பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“இலக்கியவாதிகள் போராட்டங்களில் முன் நிற்க வேண்டும்!”

“இலக்கியவாதிகள் போராட்டங்களில் முன் நிற்க வேண்டும்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இலக்கியவாதிகள் போராட்டங்களில் முன் நிற்க வேண்டும்!”

வெ.நீலகண்டன், படங்கள்: ரா.ராம்குமார்

“இந்த ஓலைச்சுவடியை நாமல்லாத மற்றவர்கள்

படிக்க நேரிடுமானால்

தலைசுற்றும் நெஞ்சு படபடக்கும்

வெப்புறாளம் வந்து கண்மயங்கும்

மூளை கலங்கும்

படித்ததெல்லாம் வலுவற்றுப்போகும் என்று

இப்போது

என் எழுத்துக்களில் நான் வாதைகளை

ஏவி விட்டிருக்கிறேன்...”


- என்.டி.ராஜ்குமார் என்றதும் நினைவுக்கு வருவது இந்தத் தெறிப்புமிக்க வரிகள்தாம். தனக்கேயான மாந்திரீக மொழிநடையில் எளிய மனிதர்களின் வாழ்க்கையை நுண்மையாகவும், அரசியலை மிகக்காத்திரமாகவும் படைத்துவரும் கவிஞர். கேட்பவர்களை உருகச் செய்யும் விதத்தில் தம் கவிதையைப் பாடலாகப் பாடக்கூடியவர். ‘மதுபானக்கடை’  படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்ததோடு அந்தப் படத்தின் பாடல்களையும் எழுதியவர். கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன், இணையம் துறைமுகம், மேற்குத்தொடர்ச்சி மலை புலிகள் சரணாலயத் திட்டம் எனப் பூர்வகுடிகளின் வாழ்க்கையையும் இயற்கையையும் சிதைக்கும் திட்டங்களுக்கு எதிராகப் படைப்புகளை ஏந்திக் களத்தில் முன்நிற்கும் செயற்பாட்டாளர்.  

“இலக்கியவாதிகள் போராட்டங்களில் முன் நிற்க வேண்டும்!”

வெப்பம் தணியாத ஒரு மாலைப் பொழுதில் என்.டி.ராஜ்குமாருடன் உரையாடினேன்.  நெகிழ்ச்சி, கோபம்,  வருத்தம், நகைச்சுவை என அந்தத் தருணம் அர்த்தமுள்ள உணர்ச்சிகளால் நிறைந்தது.

“கூடங்குளம், தூத்துக்குடி என்று எல்லாப் போராட்டங்களிலும் முன் நிற்கிறீர்கள். ஒரு படைப்பாளி இப்படியான போராட்டங்களில் ஈடுபடுவது அவசியமா?”

“படைப்பாளியாக மட்டுமல்ல, மனிதனாக நான் இந்தப் போராட்டங்களில் முன் நிற்காவிட்டால் நாளை என் நிலங்களும் திருடப்படலாம். அதற்கான முகாந்திரங்கள் தொடங்கிவிட்டன. குலசேகரம், திருவட்டாற்றுப் பகுதிகளில் இருக்கும் குன்றுகளை எல்லாம் கேரள முதலாளிகளுக்கு விற்றுவிட்டார்கள். அவர்கள், கரிமருந்து வைத்து குன்றுகளைப் பெயர்த்து, கிரஷரில் உடைத்து, லாரி லாரியாகக் கேரளாவுக்குக் கொண்டு செல்கிறார்கள். அதனால், குமரி மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் சூழல் கெட்டுவிட்டது. பலா, வாழை விளைந்த தோப்புகளை எல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு ரப்பர் மரங்களை நட்டு, எஸ்டேட்டுகள் ஆக்கி விட்டார்கள். பலநூறு குளங்களை நிரப்பிக் கட்டடங்களைக் கட்டிவிட்டார்கள். நீர்வழிப்பாதைகளை எல்லாம் டைல்ஸ் கம்பெனிகள் நிரப்பிவிட்டன.  பிற மாநிலங்களில் அடித்து விரட்டப்பட்ட துறைமுகத் திட்டத்தை  இங்கு இணையம் துறைமுகத் திட்டமாக மாற்றி, கொண்டுவந்து பல்லாயிரம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கத் திட்டமிடுகிறார்கள். குளிர்பான நிறுவனங்களுக்கு நீர்ப்படுகைகளை எழுதிக்கொடுக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பூர்வீகமாக வசிக்கும் காணிக்காரர்கள், கணியான் சமூக மக்களை எல்லாம், ’புலிகள் சரணாலயம் அமைக்கப்போவதாக’ச் சொல்லி வனத்திலிருந்து விரட்டிவிட்டு,  அங்கு புதைந்திருக்கிற 12 வகையான கனிமங்களை அபகரிக்கத் திட்டமிடுகிறார்கள். குமரி மட்டுமல்ல... தமிழகத்தின் எல்லா மாவட்டங்களையுமே இலக்கு வைத்து, பிற மாநிலங்களில் விரட்டியடிக்கப்பட்ட திட்டங்களைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் மத்திய அரசு அதை மீறுகிறது.  நம் பிரதிநிதிகளைச் சந்திப்பதையே அவமானமாகக் கருதுகிறார் பிரதமர். நம்மை வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருப்பதாலும், ஆர்ப்பாட்டம் நடத்துவதாலும் என்ன நடக்கப்போகிறது..? மீறல்தான் தீர்வு!”

“தமிழகத்தின் தென்பகுதியில்தான் பெரும்பாலான படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால், அரசியல் போராட்டங்கள் பற்றிய எழுத்துகள் அதிகமாக வருவதில்லையே?”

“உண்மைதான். எல்லாவற்றையும் சாதிய ரீதியாகப் பார்க்கும் போக்கு படைப்பாளிகள் மத்தியில் இருக்கிறது.  அரசியல் கட்சிகளைவிட இலக்கியவாதிகளிடம் குழு அரசியல் நிறைந்திருக்கிறது. தென்மாவட்டங்களிலிருந்து மிகச்சிறந்த படைப்புகள் வருகின்றன. ஆனால், படைப்பாளிகளின் இயல்பு நேரெதிராக இருக்கிறது. சமீபத்தில், குமரெட்டியாபுரத்தில் எழுத்தாளர் கூட்டமைப்பு சார்பில், கவிஞர் சுகிர்தராணி தலைமையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினோம். கொள்கை மாறுபாடுகள் கடந்து நிறைய படைப்பாளிகள் அதில் பங்கேற்றார்கள். ஆனால், நாம் முன்மாதிரியாகக்  கருதும் பல மூத்த படைப்பாளிகள் வரவில்லை. சிலர் அந்தப் போராட்டத்தை நக்கல் செய்து சமூக ஊடகங்களில் எழுதினார்கள்.

“இலக்கியவாதிகள் போராட்டங்களில் முன் நிற்க வேண்டும்!”

கேரளாவில் படைப்பாளிகள்தான் முன்னணி களப்போராளிகளாக இருக்கிறார்கள். மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அதைத்  தீவிரமாக எதிர்க்கிறார்கள். ஆவணப்படமாக, நாவலாக, கட்டுரைகளாக, புத்தகங்களாக, சிறுகதைகளாக, ஆராய்ச்சிகளாக ஆவணப்படுத்தி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள். அதனால் தான் எந்த நாசகாரத் திட்டங்களும் அங்கே நுழையமுடியவில்லை. இங்கே, தமிழகமே போராட்டக்களத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கும்போது. `அந்த மரத்தில் இருந்து குருவி பறந்து சென்றது, ஆனாலும் அந்த மரத்தின் இலைகளில் அந்தக் குருவியின் அழகு உக்காந்திருக்கிறது’ என்று ஃபேஸ்புக்கில் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.”

“ ‘மதுபானக்கடை’  படத்துக்குப் பிறகு உங்களைத் திரையில் பார்க்க முடியவில்லையே?”

“நிறைய வாய்ப்புகள் வந்தன. `கிடாரி’ படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்புகூட வந்தது. போட்டோஷூட்டெல்லாம் நடந்தது. ஆனால், தொடக்கத்திலிருந்தே அங்கே ஓர்அந்நியத்தன்மை இருந்தது. தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. நான் ஒரு படைப்பாளியாக இருப்பது சிக்கல். ‘மதுபானக்கடை’ படத்தைப் பொறுத்தவரை எல்லோருமே புரிந்துணர்வுள்ள நண்பர்கள். விரும்பிச் செய்தோம். ஆனால், நடிப்பைத் தொழிலாகக் கொண்டால், நாமும் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடுகிறோம். உண்மையைச் சொல்லப்போனால் சினிமாவைப் புரிந்துகொள்ள சிரமமாக இருக்கிறது. நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. நல்ல பாடல்கள் எழுத வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. காலம் தீர்மானிக்கும்.”

``கவிதையைப் பாடிக்காட்டும் முறையை நீங்கள் பின்பற்றுகிறீர்கள். இந்த நுட்பத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?”

``நம் பாணர் மரபிலிருந்துதான். மலையாளத்திலும் அது இருக்கிறது. `ஈணம்’ என்பார்கள். ஒரு நல்ல கவிதையின் உள்ளே அழகான ஓசை இருக்கும். ஆழ்ந்து வாசித்தால் அதை உணர முடியும். அந்தக் கவிதை என்ன உணர்வைச் சொல்கிறதோ, அதைக் கடத்தும் விதமாக அந்த ஓசை நமக்குள் எழும்.”

என்.டி.ராஜ்குமாரிடம் உரையாடினாலும் நமக்குள்ளும் கவிதை ஓசைநயத்துடன் ஒலிக்கிறது.