
அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி
“I dream my painting and I paint my dream.”- ஓவியர் வின்சென்ட் வான்கா

ஒரு கலைஞர் எப்படி உருவாகிறார்?
திராவிடர் கழகத்தில் இணைந்து, கறுப்புச்சட்டை அணிந்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு... Stop... Stop... அந்தக் கலைஞர் இல்லை, இவர் படைப்பாளி. அவருடைய உருவாக்கத்தை ஐந்து ஸ்டெப்களாக புரோகிராம் பண்ணுவோம்.
1 - கலையை அகம் புறமாகக் கற்றுக்கொள்வது.
2 - விதிமுறைகள், நெறிமுறைகளைப் ( Rules) புரிந்துகொள்வது.
3 - முன்னோர்கள் செய்தவற்றை எல்லாம் `போல’ செய்வது.
4 - விதிகளுக்குட்பட்டுப் புதிய படைப்புகளை முயல்வது
5 - நெறிமுறைகளை எல்லாம் மீறி, புதிய படைப்புகளை உருவாக்குவது
ஓர் எந்திரக் கலைஞனையும் இதே பாணியில் திட்டம்போட்டு உருவாக்கிவிட்டால், அவருக்கு உலகின் எந்தக் கலையையும் கற்றுக்கொடுத்துவிடலாம் இல்லையா?
செயற்கை நுண்ணறிவுத்துறையில் நடப்பது அதுதான். மேலே சொன்ன ஐந்து விஷயங்களில் முதல் மூன்றையும் நியூரல் நெட்வொர்க்கில் புரோகிராம் செய்துவிடுகிறார்கள், கற்றுக்கொடுக்க விரும்புகிற விபரங்களை (Dataset) மொத்தமாக அதன் எந்திர மூளைக்குள் ஏற்றிவிடுகிறார்கள். எந்திர மண்டையில் ஏற்றியதும் நான்காவது படிநிலையைச் செய்யத்தொடங்கிவிடுகிறது!
ஐந்துதான் சிக்கலான பகுதி. மனிதர்களுக்குச் சாதகமான விஷயமும் அதுதான். மனிதர்களால் தப்பிப்பிழைக்க முடியும் என்கிற நம்பிக்கையே அந்த ஐந்தாவது பாய்ன்டில்தான் இருக்கிறது.
படைப்பாற்றலின் அடிப்படையே கனவுகள்தான். அவையே கற்பனைகளுக்கான கச்சாப்பொருள். எந்திரங்களுக்குக் கனவு வருமா, எந்திரங்களால் கற்பனை செய்யமுடியுமா? படைப்பாற்றலின் முக்கியமான கண்ணி அதுதான் என்றால் கற்பனைத்திறன்கொண்ட எந்திரங்கள் சாத்தியமா?
படைப்பாற்றல் மிக்க ‘எழுத்தாளர் கவிஞர் எந்திரங்’களின் வருகையைப்போலவே ஓவியர்களும் இசைஞர்களும்கூடக் களத்தில் இருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யப்படுவீர்களா?

ஓவியம்
ஆண்டு 2016, சான்ஃபிரான்ஸிஸ்கோவில் அந்த ஓவியக்கண்காட்சி நடக்கிறது. இது முழுக்க முழுக்க மனிதர்களின் உதவியோடு DEEP DREAM என்கிற எந்திரம் வரைந்த ஓவியங்களின் நிகழ்வு. இந்த டீப்ட்ரீமிடம் ஒரு புகைப்படத்தைக் கொடுத்துவிட்டால் அதைப் பார்த்து அது தானாகவே ஒரு கற்பனையை உருவாக்கிக்கொள்ளும். இது ஓவிய எந்திரம் கிடையாது, கற்பனை எந்திரம். தன் கற்பனைக்குத் தான்கண்ட புகைப்படத்தின் வழி ஒரு சித்திரத்தை உருவாக்கும். டீப்ட்ரீமின் கற்பனையை யாரும் தூண்டலாம். சில புகைப்படங்களைக் கொடுத்தால் போதும். ஆயிரக்கணக்கானோர் களத்தில் இறங்க, டீப்ட்ரீம் ஆயிரக்கணக்கில் கனவு கண்டு ஓவியங்களை உருவாக்கியது!
இந்த ஓவியங்களைத்தான் அங்கே பார்வைக்கு வைத்திருந்தனர். எல்லாம் கூகுள்காரன் ஏற்பாடு. இந்த ஆராய்ச்சிக்குப் பின்னால் இருப்பதும் லாரி பேஜ்தான். கண்காட்சியில் இரண்டு ஓவியங்கள் அதிகபட்சமாக எட்டு லட்ச ரூபாய்க்கு மேல் விலைகொடுத்து வாங்கப்பட்டன.
கூகுளின் டீப்ட்ரீமைப்போலவே மைக்ரோசாப்ட்டும் சமீபத்தில் தன்னுடைய AttnGAN என்ற ‘Drawing Bot’-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த AttnGAN-இடம் “எனக்கு மஞ்சள் நிறத்தில் ஒரு குருவி வேண்டும், அதன் சிறகுகள் கறுப்பாய் இருக்கவேண்டும். அலகுகள் குட்டியாக இருந்தால் நல்லது’’ என எழுதிக்கொடுத்தால், சில நிமிடங்களில் அச்சு அசலாக வரைந்து கொடுத்துவிடும். நாம் எழுதுவதைப் புரிந்துகொள்கிற ஆற்றல் கொண்டது இந்த டிராயிங் போட். கோடிக்கணக்கான படங்களை இதன் நியூரல் மண்டைக்குள் ஏற்றி ஏற்றி ஓவியராக மாற்றி வைத்திருக்கிறார்கள். Text to Image தொழில்நுட்பத்தில் இது ஒரு பாய்ச்சல் என்கிறார்கள்!
இந்த டிராயிங் பாட் Generative Adversarial Network, சுருக்கமாக GAN என்கிற தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. இது மற்ற நியூரல் மூளைகள்போலச் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைபோல இல்லாமல் வேறு வழிகளில் செயல்படும். எனக்குக் குருவிப் படம் வரைந்துகொடு என்றுகேட்டால் குருவிப் படத்தை வரைந்து விட்டு, தான் வரைந்தது குருவிப் படம்தானா என `கவனிக்கும்.’ இது புதுசு! தான் செய்கிற காரியத்தின் மீது கவனம் செலுத்துவது மனித இயல்பு. இதைத்தான் மைக்ரோசாஃப்ட் உருவாக்கிக் கொண்டிருக்கிறது!
Nvidia நிறுவனமும் தன் பங்குக்குப் பிரபலங்களை வரையும் ஓர் எந்திரரைத் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். இதன் நியூரல் மூளைக்குள் இருப்பது பிரபலங்களின் முகங்கள். இது தன்னிடம் இருக்கிற காது, மூக்கு, கண், வாய் சாம்பிள்களைக் கொண்டு நமக்கு எந்தப் பிரபலம் வேண்டுமோ அந்தப் பிரபலத்தை வரைய முற்படுகிறது! இப்போதைக்கு ஹாலிவுட்தான்.
இந்த எந்திரங்கள் எல்லாம் ஓவியர்களுக்கும் இன்டீரியர் டிசைனர்களுக்கும் உதவியாளர்களாக இருக்கும் என்கிறார்கள். ஓவியர்களுக்கு மாற்றாக வருகிற அளவுக்கு அவற்றுக்கு இன்னும் அறிவு வளரவில்லையாம். நம்முடைய குரலின் வழி புகைப்படங்கள் தேடுவதை இது எளிதாக்கும்! அனிமேஷன் வேலைகளில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். இன்னும் கொஞ்சம் த....ள்ளி யோசித்தால் ஒரு ஸ்க்ரீன் ப்ளேவைக் கொடுத்துவிட்டால் அதற்கான பாடங்களைப் போட்டு அனிமேஷன் படத்தையே எடுத்துத் தந்துவிடும்! இதெல்லாவற்றிற்கும்மேல் பார்வையற்றோருக்கு எதிரில் இருக்கிற ஆப்ஜெக்ட்டைப் பார்த்துப் புரிந்துகொண்டு சொல்கிற AI எப்படிப்பட்ட பயனை அளிக்கக்கூடியதாக இருக்கும்!
ஆனால், இப்போதைக்கு இந்த ஓவியர்கள் ஆப்பிள், குருவி, நாய், குதிரை படங்களைத்தான் வரைந்து கொண்டிருக்கிறார்கள். எனவே ஓவியரே கொஞ்சம் ஓய்வெடுங்கள்!

இசை
இளையராஜாவிடம் இசை எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் அது ரமணரருள் என்பார் (ரமணரருள் என்று உங்களால் சொல்ல முடியாது.டங் ட்விஸ்ட்டாகி விடும்!). ரஹ்மானிடம் கேட்டால் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பார். ஹாரிஸ் ஜெயராஜிடம் கேட்டால் கர்த்தருக்கு நன்றி என்பார்... யுவன்ஷங்கர் ராஜாவிடம் கேட்டால்... இமானிடம் கேட்டால்... உலகின் எல்லா முன்னணி இசைக் கலைஞர் களும் இசையை இறைத் தன்மையோடு கலந்தே வைத்திருக்கிறார்கள். சூஃபியில் தொடங்கி நம்ம ஊர் பறை, கர்நாடக இசை வரை ஆன்மிகத்துக்கும் இசைக்கும் அப்படியொரு நீடித்த பந்தம். இசையுலகில் நாத்திகர்களுக்குப் பெரிய பஞ்சமிருக்கிறது!
அதனால்தானோ என்னவோ ஓர் எந்திர இசைக் கலைஞனின் கச்சேரிகூட சர்ச் ஒன்றில்தான் அரங்கேற்றம் கண்டது. கிழக்கு லண்டனின் செயின்ட் டன்ஸ்டன் சர்ச்சில் ஒரு சிறியகூட்டம் ஐரிஷ் இசைக்கச் சேரி கேட்பதற்காகக் கூடியிருந்தனர். இசைக் கலைஞர்கள் காத்திருந்தது, FOLK-RNN என்ற எந்திர இசைக்கலைஞருக்காக!
இங்கிலாந்தின் கிங்ஸ்டன் பல்கலைக்கழக மற்றும் ராணிமேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு இது. Crowd-Sourcing முறையில் ஐரிஷ் இசையின் 23000 Repertoire இசைக்குறிப்புகள் தொகுக்கப்பட்டன. அவை Folk-rnnன் நியூரல் மூளைக்குள் செலுத்தப்பட்டன. 2015-ல் தொடங்கிய இந்த ஆராய்ச்சியில் Folk-rnn ஒரு லட்சம் இசைக்குறிப்புகளை உருவாக்கியிருக்கிறது.
சர்ச்சில் அமர்ந்திருந்த யாருக்குமே தொடக்கத்தில் இதில் நம்பிக்கை இல்லை. இசை ஆன்மாவோடு தொடர்புடையது, அதை ஜீவனில்லாத எந்திரங்களால் எப்படி உருவாக்கமுடியும் என்று நினைத்தார்கள். இருந்தாலும் கேட்டுவிடுவோம் என வந்திருந்தனர். ஆனால், Folk-rnn உருவாக்கிய ஐரிஷ் பாணி இசையைக் கேட்டபின் எல்லாச் சந்தேகங்களும் உடைந்துபோயின. எல்லோரையுமே கலங்கடிக்கச்செய்யும் மாய இசை அந்த சர்ச்சில் இசைக்கப்பட்டது. கைகளை விரித்துச் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த இயேசுநாதர் தவிர எல்லோருக்குமே ஒரே ஒரு சந்தேகம்தான் ``இந்த மெஷின் எப்படி இசையை உருவாக்கியது!’’
கவிஞர்கள் எப்படி எந்திரக்கவியைக் குறைசொன்னார்கள், அதேமாதிரிதான் இசைக்கலைஞர்களும் இதைக்கேட்டுக் குறைசொன்னார்கள். இந்த இசையில் உயிரில்லை, இந்த இசையில் ஸ்வரமில்லை... இந்த இசையில் அது மிஸ்ஸிங்.. இது மிஸ்ஸிங்... இப்படி. ஆனால், Folk-rnn ஓர் அறிவியல் அதிசயம். அது இசையமைத்த The Mal’s copporim என்கிற ட்யூன், லண்டனில் நடந்த ஐடியாக்களின் திருவிழாவில் இசைக்கப்பட்டது. அதை இங்கே கேட்டு மகிழலாம்! https://youtu.be/HOPz71Bx714
சோனியின் கணினி ஆராய்ச்சிப் பிரிவும் ஐரோப்பிய ஆராய்ச்சிக்கழகமும் இணைந்து இதே மாதிரியான ஓர் ஆராய்ச்சியை ஐந்தாண்டுகளாகச் செய்துவருகிறார்கள். நமக்கு வேண்டிய இசையை நாமே உருவாக்கிக்கொள்கிற மாதிரி ஓர் எந்திரத்தை உருவாக்குவதுதான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம். நமக்குநாமே இசை! Flow Machine என்கிற இந்த ப்ராஜெக்ட் ஏற்கனவே பல்வேறு விதமான பாடல்களை மனிதர் களோடு சேர்ந்து அல்லது அவர்ளுடைய உதவியோடு இசைக்கத் தொடங்கிவிட்டது. பீட்டில்ஸ் இசைத்தொகுப்பைக் கேட்டுக் கேட்டு அதிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் போலவே இன்ஸ்பயர் ஆகி இந்த ஃப்ளோ மெஷின் இசையமைத்த ‘Daddys Car’ என்ற இசைக்குறிப்பு ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.
அமெரிக்காவில் இசை எந்திரமொன்றை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது Ampermusic என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தில் பதிவு செய்துகொண்டு இசைக் கோர்வைகளை நாமே விரும்பியபடி உருவாக்கிக்கொள்ளலாம். இங்கிலாந்தைச் சேர்ந்த JUKEDECK என்ற நிறுவனமும் ஆம்பர் மியூசிக்கைப்போலவே நம் விருப்பத்தைக்கேட்டு அதற்கேற்ற இசையை உருவாக்கும் எந்திரம் வைத்திருக்கிறது. யூடியூப் வீடியோக்களில் தொடங்கி, விளம்பரங்கள், வீடியோ கேம்கள், கார்ப்பரேட் படங்கள் என கமர்ஷியல் பயன்பாடுகளுக்கான 50000 இசைத்துணுக்குகளை உருவாக்கி இருக்கிறது JUKEDECK! கோகோகோலாவில் தொடங்கி கூகுள் வரை ஜூக்டெக்கிற்கு உலகம் முழுக்க வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர்களின் வேலையை ஜூக்டெக் பறித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டது. குறைந்த செலவில் எந்திரம் போட்ட ஒரிஜினல் இசை. எப்போது கேட்டாலும் இசைகொடுக்கும். மிட்நைட்டில்தான் பாட்டுப் போடுவேன் என்று தொந்தரவு செய்யாது, ஈகோ பார்க்காது, காப்பி அடிக்காது எனப் பல அனுகூலங்கள் இருப்பதால் எந்திர இசைக்கு மார்க்கெட் ஏராளமாக இருப்பது தெரிகிறது.
- காலம் கடப்போம்