிரோடு திருகி எடுத்தனர். தாக்குதல் நடந்த செவ்வரிக்காட்டில் குருதி படியாத இலையென்று எதுவும் இல்லை.

முகத்தில் மூன்று அம்புகள் ஒருசேரத் துளைத்தபோது அவன் மண்ணில் வீழ்ந்தான். ஆனாலும் அவன் செய்வதைப்போலவே தலையை வெட்டியெடுத்தான் தேக்கன். குருதி நாளங்கள் வெடிப்பதைப்போலக் கத்திக்கொண்டு துண்டித்த அவனது தலையைத் தூக்கி வீசினான் தேக்கன். நீள்வாய் நாய்களை நம்பி உள்ளே வந்த எஃகல்மாடனின் தலையைக் கவ்விச் செல்ல ஒரு தோகைநாய்கூட உயிருடன் இல்லை.

- மூன்றாம் பாகம் முற்றிற்று.