மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சோறு முக்கியம் பாஸ்! - 7

சோறு முக்கியம் பாஸ்! - 7
பிரீமியம் ஸ்டோரி
News
சோறு முக்கியம் பாஸ்! - 7

வெ.நீலகண்டன், படம்: கே.குணசீலன்

சோறு முக்கியம் பாஸ்! - 7

ருவேளை சாப்பிட்டால் அடுத்த வேளை பசிக்க வேண்டும். எவ்வளவு ‘ஹெவி’யாகச் சாப்பிட்டாலும் அதிகபட்சம் நான்கு மணி நேரத்தில் செரிமானப் பணிகளை முடித்துக்கொண்டு, வயிறு அடுத்த வேளைக்கு உணவைத் தேட வேண்டும். அப்படி நிகழ்ந்தால் நீங்கள் சாப்பிட்டது நல்ல உணவு. மதியம் சாப்பிட்ட உணவு இரவுவரை எதுக்களித்து, அவஸ்தை கொடுத்தால் உடம்புக்குச் சேராத ரசாயனங்களையும் நீங்கள் சேர்த்துச் சாப்பிட்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

அசைவ உணவுகளைப் பொறுத்தவரை நிறத்துக்காகவும் ருசிக்காகவும் சேர்க்கிற சில பொருள்கள் நாவுக்கு இதமாக இருக்கும். ஆனால், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டைச் சிதைத்துவிடும்.  அதன் விளைவுகளை, சில மணி நேரத்திலேயே உடல் நமக்கு உணர்த்திவிடும்.  

தஞ்சாவூர், புதிய பேருந்து நிலையத்துக்கு அருகிலிருக்கிற `பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்’ ‘ஹெவி மீல்’ஸைப் பார்க்கும்போது கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், சாப்பிட்டு முடித்து, ஒரு ஐஸ் பீடாவை மென்று விழுங்கினால் வயிறு லேசாகி, இயல்பாகிவிடுகிறது. 

சோறு முக்கியம் பாஸ்! - 7

240 ரூபாய் மீல்ஸ்... அன்லிமிடெட்.  தலைவாழை இலையில் பரிமாறுகிறார்கள். மணக்க மணக்க பொன்னியரிசி சாதம்... கூட்டு, பொரியல்... தவிர, எலும்புக் குழம்பு, மீன் குழம்பு, நண்டுக் குழம்பு, நாட்டுக்கோழிக் குழம்பு, நல்லியெலும்புக் குழம்பு என ஐந்து வகைக் குழம்புகள்...  நான்வெஜ் ஹோட்டல்களில் தருகிற குழம்புகளில் வாசனைக்குக்கூட ‘பீஸ்’ இருக்காது.  இங்கு மீன் குழம்பு ஊற்றினால், இரண்டு ‘கிழங்கன்’ பீஸ் வந்து விழுகிறது. நண்டுக்குழம்பு வாங்கினால் குறைந்தது கால் கிடைப்பதாவது உறுதி.

இந்தக் குழம்பு வகையறாக்கள் இல்லாமல், காடை கிரேவி, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி, நண்டு கிரேவி, இறால் கிரேவியைச் சுமந்துகொண்டு வரிசையாக வருகிறார்கள். ‘வேண்டாம்’ என்றாலும், ‘கொஞ்சமாவது டேஸ்ட் பாருங்கள்’ என்று வீட்டுக்கு வந்த விருந்தாளியை உபசரிப்பதுபோல வலியுறுத்திச் சாப்பிடவைக்கிறார்கள். கெட்டிக் குழம்பு மாதிரி இருக்கிறது கிரேவி. குழம்பா, கிரேவியா... சாதத்தில் எதைச் சேர்த்துச் சாப்பிடுவது என்று மலைப்பாக இருக்கிறது. கிரேவிக்களிலும் பீஸ்களுக்குக் குறைவில்லை.

இதெல்லாம் போக, நாட்டுக்கோழி தெரக்கல், நாட்டுக்கோழி பெப்பர் ஃப்ரை, ஈரல் வறுவல், நண்டு வறுவல், மீன் வறுவல்... என 13 தொடுகறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். அதுவும் மீல்ஸில் அடக்கம். கூடவே, குட்டி மண்பானையில் பசுந்தயிர், சாப்பிட்டவை செரிமானமாக மிளகு ரசம், சின்ன வெங்காயம், கடலை மிட்டாய்...

இத்தனை உணவுகளையும் மொத்தமாக இலையில் பரப்பிவைப்பதைப் பார்த்தாலே சிலருக்குச் சாப்பிட்ட நிறைவு வந்துவிடும். அதனால், எடுத்தவுடனே இலையை நிறைக்காமல், சாப்பிடச் சாப்பிட, பார்த்துப் பார்த்து உபசரிக்கிறார்கள். ‘மீன்குழம்பு... அந்த டேபிளுக்குப் போ’, ‘சிக்கன் மசாலா... இந்த டேபிளைப் பார்’ என்றெல்லாம் உபசரிப்பாளர்கள் போடுகிற சத்தம் கல்யாணப் பந்தியில் அமர்ந்திருக்கும் உணர்வைத் தருகிறது.

“அசைவ உணவுகள் என்றாலே காரம் அதிகமாக  இருக்கும். நாங்கள் காரத்தை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. மிளகாயைவிட மிளகை அதிகம் பயன்படுத்துகிறோம். நல்லெண்ணெய் சேர்ப்பதால் மிளகின் காரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். எல்லாவற்றிலும் தஞ்சாவூர் வட்டாரத்தின் நாட்டுப்புறச் சுவை இருக்கும். இன்றுவரை விறகடுப்பில்தான் சமைக்கிறோம். இந்த வட்டாரத்தில் என்ன கிடைக்குமோ, அதை மட்டும்தான் சமைப்போம். எண்ணெயில் பொரித்தெடுக்கும் எந்த உணவையும் நாங்கள் செய்வதில்லை. மீன் ஃப்ரையைக்கூட தோசைக்கல்லில்தான் வேகவைப்போம். தஞ்சைக்கு நிறைய வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். அவர்களுக்கு நமது விருந்தோம்பல் பண்பைக் காட்டுவதற்காகத்தான் இதை ஆரம்பித்தோம். இப்போது, இதுவே எங்கள் அடையாளமாகிவிட்டது” என்கிறார் உணவகத்தின் உரிமையாளர் ரஜினிகாந்த்.

பரம்பரையாக உணவகத் தொழில்தான். தாத்தா, மலேஷியாவில் இடியாப்பக் கடை நடத்தியிருக்கிறார்.  மிகச் சிறிய அளவில் ரஜினிகாந்த் ஆரம்பித்த நைட் டிபன் கடைதான்  கிளைகள் விரியும் அளவுக்கு இப்போது படிப்படியாக வளர்ந்து நிற்கிறது.

காமாட்சி மெஸ்ஸுக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது;  மட்டன் கோலா; கோழி முட்டை சைஸ்... உருண்டை 20 ரூபாய்தான். அதன் வாசனையை நுகர்ந்தவர்களால் தவிர்க்க முடியாது. ஹெவி மீல்ஸை இன்னும் ‘ஹெவி’யாக்குகிறது கோலா.

மதியம் 12:30-க்குத் தொடங்கி,  4 மணிக்குள் முடிந்துவிடுகிறது மெஸ். இவ்வளவு இருந்தும்,  நிதானமாக ருசித்துச் சாப்பிட முடியாதது சோகம். ‘இவன் எப்போ தின்னு முடிப்பான்’ என்று பார்த்தபடி டேபிளுக்குப் பின்னால் இரண்டு பேர் நிற்கிறார்கள். அவர்கள் முகத்தில் தெரிகிற பசியும், கண்ணில் தெரிகிற கடுப்பும் நமக்கு அவஸ்தையாக இருக்கிறது. அவசர அவசரமாகச் சாப்பிட்டு எழவேண்டியிருக்கிறது. சனி ஞாயிறுகள் என்றால் இன்னும் அவஸ்தை.  

நல்லெண்ணெய், கடலை எண்ணெய் சேர்த்துச் செய்யப்படும் தஞ்சையின் வட்டார அசைவ உணவுகள் தனித்தன்மையானவை. அவற்றை முழுமையாக அனுபவிக்க விரும்பும் ஃபுட்டீஸ்,  நிச்சயம் ஒருமுறை இந்த மெஸ்ஸுக்குச் செல்ல வேண்டும்!

- பரிமாறுவோம்

வாரத்தில் எத்தனை நாள்கள் அசைவ உணவுகள் சாப்பிடலாம்?

சோறு முக்கியம் பாஸ்! - 7

ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்

“வாரத்தில் மூன்று நாள்கள் மீன் சாப்பிடலாம். பொரித்துச் சாப்பிடக் கூடாது. மீனைக் குழம்பாக வைத்துதான் சாப்பிடவேண்டும். கடல் மீன்களைவிட, ஏரி குளங்களில் கிடைக்கிற மீன் இதயத்துக்கும் மூளைக்கும் நல்லது. பிராய்லர் சிக்கனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நாட்டுக்கோழி என்றால் வாரத்தில் ஒருநாள் சாப்பிடலாம். நாட்டுக்கோழியையும் தோலை உரித்துவிட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். முட்டையைப் பொறுத்தவரை ‘வெள்ளைக்கரு மட்டும்’ என்றால் தினமும் ஒன்று சாப்பிடலாம். முழு முட்டை என்றால் வாரத்துக்கு இரண்டு முட்டை என்ற கணக்கில் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் முழு முட்டை கொடுக்கலாம்.  அசைவ உணவுகள் சாப்பிடும் நாள்களில் பால், பருப்பு போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது.”