
சக்தி தமிழ்ச்செல்வன், படம்: ஜெ.வேங்கடராஜ்
அந்த சிங்கிள் பெட்ரூம் பிளாட்டில் கொஞ்சம் புத்தகங்கள், பிரித்து வீசப்பட்ட கிஃப்ட் கவர்கள், புதிதாக வாங்கிய பாத்திரங்கள் இவற்றுடன் தளும்பத் தளும்ப அன்பும் நிறைந்திருந்தது. ஹாலில் போட்டிருந்த சிறிய சோபாவில் அமர்ந்து முகம் மலரப் பேசத் தொடங்கினர் திருநங்கை பிரீத்திஷா - திருநம்பி ப்ரேம்குமரன் இணையர். சில வாரங்களுக்கு முன்பு பெரியார் திடலில் சாதி, இன, பால் பேதங்களைக் கடந்து திருமணம் செய்துள்ளனர். சட்டப்படி பதிவுத் திருமணம் செய்துள்ள முதல் திருநங்கை - திருநம்பி ஜோடி.
திருநெல்வேலியைச் சேர்ந்த பிரீத்திஷா ஆரம்பத்தில் டெல்லியில் நாடகங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு சென்னையிலுள்ள ஜெயராவ் மாஸ்டரிடம் முறையாக நடிப்புப் பயிற்சி பெற்றுள்ளார். குறும்படங்கள், மேடை நாடகங்கள் என நடித்துவந்தவர் ‘பாம்புச்சட்டை’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தனியார் தொலைக்காட்சியொன்றின் குழந்தைகள் நிகழ்ச்சிக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்துவருகிறார். ஈரோட்டைச் சேர்ந்த ப்ரேம்குமரன் நாட்டு மாட்டுப் பண்ணைகள் அமைப்பது குறித்த பயிற்சிகள் பெற்றுள்ளார். தற்போது பண்ணை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

“கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஃபேஸ்புக்லதான் ரெண்டுபேரும் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். ஆரம்பத்துல ரெண்டு பேருமே நல்ல நண்பர்களாதான் பேசிட்டிருந்தோம். சேர்ந்து வாழறதைப் பத்தியெல்லாம் யோசிக்கல. ப்ரேம் ரெண்டு தடவ சென்னைக்கு என்னைப் பாக்குறதுக்காக வந்தாரு. அப்ப நேர்ல இரண்டு பேரும் எங்களோட பிரச்னைகளைப் பத்தி நிறைய பேசினோம். அப்ப நான் வேலை பாக்குற இடத்துக்கு, என்னோட ஃப்ரெண்ட்ஸைப் பாக்குறதுக்குனு நிறைய இடத்துக்கு ப்ரேமையும் கூட்டிட்டுப் போனேன். அப்போ அவரோட மனசுல இருந்த சோகங்களை, அவரோட குடும்பச் சூழ்நிலையை எல்லாம் என்னோட பகிர்ந்துகிட்டார். அது என்னோட மனசைப் பரிதவிக்க வெச்சுச்சு. அப்பதான் ஏன் நாங்க ஒண்ணா சேந்து வாழக்கூடாதுனு தோணுச்சு” என பிரீத்திஷா கூற, அவருடைய கைகளைத் தன் கைகளோடு கோத்துக்கொண்டார் ப்ரேம்குமரன். “எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான் அவங்களுக்கு நான் பிரீத்திஷாவ கல்யாணம் பண்ணினதுல எந்த வருத்தமும் இல்ல. ஆனா, என்னோட சொந்தக்காரங்க என்ன சொல்வாங்களோனுதான் என் அம்மா ரொம்ப பயப்படுறாங்க” என மென் புன்னகையுடன் கூறினார் ப்ரேம்குமரன்.
தற்போது ‘நாடோடிகள்-2’ , சுப்ரமணியம் சிவா இயக்கும் புதிய படம் உள்ளிட்டவற்றில் நடித்துவரும் பிரீத்திஷா , சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்துள்ளதாகக் கூறினார். “ப்ரேமுக்கும் தொழில் நல்லபடியா அமைஞ்சுட்டா கொஞ்சம் பணப் பிரச்னையெல்லாம் தீர்ந்துரும். நான் இன்னும் நடிகர் சங்கத்துல உறுப்பினராகல. உறுப்பினர் சேர்க்கைக்காக விஷால் சார்ட்ட பேசி உதவி கேட்கலாம்னுட்டு இருக்கேன். உறுப்பினராகிட்டா இன்னும் நிறைய வாய்ப்பு வரும்னு நினைக்கிறேன். சின்னதா இந்த வீடு, எனக்காகப் ப்ரேமும் அவருக்காக நானும் மனசுல சேத்துவெச்சிருக்கற எளிமையான அன்புனு இந்த வாழ்க்கையை அழகாக்கிருவோம் சார்” என்ற பிரீத்திஷா கண்களில் தேங்கி நின்றது அன்பின் சுனை.
“சிலர், நாங்க திருமணம் பண்ணிக்கிட்டதைக் கேட்டு அதிர்ச்சியானாங்க. ‘வம்சம் உங்களோட முடிஞ்சு போயிருமே’னு வருத்தப்பட்டாங்க. நான் வாழும் இந்த வாழ்க்கை மொத்தமுமே பிரீத்திஷாவுக்கு மட்டுமானதா இருக்குறது எனக்கு எவ்வளவு பெரிய பாக்கியம்” என்றபடியே பிரீத்திஷாவைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டார் ப்ரேம். ஜன்னலின் வழியே நுழைந்த சூரிய ஔி, கொஞ்சம் கொஞ்சமாய்க் குளிரத் தொடங்கியது.