Published:Updated:

வின்னிங் இன்னிங்ஸ் - 7

வின்னிங் இன்னிங்ஸ் - 7
பிரீமியம் ஸ்டோரி
News
வின்னிங் இன்னிங்ஸ் - 7

பாசிட்டிவ் பகுதிபரிசல் கிருஷ்ணா, படங்கள்: க.பாலாஜி

வெற்றி பெற விரும்பு

“Simple things should be simple, complex things should be possible.”

- Alan Kay   

டலூரைச் சேர்ந்த சுரேஷ் சம்பந்தம்,மூன்று சகோதரர்களில் மூத்தவர். 1990-ல் ப்ளஸ் டூ முடித்துவிட்டு மருத்துவக் கல்லூரியில் சேர நினைத்தபோது, ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. குடும்பத்தில் அனைவரையும் அமரவைத்து, குடும்பச்சூழலை விளக்கினார் அப்பா. `சுரேஷைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்தால், அவன் ஐந்து வருடங்கள் படித்த பிறகுதான் சம்பாதிக்க முடியும்’ என்றார். அப்பாவின் ரியல் எஸ்டேட் தொழிலில் சில லட்சம் ரூபாய், வழக்கு போன்ற விஷயங்களால் முடங்கிக் கிடந்தது. அதில் இறங்கிப் பிரச்னைகளைச் சரிசெய்தால், குடும்பத்தைச் சமாளிக்க முடியும். 17 வயது சுரேஷ், இரண்டாவது சாய்ஸைத் தேர்ந்தெடுத்தார்.

அந்தச் சின்ன வயதில் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என அலைந்தது சுரேஷுக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்தது. கூடவே கடலூரில் இருந்த `வேல்முருகன் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்’டில் தட்டச்சு பயிலச் சேர்ந்தார். கொஞ்ச நாளில் அங்கே ஒரு கம்ப்யூட்டர் வந்தது. ``டைப்ரைட்டிங் 30 ரூவா... கம்ப்யூட்டர் கத்துக்க 50 ரூவா” என்று வேல்முருகன் சொன்னதும், கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார். அந்த ஆசை அவரை உள்ளிழுத்துக்கொண்டது. கற்றுக்கொடுக்க மாஸ்டர் யாரும் இல்லாமல், சுயம்புவாகக் கணினியில் தானே கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். இன்றைக்கு 650 கோடி ரூபாய் மதிப்புள்ள `ஆரஞ்ச்ஸ்கேப்’ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனராக இருக்கும் சுரேஷ் சம்பந்தத்தின் பயணம், அப்படி 50 ரூபாயில் ஆரம்பித்ததுதான்.

வின்னிங் இன்னிங்ஸ் - 7

பேஸிக் முடித்து, D base படிக்கும்போது கணினிதான் எல்லாமும் என மூழ்கினார். புதுச்சேரி சென்று கணினி பற்றிய ஒரு புத்தகம் வாங்கி வந்து இவரே கற்றுக்கொண்டார். ஒரே கணினிக்கு, மாலையானால் போட்டி வரும் என்று, மதியமே சென்று பல மணி நேரம் அதில் கழித்தார். அதே நேரம் தொலைதூரக் கல்வியில் பி.காம் படித்தார்.  இரண்டு வருடங்களுக்குப் பிறகு நண்பர்களுடன் சேர்ந்து கம்ப்யூட்டர் சென்டர் ஒன்று ஆரம்பித்தார். பெரிய வருமானம் இல்லை என்றாலும், முழு நேரமும் கணினியில் கழிக்கலாம் என்பது சுரேஷுக்குப் பெரிய விஷயமாக இருந்தது. `கற்றுக்கொள்ளலாம். என்ன கரியர் என்பதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்பதாக இருந்தது சுரேஷின் பார்வை. புத்தகங்களைப் பார்த்தே C, C++, Unix, Dos எல்லாம் படித்தார்.  மூன்று வருடங்களுக்குப் பிறகு பெரிதாக வருமானம் இல்லையென்று அந்த மையம் மூடப்பட்டது.

மூன்று வருடங்கள் கணினியோடு கழித்ததில், புரோகிராமிங் பற்றிய அறிவு சுரேஷுக்கு இருந்தது. ஆனால், தொழில்முறையாக அது சரிதானா என அறியவேண்டி, பெங்களூரு சென்று வேலை தேடினார். HP-யிலிருந்து அழைப்பு வந்தது. கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் படித்தவர்களைக் காட்டிலும், சுரேஷின் திறமை ஜெயித்தது. இன்ஜினீயரிங் இல்லாவிட்டாலும் இரண்டு நாள்கள் நடந்த நேர்முகத்தேர்வில் அசால்ட் காட்டிப் பணியில் சேர்ந்தார் சுரேஷ். மூன்றரை வருடங்கள் கழித்து, சென்னையில் உள்ள அமெரிக்க ஐ.டி நிறுவனப் பணியில் சேர்ந்தார். சுரேஷ் கையாண்ட டிவிஷனை, ‘அக்சென்ச்சர்’ நிறுவனம் வாங்கியது. ஆனால், அவர்களோடு பணிபுரிய விருப்பம் இல்லாமல் இவர் வெளியே வந்துவிட்டார்.

அந்த முடிவுதான்  `ஆரஞ்ச்ஸ்கேப்’ ஆரம்பிக்கவேண்டிய நிதியை சுரேஷுக்கு அளித்தது. தான் கையாண்ட மென்பொருள் பற்றி   சுரேஷ் நிறைய அறிந்திருந்தார்.  ‘அக்சென்ச்சர்’ அந்த டிவிஷனை வாங்கினாலும், அந்தக் குழுவைக் கையாள சுரேஷ் தேவைப்பட்டதால் அந்த நிறுவனம் பெரிய தொகை கொடுத்து சுரேஷிடம் அந்த புராஜெக்ட்டை முடித்துக்கொடுக்கச் சொன்னது. அதை முடித்துக்கொடுக்கும் நேரத்தில்தான், ‘ஆரஞ்ச்ஸ்கேப்’ மென்பொருள் நிறுவனம் ஆரம்பிக்கும் எண்ணம் துளிர்விட்டு, அதற்கான வேலைகளில் இறங்கினார்.  நண்பர் ஒருவரும் முதலீடு செய்ய முன்வந்தார். அப்படித்தான் ஆரம்பித்தது ‘ஆரஞ்ச்ஸ்கேப்.’

மென்பொருள் நிறுவனத் தொழில் என்பதை,  மற்ற தொழில்களோடு  ஒப்பிட முடியாது.  வருடத்துக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஒருவரைப் பணிக்கு அமர்த்தலாம் என்று வைத்துக்கொண்டால், 10 பேர் சேர்ந்தால் ஒரு கோடி ரூபாய் வருடம்தோறும் சம்பளத்துக்கு மட்டுமே தேவைப்படும். பிற தொழில்களில் அதன் மெஷின்கள், உபகரணங்கள் போன்றவை அசையும் சொத்துகளாக இருக்கும். மென்பொருள் நிறுவனங்களில் அப்படி இருப்பவை கணினிகள் மட்டுமே. அதற்குப் பெரிதாக ‘வேல்யூ’ இல்லை. மனிதர்களின் மூளைக்குத்தான் மதிப்பு. ஆகவே, பணிபுரிபவர்களுக்கு நல்ல வேலைச்சூழல் அமைந்தால் மட்டுமே நிறுவனத்தை வெற்றிகரமாகக் கொண்டுசெல்ல முடியும் என்பதை உணர்ந்தார் சுரேஷ்.

2004-ம் ஆண்டில்  ‘ஆரஞ்ச்ஸ்கேப்’ நிறுவனத்தை ஆரம்பிக்கும்போது இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான வேலைச்சூழலை உருவாக்க எண்ணினார். வேலை விஷயமாக அமெரிக்கா சென்று வந்தபோது, பார்த்த, கேட்ட `பெஸ்ட் பிராக்டீஸ்’ பலவற்றை ஆரஞ்ச்ஸ்கேப்பின் இன்டீரியரில் கொண்டுவந்தார். இந்த 12 வருடங்களில், ஐந்து முறை அலுவலக அமைப்பை மாற்றியிருக்கிறார். ஊஞ்சல் அமைப்பில் ஒரு மீட்டிங் டேபிள், பில்லியர்ட்ஸ் டேபிளில் மீட்டிங் என்று விதவிதமான அமைப்புகள். அலுவலகம் எங்கும் கீபோர்டில் இருக்கும் எழுத்துகளைப் பார்க்கலாம். ஒவ்வொரு மீட்டிங் ரூமுக்கும் HOME, MUTE, ALT, ENTER, SHIFT, Ctrl, +. காபிடேரியாவுக்கு Escape. பின்னால் இருக்கும் டைனிங் ஏரியாவுக்கு Backspace என்று எல்லா இடங்களிலும் ஏதோ ஒன்று கவரும்வண்ணம் இருக்கிறது. உள்ளேயே மினிகோல்ஃப், டேபிள் டென்னிஸ் என, பணிபுரிபவர்கள் அலுவலகத்தை நேசிக்க ஏராளமான அம்சங்களைக் கொண்டுவந்தார்.

பணியாளர்களின் மகிழ்ச்சியைக் (Employee Satisfaction Index) கண்காணித்துக்கொண்டே  இருக்கிறார் சுரேஷ். வாரம் ஒருநாள் குரூப் ஸ்டடிபோல வேலையைத் தாண்டி ஏதேனும் ஒன்றைக் குறித்துக் கலந்துரையாடுகிறார்கள்.  

முதல் இரண்டு புராடெக்டின்போதும் இருந்த சிக்கல்களின் மைனஸ்களை ப்ளஸ்ஸாக்கியிருக்கிறார். திடீரென  முக்கியமான ஒரு லீடர் நிறுவனத்தை விட்டு நிற்கும்போது, அந்த டீமைச் சேர்ந்தவர்களும் நின்றுவிட வாய்ப்புண்டு. மென்பொருள் நிறுவனத்தின் சவால் அதுதான். மீண்டும் அந்த டீம் செட் ஆகவேண்டுமென்றால், இரண்டு வருடங்கள் ஆகலாம். அப்படி ஒரு நிலை வரும்போதெல்லாம் இவர் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்துகொண்டு லீடர்களை உருவாக்கினார். 

அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி இந்திய மென்பொருள் நிறுவனங்களைப் பாதித்தபோது, கடுமையான பாதிப்பைச் சந்திக்க நேர்ந்தது  ‘ஆரஞ்ச்ஸ்கேப்.’  சம்பளம் கொடுப்பதில் சிரமம் இருந்தபோது கிரெடிட் கார்டின் மூலம் கொடுத்தார். காரை விற்றுக் கொடுத்தார். ஆனால், முன்னே போய்க்கொண்டே இருப்போம் என்ற எண்ணத்தைக் கைவிடவே இல்லை சுரேஷ். அதனால்தான்  இரண்டு புராடெக்ட்களுக்குப் பிறகு `KissFlow’ என்ற மூன்றாவது புராடெக்ட்டில் வெற்றி கையெட்டியிருக்கிறது. நான்கு பேருடன் ஆரம்பிக்கப்பட்ட ஆரஞ்ச்ஸ்கேப்பில், இன்று 150-க்கும்மேல் பணியாளர்கள் இருக்கிறார்கள். 121 நாடுகளில் 10,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்  இவரது புராடெக்டைப் பயன்படுத்திக்கொண் டிருக்கிறார்கள்.

கல்லூரிக்குச் சென்று படிக்காத ஒருவர், இன்றைக்குக் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். எதையும் விரும்பிக் கற்றுக்கொண்டால், அதுவே நம்மை - நாம் எட்டவேண்டிய உயரத்தை எட்டிப்பிடிக்க அழைத்துச்செல்லும்.

வின்னிங் இன்னிங்ஸ் - 7

சுரேஷ் சம்பந்தத்தின் பிசினஸ் மொழிகள்:

* விரும்பிச் செய். முயற்சி செய். பயிற்சி செய்.திரும்பச் செய். வெற்றி உனதே.

* எந்த ஐடியா வந்தாலும் முதலில் செய்துவிடுங்கள். அதில் தவறு நேர்ந்தால் திருத்திக்கொண்டு மேற்செல்லலாம். சரியாக வந்தால் மேலும் செம்மைப்படுத்தலாம்.

* ஒரு விஷயத்தைச் செய்யத் தயங்கினால், உங்கள் கண் முன்னே இன்னொருவர் அதைச் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பீர்கள். யோசனையை முதலில் செயல்படுத்துபவனே வெற்றிப்பயணத்தில்  ஒரு படி முன்னே இருப்பான்.