மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 78

வீரயுக நாயகன் வேள்பாரி
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி ( வீரயுக நாயகன் வேள்பாரி )

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

றம்பு வீரர்கள், வடக்கு-தெற்குப் போர்க்களங்களிலிருந்து ஊர் திரும்பினர். பாரி எவ்வியூரை அடைந்தபோது தேக்கனும் உதிரனும் வந்து சேர்ந்திருந்தனர். இவ்வளவு பெருந்தாக்குதல்களை இதுவரை பறம்பு நடத்தியதில்லை. எனவே, இதுவரை இல்லாத அளவுக்கு, போர் பற்றிய கதைகள் பறம்பு முழுவதும் நிறைந்திருந்தன.

வீரயுக நாயகன் வேள்பாரி - 78

போர் மனநிலையிலிருந்து விடுபடுதல் எளிதன்று. வெறிபிடித்த வேட்டை விலங்குக்கு ஒப்ப எண்ணிலடங்கா நாள்கள் செயல்பட்டுவிட்டு, அதனிலிருந்து இயல்புவாழ்வுக்கு மாறுதல் மனப்பிறழ்விலிருந்து மீள்வதைப் போன்றது. இந்தக் கொடும் துன்பத்திலிருந்து விரைவில் வெளிவர வேண்டும் என்பதால்தான் போர் முடிந்தவுடன் கொற்றவைக்குக் ‘குருதியாட்டுவிழா’ எடுப்பர். வாரக்கணக்கில் நடைபெறும் இந்தப் பெருவிழாவில், அத்தனை வகைக் கள்ளும் ஆற்றுப்பெருக்கென ஓடும். குடித்துக் களித்து, ஆடிப்பாடி, பேருணவு உண்டு முடிப்பர். இந்தப் பெரும்விழா, வீரர்கள் அனைவரையும் குணமாற்றம் அடையச் செய்யும். இழப்பின் வலியிலிருந்து மகிழ்வின் கொண்டாட்டத்துக்கு ஒவ்வொருவரையும் தள்ளும். கண்ணுக்குள் ஊறிக்கிடந்த கொலைவெறி வற்றி இறங்கும். வாழ்வு மீண்டும் வீசிச்செல்லும் இளங்காற்றுக்குத் தலையசைக்கிற சிறுபுல்லின் குணமெய்யும்.

ஆனால், இம்முறை குருதியாட்டு விழாவை நடத்த முடியவில்லை. பாண்டியனின் படை கீழ்த்திசையில் நிலைகொண்டுள்ளது. அவனுடனான போர் இன்னும் தொடங்கவே இல்லை. கொற்றவையின் கூத்துக்களத்தில் நீராட்டு விழாவின்போது வஞ்சினம் உரைத்த பாரியின் கூற்றில் இரண்டை முடித்தாகிவிட்டது. மூன்றாம் கூற்று தொடங்கப்படவேயில்லை. பறம்பைப் பொறுத்தவரை போர் இன்னும் முடியவில்லை. எனவே, போர் மனநிலையை உதற முடியாத நிலையிலேயே அனைவரும் இருந்தனர்.

வட்டாற்றில் சோழப்படையின் மீதான தாக்குதல் முடிந்த மறுநாள் இரவு, பாரி அங்கிருந்து புறப்பட்டுவிட்டான். ``இனி சோழப்படை மீள வாய்ப்பேதும் இல்லை. எனவே, தொடர்ந்து வீறுகொண்ட தாக்குதல் தேவையில்லை. பறம்பு மண்ணைவிட்டு அவர்களை அப்புறப்படுத்தினால் போதும். மிஞ்சியவர்கள் குறும்பியூர்க் கணவாயில் வெளியேறும் வரை, அவர்களை பிட்டன் பின்தொடரட்டும்’’ என்றான் பாரி.

இரவாதனைத் தாக்குதல் களத்திலிருந்து வெளியேற்றி, வேறு வேலைகளைக் கொடுத்தான். எதிரிப்படை வீறுகொண்டு நிற்கும்போதே அவனது தாக்குதலை அவர்களால் எதிர்கொள்ள முடியாது; இப்போதோ அவர்கள் உயிர்பிழைக்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இரவாதனைக் களம் விட்டு வெளியேற்றுவது அவசியம் எனக் கருதினான் பாரி.

``யானையின் துதிக்கைக்குள் சென்ற சங்கு அட்டைகள் ஒருசில நாள்களில் தாமே செத்து உதிரும் வரை யானைக்கு வேதனை இருக்கத்தான் செய்யும். யாரையும் நெருங்க விடாது. தாக்குதலுக்குள்ளாகி இறந்த யானைகளைத் தவிர  குற்றுயிராய் இருக்கும் யானைகளுக்கும் சிகிச்சை தேவைப்படும் யானைகளுக்கும் உதவ வேண்டியது நமது கடமை. நமது மலைகளுக்குள் பிளிறிக் கதறும் யானைகளுக்கு நாம் உதவியே ஆகவேண்டும். யானைகளுடனான ஆதிமொழியை உருவாக்கிய தந்தமுத்தத்தைச் சேர்ந்தவர்களை அழைத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்” என்று இரவாதனுக்கு உத்தரவிட்டான் பாரி.

யானைப்படையை வீழ்த்துவதற்காக உயர்த்திய வில்லோடு அலைந்துகொண்டிருந்த இரவாதனை, தந்தமுத்தத்துக்காரர்கள் கேட்கும் பச்சிலைகளைப் பறித்துத் தருபவனாக மாற்றினான் பாரி. எண்ணிலடங்காத காயங்களுடனும் வேதனையுடனும் அலைந்துதிரியும் யானைகளை, தந்தமுத்தத்துக்காரர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை அவன் கூர்ந்து கவனிக்க வேண்டியது முக்கியம். வீரன், மருத்துவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு. அதுவும் வேதனைகொண்ட போர்யானைகளை நெருங்கவும், தேவைப்பட்டால் எளிய முறையில் அவற்றை வீழ்த்தவும், பிறகு சிகிச்சையளிக்கவும் எண்ணற்ற நுணுக்கங்களைத் தந்தமுத்தத்துக்காரர்கள் செய்தனர். இவையெல்லாம் பெரும்படைக்குத் தலைமையேற்பவர்களுக்குத் தேவையான பயிற்சி. இவ்வளவு யானைகளுக்கிடையே இப்படியொரு பயிற்சியைப் பெறும் வாய்ப்பு இரவாதனைத் தவிர பறம்பில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. அவசியம் எனக் கருதியே பாரி இந்தப் பயிற்சியில் அவனை ஈடுபடுத்தினான்.

எழுவனாற்றை விட்டு பாரி புறப்பட்ட பிறகு வலக்கரையில் இருந்த இரவாதன் தந்தமுத்தத்துக்குச் சென்றான். இடதுகரையில் இருந்த பிட்டன், சிறு படையை உடன் வைத்துக்கொண்டு எதிரிகளைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தான். பெரும் எண்ணிக்கையிலான பறம்பு வீரர்கள் ஊர்களுக்குத் திரும்பினர்.

யானைகளின் கொடூர அழித்தொழிப்பிலிருந்து செங்கணச்சோழனைக் காப்பதில், சோழர்படையின் முன்னணித் தளபதிகளும் நெடுங்காடர்களும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டனர். தேர்ந்த வீரர்களின் வலிமைமிகுந்த பாதுகாப்பு வளையத்தினூடே செங்கணச்சோழனை முன்னகர்த்தி வந்துகொண்டிருந்தனர். தாக்குதல் நடந்த முதல் நாள் இரவு `வேந்தனைக் காக்க முடியாத நிலை வந்துவிடுமோ!’ எனக் கவலைப்பட்டனர். நெடுங்காடர்கள், பாறைக்குகை ஒன்றுக்குள் வேந்தனை அனுப்பி, யானைகள் உள்நுழையாதபடி நெருப்பு வளையத்தை உருவாக்கிக் காத்தனர். அடுத்தடுத்த நாள்களில் யானைகளுடனான ஆபத்து குறையத் தொடங்கியதும் தகுந்த ஏற்பாட்டோடு பறம்பை விட்டு வெளியேறும் பயணத்தைத் தொடங்கினர்.

சிறிய படைப்பிரிவு ஒன்று மிகுந்த பாதுகாப்புத் தன்மையோடு ஆற்றின் ஓரப்பகுதியின் வழியே தப்பிச்சென்று கொண்டிருப்பதை அறிந்த பிட்டன், அவர்களை இறங்கித் தாக்க முடிவெடுத்தான். `பெரும்படை முழுமுற்றாக அழிந்த பிறகும், இவர்கள் இவ்வளவு வேகமாகத் தப்பிச்செல்கின்றனரே!’ என்று சற்றே அவசரப்பட்டான்.

வேந்தனைக் காத்து நின்றது, மிகத் தேர்ந்த வீரர்களைக்கொண்ட படைப்பிரிவு. உடன் நெடுங்காடர் தளபதி துணங்கன் இருந்தான். தளபதிகளில் தப்பிப்பிழைத்தது அவன் மட்டும்தான். `பறம்புநாட்டை ஊடறுத்துச் செல்லும் தாக்குதலுக்கு எங்களை நம்பி நீங்கள் வரலாம்’ என்று நெடுங்காடர்கள் அளித்த வாக்கின் அடிப்படையில்தான் செங்கணச்சோழன் வந்தான். அந்த வாக்கைக் காப்பாற்ற இறுதி வரை முயன்றுகொண்டிருந்தான் துணங்கன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 78

பொழுது மங்கிக்கொண்டிருந்த மாலை நேரத்தில் ஆற்றின் வளைவு ஒன்றில் பொருத்தமான இடத்தில் வேந்தனுக்குக் கூடாரம் அமைக்கப்பட்டது. அருகில் இருந்த மூங்கில் மரங்களை ஆற்றுக்குள் சாய்த்துப்பிடித்து வலைப்பின்னல்களை நெடுங்காடர்கள் உருவாக்கினர். எந்தவித பாதிப்பும் அடையாத பன்னிரண்டு யானைகளைப் பாதுகாப்புக்கு நிறுத்தினர். கவசவீரர்கள், கூடாரத்தைச் சுற்றி நின்றிருந்தனர்.

`இவன்தான் இந்தப் படையெடுப்புக்குத் தலைமை தாங்கியவன்!’ என்று இந்த ஏற்பாடுகளைக் கண்டதும் பிட்டனுக்குத் தோன்றியது. அமைக்கப்பட்ட கூடாரத்தின் பின்பகுதியில் ஆற்றுவழியே தாக்குதல் எதுவும் நடந்துவிடக் கூடாது எனப் பன்னிரு யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. கூடாரத்தைச் சுற்றிக் கவசவீரர்கள் விழிப்புடன் காத்து நின்றனர். காரிருள் சூழ்ந்திருந்தபோது கூடாரத்தின் இடதுபுறமிருந்து பிட்டனின் தலைமையிலான சிறுபடை ஆற்றுமணலுக்குள் இறங்கியது.

பிட்டனின் பார்வை முழுவதும், கூடாரத்தைச் சுற்றி நின்றிருந்த கவசவீரர்களை நோக்கியே இருந்தது. ஆனால், மண் போத்தி உறங்கும் பழக்கம்கொண்ட நெடுங்காடர்கள், ஆற்றுமணலுக்குள் தலை மட்டும் மேலே தெரிவதைப்போல மறைந்து கிடப்பதை அவன் கவனிக்கவில்லை. கூடாரத்தை நோக்கித் தாக்குமாறு பிட்டன் ஆணையிட்டதும் உடன்வந்தவர்கள் வில்லை உயர்த்த எத்தனித்தபோது மணலுக்குள்ளிருந்து தெறித்து மேலெழும்பினர் நெடுங்காடர்கள். இரு கைகளிலும் உருவிய வாள்களோடு எழுந்தவர்கள் தங்களின் கை அருகில் இருக்கும் பறம்பின் வீரர்களை கணப்பொழுதில் வெட்டிச் சரித்தனர்.

பல்லாயிரம் வீரர்களைக்கொண்ட படையை உருத்தெரியாமல் அழித்த எதிரிகள் கை அருகில் சிக்கியுள்ளனர் என்ற வெறியோடு நெடுங்காடர்கள் வெட்டியபோது, வில்லிலிருந்து விடுபட்ட அம்புகள் கவசவீரர்களைத் துளைக்கவும் செய்தன. ஓசை கேட்டு கூடாரத்துக்குள் இருந்த செங்கணச்சோழன் சட்டெனத் திரை விலக்கி வெளியே வந்தான். மேலே தெறித்த மணற்துகள்களுக்கு நடுவே அவனது உருவத்தைத் துல்லியமாகக் கண்டான் பிட்டன். கையில் இருந்த ஈட்டியை அவனை நோக்கி எறிந்தபோது, நெடுங்காடர்களின் எண்ணிலடங்கா வாள்கள் பிட்டனை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தன.

வலதுகால் தொடையில் ஈட்டி இறங்கிய கணம், பேரலறலோடு செங்கணச்சோழன் மண்ணில் சரிந்தான். அதே வேளையில் பிட்டன் எண்ணற்ற துண்டுகளாக மணலெங்கும் சிதறிக்கிடந்தான்.

குலசேகரபாண்டியனின் வயதும் அனுபவமும், யாராலும் கணிக்க முடியாத முடிவுகளை எப்போதும் எடுப்பவராக அவரை மாற்றியிருந்தன. முதல்நிலைப் படை வெங்கல்நாட்டுக்கு வந்ததும் போருக்கான ஆயத்த வேலைப்பாடு தொடங்கிவிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மிக விரிந்த அளவில் பாடிவீடுகளை ஏற்படுத்தி, படைகளைப் பகுதி பகுதியாகக் கொண்டுவந்து இறக்கும் உத்தரவை மட்டும் கருங்கைவாணனுக்கு வழங்கியிருந்தார்.

பாண்டியநாட்டின் வெவ்வேறு திசைகளிலிருந்து படைகள் வெங்கல்நாடு நோக்கி நகர்ந்தன. ஆனால், படை முழுமையும் அங்கு வந்து குவிந்துவிடவில்லை. குறிப்பிட்ட இடைவெளிகளில் படைகளை ஆங்காங்கு தங்கவைத்து, பேரரசரின் உத்தரவுக்கு ஏற்ப வெங்கல்நாட்டை நோக்கி நகர்த்தினர்.  
    
இளவரசர் பொதியவெற்பனும் தளபதி கருங்கைவாணனும் பாடிவீட்டிலேயே முகாமிட்டிருந்தனர். ஆனாலும் பேரரசரின் எண்ண ஓட்டங்களையோ போர் உத்திகளையோ அவர்களால் யூகிக்க முடியவில்லை. மையூர்கிழார் மிக மும்முரமாக இருந்தார். எண்ணிலடங்காத படைப்பிரிவுகள் நாள்தோறும் வந்தவண்ணம் இருந்தன. அவரது நிலப்பரப்பு எங்கும் குதிரைகளும் யானைகளும் குறுக்கும் நெடுக்குமாகப் போய்வந்தபடி இருந்தன. எல்லா ஏற்பாடுகளிலும் அவரது ஆலோசனை அடிப்படையாக இருந்தது. பேரரசின் அதிகாரமிக்க பிரதிநிதியாக எல்லோராலும் அவர் பார்க்கப்பட்டார். பாண்டிய நாட்டின் எண்ணற்ற படைப்பிரிவின் தளபதிகளும் சிற்றரசர்களும் வந்து சேர்ந்துகொண்டே இருந்தனர். ஆனால், பேரரசர் மட்டும் இன்னும் வெங்கல்நாட்டுக்கு வந்து சேரவில்லை. அவர் மதுரையிலும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் தும்பாற்று அரண்மனையில் இருந்தார்.

சேரனின் தாக்குதலைப் பற்றியும் சோழனின் படையெடுப்பைப் பற்றியும் ஒற்றர்கள் மூலம் செய்திகளை நாள் தவறாமல் சேகரித்தபடி இருந்தார். அந்தத் தாக்குதலில் ஏற்படும் விளைவுகளைப் பொறுத்தே தன்னுடைய உத்திகளை வகுப்பது என முடிவெடுத்திருந்தார். முதலில் சேரனின் தோல்வி பற்றிய செய்தி வந்துசேர்ந்தது. நீண்டநாள்களுக்குப் பிறகு, சோழப்படையின் அழித்தொழிப்பு பற்றிய செய்தி அவரை எட்டியது. எல்லாவற்றையும் பொறுமையோடு சிந்தித்துக்கொண்டிருந்தார். தனக்கான உத்திகளைத் தனித்துவத்தோடு வகுத்துக்கொண்டிருந்தார்.

போர் என்பது உத்தியால் மட்டும் தீர்மானிக்கப்படுவதன்று; கடைசிகணம் வரை அந்த உத்தியைச் செயல்படுத்தும் புறச்சூழல் நம்முடைய ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் அல்லது அதனுடைய ஆதிக்கத்தால் பாதிப்படையாத உத்திகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். சேரனும் சோழனும் தவறிய இடங்களைப் பற்றி நேரில் பார்த்தவரைப்போலச் சுட்டிக்காட்டிப் பேசிக்கொண்டிருந்தார். இருநாட்டுத் தாக்குதல்களும் தோல்வியடைந்த பிறகு, வெங்கல்நாடு நோக்கி முன்னகர்ந்தார் குலசேகரபாண்டியன்.

காற்றடிகாலம் உச்சம்கொண்டிருந்தது. குளம், குட்டைகளில் நீரின் இருப்பு மேலும் குறைந்தது. ஆனாலும் மேற்குமலையில் மேகங்கள் கூடும்காலம் நெருங்கிவிட்டது. அதைக் கணித்தே அவரின் நகர்வு இருந்தது. பாண்டியப் பெருவேந்தன் வெங்கல் நாடு நோக்கி வரும் செய்தி எட்டியவுடன் படையெங்கும் உற்சாகக் கொண்டாட்டம் தொடங்கியது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு குலசேகரபாண்டியன் நேரடியாகப் போர்க்களம் ஒன்றுக்கு இப்போதுதான் வருகிறார்.

முடியனும் காலம்பனும், கீழ்த்திசைப் போர்க்களத்துக்கு வந்து மாதக்கணக்காகிறது; பாண்டியப்படை பாடிவீடு அமைத்து எங்கெல்லாம் தங்குகிறார்கள், என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதைக் கவனித்தபடி இருந்தனர்.

வேட்டூர்பழையன், மலையடிவாரம் எங்கும் தன் வீரர்களை நிறுத்தி எதிரிகளின் ஒவ்வோர் அசைவையும் கண்காணித்தபடி இருந்தான். மாதக்கணக்கில் பாண்டியர் படை வந்து குவிந்துகொண்டே இருந்தது. கண்களுக்கு எட்டும் தொலைவு வரை ஈட்டி ஏந்திய வீரர்கள் தென்பட்டனர்.

நீலனால் அமைதிகொள்ள முடியவில்லை. இறங்கித் தாக்கவேண்டும் என்ற அவனது எண்ணத்தை மற்றவர்கள் ஏற்கவில்லை. பறம்பினுள் நுழையாத யாரின் மீதும் தாக்குதல் தொடுக்க நமக்கு உரிமையில்லை என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. மற்ற இரு திசைகளிலும் ஈட்டிய வெற்றிச் செய்தி இங்கு வந்து சேர்ந்ததும் நீலனின் வேகம் இன்னும் கூடியது. அவனைக் கட்டுப்படுத்துதல் வேட்டூர் பழையனால் முடியாதது. எனவே, நீலனை முடியனோடு இருக்கச்செய்தான் பழையன். முடியனின் சொல்லைப் பறம்புவீரன் யாரும் மீற முடியாது. வேறு வழியில்லாமல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டான் நீலன். காலம்பனின் மனநிலையும் ஏறக்குறைய அதேபோல்தான் இருந்தது. கீழ்த்திசை ஊர்களின் வீரர்கள் மலையெங்கும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

காற்றடிகாலம் தொடங்கும் முன்பே தேக்கனும் உதிரனும் வந்திறங்கினர். கூழையன் மட்டும் தென்திசையில் சேரநாட்டு எல்லையில் இன்னும் இருந்தான். தேக்கன் வந்த பிறகு உத்திகள் மாற்றப்படும் என்று அவர்களுக்குத் தெரியும். இருபெரும் வெற்றிச் செய்திகளோடு எவ்வியூரில் இருந்த வீரர்களின் கூட்டம் தேக்கனின் தலைமையில் கீழ்த்திசைக்கு இறங்கியது. `அடுத்த சில நாள்களில் பாரி வரவுள்ளான்’ என்ற செய்தியையும் தேக்கன் சொன்னான். எல்லோரும் அளவற்ற மகிழ்வடைந்தபோது நீலன் மட்டும் சற்றே வருத்தம்கொண்டான். தனது பொறுப்பில் இருக்கும் காவல்திசை ஒன்றுக்குப் பாரி வரும்போது அவனுக்கு வெற்றியைத் தந்து வரவேற்கும் வாய்ப்பற்றுப்போனதே என்ற கவலை, அவனது முகத்தில் இருந்தது. ஆனாலும் பறம்பின் ஆசான் தேக்கனும் உற்றதோழன் உதிரனும் எண்ணிலடங்காத எவ்வியூர் வீரர்களும் வந்து இறங்கிய மகிழ்வு, அவனை விரைவில் ஆற்றுப்படுத்தியது.

எழுவனாற்றிலும் செவ்வரிக்காட்டிலும் கொட்டித்தீர்த்த எதிரிகளின் குருதியேந்தி இரு திசைப் படையின் பொறுப்பாளர்களும் வேட்டுவன் பாறைக்கு வந்து சேர்ந்தனர். பறம்பின் மாவீரர்கள் எல்லோரும் ஒன்றாய்க் குவிந்திருக்க, நாண்முழவைக் குறுந்தடிகொண்டு எழுப்பும் ஓசை காரமலையின் உச்சியிலிருந்து எதிரொலித்தது. பாரியின் வருகையைக் கீழ்த்திசை முழுவதும் அறிவிக்கும் ஓசை அது. வழக்கமான நாள்களில் இதுபோன்ற ஏற்பாடுகள் இல்லை. போர்க்காலத்தில் எல்லாம் ஒழுங்கமைக்கப்ப ட்டிருந்தது. தான் இருந்த இடத்திலிருந்து பறம்பு முழுவதும் குறிப்பறிந்து வழி நடத்திக்கொண்டிருந்தான் வாரிக்கையன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 78

கபிலரோடு நடந்து வந்த பாரி காரமலையின் முகட்டின் மீது கால் வைத்ததும் நாண்முழவின் ஓசை கேட்டது. எல்லோரும் ஓசை கேட்ட திசை நோக்கி வியப்புற்றுத் திரும்பினர். பாரியோ, கபிலரைப் பார்த்து ``இது வழுக்குப்பாறை. கவனமாகக் காலெடுத்து வையுங்கள்” என்றான்.

``பலமுறை இந்த வழியில் காரமலையைக் கடந்து இரு பக்கங்களும் போய்வந்துள்ளேன், அப்போதெல்லாம் முழவின் ஓசை கேட்டதில்லையே” என்றார் கபிலர்.

``இவையெல்லாம் வாரிக்கையனின் ஏற்பாடு. செய்தித்தொடர்புகளின் வலைப்பின்னல்களை இருந்த இடத்திலிருந்தே உருவாக்கும் நுட்பம் அவர் அளவுக்குப் பறம்பில் வேறு யாருக்கும் இல்லை” என்றான் பாரி. கபிலர் வியந்து கேட்டுக்கொண்டிருந்தார்.

``நான் வருவதை முன்னோக்கி அறிவிக்கும் ஓசை என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். பின்னோக்கி அவருக்குச் சென்று சேரவேண்டிய செய்தி ஒன்று வேறு ஒலிக்குறிப்பில் போய்க்கொண்டிருக்கும்” என்றார்.

``எவ்வளவு ஆற்றல்கொண்ட மாமனிதனாக அவர் இருக்கிறார்!” என்று கபிலர் வியந்து கூறியபடி பாரியின் தோள்பற்றி நடந்து கொண்டிருந்தார். பாரி சொன்னான், ``பறவைகளைக் கூடுகளில் பார்த்து மகிழ்வது ஓர் அனுபவம். வானமெங்கும் பறந்து திரிவதைப் பார்த்தறிவது இன்னொரு வகை அனுபவம். அதுவே வேட்டைக்காகச் சிலிர்த்தபடி ஈட்டிபோல இறங்கித் தாக்குவதைப் பார்த்தல் முற்றிலும் வேறுவகை அனுபவமாயிற்றே! இது வேட்டைக்காலம் அல்லவா, தங்களின் ஆற்றல் முழுமையும் பயன்படுத்தும் வாய்ப்பாக ஒவ்வொரு பறம்பு மனிதனும் கருதுவான்” என்றான் பாரி.

``ஆற்றல் அளவிடற்கரியது. அது பயிற்சியோடும் திறமையோடும் மட்டும் தொடர்புடையதன்று; சூழலுடனும் உணர்வுடனும் தொடர்பு டையதாயிற்றே” என்றார் கபிலர்.

``ஆம், அதனால்தான் தளர்ந்த வயதில் வாரிக்கையனும், மிக இளம்வயதில் இரவாதனும் எண்ணிப்பார்க்க முடியாத நுட்பத்துடனும் வலிமையுடனும் ஆற்றலை வெளிப்படுத்து கின்றனர்.”

ஒரு கணம் அதிர்ந்தார் கபிலர். மகா திறமைகொண்ட வாரிக்கையனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், அந்த வரிசையில் இரவாதனை ஒப்பிட்டுப் பாரி சொன்னது வியப்பைத் தந்தது. சற்றே அமைதிகொண்ட கபிலர் ``இரவாதனை...” என்று மெள்ளத் தொடங்கினார்.

கபிலர் என்ன கேட்க வருகிறார் என்பதைப் புரிந்துகொண்ட பாரி சொன்னான், ``எழுவனாற்றுப் போர்க்களத்தில் ஒரு காட்சியைப் பார்த்தேன். இரவாதன் எய்த அம்பொன்று யானையின் கழுத்தில் ஒருபக்கம் தைத்து மறுபக்கம் எட்டிப்பார்த்தது. அவனது வில்லடியின் ஆற்றல் அளவிட முடியாததாக இருக்கிறது.”

வியப்பு மீறாமல் கபிலர் சொன்னார் ``இதேபோன்ற வியப்போடு நீலனின் ஆற்றலைப் பற்றி தேக்கன் சொல்லிக் கேட்டுள்ளேன்.”

``ஆம், இருவரும் இணையற்ற ஆற்றல்கொண்ட வீரர்கள்தாம். ஆனால், வீரர்களை மாவீரர்களாக மாற்றுவது போர்க்களம்தான்” சொல்லியபடி நடையை நிறுத்தினான் பாரி.

குனிந்தபடி கவனமாக நடந்துவந்த கபிலர், பாரி நின்றதும் தானும் நடையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தார். மலையடிவாரச் சமவெளிப் பரப்பில் விரிந்துகிடந்தது பாண்டியர் படை. கண்ணிமைக்காமல் அதைப் பார்த்துக் கொண்டிருக்கையில் பாரி சொன்னான் ``பெரும்புகழை அணைத்துக்கொள்ளும் மாவீரர்களுக்காக, களம் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.”

வேந்தனுக்கு இதுவரை யாரும் தந்திராத வரவேற்பைத் தர வேண்டும் என்று இரவு பகலாகப் பணியாற்றிக்கொண்டிருந்தது வெங்கல்நாடு. குலசேகரபாண்டியனின் காலடி வெங்கல்நாட்டு அரண்மனையில் பதிந்தபோது, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து தொட்டு வணங்கி வரவேற்றார் மையூர்கிழார். பறம்பின் மீதான போர் பற்றிய முடிவெடுக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டவுடன் தனது அரண்மனையில் புதிய மாளிகை ஒன்றைக் கட்டத் தொடங்கினார் மையூர்கிழார். இந்தப் போரில் குலசேகரபாண்டியன் நேரடியாகக் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படி அவர் வந்தால் தங்குவதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்தார்.

பாண்டியப் பெருவேந்தனின் தங்கல்மாளிகை பேரழகோடு வடிவமைக்கப்பட்டிருந்தது. `கொற்றர்களின் தாய்நிலம்’ என்று வர்ணிக்கப்படும் வெங்கல்நாடு, அதிசிறந்த மாளிகையை வடிவமைத்திருந்தது. பேரரசர் உள்நுழைந்ததும் அதன் சுதை வேலைப்பாட்டிலும் வண்ண ஓவியத்திலும் வியந்து நிற்பார் என மையூர்கிழார் எதிர்பார்த்தார். குலசேகரபாண்டியனின் கண்களுக்கு அவை எவையும் தெரியவில்லை. அவர் பார்க்க நினைப்பது மாளிகையை அன்று, வெங்கல்நாட்டின் நிலவியல் அமைப்பை; பறம்பு மலையின் வாகினை; தாக்கி முன்னேறவும் தற்காத்து நிற்கவுமான நிலப்பரப்பை.

வீரயுக நாயகன் வேள்பாரி - 78

மறுநாள் அதிகாலை, கவசவீரர்களின் அணிவகுப்பினூடே நிலப்பரப்பைப் பார்வையிடப் புறப்பட்டார் குலசேகரபாண்டியன். வேட்டுவன் பாறைக்கு மூன்று காத தொலைவிலிருந்து வெங்கல்நாடு தொடங்குகிறது. மையூர்கிழார் முதலில் அங்குதான் வேந்தரை அழைத்து வந்தார். அங்கிருந்து எதிரில் தெரியும் காரமலையைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார். பின்னர் தென்மேற்குத் திசை நோக்கி வேந்தரின் தேர் நகர்ந்தது. தேருக்கு முன்னால் கருங்கைவாணனும் பொதியவெற்பனும் குதிரையில் அணிவகுத்தனர். அவர்களுக்கு முன்னால் காவல்வீரர்கள் சென்றனர். இதேபோல, தளபதிகளும் வீரர்களும் பின்புறமும் அணிவகுக்க, வேந்தரின் தேர் நகர்ந்துகொண்டிருந்தது.

தேரின் இடதுபுறமாகக் குதிரையில் வந்தபடி மலையையும் அதற்கு மேலே இருக்கும் ஊர்களையும் விளக்கினார் மையூர்கிழார். மழைக்காலம் தொடங்கிவிட்டதால், நிலத்தின் தன்மையை மதிப்பிடுவது சற்று எளிதாக இருந்தது. பதியும் குதிரைகளின் குளம்படிகளையும் தேர்ச்சக்கரத்தின் தடங்களையும் கூர்ந்து பார்த்தபடியே பயணித்தார் வேந்தர்.

வெள்ளடிக்குன்றின் அடிவாரத்தை அடைந்தனர். அங்கிருந்துதான் பாண்டியர் படை தங்கியுள்ள கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேரரசரின் வருகையைக் கண்டு வீரர்கள் ஆயுதங்கள் ஏந்தி, பெருமுழக்கம் செய்தனர். மிகத் தள்ளி பேரரசரின் தேர் பயணப்பட்டுக்கொண்டிருந்தது. வீரர்களின் ஆவேச ஒலி மலையெங்கும் எதிரொலித்தது. பேரரசரின் கவனம் வெள்ளடிக்குன்றின் உயரத்தின் மீதே இருந்தது.
 
``அந்த ஊரின் பெயரென்ன சொன்னாய்?” எனக் கேட்டார்.

`எந்த ஊரைக் கேட்கிறார்?’ என்று சற்றே குழப்பமானார் மையூர்கிழார்.

``முதலில் சொன்ன ஊரின் பெயர்?”

``வேட்டுவன் பாறை பேரரசே” என்று பணிந்து சொன்னார்.

``அது அவர்களின் காவல் தலைவர்கள் இருக்கும் ஊர் என்று சொல்கிறாய். பின்னர் ஏன் படையை இவ்வளவு அருகில் தங்கவைத்துள்ளாய்?” எனக் கேட்டார்.

யாரிடமும் பதிலில்லை.

குதிரைகள் மீண்டும் புறப்பட்டுப் போயின. வரிசையாகக் குன்றுகளின் பெயரையும் தன்மையையும் அப்பால் உள்ள ஊர்களின் பெயர்களையும் சொல்லியபடி வந்தார் மையூர்கிழார். இடதுபுறம் பாண்டியப்படையின் வீரர்கள் வெற்றிக்கூச்சல் எழுப்பியபடி இருந்தனர். பேரரசரின் வருகையால் வீரர்களின் உணர்வு எல்லைகடந்ததாக இருந்தது. படைவீட்டின் இறுதி எல்லை இருக்கும் நெடுங்குன்றம் வரை நிற்காமல் வந்தடைந்தனர். காரமலையின் தன்மைகளை அண்ணாந்து பார்த்தபடி நின்றார்.

வெள்ளடிக்குன்று தொடங்கி நெடுங்குன்று வரை தெற்கு வடக்காகப் பாடிவீடுகள் அமைக்கப்பட்டதன் காரணத்தைக் கருங்கைவாணன் சொல்ல முற்பட்டான்.

பேரரசரோ ``படை தங்குவதற்கான பாடிவீடுகள் இங்கிருந்து தொடங்கி, தென்திசையில் அமையட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

`இவ்வளவு ஏற்பாடுகளையும் இனி மாற்ற வேண்டுமா?!’ என்ற அதிர்ச்சி எல்லோர் முகங்களிலும் தெரிந்தது. அவர் சொன்னதற்கான காரணம் எவ்வளவு சரியானது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

மழைக்காலம் தீவிரமடையத் தொடங்கியது. நெடுங்குன்றத்திலிருந்து வெள்ளடிக்குன்று வரை அமைக்கப்பட்ட பாடிவீடுகளையும் படை அமைப்புகளையும் வேந்தர் சொன்னபடி மாற்றும் பணியைத் தொடங்கினர். வெள்ளடிக்குன்றிலிருந்து தொடங்கி, தென்திசையில் நீண்டது படையமைப்பு.

வெங்கல்நாட்டு மாளிகை முழுவதும் போர்ப்பாசறையானது. உணவு தானியங்களுக்கான சேமிப்புக்கலன்களாக அவற்றில் பல உருமாறின.  பாண்டியநாட்டுப் படை பல்வேறு சிற்றரசர்களின் பகுதிகளில் பரவலாக முகாமிட்டிருந்தது. மழைக்காலம் முடிவடைவதற்காக அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மழை தீவிரமடைவதற்கு முன், புது விருந்தினர் வெங்கல்நாட்டுக்கு வந்தனர். அவரது வருகை, பேரரசருக்குத் தெரிவிக்கப்பட்டது.

குலசேகரபாண்டியன் அவரின் வருகையை எதிர்பார்த்திருந்ததால் வியப்பேதும் அடையவில்லை. ``உள்ளே அழைத்துவரச் சொல்” என்றார்.

சிறியதேயானாலும் எழில்மிகு மாளிகைக்குள் நுழைந்தான் ஹிப்பாலஸ். வஞ்சிமாநகரில் சேரனின் போர் உத்திகளைக் கண்டு வியந்தவன், அங்கிருந்து புறப்பட்டுப் புகாரை அடைந்தபோது செங்கணச்சோழனின் படையெடுப்பையும் அதற்கான காரணத்தையும் கேட்டுத் திகைப்புற்றவன், பாரியை வீழ்த்தும் வல்லமைகொண்டவர்களாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் காட்சியளிப்பதாக நம்பியவன், இறுதியில் தாக்குதலின் முடிவுகளால் நம்பிக்கையற்றவனாக மாறி நின்றான்.

இரு வேந்தர்களும் முழுமுற்றாகத் தோல்வியடைந்த பிறகும் பெருவேந்தனான குலசேகரபாண்டியன் மிக நிதானமாகத் தனது படையெடுப்புப் பணிகளை நடத்தி வருவதறிந்து இந்த இடம் வந்துசேர்ந்துள்ளான். உடன்வந்த கால்பாவும் எபிரஸ்ஸும் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர்.

ஹிப்பாலஸ், பேரரசரை வணங்கி நின்றான். அவரோ அவனை அணைத்து வரவேற்றார். ``சேரனின் மீதும் சோழனின் மீதும் பாரி நடத்திய தாக்குதலின் முழுவிவரங்களும் நீங்கள் அறிவீர்கள்தானே” என்று பேச்சைத் தொடங்கினான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 78

அந்தப் படையெடுப்புகள் பற்றியும் அங்கு நிகழ்ந்த பேரழிவுகள் பற்றியும் பரிமாறிக்கொள்ள இருவரிடமும் எண்ணிலடங்காத செய்திகள் இருந்தன. அன்றிரவு முழுவதும் அவை பற்றியே பேசினர். போர்க்களத் தாக்குதல்களைப் பற்றி தான் அறிந்துள்ளவை எவ்வளவு குறைவானவை என்பதை ஹிப்பாலஸ் உணருவதற்கு வெகுநேரமாகவில்லை. குலசேகரபாண்டியன் சொன்ன செய்திகள் ஹிப்பாலஸ்ஸை உறையவைத்தன. ``மற்ற இருவரும் இழைத்த தவறுகளை நாங்கள் இழைக்க மாட்டோம்” என்று குலசேகரபாண்டியன் சொன்ன கூற்று நம்பிக்கையின் அடிப்படையிலானது மட்டுமன்று, நுட்பமான திட்டமிடலுடன்கூடியது என்பதை ஹிப்பாலஸ்ஸால் உணர முடிந்தது. ஆனாலும் அவன் கேட்டான் ``அவர்களைப்போல் அல்லாமல் உங்களின் தாக்குதல் எந்த விதத்தில் வேறுபடப்போகிறது?”

``கழுகுக்கும் மலைக்காடைக்கும் வேறுபாட்டை அறிவீர்களா?”

பேரரசர் என்ன சொல்ல வருகிறார் என்பது ஹிப்பாலஸுக்குப் புரியவில்லை.

``நானே சொல்கிறேன். கழுகு, தனது இரையை நிலமெங்கும் தேடிப்போய் வேட்டையாடும். மலைக்காடை, நிலமெங்கும் இருக்கும் இரையைத் தனது கூட்டுக்கு வரவழைத்து வேட்டையாடும்” என்றார்.

வியப்புற்றபடி, ``எப்படி?!” எனக் கேட்டான்.

பேரரசர் சொன்னார், ``மலைக்காடை, பாறை இடுக்குகளில் இருக்கும் நாகர வண்டின் இறகுகளைக் கொத்திக் கொண்டுவந்து தனது இருப்பிடத்தில் வைத்துக்கொள்ளும். நாகர வண்டின் மணம் காற்றில் கண நேரத்தில் பரவக்கூடியது. அந்த மணத்தை நுகர்ந்தவுடனே காட்டில் உள்ள வண்டினங்கள் எல்லாம் அதை நோக்கிப் பறந்துவரும். சில்வண்டு தொடங்கி எரிவண்டுகள்  வரை அதை நோக்கி வந்தவண்ணமேயிருக்கும். தனது கூட்டில் இருந்தபடியே வந்துசேரும் வண்டினங்களை வளைத்து வளைத்து வேட்டையாடும் மலைக்காடை” என்றார்.

ஹிப்பாலஸ் தனது மனக்கண்ணில் மலைக்காடையை உருவகப்படுத்த முயன்றபோது குலசேகரபாண்டியனின் முகமே தெரிந்தது.

- பறம்பின் குரல் ஒலிக்கும்...